பள்ளிநாட்களும் கிறிஸ்துமஸ் கேக்கும் !!!

கிறிஸ்துமஸ் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பள்ளிக்கூட நாட்கள்தான். நான் படித்தது ஒரு கிறிஸ்துவ மெட்ரிக் பள்ளியில், அதனால் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை பற்றி சிறுவயதிலே அறிந்திருந்தேன். ஒவ்வொரு நாள் காலையிலும் பள்ளியில் நடக்கும் பிரார்த்தனையில் கிறிஸ்துவ பாடல்கள் பாடி பாடி அதுவும் பரிச்சயமான ஒன்றாகிப்போனது. எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டில் அனைத்து பண்டிகைகளும் அப்போது பள்ளியில் கொண்டாடுவார்கள். தைப்பொங்கல் நாட்களில் எல்லா மாணவர்களிடமும் சிறுத்தொகையை வகுப்பு ஆசிரியர்கள் வசூலித்து , அதில் பொருட்கள் வாங்கி பள்ளியிலேயே சக்கரை பொங்கல் தயார் செய்து அனைத்து மாணவர்களுக்கும் சுடச்சுட பொங்கல் பரிமாறிய நாட்களை தற்போது நினைத்தாலும் தித்திக்கிறது. அதுபோன்ற தித்திக்கின்ற மற்றொரு சுவையான நினைவுதான் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.

எங்கள் வீட்டில் நவராத்திரி கொலு பண்டிகை கொண்டாடுவார்கள். அந்த படிக்கட்டுகளில் வைக்கப்பட்டிருக்கும் சிறு சிறு வண்ண நிற கற்சிலைகளை பார்க்கும்போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும், அந்த பொம்மைகளை தொட்டு பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. எங்கள் வீட்டில் கொலு என்றால், பக்கத்து வீட்டுக்காரர் துரை அண்ணன் வீட்டில் கிறிஸ்துமஸ் குடில். சின்ன தொழுவம் போன்ற குடில் அமைத்து அதில் கிறிஸ்து பிறப்பை வடிவமைத்து இருப்பார்கள். அருகில் கிறிஸ்துமஸ் மரத்தில் வண்ண விளக்குகள், கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை ,வீட்டின் வெளியே நட்சத்திரம் என அலங்கரித்து இருப்பார்கள். அவர்கள் வீட்டில் கட்டியிருந்த நட்சத்திர விளக்கை பார்த்து, எங்க வீட்டில் கேட்டு அடம்பிடித்து மாட்டினேன். மாலை வேளையில் அக்காவுடன் சேர்ந்து தெருக்களில் சென்று எந்தெந்த வீட்டில் கிறிஸ்துமஸ் குடில் வைத்திருக்கிறார்கள் எவ்வாறு அலங்கரித்திருக்கிறார்கள், யார் வீட்டில் பெரிய குடில் இருக்கிறது என்று பார்த்த நாட்கள் மனதில் நீங்காமல் இருக்கிறது.

இரவு வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருக்கும்போது திடீரென்று தூரத்தில் டிரம்ஸ் சத்தத்துடன் சேர்ந்து பாடலும் ஒலிக்கும், கூடவே நாய் சத்தமும். என்னவென்று வெளியே சென்று வேடிக்கை பார்த்தால் சிவப்பு நிற உடை, தொப்பி, முகமூடி அணிந்து கையில் பலூன் வைத்துக்கொண்டு தலையையும் பொய்யான தொப்பையையும் ஆட்டிக்கொண்டு கிறிஸ்துமஸ் தாத்தா வேடம்போட்டு ஒருவர் வந்து கொண்டிருப்பார், அவருடன் சேர்ந்து பாடல்கள் பாடிக்கொண்டு பின்னால் சிலரும், முன்னாள் சிலரும் தெரு நாயிடமிருந்து கிறிஸ்துமஸ் தாத்தாவை காக்கும் வர்ணம் நடந்து வந்துகொண்டிருப்பார்கள். நான் கிறிஸ்துமஸ் தாத்தாவை பார்த்து கைகாட்ட, அவரும் நம்மை பார்த்தவுடன் கிறிஸ்துமஸ் தாத்தா கையசைப்பார், அதில் ஒரு பேரானந்தம் அந்த வயதில்.

இதுபோன்றுதான் பள்ளியில் நடக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும். அரையாண்டு தேர்வோட கடைசி நாள் அப்போ எக்ஸாம் முடியுதுனு ஒருவித சந்தோசம் இருக்கும். அதையும் தாண்டி ஒரு சந்தோசம்னா கடைசி நாள் எக்ஸாம் முடிஞ்சதும் ஸ்கூல்ல கிறிஸ்துமஸ் கேக் கொடுப்பாங்க. எக்ஸாம் ஆரம்பிக்க முன்னால ஒரு நாள் கிறிஸ்துமஸ் கொண்டாடுவாங்க, அதன் ஒரு பகுதியா குடில் அமைச்சு கிறிஸ்து பிறந்தத நாடகமா போட்டு, கூடவே ஒரு ஆள் கிறிஸ்துமஸ் தாத்தா வேஷம் போட்டு ஸ்கூல்ல சுத்தி வந்துட்டு இருப்பாங்க. மேடையிலே நின்னுகிட்டு கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போட்டு இருக்கிற சீனியர் அண்ணா, கையில வச்சு இருக்கிற பையிலிருந்து ஆசை, காரமில்க் சாக்லேட்ட தூக்கி போடுவாரு. நானும் ஒன்னாம் வகுப்புல இருந்து அந்த சாக்லேட் நமக்கு கிடைக்காதானு பிடிக்க முயற்சி பண்ணிருக்கேன், ஒருதடவை கூட அது நடக்கல. இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துல ஒரு முக்கிய அம்சமே, கடைசி எக்ஸாம் அப்போ கிறிஸ்துமஸ் பரிசா எல்லாருக்கும் ஒரு காலண்டரும், ஒரு ப்ளம் கேக்கும் கொடுப்பாங்க. ரெண்டு க்ளாஸ் தள்ளி கேக் குடுக்கும் போதே நமக்கு இங்க கேக் ஸ்மெல் வந்துரும். எப்போ நம்ம க்ளாஸ் வருவாங்கன்னு எதிர்பார்த்துட்டு இருப்போம்.

அப்புறம் என்னோட கிளாஸ்க்கு வந்து எங்க ஒவ்வொருத்தருக்கும் பள்ளியோட பெயர் அச்சிட்ட புத்தாண்டு காலண்டர், கேக்னு குடுப்பாங்க. முதல் வேலையா கேக்க சாப்பிட்டு முடிச்சிருவோம், அப்புறமா தான் அடுத்த வேலையா காலண்டர் பிரிச்சு பார்க்கிறது , இல்லேன்னா கூட இருக்கிற பக்கிக நம்ம கேக்க புடுங்கி தின்னுறும்ங்க. என்னதான் வீடு பக்கத்துல இருக்குற கணேஷ் பேக்கரில கேக் வாங்கி சாப்பிட்டு இருந்தாலும் இந்த கிறிஸ்துமஸ் ப்ளம் கேக், வடிவேல் “மசால் வடை மசால் வடைதான்யா, என்னா டேஸ்ட்டு”னு சொல்லுற மாதிரி தனி டேஸ்ட்டாதான் இருக்கும்.

கேக்க தின்னுட்டு புத்தாண்டு காலண்டர்ல என்ன படம் இருக்குனு ப்ரெண்ட்ஸ்ஸோட சேர்ந்து பிரிச்சு பார்ப்போம், இயேசு, மாதா, பூந்தோட்டம்னு இதுல ஏதாச்சும் ஒண்ணுதான் அந்த காலண்டர்ல இருக்கும்.பத்திரமா அதை சுருட்டி பைக்குள்ள வச்சுட்டு, அந்த சந்தோசத்தோட நண்பர்களோடு அரையாண்டு விடுமுறையில என்ன பண்ணப்போறோம் எந்த ஊருக்கு போறோம்னு பேசிக்கிட்டே பள்ளியிலிருந்து வீட்டுக்கு கிளம்பி போன நாட்கள் மறக்கமுடியாதவை…♥️♥️

#MerryChristmas

#Nostalgic #Childhood #SchoolDaysMemories ♥️♥️♥️

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑