கடந்த சனிக்கிழமை வெளியான “தினகரன்” நாளிதழுடன் ரஜினிகாந்தின் “பேட்ட” படத்தின் போஸ்டரை இலவச இணைப்பாக்கி ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது தயாரிப்பு நிறுவனமான “சன் பிக்சர்ஸ்” !!
இது முதல்முறையல்ல..இதற்கு முன்பு சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் மற்றொரு படமான ஏ.ஆர்.முருகதாஸ் விஜய் கூட்டணியில் உருவாகும் “சர்கார்” படத்தின் போஸ்டரை விஜய் பிறந்தநாளை ஒட்டி தினகரன் நாளிதழோடு இலவச இணைப்பாக வெளியிட்டு விஜய் ரசிகர்களை குஷியாக்கியது.
ஆனால் “ரஜினிகாந்த்” படத்திற்கு இது இரண்டாவது முறை. இதற்கு முன் சன் பிக்சர்ஸ் முதன் முறையாக தயாரித்த இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்ட திரைப்படமான “எந்திரன்” படத்தின் எக்ஸ்க்ளூசிவ் படங்களை தினகரன் நாளிதழின் முதல், கடைசி பக்கங்களில் வெளியிட்டார்கள். எந்திரன் பட இசை வெளியீட்டு விழாவையொட்டி முழுப்பக்க போஸ்டரை தினகரனுடன் இலவசமாக வெளியிட்டார்கள்.
சன் டிவியை போல் ஒரு திரைப்படத்தையோ அல்லது நிகழ்ச்சியையோ விளம்பரப்படுத்த முடியாது, அவர்களுடைய விளம்பரையுக்தியே வேறு. திரையரங்கில் ஓடாத படங்கள் கூட சன் டிவியில் நல்ல வரவேற்ப்பை பெற்றதுண்டு. தொலைக்காட்சிகளில் சன் டிவி எப்படியோ, தினசரி நாளிதழ்களில் தினகரன் முதன்மையானது.
தினகரன் ஆரம்பித்த நாள் முதல் வெறும் நாளிதழ்கள் மட்டுமே வந்து கொண்டிருந்தன. மற்ற போட்டி நாளிதழ்கள் போல் வாரமலர்,குடும்ப மலர், சிறுவர் மலர், பக்தி மலர் போன்ற வார இணைப்புகள் இல்லை. முதல் முறையாக ஞாயிறு தோறும் வரும் இலவச இணைப்பாக வசந்தம் இதழை வெளியிட்டனர்.புத்தக வடிவில் இல்லாமல் டேப்லைட் மாடலில் வெளியானது. கிட்டத்தட்ட இரண்டு வருட காலம் இதுபோலவே வெளியானது. எந்திரன் திரைப்படம் சமயத்தில் வசந்தம் இணைப்பு இதழ் புதுப்பொலிவு பெற்று மற்ற நாளிதழ்களின் இலவச இதழ்களோடு ஒப்பிடுகையில் வேறுபட்டு இருந்தது.
ஆம் !! ஆனந்த விகடன், குங்குமம், குமுதம் போன்ற வார நாளிதழ்களின் அட்டை பக்கங்கள் எப்படி வலுவலு பக்கங்களாக இருக்குமோ அதுபோல் வசந்தம் இதழையும் வடிவமைத்து அதில் எந்திரன் திரைப்படத்தில் இடம்பெற்ற கிளிமஞ்சரோ பாடலின் எக்ஸ்க்ளூசிவ் வண்ண படங்கள் இதழ் முழுவதும் அலங்கரித்து பரவசப்படுத்தின. சமூக வலைதளங்கள் பெரிதும் இல்லாத காலத்தில் அது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. எந்திரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது.
அதனையொட்டி ஒரு முழு பக்க எந்திரன் பட ரஜினி போஸ்டர் தினகரன் நாளிதழோடு இலவச இணைப்பாக வெளியானது. அவ்வப்போது பிரத்யேக படங்களும் தினகரனில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. பல்வேறு விளம்பரையுக்தியை சன் டிவி நிறுவனம் கையாண்டு எந்திரன் படம் வெளியாகும் முன்னரே பட்டிதொட்டி எங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினர். பின்னர் எந்திரன் படமும் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை அடைந்தது.
இவையெல்லாம் எட்டு வருடங்களுக்கு முன்பு நடந்த மறக்க முடியாத கடந்த கால நிகழ்வுகள் !! தற்போது அதே விளம்பர யுக்தியை தலைவர் ரஜினிகாந்தை வைத்து இரண்டாவதாக தயாரிக்கும் “பேட்ட” படத்திற்கும் “சன் குழுமம்” ஆரம்பித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை யாரும் எதிர்பாராத நேரத்தில் தலைவரின் 165 ஆவது திரைப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் அன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் ட்விட்டரில் அறிவித்தது. அறிவிப்பு வெளியான சில நேரத்திலேயே ட்விட்டரில் “தலைவர் 165” படத்தின் தலைப்பு விவாதிப்புக்கு உள்ளானது
இந்த அறிவிப்பு தலைவர் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மதியம் 2 மணியளவில் மீண்டும் சன் பிக்சர்ஸ் ஒரு ட்வீட் போட்டிருந்தார்கள்.அதில் ரஜினிகாந்தின் இதுவரை நடித்த அனைத்து படங்களின் தலைப்பு படங்களையும் ஓடவிட்டு தலைவரின் 165ஆவது படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என அனிருத், த்ரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி, நவாசுதின் சித்திக் போன்றோர் யோசிப்பது போல் ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு மேலும் ஆர்வத்தை தூண்டினர்.
பின்பு மாலை 6 மணிக்கு படத்தின் தலைப்பு #பேட்ட என அறிவித்து , மோஷன் போஸ்டரையும் சன் டிவி யின் யூட்டுப் பக்கத்தில் வெளியிட்டனர். சன் டிவி 6 மணி தலைப்பு செய்தியிலும் பேட்ட படத்தின் அறிவிப்பு வெளியானது.
மறுநாள் தினகரன் இதழோடு பேட்ட படத்தின் வண்ண ஃப்லோஅப் இலவச இணைப்பாக மீண்டும் எந்திரன் படத்திற்கு பிறகு வெளியானது. பேட்ட படத்தின் அறிவிப்பு வெளியான சில நேரத்திலேயே ஷங்கரின் “2.0” படத்தின் டீசர் செப்டம்பர் 13 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இது தலைவரின் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை உண்டாக்கியது.தொடர்ந்து இரண்டு நாட்களுக்கும் மேலாக பேட்ட படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான “2.0” படத்தை முந்தைய படத்தை போல் சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்திருக்கலாம். ஏனோ அவர்கள் அதை தவற விட்டார்கள்.” 2.0″ படத்தையும் சன் பிக்சர்ஸ்சே தயாரித்து இருந்தால் இந்நேரம் அட்டகாசமாய் விளம்பரப்படுத்தி இருப்பார்கள். 2.0 படத்தின் தொலைக்காட்சி உரிமையையும் கூட சன் டிவி வாங்கவில்லை, அதனால் ஜீ குழுமம் அந்த உரிமையை பெற்றுள்ளது. இது என்னைபோன்ற சன் டிவி ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றம். சிறுவயது முதலே தலைவரின் ஹிட் படங்களை சன் டிவியில் பார்த்து பழகிய எனக்கு மற்ற தொலைகாட்சிகள் தலைவர் படங்களின் உரிமையை கைப்பற்றும்போது கடுப்பாகவே இருந்துள்ளது. காரணம் சன் டிவியை போல் மற்ற தொலைகாட்சிகளில் தலைவரின் படங்கள் ஒளிபரப்பாகும் போது அது பெரிய அளவில் ஒரு ரீச் கிடைத்ததில்லை, பிக்சர் குவாலிட்டியும் மற்ற டிவியில் இருப்பதில்லை. தற்போதும் அதே நிலைதான், 2.0 படத்தை ஜீ தமிழ் வாங்கியிருப்பது ஏற்றுகொள்ள முடியவில்லை.
இருந்தாலும் தற்போது சன் பிக்சர்ஸ் “பேட்ட” படத்தை தயாரிப்பது மகிழ்ச்சியான ஒன்று.முதல் பார்வைக்கே எதிர்பார்ப்பை எகிறவைத்த சன் பிக்சர்ஸ்,படம் வெளியாகும் போது என்ன மாதிரியான விளம்பர யுக்திகளை கையாள்வர்கள் என எதிர்பார்த்து காத்திருக்கிறேன்…






Leave a comment