கலாநிதி மாறன் சன் டிவியை தோற்றுவித்த வரலாறு !!!
தமிழகத்தின் அடையாளங்களில் சன் டிவியும் ஒன்று, அதை உருவாக்கியவர் கலாநிதி மாறன். சன் டிவியை ஆரம்பித்தபோது அவருக்கு வயது 30 கூட தாண்டவில்லை. தன் முழுத்திறமையாலும் , தன் தந்தை மற்றும் தாத்தாவின் ஆதரவோடும் சன் தொலைக்காட்சியை அந்த இளம்வயதில் ஆரம்பித்தார். அதைப்பற்றி சற்று விரிவாக இந்த பதிவில்…

கலைஞரின் அக்கா மகனும், முன்னால் மத்திய அமைச்சருமான முரசொலி மாறனின் மகன் தான் கலாநிதி மாறன், இவர்தான் சன் டிவியின் நிறுவனர் மற்றும் தலைவர்.


1964 ஜூலை 24ல் பிறந்த கலாநிதி மாறன், சென்னை டான் போஸ்கோவில் பள்ளி படிப்பை முடித்தார். பின்னர் லயோலாவில் இளநிலை படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்று ஸ்க்ராண்டன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்தார்.அமெரிக்காவில் அப்போது சேட்டிலைட் சேனல்கள் பிரபலமாக இருந்த நேரம், அதைப்பார்த்து வியப்படைந்தார் கலாநிதி.பின்னர் 1987ல் படிப்பை முடித்துவிட்டு இந்தியா வந்தவர், குங்குமம் பத்திரிக்கையில் பணிபுரிய ஆரம்பித்தார். அப்போது கேபிள் டிவி பற்றி வந்த செய்திகள் மீது ஆர்வம் கொண்டு 1990ல் பூமாலை எனப்படும் வீடியோ செய்தி பத்திரிக்கையை வீடியோ கேசட் வடிவில் அறிமுகம்செய்தார். வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு செய்திகள் வழங்கும் வண்ணம் வீடியோ கேசட் அங்கும் விற்பனைக்கு சென்றது. பின்னர் காப்புரிமை பிரச்சனை காரணமாக 1992 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

இந்த சமயத்தில் தான், இந்தியாவின் முதல் தனியார் சேட்டிலைட் ஜீ டிவி எனும் பெயரில் உருவானது. அதை அறிந்த கலாநிதி மாறன், ஏற்கனவே வீடியோ செய்திகளை தமிழில் அறிமுகப்படுத்திய அனுபவத்தினை கொண்டு தமிழ் நிகழ்ச்சிகளை தயார் செய்து டிவியில் ஒளிபரப்ப எண்ணினார்.இதனால் கலாநிதி மாறன், ஜீ டிவியை அணுகி அவர்களின் ட்ரான்ஸ்பாண்டரில் சில மணி நேரம் தமிழ் நிகழ்ச்சிக்கு ஒதுக்கீடு செய்ய கோரினார். ஆனால் மாறனுக்கு, ஜீ டிவி நிறுவனர் சுபாஷ் சந்திராவின் நேர்முகம் அவருக்கு கிடைக்கவில்லை.

மாறாக, அங்குள்ள மற்றோரு அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்த, தமிழ் நிகழ்ச்சிக்கு அதிக பார்வையாளர்கள் இல்லை எனக்கூறி கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. கோபமடைந்த கலாநிதி மாறன்,பின்பு வேறு ஒரு சிறிய சேனலான ATN ன்னுடன் தொடர்புகொண்டு மூணு மணி நேர ஸ்லாட்க்கு ஒப்பந்தம் செய்து கொண்டார். தொலைக்காட்சி தொடங்க வங்கியில் கொஞ்சம் கடன், அப்பா, தாத்தாவின் ஆதரவோடு முன்னேறினார்.

1993, 14 ஏப்ரல் சன் டிவி தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் 3 மணி நேர நிகழ்ச்சிகளை மட்டும் ஒளிபரப்பி வந்தது.

அந்த காலகட்டத்தில் ரஷிய சாட்டிலைட் மூலம் நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகின. அதனால் 3 வாரங்களுக்கு முன்பே நிகழ்ச்சிகளை தயார் செய்து ரசியாவின் மாஸ்கோக்கு டேப்பை அனுப்பி விடுவார்கள்.

“சன் டிவியின் தமிழ் மாலை” இவ்வாறு அவர்கள் சொல்வதற்கு காரணம், இதுதான். சன் டிவி ஆரம்பித்த போது மாலை வேளைகளில் சில மணி நேரம் மட்டுமே ஒளிபரப்பாகும். காலப்போக்கில் மக்களுக்கும் அது பழகிப்போனது.பின்னர், 1995 ஆம் ஆண்டிலிருந்து 24 மணி நேர சேனலாக உருமாறியது. அதன்பின்னரும் தமிழ் மாலை என்று சொல்வதை மாற்ற விரும்பவில்லை சன் டிவி.1998 ஆண்டிற்கு பிறகு இந்தியாவிலிருந்து நேரடியாக சாட்டிலைட்களுடன் தொடர்பை ஏற்படுத்தி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தொடங்கினார்கள்.அதுவரை சில நடைமுறை மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களை தாண்டி சன் டிவி பயணித்து கொண்டிருந்தது.

மக்களின் பல்ஸ் அறிந்து சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள், கேம் ஷோ உருவாக்கப்பட்டு ஒளிபரப்பு ஆனது. அவ்வப்போது திரைப்படங்களை ஒளிபரப்பி மக்களை சன் டிவி பார்க்க வைத்தார் கலாநிதி மாறன். அதுவரை திரையரங்கில் பார்த்து மகிழ்ந்த திரைப்படங்கள் தங்கள் இல்லம் தேடி வருவதை மக்கள் வரவேற்றனர்.

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி,கமல், விஜயகாந்த், ராமராஜன், மோகன் என மக்களின் ஆதர்ச நாயகர்கள் சன் டிவி வாயிலாக ரசிகர்களின் இல்லங்களுக்கே நேரடியாக சென்றனர். இவ்வாறு சன் டிவி உருவாகி, தமிழ்நாட்டிலும் தமிழ் மக்கள் மனதிலும் தடம் பதிக்க ஆரம்பித்தது.


சன் டிவியின் தமிழ் மாலை ஆரம்பமானது.❤️❤️❤️
எவ்வாறு தன் நிகழ்ச்சிகள் மூலம் பிரகாசிக்க துவங்கியது என்பது அடுத்த பதிவில்..
#SunTv #KalanithiMaran #ZeeTv
Leave a comment