எனக்கு பிடித்த படங்கள் !!!

திரைப்படங்கள் நம் வாழ்க்கையில் இரண்டுற கலந்தவை. அந்த படங்கள் நம் எண்ணங்களில் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். அவை நம்மளை ஏதாவது ஒரு வகையில் மகிழ, கொண்டாட, சிரிக்க, சிந்திக்க, அழுக, ஏன் எரிச்சல் கோபம் கூட அடையவைத்திருக்கும். இதுவரை நாம் எத்தனையோ படங்கள் திரையரங்கில், டிவியில், கம்ப்யூட்டரில் பார்த்திருப்போம். அதில் நமது அபிமான நடிகர்களின் படங்கள் தவிர்த்து, குறிப்பிட்ட சில படங்கள் நம் மனதில் நீங்கா இடம்பிடித்துருக்கும், எத்தனை முறை பார்த்தாலும் நமக்கு சலிப்பு தட்டாது. அதன் காரணம் படத்தின் கதையும், நாம் படம் பார்த்த சூழல் ஏற்படுத்திய நினைவுகளும்.

அவ்வாறு எனக்கு பிடித்த, பல மலரும் நினைவுகள் கொண்ட ஒரு படம் மாதவன், ஜோதிகா நடிப்பில் இயக்குனர் அழகம் பெருமாள் இயக்கத்தில் வெளியான “டும் டும் டும்”. எப்போது இந்த படம் காண வாய்ப்பு கிடைத்தாலும் தவறாமல் பார்த்துவிடுவேன். படத்தின் கதையென்று பார்த்தால், வீட்டில் ஏற்பாடு செய்யும் கல்யாணத்தில் விருப்பமில்லாத மாதவன் , ஜோதிகா இருவரும் திட்டம் போட்டு கல்யாணத்தை நிறுத்த முயற்சி செய்ய எதிர்பாராத விதமாக நடந்த சம்பவத்தால் கல்யாணம் நின்றுவிட, பின் எதிர்பாராத சூழலில் இருவரும் ஒருவரை புரிந்து கொண்டு விரும்ப ஆரம்பிக்க பெற்றோர் எதிர்க்க பின் மீண்டும் எவ்வாறு இணைந்தார்கள் என்பதை சுவாரசியம் குறையாமல் நெல்லை மண் மனம் வீச கொடுத்திருப்பார் இயக்குனர்.

“தேசிங்கு ராஜா, ரகசியமாய் புன்னைகைத்தால், சுற்றும் பூமி சுற்றும், உன் பேரை சொன்னாலே, அத்தான் வருவாக, கிருஷ்ணா கிருஷ்ணா” என அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். விவேக், எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி இவர்கள் வரும் நகைச்சுவை காட்சிகள், நெல்லை அம்பை வட்டார பேச்சு வழக்கு வசனங்கள் மேலும் இப்படத்திற்கு வலுசேர்த்தன. என்னை பொறுத்த வரை இது ஒரு காவிய படம் என்று தான் சொல்வேன். இந்த படம் பார்க்கும்போதெல்லாம் படம் பார்த்த சூழலும் அவைதந்த  மறக்கமுடியாத நினைவுகளும் நினைவில் வந்து செல்லும். சமீபத்தில் கே டிவியில் இந்த படத்தை பார்த்த போது மீண்டும் நினைவுகள் மனதுக்குள் உருண்டோடின.

2001ஆம் ஆண்டு, அப்போது அக்கா பெரியம்மாவுடன் மதுரை திருநகரில் வீடு வாடகைக்கு எடுத்து அருகில் இருந்த கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். உடன் அக்காவின் கல்லூரி தோழியும் தங்கியிருந்தார். நான் அப்போது நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். விடுமுறை நாட்களில் அவ்வப்போது என்னை பெரியம்மா திருநகர்க்கு அழைத்து செல்வார். அக்கா தங்கியிருந்த அந்த பகுதியில் தெருவீதிகள் இருபுறமும் மரங்கள் சூழ அமைந்து பார்க்க ரம்மியமாக காட்சியளிக்கும். விடுமுறை நாட்கள் அக்கா மற்றும் அக்காவின் தோழியுடன் வெளியே செல்வது, கேரம் போர்டு விளையாடுவது , எதிர்வீட்டு பையனுடன் தெரு வீதியில் ஓடி பிடித்து விளையாடுவது, கிரிக்கெட் விளையாடுவது, மாலை வேளையில் பிள்ளையார் கோவில் சென்றுவிட்டு அதன் எதிரே அமைந்த பூங்காவில் விளையாடிவிட்டு வெளியேவரும்போது கோவிலுக்கு எதிர்புறம் இருந்த தள்ளுவண்டி கடையில் சுடச்சுட தேங்காய், பருப்பு போலி சாப்பிடுவது என பொழுது கழியும். திருநகர் போலாமா என பெரியம்மா கேட்டால் உடனே கிளம்பிவிடுவேன், அவ்வளவு பிடித்து போனது. அதற்கு அக்காவின் தோழியும் ஒரு காரணம்.

அக்காவின் தோழி பெயர் அன்றில் (Glossy Ibis), பறவையின் பெயர். அவங்களை அன்றில் அக்கா தான் என்று கூப்பிடுவேன், பெயரை போல அவங்களையும் முதல்முறை பார்த்த போதே பிடித்துவிட்டது. சொந்த தம்பி போல் நன்றாக பார்த்துக்கொள்வார், ஜாலியாக அவர்களோடு பொழுது போகும். அன்றில் அக்காவிற்கு சொந்த ஊர் சேலம், அரையாண்டு தேர்வு விடுமுறை நாளில், நானும் என் அக்காவும் அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தோம். போன முதல்நாளே மறக்கமுடியாத சம்பவமாக அவர்கள் வீட்டு சாப்பாடு அமைந்தது.

அன்றில் அக்காவின் அம்மா, காலை உணவாக இட்லி பரிமாறினார்கள். ஆனால் இட்லி பார்ப்பதற்கு ஒரு டைப்பா வெள்ளை நிறத்தில் இல்லாமல் வேறு ஒரு நிறத்தில் இருந்தது. இட்லியை பிய்த்து வாயில் போட்டால் ஒரு வித்தியாசமான கொடூரமான சுவை. வெளியிடம் வேறு,என்னை சுற்றி அன்றில் அக்கா, அவரின் அம்மா, அப்பா, என் அக்கா என எல்லோரும் உக்காந்திருக்கிறார்கள் என்பதால் என்னால் துப்பவும் முடியவில்லை. என் முகம் போன போக்கைவைத்து எனக்கு இது பிடிக்கவில்லை என்பதை கண்டுவிட்டார்கள் அன்றில் அக்காவின் அம்மா. இது வெந்தய இட்லிப்பா, பிடிக்கலையா என்று கேட்டார்கள். தலையாட்டிவிட்டு வேறு வழியின்றி ஒரு இட்லியை கஷ்டப்பட்டு முழுங்கிவிட்டு இடத்தை விட்டு நகர்ந்தேன். அதன்பின்பு மற்ற வேளை உணவு வகைகள் நல்லா இருந்தது. ஆனாலும் இன்றுவரை அந்த வெந்தய இட்லியை மறக்கமுடியாது.

அதன்பின்பு வீட்டில் டிவி பார்ப்பது, மாடி அறையில் இருந்த கம்ப்யுட்டரில் எம்.எஸ்.பெய்ண்டில் படம் வரைவது, ரோடு ரேஸ் பைக் கேம் விளையாடுவது என பொழுது போனது. அவர்கள் வீட்டில் அப்போது வீடியோ பிளேயர் இருந்தது , அதில்தான் ஒருநாளில் எல்லாரும் சேர்ந்து “டும் டும் டும்” படம் பார்த்தோம். தேசிங்கு ராஜா பாடல் அப்போது செம்ம ஹிட். அந்த பாடலை படத்தில் பார்த்தவுடன் பிடித்துவிட்டது. இந்த பாடல் பார்த்தது தான் அப்போது நினைவில் நின்றது. அன்று அது ஒரு சாதாரண நாளாக கடந்து சென்றாலும், இன்றளவு அதன் நினைவுகள் நெஞ்சில் நீங்காமல் இருக்கின்றன. பின் மற்றொருநாள் எல்லாரும் சேர்ந்து சேலம் அருகில் உள்ள ஏற்காடு மலைக்கு சென்றோம். முதன்முறையாக மலைப்ரதேசத்திற்கு சென்றது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. சிறுவயது என்பதால் பெரிதாக ரசிக்க தெரியவில்லை என்றாலும் மறக்க முடியாத நினைவுகள் அவை.

“உன் பேரை சொன்னாலே உள்நாக்கில் தித்திக்குமே…
.
.
.
ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞாபகம்..”

படத்தில் வரும் இப்பாடலின் வரியை போல், ஒரு கோடி ஞாபகம் இல்லாவிட்டாலும் அவ்வப்போது டும் டும் டும் படம் பார்க்கும்போதெல்லாம் திருநகர், சேலத்திலிருந்த நாட்கள் தந்த ஞாபகங்கள் வந்து செல்லும்…

#UnforgettableMovies #Childhood #DummDummDumm #Madurai #Thirunagar #Salem #Yercaud



Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑