இருட்டுகடை அல்வா ❤️❤️❤️
திருநெல்வேலி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அல்வாதான். அதிலும் இருட்டுகடை அல்வா என்றால் நாவில் எச்சில் ஊறும். “நினைத்தாலே இனிக்கும்” என்பதற்கு ஏற்றார் போல் அல்வாவை பற்றி நினைத்தாலே அந்த தித்திப்பான சுவை நாவில் ஒட்டிக்கொள்ளும்.

சிறுவயதில் தேர்வு விடுமுறை நாட்களில் திருநெல்வேலியில் உள்ள சித்தி வீட்டிற்கு செல்வது வழக்கம். எப்போது சென்றாலும் நெல்லையப்பரை தரிசிக்கிறேனோ இல்லையோ தவறாமல் இருட்டு கடை அல்வா அல்லது சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா சாப்பிட்டுவிடுவேன். அதன் சுவை வேறு எங்கும் அனுபவிக்க முடியாது.கடைகளுக்கு நேரடியாக சென்று அல்வா சாப்பிடுவதே அலாதியான அனுபவம். சித்தப்பா கடைக்கு கூட்டி சென்று அல்வா வாங்கிகுடுப்பார். வாழை இலையில் சுட சுட அல்வாவை வைத்து நெய் சொட்ட சொட்ட எடுத்து வாயில் போட்டவுடன் கரைந்து சென்றுவிடும்.
தற்போது அதை நினைத்தால் கூட இனிக்கிறது.

அல்வாவுக்கு பெயர்போனது திருநெல்வேலி தான் என்றாலும், அவை இங்குள்ள பாரம்பரிய இனிப்பு பதார்த்தம் இல்லை. பின்னர் எப்படி அல்வா திருநெல்வேலியின் பிரசித்தி பெற்றதாக உருவானது என்கிற வரலாற்றை அறிய 120 ஆண்டுகள் பின்னோக்கி சொக்கம்பட்டிக்கு சென்று பார்க்கலாம்.
சொக்கம்பட்டி, நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள ஒரு ஊர். அந்த காலத்தில் மிகப்பெரிய ஜமீன்களில் ஒன்று சொக்கம்பட்டி ஜமீன். தென்காசி ஜமீனுக்கு உட்பட்ட வடகரை நிலப்பகுதிகளில் இருந்து தோன்றியது தான் இந்த சொக்கம்பட்டி ஜமீன்.

19ஆம் நூற்றாண்டு காலத்தில் சொக்கம்பட்டி ஜமீன் வடத்திசையில் ஆன்மிக பயணம் மேற்கொண்டபோது ராஜஸ்தானுக்கு சென்றுள்ளார்கள் (மார்பில் கல் வாங்குவதற்கு சென்றதாகவும் சொல்லப்படுகிறது). அப்போது அங்குள்ள இனிப்பு வகைகள் ஜமீனை கவர்ந்துள்ளது. அதில் ஒன்றுதான் கோதுமையால் செய்யப்படும் அல்வா.

அல்வாவின் சுவை ஜமீனுக்கு பிடித்து போக, இனிப்பு பண்டங்கள் செய்யும் அங்குள்ள சில குடும்பங்களை தன்னோடு அழைத்துக்கொண்டு சொக்கம்பட்டி வந்து சேர்ந்துள்ளார். சொக்கம்பட்டி ஜமீன் அரண்மனையிலேயே அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து அவர்களை தங்கவைத்துள்ளார். அவர்கள் செய்யும் விதவிதமான இனிப்பு பண்டங்களுக்கு ஜமீன்கள் அடிமையாகி போயினர். ஜமீன்தாரின் விருந்தோம்பலால் கவரப்பட்டு அந்த மக்களும் சொக்கம்பட்டி மற்றும் அந்த சுற்றுவட்டாரத்தில் நிரந்தரமாக தங்களாயினர். காலப்போக்கில் தென்மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் புலம்பெயர்ந்து, லாலா கடைகளை நிறுவித்தனர்.

அவ்வாறு 1900ஆம் ஆண்டில், கிருஷ்ணா சிங் என்பவரால் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு எதிரே தொடங்கப்பட்டது தான் அல்வா கடை. சாயங்கால வேளையில் லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் அல்வா விற்று வந்துள்ளார், இதன் காரணமாகவே இருட்டு கடை என்று பெயர் வந்துள்ளது. கிருஷ்ணா சிங்கிற்கு பிறகு அவரது மகன் பிஜிலி சிங் அல்வா கடையை நடத்தி வந்தார். அவருக்கு பிறகு மூன்றாம் தலைமுறையான ஹரி சிங் கடையை நடத்தி வந்தார் (கடந்த மாதம் ஹரி சிங் காலமானார்).
மூன்று தலைமுறைகள் கடந்தாலும் இன்றும் அதே பழைய முறையில் வெறும் குண்டு பல்ப் வெளிச்சத்தில் மாலை வேளையில் 3 மணி நேரம் மட்டுமே அல்வா விற்பனை செய்கிறார்கள்.
கடைக்கு பெயர் பலகை கிடையாது, விளம்பர பைகள் கிடையாது. மாலை 5.30 மணியில் கடை திறக்கப்பட்டு 3 மணி நேரத்திற்குள் அல்வா விற்று தீர்ந்ததும் கடையை மூடிவிடுகிறார்கள். குறைந்த அளவே அல்வா தயாரிக்கிறார்கள்.

அதற்கு காரணம், இங்கு அல்வா செய்யும்முறை. இயந்திரத்தை விடுத்து கைகளால் கோதுமையை கைகளால் அரைத்து அந்த பாலுடன், சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து செய்கிறார்கள். இதன் காரணமாகவே இருட்டு கடை அல்வாவின் சுவை தனித்து இருக்கிறது. கூடவே தாமிரபரணி ஆற்றின் தண்ணீர் சேர், மேலும் சுவை சேர்கிறது.


மாலை வேளையில் கடைக்கு சென்றால், அல்வாவை ருசித்துவிட்டு வரலாம்.வாழை இலையில் வைத்து அல்வாவை தருவார்கள். அதை லாவகமாக கையில் வாங்கி கொஞ்சமாக பிய்த்து எடுத்து வாயில் போட்டால் அந்த தித்திப்பான திகட்டாத அல்வாவின் சுவையே தனி.
அடடா என்னா டேஸ்ட்!!!!

தலைமுறைகள் கடந்தாலும் அல்வாவின் சுவை மாறாமல் பார்த்துக்கொள்கிறார்கள். இதன் காரணமாகவே வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அல்வா பார்சல் ஆகிறது.
சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்லும் போது, அலுவலக நண்பர்கள் சொல்வது “அல்வா முக்கியம் பிகிலு”
நன்றி 🙏
#Tirunelveli #IruttuKadaiAlwa #Alwa #Halwa #Sokkampatti #Chokkampatti #Zameen
Leave a comment