சூப்பர்ஸ்டார் ரஜினி

சிவாஜி ராவ் கெய்க்வாட்டாக இருந்து ரஜினிகாந்தாக 1975ல் வெளியான தன் முதல் படமான ” அபூர்வ ராகங்களில் ” கேட்டை திறந்து கொண்டு ரசிகர்களின் மனதில் உள்ளே நுழைந்தார். 1975 முதல் 1978 பல்வேறு படங்களில் தனக்குரிய நடிப்பு பாணியில் வெவ்வேறு வேடத்தில் யாரும் ஏற்கத்தயங்கும் கதாபாத்திரங்களை ஏற்று தன் தனித்த நடிப்பால் மக்களை கவர்ந்தார் ரஜினிகாந்த்.

பைரவி
மூன்று வருடங்கள் கடுமையான உழைப்பிற்குப் பிறகு முதல்முறையாக 1978 ஆம் ஆண்டு எம்.பாஸ்கர் இயக்கத்தில் வெளிவந்த “பைரவி” திரைப்படத்தில் கதாநாயகனாக ரஜினிகாந்த் அறிமுகமானார்.




அந்த படத்தின் விநியோகஸ்தரான தாணு அப்போதுதான் ரஜினியின் தனித்தன்மையை உணர்ந்து பட போஸ்டரில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடிக்கும் பைரவி என்று விளம்பரம் செய்ய முடிவு செய்கிறார். இது ரஜினிக்கு எப்படியோ தெரிந்து பதறிப்போய் தாணுவின் அலுவலகத்திற்கு வருகிறார். “எம்.ஜி.ஆர்., சிவாஜி இவங்கள்லாம் இருக்கும்போது நமக்கு எதுக்கு இந்த பட்டமெல்லாம். அவங்களை நாம் வருத்தப்பட வைக்கூடாது” என்று பெருந்தன்மையோடு மறுத்திருக்கிறார். ஆனால் தாணு அவர்கள் பிடிவாதமாக “மெகா சூப்பர் ஸ்டார் என்று போட்டுவிடவா” என்று கேட்க, “ஐயோ சூப்பர் ஸ்டாரே பரவாயில்ல” என்று ரஜினி மறுக்க, மறுநாள் ஒரு நாளிதழில் சூப்பர் ஸ்டார் பட்டத்தோடு பைரவி பட விளம்பரம் முழு பக்கத்தில் வெளிவருகிறது. தர்ம சங்கடத்தில் தவித்தார் ரஜினி. அதுமட்டுமின்றி சென்னையில் பிளாசா திரையரங்கில் ரஜினிகாந்திற்க்கு 35 அடி கட் அவுட் வைத்து விளம்பரப்படுத்தினார்.
நான் போட்ட சவால்
ஆனால் முதன்முதலாக 1980 ஆம் ஆண்டு வெளிவந்த “நான் போட்ட சவால்” திரைப்படத்தில் தான் “சூப்பர்ஸ்டார் ரஜினி” என்று டைட்டில் கார்டு போட்டார்கள். படத்தின் தொடக்கத்தில், இருபக்கத்திலிருந்தும் , மலர்கள் தூவப்பட ரஜினிகாந்த் கேமிராவை நோக்கி நடந்து வருவார், அப்போது திரையின் மேல் பல்வேறு வண்ணங்களில் “சூப்பர்ஸ்டார்” என்ற எழுத்துக்கள் மின்னும்.
இதற்கு பின்பாக “கை கொடுக்கும் கை , மாப்பிள்ளை , பணக்காரன், ராஜாதிராஜா” படங்களில் “சூப்பர்ஸ்டார்” டைட்டில் இடம்பெற்றது.


அதன்பின்பு சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய அண்ணாமலை திரைப்படத்தில் தான் தேவா அவர்களின் வித்தியாசமான மெய் சிலிர்க்க வைக்கும் “ஹே ஹே” என்று பின்னணி இசை ஒலிக்க ஆங்கிலத்தில் ஒவ்வொரு எழுத்தாக “சூப்பர் ஸ்டார்” என்று ஒன்றன் கீழ் ஒன்றாக திரையில் வர மத்தியில் “ரஜினி” என்கிற பெயர் வந்து ஜொலித்து நிற்கும் !!!

அன்று முதல் இன்று வரை “சூப்பர்ஸ்டார் ரஜினி” என்கிற வார்த்தைகள் திரையில் தோன்றும்போதெல்லாம் உற்சாகமாகி மெய்சிலிர்த்து ரசித்து கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்.
அண்ணாமலை படத்திற்கு பின்பு வெளிவந்த “வீரா, பாட்ஷா , அருணாச்சலம், முத்து, படையப்பா,பாபா” வரை இதே பாணியில் சூப்பர்ஸ்டார் ரஜினி என்று திரையில் தோன்றியது.

அதன் பின்பு வெளியான படங்களான “சந்திரமுகி, குசேலன், சிவாஜி, எந்திரன், கோச்சடையான் ,லிங்கா ” வரை பல்வேறு விதங்களில் படத்தின் பின்னணி இசையோடு “சூப்பர்ஸ்டார் ரஜினி ” என்று டைட்டில் வர தொடங்கின.

இருந்தாலும் அந்த கிளாசிக் டைட்டில் கார்ட் பார்க்கும் போது கிடைத்த உற்சாகம், பின்பு வந்த படங்களில் மிஸ்ஸிங். பல ஆண்டுகளுக்கு பிறகு “கபாலி” படம் மூலம் பா.ரஞ்சித் மீட்டு கொண்டு வந்தார். பின்னணி இசையில் மட்டும் ஒரு சின்ன மாற்றம், வழக்கமான தேவாவின் இசைக்கு பதில் சந்தோஷ் நாராயணனின் கபாலி பின்னணி இசை ஒலித்தது. காலா படத்திலும் இதுவே தொடர்ந்தது.

இம்மாத இறுதியில் 2 பாயிண்ட் 0 ரிலீஸ் ஆக உள்ளது. அதிலும் புது வித டைட்டில் கார்ட் தான் இடம்பெறும் என்பதில் மாற்று கருத்து இல்லை.


ஆனால், சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அடுத்த ஆண்டு வெளிவர இருக்கும் “பேட்ட” படத்தில் அண்ணாமலை படத்தில் இடம்பெற்ற அதே கிளாசிக் டைட்டில் கார்ட் தான் இதில் இடம்பெறும் என இயக்குனர் தெரிவுத்துள்ளார். காத்திருப்போம் !!!
ஒரே சூரியன்…ஒரே சந்திரன்…ஒரே சூப்பர்ஸ்டார் !!!
Leave a comment