#MyLifeWithThalaivarMovies

நாம எல்லாரும் நம்ம குழந்தைக்கால பருவத்தில இருந்து தலைவர் படங்கள் பார்த்து வளர்ந்திருப்போம், அதுல ஒவ்வொருத்தருக்கும் ஒரு அனுபவம் இருக்கும். ஒவ்வொருத்தருக்கும் அவங்க வாழ்க்கையில யாராவது ஒருத்தர் ரஜினி என்கிற ஒரு கதாபாத்திரத்தை திரைப்படம் வழியா அறிமுகப்படுத்தி வச்சிருப்பாங்க. திரையின் மூலம் அந்த கதாபாத்திரமும் நமக்குள்ள ஊடுறுவிருக்கும். ஒவ்வொருமுறை அந்த கதாபாத்திரத்தை திரையில பார்க்கும்போது ஒரு இனம் புரியா மகிழ்ச்சி உண்டாகும், அதை விவரிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை.

இந்த மாதிரி என்னோட வாழ்க்கையில முதல் முறையா ரஜினி என்கிற மூன்றெழுத்து காந்தம் எப்படி எனக்குள்ள ஊடுறுவுச்சு, எப்படி என்னை தன்னோட காந்த சக்தியால கவர்ந்ததுன்னு சொல்லுறேன்.
தொண்ணூறு காலகட்டம் தான் தலைவருக்கு மாஸான டைம் பீரியட்னு சொல்லலாம். தளபதி, அண்ணாமலை, முத்து, வீரா, பாட்ஷா, அருணாச்சலம், படையப்பா என வெவ்வேறு விதமான மாஸ் படங்களை கொடுத்து வெற்றி மாலை சூடி தன்னை அடுத்தகட்டதுக்கு நகர்த்திக்கொண்டார் தலைவர். அந்த காலகட்டத்தில் வெளியான படங்கள்தான் பல்வேறு ரசிகர்களுக்கும் பிடித்த ஆல் டைம் ஃபேவரைட் தலைவர் படங்கள் என சொல்லலாம். அதற்கு முன்பே சூப்பர்ஸ்டார் பட்டம் படத்தின் தொடக்கத்தில் வந்தாலும் அண்ணாமலை படத்தில் தான் கம்ப்யூட்டர் உதவியுடன் தேவாவின் பின்னணி இசையில் அந்த சூப்பர்ஸ்டார் என்று நீல நிற ஆங்கில எழுத்துக்கள் ஒவ்வொன்றாக தோன்றி பின் மத்தியில் ரஜினி என்கிற எழுத்துக்கள் ஒவ்வொன்றாக திரையிலிருந்து நம்மை நோக்கி வருவதுபோல் வடிவமைத்து இருப்பார்கள்.அங்கே ஆரம்பிக்கும் ரசிகனின் உற்சாக ஆர்பரிப்பு படத்தின் இறுதியில் தான் அடங்கும். இதுபோல் எந்த ஒரு நடிகருக்கும் டைட்டில் கார்ட் அமைந்ததில்லை. ஒன்லி ஒன்..சூப்பர் ஒன் என்பது போல் தலைவருக்கு மட்டுமே அது சரியாக பொருந்திப்போனது.சரி இப்போது என்னோட அனுபவத்துக்கு வரேன்.
நான் பிறந்தது 92ஆம் ஆண்டு இறுதியில், அந்த ஆண்டு தான் “மன்னன், அண்ணாமலை” போன்ற மிகப்பெரிய வெற்றிபடங்கள் வெளியாகி இருந்தன. அதன் பின்பு 1993 – 1995 ஆண்டுகளில் “எஜமான், வீரா, உழைப்பாளி, பாட்ஷா, முத்து” போன்ற மெகா ஹிட் வெற்றிப்படங்களை தலைவர் ரசிகர்களுக்கு விருந்தாக கொடுத்திருந்தார். தொண்ணூறுகளில் பிறந்த ரசிகர்களுக்கு இந்த வெற்றி படங்களை கொண்டாட முடியாமல் போனது, அந்த வகையில் தொண்ணூறுகளுக்கு முன்பு பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள். நான் பிறந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பின்பு தான் தலைவர் படம் பார்த்தேன். முதல் முறையாக நான் பார்த்த படம் 1997ல் வெளியான “அருணாச்சலம்”.

அருணாச்சலம் தான் முதன் முதலில் தியேட்டரில் பார்த்த படம் மற்றும் தலைவரின் படம். இந்த படம் பார்த்தது தொடர்பாக ஒரு சில விஷயங்கள் தான் நினைவுகளில் உள்ளது. முதலில் தியேட்டர் அனுபவம்..எங்கள் ஊரில் உள்ள திரையரங்குகளில், திரை பெரிய திரைசீலைகள் கொண்டு மூடப்பட்டிருக்கும். காட்சி துவக்கத்திற்கான மணி அடித்த பின்பு , திரையை சுற்றியுள்ள வண்ண விளக்குகள் எரிய தொடங்கும், அதை தொடர்ந்தவாறு பின்னணி இசையுடன் திரைசீலைகள் கீழிருந்து மேலாக தானாக விலகி கொண்டே வரும். ” ஹய்யா படம் ஆரம்பிக்கபோது” என படம் பார்க்க போறோம் என்கிற ஒரு குஷியான ஆர்வத்தை உண்டாக்கும். அதை தொடர்ந்து , அருணாச்சலம் படத்தில் இடம்பெற்ற “அதான்டா இதான்டா அருணாச்சலம் நான்தான்டா” பாடல். இதை தவிர்த்து படம் தொடர்பாக வேறு நினைவுகள் இல்லை. பின்னாளில் விவரம் தெரிந்து சன் டிவியில் பார்த்தபோது தான் படம் புரிந்து பிடித்த படமாகிப்போனது. படம் பற்றிய நினைவுகள் இல்லை என்றாலும் அதன் பிரதிபலிப்புகள் இருந்தது.

அதான்டா இதான்டா பாடலில் இருந்து இரண்டு அருணாச்சலம் எனக்கு அறிமுகமாகிறார்கள். ஒருவர் நம் தலைவர் ரஜினிகாந்த், அருணாச்சலமாக எனக்குள் அறிமுகமாகிறார். அதான்டா இதான்டா பாடலின் மூலம் அவரின் ஆடலும், அவரின் வேகமான உடல்மொழியும், திரையில் நம்மை பார்த்து கையை நீட்டி அவர் பாடியதும் அருணாச்சலமாக எனக்குள் ஊடுருவ தொடங்கியதும் அந்த வயதில் தான். படம் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்து அம்மா அவர் பெயர் ரஜினி என்று சொன்னாலும் எனக்கு அவர் அருணாச்சலமாக தான் தெரிந்தார். ரஜினி என்கிற பெயர் எனக்கு அப்போது புலப்படவில்லை. பல நாட்கள் அருணாச்சலம் என்று தான் கூறிக்கொண்டு திரிந்தேன்.

இரண்டாவது அருணாச்சலம், இறைவன் சிவன். அப்போது கடவுள், சாமி என்றால் என்ன என்று புரிந்துகொள்ள முடியாத வயது. அதான்டா இதான்டா பாடலில் தலைவர் லிங்கத்தை பார்த்து பாடுவார். தலைவரை தொடர்ந்து என்னை கவர்ந்தது, லிங்கம். அதன் உருவ அமைப்பாடு எனக்கு மிகவும் பிடித்து போய் இருந்தது. இதற்கு முன்பாக அம்மா, அப்பாவுடன் பலமுறை கோவில்களுக்கு சென்று கடவுளை அம்மா சொல்லி கொடுத்தது போல் கைகூப்பி வணங்கி இருந்தாலும் , கடவுளை பக்தியுடன் வணங்க ஆரம்பித்தது அருணாச்சலம் படத்திற்கு பின்பு தான். எனக்கு கடவுளை அறிமுக படுத்தியதே தலைவர் என்றே சொல்லலாம்.
எங்கள் ஊரில் பிரசித்தி பெற்ற அம்பாள், சிவன் கோவில் உள்ளது. அருணாச்சலம் படம் பார்த்த பின்பாக, நான் அந்த கோவிலுக்கு செல்கிறேன். இதற்கு முன்பே சென்று இருந்தாலும் அப்போதுதான் சிவன் சன்னதியில் வீற்றிருக்கும் பெரிய சிவலிங்கத்தை உற்று நோக்குகிறேன்.பார்த்துவிட்டு அம்மாவிடம் அருணாச்சலம் என கூற, இது சிவலிங்கம் என்று அம்மா திருத்தி கூறினார். திரையில் பார்த்த லிங்கத்தை நேரில் பார்த்ததும் மனதிற்குள் ஒரு குதூகலம் தொற்றிக்கொண்டது. சிவலிங்கம் சற்று பெரியதாக நல்ல அலங்கார தோரனையுடன் கொழுவீற்றிருக்கும்.

அதான்டா இதான்டா பாடல் தொடக்கத்தில் தோன்றும் காட்சியில் பின்னணியில் அருணாச்சலேஸ்வராய நமஹ என ஒளித்துக்கொண்டிருக்க தலைவர் சிவன் சன்னதியில் நின்றுகொண்டு கண்களை மூடி வேண்டி கொண்டிருப்பார். அப்போது அர்ச்சகர் அவர் நெற்றியில் குங்கும பொட்டை வைத்த உடன் தலைவர் கண்களை திறந்து நம்மை பார்த்து சிரித்த முகத்துடன் வணக்கம் வைப்பார், அதிலிருந்து பாடல் தொடங்கும். இதைப்போல நான் சிவன் சன்னதியில் நின்றுகொண்டு இருக்கும் போது அர்ச்சகர் என் நெற்றியில் விபூதி வைத்து ஆசிர்வதித்து சென்றது எனக்கு அருணாச்சலம் படத்தை நியாபகப்படுத்தியது. கோவிலில் சாமி கும்பிட்டு முடித்துவிட்டு வெளியே வந்தபோது அங்கு இருந்த கடைகளில் ருத்ராட்சம் இருப்பதை பார்த்தவுடன் அருணாச்சலம் படத்தில் தலைவர் அணிந்திருப்பது நியாபகத்துக்கு வர, அது என்னவென்றே தெரியாமல் அப்பாவிடம் வேண்டும் என அடம்பிடித்து வாங்கி அணிந்து கொண்டேன். அதன்பின்பு கோவிலுக்கு செல்வது பிடித்த ஒன்றாக மாறிப்போனது.
பின் சிலநாட்களுக்கு பிறகு பள்ளி விடுமுறையில் மதுரையில் உள்ள மாமா வீட்டிற்கு சென்றிருந்தேன். அவர்கள் என்னை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றனர், சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தபோது அங்குள்ள கடை வீதிகளில் மரத்தினால் செய்யப்பட்ட சிறு வடிவ சிவலிங்கம் இருந்தன. அதை வாங்கித்தர சொல்லி கேட்டபோது இது விளையாட்டு பொருள் இல்லை, வீட்டுல இதே மாதிரி வேற இருக்குனு சொல்லி ஏமாற்றி வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார் மாமா. நானும் ஊருக்கு கிளம்பும் நேரத்தில் மாமாவிடம் சிவலிங்கம் கேட்க, அது சாமி சிலை பூஜை ரூம்ல தான் இருக்கணும், சின்ன பசங்கலாம் அதை வச்சு விளையாடக்கூடாது, விளையாண்டா சாமி கண்ணை குத்திரும்னு என்னை சமாதானம் பண்ணி ஊருக்கு அனுப்பி வச்சாங்க. இந்த மாதிரி அருணாச்சலம் படம் பார்த்த பிற்பாடு சிவலிங்கம், ருத்திராட்சம், காப்புனு இதனூடாக தலைவர் என்னை ஆக்கிரமிச்சார்.


அதுக்கப்புறம் வீட்ல இருந்த டேப் ரெக்கார்டர்ல அருணாச்சலம் பாடல் கேசட் போட்டு அதான்டா இதான்டா பாடல் கேட்டது, தலைவர் படம் பொறித்த தீப்பெட்டி அட்டை சேகரித்தது, பிற்பாடு அருணாச்சலம் படத்தை சன் டிவியில பார்த்துட்டு “ஆண்டவன் சொல்லுறான் அருணாச்சலம் முடிக்கிறான்” இந்த வசனத்தை பலமுறை தப்பா சொல்லி பின் சரியா சொல்ல ஆரம்பித்தது, படத்துல ஒரு காட்சில நடந்து வந்துட்டே கம்ப தரையில எம்பவுட்டு பிடிச்சி பின் மண்ணுல கம்ப நட்டு காலால எட்டி உதச்சு கோட்டை போடுறதா பார்த்து, நானும் அதே மாறி வீட்ல கிடந்த கம்ப வச்சு விளையாண்டு அம்மாகிட்ட திட்டு வாங்குனது, சிங்கம் ஒன்று புறப்பட்டதே பாட்டுல தலைவர் போட்ருக்க கண்ணாடியை பார்த்து அதேமாதிரி திருவிழா கண்ணாடியை வாங்கி ஸ்டைலா போட்டு சுத்தனது, இன்னொரு காட்சியில கண்ணாடியை கழட்டி அதை ஒரு சுத்து சுற்றி மடக்கி தூக்கி போடுறத பார்த்து நானும் தூக்கி போட்டது, படத்துல தலைவர் போட்டுவர்ற பச்சை கரை வேஷ்டி, துண்டு பார்த்து அதுமேல ஆசைப்பட்டு சின்னவயசுல வேஷ்டி கட்டினது, தலைமுடிய கோதிவிடறது, படிக்கட்டுல ஸ்டைலா இறங்குறதுன்னு இப்படி ஒவ்வொரு விஷயமா தலைவர் மாறி பண்ண ஆரம்பிச்சேன்.

எனக்கு பிடித்த டாப் 10 தலைவர் படங்கள்ல அருணாச்சலமும் ஒன்னு. இந்த படத்துல பின்னணி இசையோடு எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்களா குடுத்திருப்பார் தேவா. அதான்டா இதான்டா, சிங்கம் ஒன்று புறப்பட்டதே பாட்டுலாம் கேட்டா ஒரு வெறி ஏறும் உடம்புல, தலைமகனே கலங்காதே பாட்டுலாம் முதல்தடவ பார்த்தப்போ தலைவர் கண்கலங்குனது பார்த்து நான் கண்கலங்கிருக்கேன்.
தலைவர் இந்த படத்துல காமெடி, ஆக்சன்,ஸ்டைல், சென்டிமென்ட், காதல்னு எல்லா ஏரியாலயும் தூள் கிளப்பிருப்பார்.அதுலயும் ருத்திராட்சத்தை குரங்கு தூக்கிட்டு போற காட்சி, தன்னை வம்பு இழுத்த குள்ள மனிதர்கிட்ட டவுசர் பாக்கெட்ல இருந்து பல்லி, தேள் பின்ன முதுகுல இருந்து பாம்பு எடுத்து காட்டுறதுன்னு இப்படி நிறைய காட்சிகள் சொல்லிட்டே போகலாம். சவுந்தர்யா, மனோரமா ஆச்சி, செந்தில், ஜனகராஜ் முக்கியமா ரகுவரன், வடிவுக்கரசினு எல்லாரும் அதகளம் பண்ணிருப்பாங்க. இந்த படத்தோட இயக்குனர் சுந்தர்.சி-னு ரொம்ப நாளைக்கு அப்புறம் தான் தெரியும்.” இவன் பேருக்குள்ள காந்தம் உண்டு உண்மைதானடா” எனும் பாட்ஷா படப்பாடல் வரிகளுக்கு ஏற்றாற்போல் தன் காந்த சக்தியால் இந்த ஒரே படம் மூலம் என்னுள் முழுதாக ஊடுறுவினார் அருணாச்சலம் எனும் ரஜினி.
இந்த கட்டத்தில் தான் தலைவரின் அடுத்த பிரம்மாண்ட வெற்றி படமான படையப்பா வெளியானது….
Leave a comment