#MyLifeWithThalaivarMovies #Baba

படையப்பா படம் வெளிவந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பின்பு வெளியான படம், பாபா. அதனால் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.அதுவும் பட அறிவிப்பின் போது வெளியான போஸ்டரில் தலைவர் பாபா முத்திரா, தலைப்பாகை, சிகரட் என செம்ம கெத்தாக இருப்பார், அதில் தொடங்கியது படத்திற்கான எதிர்பார்ப்பு.

படம் வெளியாகும் முன்னர் அவ்வப்போது அன்றைய செய்தி நாளிதழ்களில் படம் தொடர்பான செய்திகள், தலைவரின் புகைப்படங்கள், விளம்பரம் என வந்து கொண்டிருந்தன. அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன் சற்று விவரம் தெரிந்த வயது. படம் பற்றி பேசுவதற்கு முன்பு, எவ்வாறு நான் அதைப்பற்றி அறிந்துகொண்டேன் என கொஞ்சம் விரிவாக..
வீட்டில் கண்டிப்பு அதிகம், படத்திற்கு செல்வதே மிக அரிதான ஒன்று. எப்போதாவது வெளியூரில் படித்துக்கொண்டிருக்கும் பெரியப்பாவின் பசங்களான அண்ணாவோ, அக்காவோ விடுமுறைக்கு ஊருக்கு வந்தால் அந்த சமயத்தில் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் படத்திற்கு கூட்டிக்கொண்டு போவார்கள். அல்லது திருநெல்வேலியில் இருக்கும் சித்தி வீட்டிற்கு சென்றால் அவர்கள் கூட்டி செல்வார்கள். அப்போது இருந்த குடும்ப சூழ்நிலை காரணமாக அம்மாவோ அப்பாவோ என்னை படத்திற்கு கூட்டிச்சென்றதும் இல்லை நானும் அவர்களிடம் கேட்டதும் இல்லை. பள்ளியில் நண்பர்கள் சொல்வதும், தினசரியில் படித்தும் தான் சினிமா பற்றி கொஞ்சம் அறிந்து கொண்டேன்.
பெரியப்பா வீட்டில் தான் நாங்கள் குடியிருந்தோம்.கீழே இரண்டு , மேலே இரண்டு என நான்கு வீடுகள். ஒரு வீட்டில் நாங்களும், இன்னொரு வீட்டில் பெரியப்பா குடும்பம் என இருந்தோம். மற்ற இரு வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார். கூட்டு குடும்பமாக இருந்த நாட்கள் அவை, விழாக்காலங்கள் தவிர்த்து மற்ற நாட்களில் அவரவர் வீட்டில் சமையல் நடக்கும், விழா நேரத்தில் ஒன்றாக கூடி சமைத்து சாப்பிடுவோம்.
அப்போது பெரியப்பா வீட்டில் தான் பெரிய ஒனிடா கலர் டிவி இருந்தது. அதில்தான் அவ்வப்போது சன் டிவியில் படங்களும், நாடகங்களும் பார்த்து வளர்ந்தேன். எப்போதாவது பெரியப்பாவுடன் சேர்ந்து செய்திகளும் பார்த்ததுண்டு. செய்தி பார்க்கும் பழக்கமும், செய்தித்தாள்கள் படிக்கும் பழக்கமும் அவர் கற்றுக்குடுத்தது.
நான் கார்ட்டூன் சேனலில் என்ன கார்ட்டூன் எப்போது போடுவான் , என்ன படம் போடுவான் என பார்த்துக்கொண்டிருப்பேன்.

அப்படி ஒருநாள் செய்தித்தாளை புரட்டிக்கொண்டிருக்கும்போது தான் தலைவரின் பாபா பட விளம்பரத்தை பார்த்தேன். அதற்கு முன்னர் டிவியில் அருணாச்சலம், முத்து, படையப்பா போன்ற படங்களை பார்த்து கொண்டிருந்த எனக்கு தலைவரோட புதிய படம் ஒன்று வெளிவருவது தெரிந்தது. படத்தின் பெயர் பார்த்ததும் பிடித்துவிட்டது. அப்போவே அந்த விளம்பர பக்கத்தை தனியாக எடுத்து வைத்துவிட்டேன்.

பின்பு அடுத்தடுத்து நாட்கள் வந்த செய்தி தாள்களில் தவறாமல் விளம்பரம் பக்கத்தில் வரும் பாபா படத்தை எடுத்துவைக்க ஆரம்பித்தேன். தலைவரின் அந்த தலைப்பாகை, கழுத்தில் அணிந்திருக்கும் டாலர் கயிறு, வித்தியாசமான கைப்பிடியுடன் கூடிய பாபா கத்தி, பாபா முத்திரை என எல்லாம் பிடித்துப்போனது.

படம் வந்து சில நாட்களில் டிவியில் பாபா விளம்பரம் வந்தது, சற்று வித்தியாசமாக விளம்பரப்படுத்தியிருப்பார்கள். அந்த விளம்பரத்தில் ஒன்று…ஒரு குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, பிள்ளை என வெளியில் செல்வதற்கு கிளம்பி இருப்பார்கள். அம்மா சீக்கிரம் வாங்க லேட் ஆகுது என கூப்பிட, ஒரு வயதான பாட்டி மார்டனாக வெளியே வருவார்.. வந்துவிட்டு அவர் கூறும் வசனம்..” லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா வருவேன் “, பாபா படத்தில் இடம்பெற்ற இந்த வசனம் அப்போது பிரபலம்.
நானும் வீட்டில் அடிக்கடி சொல்லிப்பார்த்து கொள்வேன். அப்படி ஒரு நாள் பள்ளிக்கு லேட்டா போய்ட்டு அப்போ , ஏன் லேட்னு வகுப்புல பாடம் எடுத்துட்டு இருந்த தமிழ் மிஸ் கேக்க , நான் இந்த வசனத்தை வாய்க்குள்ளேயே மெதுவா சொல்ல , பக்கத்துல இருந்த முதல் பெஞ்ச் பரதேசி அதை கேட்டுட்டு மிஸ் கிட்ட போட்டு கொடுக்க , அரைமணி நேரம் வெளியநிக்க வச்சிருச்சு தமிழ் மிஸ்.

“கதம் கதம்..முடிஞ்சது முடிஞ்சுபோச்சு ” இதுவும் பிடித்துப்போன வசனம். பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே படம் வெளியானது. அப்போது இருந்த சூழ்நிலையில் படத்தை திரையரங்கில் பார்க்கமுடியவில்லை. டிவியில் திரைவிமர்சனம், டாப் 10 மூவிஸ், சூப்பர் சீன், பாடல்கள் என கொஞ்சம் கொஞ்சமாக பாபா காட்சிகளை பார்த்து கொண்டிருந்தேன். “அசந்தா அடிக்கிறது உங்க பாலிசி, அசராம அடிக்கிறது இந்த பாபா பாலிசி” , “பாபா கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ் ” என பாபா பட வசனங்கள் மனதில் பதிந்தன.


படத்தில் தலைவரின் அறிமுக பாடலான டிப்பு டிப்பு, பாபா தீம் மியூசிக், மாயா மாயா கிச்சு கிச்சுதா, ராஜ்ஜியமா,சக்தி கொடு என எல்லாம் பிடித்து போன பாடல்கள். அதிலும் பாபா தீம் அல்டிமேட், B to the A to the B to the A, BABA என அதை சரியாக சொல்லதெரியாமல் கொஞ்சநாள் உளறிக்கொண்டிருந்தேன்.


சிறுவயதில் இருந்தே ஓவியம் வரையும் பழக்கம் இருந்தது. முதன்முதலில் சக்திமான் பார்த்துவிட்டு அதை பள்ளியில் ஓவிய வகுப்பில் வரைந்தபோது ஆசிரியர் அதை அடையாளம் கண்டு எனக்குள் இருந்த திறமையை ஊக்குவித்தார். அதிலிருந்து ஏதாவது ஒன்றை பார்த்து வரைந்துக்கொண்டிருப்பேன்.படத்தில் வரும் தலைவரின் கெட்டப்பை செய்தி தாள்களில் பார்த்து அதேபோல பேப்பரில் வரைந்து வைத்தேன்.



பாபாவில் தலைவர் உபயோகப்படுத்தும் கத்தி மிகவும் பிடித்துப்போனது. பிறந்தநாள் கேக் வெட்டும் பிளாஸ்டிக் கத்தி வீட்டில் இருந்தது. பாபா கத்தியில் இருக்கும் அந்த தலையின் உருவத்தை அட்டையில் வரைந்து வண்ணம் கொடுத்து அதை வெட்டியெடுத்து இந்த பிளாஸ்டிக் கத்தியில் ஒட்டி பாபா கத்தியை தயார் செய்துகொண்டேன். தலைவர் கழுத்தில் போட்டிருக்கும் அந்த ஸ்ரீ சக்கர டாலரையும் பிளாஸ்டிக் டோக்கனில் செய்து கழுத்தில் மாட்டிக்கொண்டும், தேடிப்பிடித்து ஒரு ப்ளூ சட்டை போட்டுகொண்டு, தலையில் துண்டை வைத்து தலைப்பாகை கட்டிக்கொண்டு, நெற்றியில் பட்டை அடித்துக்கொண்டேன் .
இப்படித்தான் சந்திரமுகி கங்காவா அடைஞ்சா என்று தலைவர் சந்திரமுகி படத்துல சொல்லுற மாதிரி பாபாவாக என்னை உருவகப்படுத்தி கண்ணாடி முன்பாக நின்றேன். கொஞ்சநாளைக்கு அந்த கத்தியை வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தேன். இப்போது நினைத்தால் சிரிப்பாக வருகிறது.




படத்தை திரையரங்கில் பார்க்க முடியாமல் போன பின்பு சில வருடங்கள் கழித்து சன் டிவியில் பார்த்தேன். அம்மன், பாளையத்தம்மன், சூலம், வேலன் போன்ற படங்கள், நாடங்களில் வரும் சாகச மாயாஜால கிராபிக்ஸ் காட்சிகள் பார்ப்பது எனக்கு பிடித்த ஒன்று. முதன் முதலில் பாபா படத்தை பார்த்தபோது படம் புரியவில்லை என்றாலும் தலைவரின் அறிமுகம், பாபாவை நோக்கிய அந்த இமயமலை பயணம், கிராபிக்ஸ் காட்சிகள், 7 மந்திரங்கள், இறுதிக்காட்சிக்கு முன்பாக நெருப்பிலிருந்து தலைவர் மீண்டு வரும் காட்சி என சாகச படமாக(Adventurous Movie) எனக்கு பிடித்திருந்தது. அதன்பின் பலமுறை டிவியில் போட்டு இருந்தாலும் என்னால் முழுப்படமாக பார்க்க முடியாமல் இருந்தது.


பின்னர் கல்லூரி நாட்கள் ஆரம்ப காலத்தில் தான் நண்பனிடமிருந்து படத்தை வாங்கி வீட்டில் இருந்த கம்ப்யூட்டரில் பார்த்தேன். அப்போது தான் படம் முழுவதையும் புரிந்து பார்த்தேன். படத்தில் தலைவர் செம்ம கெத்தாக இருப்பார், அதுவும் அந்த தீம் மியூசிக் பின்னணியில் தலைவர் வரும் காட்சிகள் மாஸ். படத்தில் பாடல்கள், வசனங்கள் என ஒவ்வொன்றிலும் வாழ்க்கை தத்துவங்களை உதிர்த்திருப்பார் தலைவர். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகிய படம் அப்போது இருந்த அரசியல் வட்டத்திற்குள் சிக்கி , படம் ஒன்னும் புரியலை, என்ன சொல்லவறார்னு தெரியலனு எதிர்மறை விமர்சனங்களால் சரியாக ஓடவில்லை. அதன்பின்பு டிவியில் பார்த்துவிட்டு படத்தை கொண்டாடியவர்கள் இருக்கிறார்கள்.


இப்போதும் நிறைய ரஜினி ரசிகர்களுக்கு பிடித்த படங்களில் பாபாவும் ஒன்று. தலைவர் பிறந்தநாளை ஒட்டி சில திரையரங்கில் சிறப்பு காட்சிகளில் தலைவரின் ஹிட் படத்தை திரையிடுவார்கள். அப்போது எல்லாம் பாபா படத்தை போடுங்க , தியேட்டர்ல பார்க்க மிஸ் பண்ணிட்டோம், படத்தை கொண்டாட தவறிட்டோம் என சில ரசிகர்கள் கூறுவதை கேட்க முடிகிறது.

படத்தில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று இறுதிக்காட்சி. தற்போதைய நிலவரத்தை அப்போதே படத்தில் காட்டியிருப்பார் தலைவர். பூமியில் மக்கள் மத்தியில் வாழ விருப்பம் இல்லாமல் துறவிகளுடன் பாபாவை நோக்கி இமயமலை புறப்படுவார். மக்கள் எல்லாரும் , தன் மனதை மாற்றிக்கொண்டு தலைவர் மீண்டும் வரமாட்டாரா , நம்மை காப்பாற்ற அவர் அரியணை ஏற்க மாட்டாரா என பார்த்துக்கொண்டிருப்பார்கள். அப்போது எதிரிகள் முதலமைச்சராக தேர்ந்தெடுத்திருந்த நபரை கொன்றுவிடுவர். பாபாவை நோக்கி சென்று கொண்டிருக்கும் தலைவர் அந்த துப்பாக்கி சத்தம் கேட்டு பின்னால் திரும்பி பார்த்துவிட்டு ஒருகணம் நின்று யோசித்து மக்களை நோக்கி செல்வார்.
“உப்பிட்ட தமிழ்மண்ணை
நான் மறக்கமாட்டேன்…
உயிர்வாழ்ந்தால் இங்கேதான்
ஓடிவிடமாட்டேன்…
கட்சிகளை பதவிகளை
நான் விரும்பமாட்டேன்..
காலத்தின் கட்டளையை
நான் மறுக்க மாட்டேன்..”

அற்புதமும் , அதிசயமும் நிறைந்ததாக இந்த பாடல் வரிகள் பின்னணியில் ஒலிக்க , தலைவர் மக்களை நோக்கி நடந்து செல்ல, மக்கள் சந்தோஷத்தில் ஆர்பரிப்பார்கள். அவர்களை பார்த்த வண்ணம், கையை உயர்த்தி பாபா முத்திரை காட்ட, தலையில் தலைப்பாகை சுழல, இடது கையில் பாபா கத்தி வந்து நிற்கும். தொடரும்…என்ற எண்ட் கார்டுடன் படம் நிறைவடையும்.

இதோடு இவர் ஆட்டம் முடிந்தது என்று கொக்கறித்தவர்களுக்கு, நான் கீழ விழுந்தா யானை இல்லை குதிரை, டக்குனு எந்திரிச்சிருவேனு 2005ஆம் ஆண்டில் ஒரு காட்டுக்காட்டினார் தலைவர்.அன்று ஆரம்பித்து தற்போது வரை எதிர்ப்பாளர்கள் பலருக்கும் அவர் ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கிறார்.

2002ஆம் வருடத்திற்கு பிறகு அதே பாபா முத்திரையோடு 2017 டிசம்பர் 31ல் மக்கள் முன்னிலையில் 2021ஆம் ஆண்டை நோக்கி மீண்டும் தொடர்கிறார் தலைவர்….
#கதம்_கதம் 🤘
#நன்றி
#Thalaivar #Superstar #Rajinikanth #Baba
அற்புதம்
Got my memories back summa sollala Baba my fav movie of Superstar
Good Article rakks
LikeLike
Thank You Very Much Bro 😍😍😍
LikeLike