
படையப்பா – தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்சியல் மாஸ் திரைப்படம், தலைவர் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த வெற்றி திரைப்படம்.இந்த படத்தை பிடிக்காதவர்களே இல்லை என்று கூறலாம். தலைவர் ரஜினிகாந்த் கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் 1999ல் வெளியான இத்திரைப்படத்தில் நடிகர் திலகம் அய்யா சிவாஜி கணேசன் அவர்கள் தலைவர் ரஜினிகாந்திற்கு அப்பாவாக நடித்திருப்பார். கொஞ்ச காட்சிகளில் வந்தாலும் தன் கம்பீரமான நடிப்பை கொடுத்திருப்பார். தலைவருக்கு ஜோடியாக சவுந்தர்யா நடித்து இருப்பார் , தலைவருக்கு எதிரான கதாபாத்திரத்தில் ரம்யாகிருஷ்ணன் நீலாம்பரியாக வாழ்ந்து இருப்பார். படத்தின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணம் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை.

அப்போது எனக்கு வயது 6, ஒன்றாம் வகுப்பு முழுத்தேர்வு விடுமுறை நாளில் தான் படையப்பா படம் வெளியாகி இருந்தது. புனே நகரில் வேலைப்பார்த்து கொண்டிருந்த அண்ணன் அந்த விடுமுறை சமயம் ஊருக்கு வந்திருந்தான், அவன் தான் படையப்பா படத்திற்கு அழைத்து சென்றான்.அருணாச்சலம் திரைப்படம் பார்த்து மகிழ்ந்து இருந்த எனக்கு மீண்டும் ஒருமுறை தலைவரை திரையரங்கில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. படையப்பா படத்தின் துவக்கத்தில் வரும் சூப்பர்ஸ்டார் டைட்டில் கார்டை அப்போதுதான் கவனிக்கிறேன்.அந்த பின்னணி இசையும் ரஜினி என்னும் ஆங்கில எழுத்துக்கள் ஒவ்வொன்றாக நம்மை நோக்கி வருவதும் வித்யாசமாக இருந்தது. அதன்பின் வேலால் பாறைகள் பிளவுற்று அதிலிருந்து எழும்பும் “படையப்பா” எனும் படத்தின் பெயர் என்னை மிகவும் கவர்ந்தது.

பின்னர் புற்றுக்குள் இருந்து பாம்பை வெளியே எடுத்து அதை தடவிக்குடுத்து முத்தமிட்டு நமக்கு அறிமுகமாவார் தலைவர். அந்த நொடியிலிருந்து இறுதி காட்சியில் நம்மை நோக்கி சல்யூட் அடிப்பது வரை தலைவர் வரும் காட்சிகளை ரசிச்சு பார்த்தேன். படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தபிறகு தலைவர் படத்துல சொல்ற “என் வழி தனி வழி” வசனத்தை பலதடவை சொல்லிட்டு திரிஞ்சிருக்கேன். அடுத்தநாள் ஸ்கூலுக்கு போறப்போ பேக் மாட்டிக்கிட்டு என் பேரு படையப்பானு பாட்டு பாடிக்கிட்டே சென்ற நாட்கள இப்போது நினைச்சா சிரிப்பு வருது.


என்பேர் படையப்பா, இளவட்ட நடையப்பா பாட்டுல தலைவர் மவுத் ஆர்கன் ஊதிக்கிட்டே பாட்டுக்கு நடனம் ஆடிருப்பார். பாட்டில் மட்டும் இல்லாம இன்னொரு காட்சியிலயும் அந்த மவுத் ஆர்கன் வச்சிருப்பார். அப்போ அதோட பேரு என்னன்னு தெரியாது , கூட இருந்த எங்க அண்ணன்கிட்ட கேட்டுதான் அந்த இசைக்கருவி பேரு மவுத் ஆர்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன். அப்போவே அந்த மவுத் ஆர்கன் புடிச்சுப்போச்சு.

பின்பு ஒருமுறை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றபோது அங்குள்ள கோவில் பிரகார கடைகளில் மவுத் ஆர்கன் இருந்தது, அப்பாவிடம் கேட்டு அதை வாங்கிக்கொண்டேன். அப்போது ஏற்பட்ட அந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அதை உபயோகிப்படுத்தி பார்க்க நினைக்கையில் வீட்டுக்கு போய்ட்டு விளையாடிக்கலாம் எனக்கூறி அம்மா அதை வாங்கி பைக்குள் போட்டுவிட்ட்டார். சாமி தரிசனம் முடிந்து வீடு வந்து சேர்ந்த பிறகு முதல் வேலையாக மவுத் ஆர்கனை எடுத்து இசைக்க (ஊத) தொடங்கினேன். அக்கா, மாமாவிடம் படத்தில் தலைவர் வாசிப்பது போல மவுத் ஆர்கனை மேல தூக்கிப்போட்டு பிடித்து ஊதிகாட்டினேன். தூக்கிப்போட்டு பிடிக்க முயற்சி செய்து பலமுறை கீழேப்போட்டு அம்மாவிடம் திட்டு வாங்கியுள்ளேன்.

அருணாச்சலம் திரைப்படத்தில் சிவன் என்றால் படையப்பா படத்தில் முருகன். எப்படி அருணாச்சலம் படம் வழியா சிவலிங்கத்தை எனக்கு அறிமுகப்படுத்தினாரோ இந்த படத்தின் மூலம் அந்த கடவுள் ஆறுபடையப்பன இந்த படையப்பா அறிமுகப்படுத்தினார். அதுவரை விருப்ப கடவுளா இருந்த சிவனுக்கு பிறகு முருகன் பிடிக்க ஆரம்பிச்சது. வீட்டிற்கு பக்கத்துல இருந்த முருகன் கோவிலுக்கு அம்மா கூட அடிக்கடி போக ஆரம்பிச்சேன். படத்துல வரமாதிரி அந்த கோவில்ல இருக்குற முருகர் சிலையும் கொஞ்சம் பெரிய சிலையா அழகா கம்பிரமா இருக்கும். தலைவர் படத்துல முருகனை கைகூப்பி வணங்கிட்டு அந்த வேலை எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்து திருமணம் நடத்தி வைப்பார். அதேபோல் ஒவ்வொருமுறையும் கோவிலுக்கு சென்றபோது படத்தில் தலைவர் செய்வது போல் அந்த வேலை கையில் எடுத்துப்பார்க்க ஆசைப்பட்டுள்ளேன்.


இதேபோல் படையப்பா படம் பார்த்த பிறகு ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களில் படையப்பனின் வெளிப்பாடு எனக்குள் ஆக்கிரமித்து வெளிப்பட்டது. மின்சார கண்ணா பாட்டில் தலைவர் செர்வானி உடையை உடுத்தியிருப்பார். வெள்ளை நிற உடையில் சிவப்பு நிற ஷால் அணிந்து கம்பீரமாக ஸ்டைலாக ரம்யா கிருஷ்ணனை ஈடுக்கொடுக்கும் வண்ணம் எதிர்த்து பாடி பாட்டில் தூள் கிளப்பியிருப்பார் தலைவர். இரண்டாம் பகுதியில் வயதான தோற்றத்தில் வரும் தலைவர் இதே செர்வானி வகை உடையில் அதகளம் பண்ணியிருப்பார். அந்த ஆடை பிடித்துப்போய் என் பிறந்தநாளிற்கு அதே போன்று வெள்ளை சிவப்பு நிறத்தில் புது ஆடை வாங்கி பள்ளிக்கு அணிந்து நண்பர்களிடம் காட்டி மகிழ்ந்தேன்.

அத்தை வீட்டில் இருந்த சங்கிலியில் பிணைக்கப்பட்ட மர ஊஞ்சலில் தலைவர் அமறுவது போல் ஊஞ்சலின் பின்பக்கத்தில் இருந்து வலது புறமாக முன்வந்து சற்று குதித்து ஊஞ்சலில் உக்கார்ந்து வலது காலை உயர்த்தி இடது கால் மேல் போட்டு சல்யூட் அடித்து வசனம் பேசி விளையாடிய நாட்கள் மறக்கமுடியாதவை. மற்றோரு காட்சியில் நடந்துக்கொண்டே “எடுறா வண்டியை” என சொல்லிவிட்டு வாயில் சுருட்டை வைத்துக்கொண்டு இடது கையில் பிடித்துள்ள தீக்குச்சியை வலது கையில் வைத்திருக்கும் தீப்பெட்டியைகொண்டு உரசி சுருட்டை பற்றவைப்பார். அந்த காட்சியை தன் பங்குக்கு பின்னணி இசையின் மூலம் மெருகேற்றி இருப்பார் இசைப்புயல்.


அப்பொழுது இருந்த காலகட்டத்தில் பொழுதுபோக்கே விளையாட்டுக்கள் தானே. அக்கா தம்பி தங்கச்சியுடன் படத்தின் இறுதிக்காட்சியை வீட்டில் நடித்து விளையாடி இருக்கிறேன். திருச்செந்தூர் கோவிலில் முருகனுக்கு அபிஷேகம் செய்து பிரசாதமாக கொடுக்கப்பட்ட பையில் மரக்குச்சியிலான வேல் ஒன்று இருந்தது. அதை எடுத்துகொண்டு நான் படையப்பாவாக, விளையாட்டு துப்பாக்கியுடன் அக்கா நீலாம்பரியாக உருவகப்படுத்திக்கொண்டு இறுதி காட்சியை வசனம் பேசி நடித்து விளையாடுவோம்.


அண்ணனின் விடுமுறை முடிந்து மீண்டும் புனே நகருக்கு கிளம்பும்போது அம்மா, பெரியம்மா, தங்கச்சியுடன் என்னையும் அழைத்து சென்றான். அவனும் அவனது நண்பர்களும் வீடு எடுத்து தங்கியிருந்தார்கள், அங்குதான் பெரிய சைஸ் டேப் ரெக்கார்டரை முதன்முதலில் பார்த்தேன். அதனருகிலே தலைவர் கையை உயர்த்திக்கொண்டு நிற்கும் படம் கொண்ட படையப்பா படத்தின் பாடல் கேசட் இருந்தது. அவ்வப்போது அந்த கேசட் போட்டு படையப்பா பாடல்களை கேட்டு மகிழ்ந்தேன்.எனக்கு பிடித்து போனது தெரிந்து அங்கிருந்து ஊருக்கு கிளம்பும்போது அண்ணனின் நண்பரில் ஒருவர் படையப்பா பாட்டு கேசட்டை எனக்கு கொடுத்தார். ஊருக்கு வந்த பிறகும் ” என் பேரு படையப்பா, மின்சார கண்ணா, சுத்தி சுத்தி வந்தீக, வெற்றிக்கொடிகட்டு, கிக்கு ஏறுதே” பாடல்கள் மீண்டும் ஒலித்து கொண்டே இருந்தன.படத்தின் பின்னணி இசையில் தூள் கிளப்பி இருப்பார் ஏ.ஆர்.ரஹ்மான்.

படம் வெளியான சமயத்தில் fanta குளிர்பான பிளாஸ்டிக் பாட்டிலில் படையப்பா படத்தை விளம்பரப்படுத்தி இருப்பார்கள். எனக்கு சிறுவயதில் இருந்தே வரையும் பழக்கம் இருந்தது. செய்தி தாள்களில் வந்த விளம்பரத்தை வைத்து “படையப்பா” டைட்டில் எழுத்துக்களை வரைந்து பார்த்து உள்ளேன்.இதெல்லாம் ஒன்றாம் வகுப்பு முழுத்தேர்வு விடுமுறைக்கு பின்பு நடந்தவை.
பின்பு ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒருநாள் பள்ளியில் இருந்து வீட்டிற்கு மதிய சாப்பாடு சாப்பிட சென்றிருந்தேன். அப்போது அம்மாவுடன் சேர்ந்து சன் டிவியில் நாடகம் பார்த்துகொண்டே சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது நாடக இடைவேளையில் “இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக ரஜினிகாந்த் நடித்த மெகாஹிட் திரைப்படம் படையப்பா ” என தீபாவளி சிறப்பு திரைப்பட விளம்பர ப்ரோமோ வெளியானது. அதை பார்த்தவுடன் ஒரே குஷி, சீக்கிரம் சாப்பிட்டு பள்ளிக்கு சென்று நண்பர்களுடன் அதைபகிர்ந்து அன்று முழுவதும் அதைப்பற்றியே பேசிக்கொண்டு இருந்த நாட்கள் மகிழ்ச்சியானவை. அதன்பின்பு சன் டிவியில் எப்பொழுதெல்லாம் படையப்பா திரைப்படம் போட்டார்களோ அப்போது எல்லாம் தவறாமல் முழு படத்தையும் பார்த்துவிட்டு செல்வது தான் வழக்கம். மனதில் நீங்கா இடம் பிடித்தவை படையப்பாவின் மகிழ்ச்சியான நினைவுகள் !!!

Leave a comment