
சவுரிமுடிக்காரர்…சிறுவயதில் என்னை மிகவும் பயமுறுத்திய ஒரு நபர் !!!
காரணம் என் அம்மா…சிறு வயதில் வீட்டிற்கு வெளியே வைத்து போக்கு காட்டி சாப்பாடு ஊட்டிவிடுவார்கள்.. அப்போது சாப்பிட முரண்டு பிடிக்கும்போது பூச்சாண்டியிடம் பிடிச்சு கொடுத்திருவேன் என பயமுறுத்தி சாப்பிடவைப்பார்கள்.அப்படி ஒரு பூச்சாண்டியில் ஒருவர்தான் இந்த சவுரிமுடிக்கரார்.
கருப்பு நிறம், திடகாத்திரமான உடல், பெரிய மீசை, தலைப்பாகை, வலது தோல் பட்டையில் ஒரு ஜோல்னாப்பை, நீலம், சிவப்பு, ரோஸ் இவற்றுள் ஏதாவது ஒரு வண்ணத்தில் சட்டை, வண்ண லுங்கி, கைகளில் சவுரிமுடி,
முக்கியமாக அந்த கணீர் குரல்..
அந்த கணீர் குரலில் சவுரிமுடி என கூவிக்கொண்டே தெருவில் விற்று செல்வார்.தெருவின் நுழைவில் சவுரி முடி என கூவிக்கொண்டே உள்ளே நுழையும்போதே அந்த குரலை கேட்டு பயந்தோடி வீட்டுக்குள் சென்று ஜன்னல் வழியாக எட்டிபார்ப்பேன்..அந்த குரலோசை தெருவை விட்டு அடங்கும் வரை வெளியே செல்ல மாட்டேன். எங்க சென்றால் அவன் நம்மளை பிடித்துக்கொண்டு சென்றுவிடுவானோ என்றொரு பயம்.
எப்போது அவர் வந்தாலும் வீட்டிற்குள் ஓடி ஒழிந்துகொள்வேன். சிறுவயது முதலே வரையும் பழக்கம் இருந்தது. அந்த பயம் ஏற்படுத்திய தாக்கம், அவரை பேப்பரில் வரைந்து வைத்திருந்தேன். அடுத்தமுறை அவர் வரும்போது வெளிக்கதவில் அந்த படம் தெரியும்படி வைத்துவிட்டு வீட்டினுள் சென்றுவிட்டு அவர் பார்க்கிறாரா என்று கதவு இடுக்குவழியில் பார்த்திருக்கிறேன்.
பின் விவரம் தெரிந்த நாட்களில் கூட இவர் தெருவில் வரும்போது சிறு பயம் இருக்கத்தான் செய்தது. அப்போ அவர் பெயர் என்ன, எங்கிருந்து வருகிறார், என்பது போல சில கேள்விகளும் எழ தொடங்கின.. ஆனால் பதில் தெரிய முயற்சித்தது இல்லை.
இதெல்லாம் நடந்து இருபது வருடங்களுக்கு மேல் இருக்கும். நேற்று எதேர்ச்சையாக மீண்டும் இந்த குரல் தூக்கத்தை களைத்து காதில் கேட்டது.
அன்று பயந்து வீட்டிற்குள் ஓடி ஒழிந்துகொண்ட நான் நேற்று தூக்கத்தில் இருந்து எந்திரித்து வேகமாக வெளியே சென்று எட்டிபார்த்தேன். முழுவதுமாக முகத்தை பார்க்க முடியவில்லை, பக்கவாடு மட்டும் தெரிந்தது. இப்போதும் ரோஸ் கலர் சட்டை, அதே தோரனை, அதே கணீர் குரலில் சவுரிமுடி என விற்று சென்று கொண்டிருந்தார். ஒன்று மட்டும் மாறி இருந்தது, முன்பு பலமுறை சவுரிமுடி என கூவுவார், தற்போது அது இரண்டுமுறை ஆகியிருந்தது.
#மறக்கமுடியாமனிதர்கள்
~ நேற்று (16/6/20) மீண்டும் பார்த்த போதும் சரியாக படம் பிடிக்க முடியவில்லை.

Leave a comment