தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சியை பார்த்து போரடித்து போன தமிழக மக்களுக்கு சன் டிவியின் வருகை ஒரு வரப்பிரசாதமாக அமைந்தன. சன் டிவி நிகழ்ச்சிகள் புதுவித பொழுதுபோக்கை அமைத்து குடுத்தது. ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சி தொடர்கள் , விளையாட்டு நிகழ்ச்சிகள் , செய்திகள் போன்றவை ஒளிபரப்பாகின.

திரையரங்கில் மக்கள் கண்டுகளித்து ரசித்த திரைப்படங்களும் சன் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கின. பண்டிகை திருவிழா கால நாட்களில் புதுப்படங்கள் , சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் மற்ற நாட்களில் நாடகங்கள் என வித்தியாசமான நிகழ்ச்சிகளை வழங்கி மக்களை சன் டிவி பக்கம் திருப்பினார் கலாநிதி மாறன் .

கேபிள் புரட்சி தமிழகத்தில் இனிமேல் கொஞ்சம் கொஞ்சமாக வெடிக்கும் என்பதை கலாநிதி மாறன் சன் டிவி தொடங்கியபோதே உணர்ந்தார். கேபிள் டிவி வருங்காலத்தில் தமிழ் சினிமாவை எப்படி ஆட்கொள்ளப்போகிறது என்பது அப்போது திரையுலகில் யாருக்கும் தெரியவில்லை, தெரிந்திருக்க வாய்ப்பும் இல்லை. இதை சரியாக கணித்த கலாநிதி மாறன், தமிழ் திரைப்படங்களின் டிவி ஒளிபரப்பு உரிமையை சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடமிருந்து வாங்க தொடங்கினார். தொலைக்காட்சி உரிமை பற்றி அப்போது முழுதும் அறிந்திறாத தயாரிப்பாளர்கள், திரையில் ஓடிமுடிந்து படப்பெட்டிக்குள் சுருண்டு கிடைக்கும் படத்தை மீண்டும் விலை குடுத்து வாங்க சன் டிவி அணுகியபோது கிடைத்த விலைக்கு பட உரிமைகளை விற்றனர். இதன்மூலம் பல திரைப்படங்களை வாங்கி திரைப்பட நூலகத்தை அமைத்து கொண்டது சன் டிவி. அதுமட்டுமின்றி புதுப்படங்களுக்கான தொலைக்காட்சி உரிமையையும் வாங்க தொடங்கியது.

இந்த காலகட்டத்தில் GEC டிவி (தற்போதைய ஸ்டார் விஜய் ), ராஜ் டிவி போன்ற தொலைக்காட்சிகள் தமிழ்நாட்டில் ஆரம்பமாகின. 1995 ஆம் ஆண்டிலிருந்து முழுநேர தொலைக்காட்சியாக மாறிய சன் டிவி தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கி கொண்டிருந்தது . சன் டிவிக்கு போட்டி தரும் விதத்தில் ராஜ் டிவியும் தொடர்கள், திரைப்படங்கள் என ஒளிபரப்பினார்கள் . இந்த இடத்தில் ராஜ் டிவி பற்றி குறிப்பிட்டு ஆகவேண்டும்.


ராஜ் டிவி ஆரம்பிப்பதற்கு முன்பாக ராஜ் வீடியோ விஷன் என்கிற பெயரில் திரைப்பட வீடியோ கேசட் விற்பனை செய்யும் வீடியோ தொழிலை செய்து வந்தனர். இதனால் இவர்களிடம் நிறைய பழைய தமிழ் திரைப்படங்களின் வீடியோ கேசட் உரிமைகள் இருந்தன. இதனை கொண்டு தான் தொலைக்காட்சி ஆரம்பிக்கும் நோக்கில் ராஜ் டிவி தொடங்கப்பட்டது. ராஜ் வீடியோ விஷன் மூலம் ராஜ் டிவியும் தனது நூலகத்தை அமைத்துக்கொண்டது. சன் டிவியை போல் ராஜ் டிவியும் புதுப்படத்திற்கான உரிமைகளை வாங்க ஆரம்பித்தனர். இவ்வாறு சன் டிவிக்கு இணையாக ராஜ் டிவியும் உருவாக தொடங்கி சன் போட்டி ஆரம்பமானது.

நாடகங்கள் , சினிமா தவிர்த்து சன் டிவி மக்களிடம் இன்னும் அதிகமாக சென்றடைய இன்னொரு காரணம் சன் டிவியின் செய்திகள், அரசியல் பேட்டிகள் , நேர்காணல்கள் போன்றவை. சன் டிவி ஆரம்பித்த காலகட்டத்தில் ஜெயலலிதா அம்மையாரின் மோசமான ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தது. தூர்தர்ஷன் செய்திகளும் அரசு சம்பந்தப்பட்ட ஆதரவு செய்திகள் மட்டும் வழங்கி வந்தன.

மக்களும் கொடுமையை சந்தித்து கொண்டு இருக்க , அந்த மோசமான ஆட்சியின் நிலையை செய்திகளாக சன் டிவி ஒளிபரப்பின. இந்த சமயத்தில் தான் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணம் வெகுவிமர்சையாக அதிகார துஸ்பிரயோகத்துடன் நடைபெற , அந்த காட்சிகளை எல்லாம் தைரியமாக படம்பிடித்து சன் டிவியில் செய்தி வெளியிட்டனர். 1996 தேர்தலில் ஜெயா அரசு ஆட்சியை கவிழ்க்க இதை திமுக சாதகமாய் பயன்படுத்தி கொண்டனர்.
நாட்கள் செல்ல செல்ல சன் டிவி தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் நன்றாக பிரபலம் அடைய தொடங்கியது. 1997 ஆம் ஆண்டு காலகட்டத்திற்கு பிறகு நகரங்களிலிருந்து டவுன், கிராமம் என கொஞ்சம் கொஞ்சமாக கேபிள் டிவி பரவ தொடங்கியது, மக்களும் சன் டிவி, விஜய் டிவி , ராஜ் டிவி என பார்க்க தொடங்கினர். இருந்தாலும் சன் டிவி தான் பிரதான பிடித்த தொலைக்காட்சியாக இருந்தது, கேபிள் டிவி என்றாலே சன் டிவி தான் என்பதற்கு ஒரு எளிமையான உதாரணம், கிராம நகர் புறங்களில் மக்கள் கேபிள் டிவி கனக்சன் என்று சொல்ல மாட்டார்கள், சன் டிவி கனக்சன் என்று தான் அழைப்பார்கள். எனக்கு நியாபகமிருக்கிறது, சிறு வயதில் எங்கள் வீட்டில் கேபிள் டிவிக்கு வாடகை வசூலிக்க வருபவர்களை கேபிள்க்காரன் என்று சொன்னதில்லை சன் டிவிக்காரன் வரான்னு தான் சில காலங்கள் சொல்லி கொண்டு இருந்தார்கள். இன்னமும் கூட சில இடங்களில் அவ்வாறு அழைப்பதுண்டு, அதுதான் சன் டிவிக்கு கிடைத்த வெற்றி.
சன் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் அது தொடர்பான என் நினைவூட்டங்கள் பற்றி பார்க்கும் முன்பு சன் டிவி தொடர்பான சில சுவாரஸ்ய நிகழ்வுகள் .
சன் டிவியில் முதலில் ஒளிபரப்பான படம் !!
சன் டிவியில் முதன் முதலில் ஒளிபரப்பான திரைப்படம் நடிகர் ராமராஜனின் சூப்பர் ஹிட் “கரகாட்டக்காரன்”. இந்த படம் சன் டிவிக்கு முன்பாகவே தூர்தர்ஷனில் ஒளிபரப்பு செய்யப்பட்டு இருந்தன .

சன் டிவியில் “இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக” என முதன்முதலில் ஒளிபரப்பானது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் “மாப்பிள்ளை”. சன் டிவி ஆரம்பித்த 1993 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தன்று புதுப்படமாக மாப்பிள்ளை படம் ஒளிபரப்பானது.


1994-1995 காலகட்டத்தில் நடிகை “சில்க் ஸ்மிதா” நடிப்பில் “பார்வைகள்” எனும் நாடகம் ஒளிபரப்பானது. சுந்தர் கே விஜயன் இயக்கத்தில் தயாரானது இந்த தொடர். நடிகர் சமுத்திரக்கனி இந்த தொடரில் இணை இயக்குனராக பணியாற்றி உள்ளார்.
திரையில் வெளியாகி மூன்று ஆண்டுகளுக்கு பின்பு தான் டிவியில் ஒளிபரப்பாகவேண்டும் என்கிற கோட்பாட்டை தாண்டி, சரத்குமார் நடிப்பில் 1997ல் வெளியான “அரவிந்தன்” திரைப்படம் வெறும் ஆறு மாத காலத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகின.
இன்னும் பல தகவல்களும் , சன் டிவியுடனான என் வாழ்க்கை பயண அனுபவமும் அடுத்த பதிவில்…
#SunTv #RajTv #VijayTv #RajVideoVision #CableTv #Superstar #Rajinikanth
Leave a comment