தமிழ் செய்தி தொலைக்காட்சிகள் பற்றிய ஒரு பார்வை !!

செய்தித்தாள், வானொலியில் தினமும் செய்திகளை படித்தும், கேட்டும் வந்த தமிழக மக்கள், தொலைக்காட்சி வருகைக்கு பின்பு தூர்தர்ஷனில் செய்திகளை பார்த்து வந்தனர். 90’களில் தமிழகத்தில் தொலைக்காட்சியின் வளர்ச்சி பரவலாக இருந்தது. அப்போது தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் மோசமான ஆட்சி நடைபெற்று கொண்டிருந்த சமயம். அரசுக்கு எதிரான செய்திகள் ஏதும் அரசு தொலைக்காட்சியில் வராதபடி பார்த்துக்கொண்டார் அம்மையார். இந்த நேரத்தில் தான் தமிழின் முதல் தனியார் தொலைக்காட்சி சன் டிவி தொடங்கப்பட்டது. திமுக குடும்பத்தை சேர்ந்த கலாநிதி மாறனால் தொடங்கப்பட்ட சன் டிவி, அன்றைய ஜெயாவின் மோசமான ஆட்சியை மக்களுக்கு வெளிப்படுத்தியது.

1996 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக ஜெயிக்கவும் சன் டிவி உறுதுணையாக இருந்தது. சன் டிவிக்கு பின் ராஜ் டிவி, JJ டிவி, GEC எனப்படும் விஜய் டிவி முதலான சேனல்கள் தமிழ்நாட்டில் முளைத்தன. ராஜ் டிவி பாதகமில்லாமல் செய்திகள் ஒளிபரப்பியது. பின்னர் 1999ஆம் ஆண்டு சசி & Co வால் ஆரம்பமானது ஜெயா டிவி. சன், ராஜ் போன்று இதுவும் ஒரு பொழுதுபோக்கு தொலைக்காட்சி. திமுகவுக்கு சன் டிவி என்றால், அதிமுகவுக்கு ஜெயா டிவி. நடுநிலையான செய்திகளை பெறுவதில் மக்கள் அப்போது இருந்தே திண்டாடி வந்தனர். சன் டிவியில் அதிமுகவுக்கு எதிராகவும், ஜெயா டிவியில் திமுக, கருணாநிதிக்கு எதிராகவும் மாற்றி மாற்றி செய்திகளை வழங்கி வருவார்கள்.
அதன் பின்பு 2000ஆம் ஆண்டில் விஜய் டிவியுடன் NDTV இணைந்து மாலை வேளையில் அரைமணிநேர செய்திகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகின. நீயா நானா கோபிநாத், மோசஸ் ராபின்சன் போன்றோர் அன்றைய செய்தி வாசிப்பாளர்கள். அந்த அரைமணி நேர நிகழ்ச்சியில் அனைத்து செய்திகளையும் நடுநிலையாக வழங்கி வந்தனர்.சிலர் சன், ஜெயா செய்திகளை விட்டு விஜய் டிவி செய்திகளை பார்க்க தொடங்கினர்.

இந்த சமயத்தில், தமிழின் முதல் 24 மணி நேர செய்தி சேனலாக சன் நியூஸ் 2000 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. நியூஸ் புல்லடின்ஸ் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஓடும். நேரலை செய்திகள், விவாத நிகழ்ச்சிகள், நேருக்கு நேர் போன்ற வித்தியாசமான நிகழ்ச்சிகளால் மக்களை கவர்ந்தனர். செய்திகளை சம்பந்தப்பட்ட களத்திலிருந்தே நேரடியாக மக்களுக்கு தற்போது தமிழ் செய்தி சேனல்கள் வழங்கி வருகின்றன. அதற்கு முதல் விதை போட்டது சன் நியூஸ்தான்.
ஆரம்பத்திலிருந்து சன் நியூஸ் பார்த்து வருபவர்களுக்கு பரிச்சயமான பெயர் “ஈ.வே.ரா”. இது வெங்காய பெரியார் ஈ.வே.ரா அல்ல..சன் நியூஸ் செய்தியாளர் ஈ.வே.ரா, இவர். செய்திகளை களத்திலிருந்து வழங்கி இறுதியில் ஒளிப்பதிவாளருடன் ஈ.வே.ரா சன் நியூஸ் என்று சொல்லி முடிப்பது இவரது signature ஸ்டைல். விஜய் டிவி செய்திகளால், இவர்களும் ஓரளவுக்கு நடுநிலையாக செய்திகளை வழங்கி வந்தனர், தேர்தல் காலம் தவிர்த்து. 2001 தேர்தல் சமயத்தில் திமுக , அதிமுக மோதியதுபோல் சன் நியூஸ், ஜெயா டிவி மோதின. இரு கட்சிகளுடைய தலைவர்களின் தேர்தல் பிரச்சாரங்கள் ஒளிபரப்பாகின. அந்த தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றார்.
ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே நள்ளிரவில் கலைஞர் அவரது வீட்டில் வைத்து பல ஆர்ப்பாட்ட சச்சரவுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார். கலைஞரின் அதிரடி கைதும், அப்போது அதிகாரிகள் நடந்த விதமும், தயாநிதி மாறன் கதறியது என அனைத்தும் தவறாமல் , சம்பந்தப்பட்ட அனைத்து காவல் துறை அதிகாரியின் பெயர் முதற்கொண்டு அடுத்த நாள் காலை சன் செய்திகளில் இடம்பெற்றது. கலைஞர் வீட்டிற்க்கே சென்று குண்டுகட்டாக அவரை தூக்கி சென்று கைது செய்த காட்சியை தமிழகம் அலரும் விதமாக சன் டிவியில் திரும்ப திரும்ப ஒளிபரப்பி அவர் மேல் உள்ள குற்றச்சாட்டை விடுத்து, மக்களுக்கு அனுதாபம் வர வழிவகை செய்தனர். 2006 தேர்தல் காலத்திலும் சன் டிவி ஒளிபரப்பினார்கள்.
வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்தியாவில் நேரடியாக செய்தி சேனல்களை இயக்க அப்போது மத்திய அரசு தடை பிறப்பித்தது. NDTV உடனான ஸ்டார் டிவியின் ஒப்பந்தம் மார்ச் 2003 ஆம் ஆண்டுடன் முடிவடைந்தது. அதை தொடர்ந்து விஜய் டிவியிலும் செய்திகள் நிறுத்தப்பட்டன. மீண்டும் மக்கள் சன் டிவி, ஜெயா டிவி செய்திகளை பார்த்து வந்தனர்.
2006 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தனர். 2007 ஆம் ஆண்டு சன் குழுமத்தை சேர்ந்த தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்துக்கணிப்பால் கொதித்தெழுந்த அழகிரி ஆதரவாளர்களால் தமிழ்நாடு முழுதும் ஆர்ப்பட்டங்கள் நடைபெற, மதுரையில் அவர் ஆதரவாளர்கள் தினகரன் அலுவலகத்தை எரித்தனர். இவர்களின் அரசியல் விளையாட்டில் 3 தினகரன் ஊழியர்கள் பலியாகினர். இதன் காரணமாக மாறன் சகோதரர்களுக்கும் திமுகவிற்கும் விரிசல் ஏற்பட,தயாநிதி மாறன் தான் வகித்து வந்த மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து வெளியேற சன் டிவி திமுக சார்பிலிருந்து வெளியேறி தங்களை நடுநிலையாக காட்டிக்கொள்ள துவங்கினர்.

இதன் காரணமாக கழகத்துக்கு ஒரு தொலைக்காட்சி வேண்டுமென கலைஞரிடம் சிலர் முறையிட்டனர். பின் கலைஞரின் மனைவி தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோரை பங்குதாரர்களாக வைத்து ராஜ் டிவி உதவியுடன் 2007 ஆம் ஆண்டு தொடங்கபட்டது தான் கலைஞர் டிவி. பிற்பாடு இசையருவி, கலைஞர் செய்திகள் தொடங்கப்பட்டன. இதே நேரத்தில் 24 மணி நேர செய்தி சேனலாக 2008 ஆம் ஆண்டு இறுதியில் ஜெயா ப்ளஸ் தொடங்கபட்டது. கலைஞர் செய்திகள், ஜெயா ப்ளஸ் இரண்டும் கட்சி சார்பு செய்திகளை வழங்கின.
2009ஆம் ஆண்டில் சேலத்தை சேர்ந்த கேபிள் டிவி கம்பெனி உரிமையாளர் P V கல்யாணசுந்தரத்தின் பாலிமர் மீடியா குழுமத்தில் இருந்து செய்தி தொலைக்காட்சியாக பாலிமர் நியூஸ் சேனல் ஆரம்பிக்கப்பட்டன. இருந்தபோதும் அப்போது பாலிமர் நியூஸ் பற்றி பெரும்பாலும் யாரும் அறிந்திருக்கவில்லை.

நடுநிலையான செய்தி சேனலை எதிர்பார்த்து இருந்த மக்களுக்கு சன் நியூஸ் அப்போது ஆறுதல். ஆனால் மனத்திருப்தி அடைந்தது என்னவோ 2011ஆம் ஆண்டில் தான். காரணம் அப்போது தான் SRM பல்கலை கழக உரிமையாளர் பச்சமுத்துவால் புதியதலைமுறை எனும் 24மணி நேர செய்தி சேனல் ஆரம்பமானது.
ஆங்கில செய்தி சேனல்களுக்கு இணையான அரங்குகள், தொழில்நுட்ப வசதிகள், அனைத்து செய்திகளும் நேரலை, நேரடி செய்திகளை களத்திலிருந்து வழங்கும் நிருபர்கள், வித்தியாசமான செய்தி நிகழ்ச்சிகள், நேர்பட பேசு போன்ற விவாத நிகழ்ச்சி, இளம் பார்வையாளர்களை கவரும் விதத்தில் இளம் பெண் செய்தி வாசிப்பாளர்கள், தொகுப்பாளர்கள் முக்கியமாக நடுநிலையான செய்திகள். இதெல்லாம் தமிழக மக்களுக்கு புதிதாக தெரிய விரைவிலையே சன் நியூஸ் சேனலை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது புதிய தலைமுறை.
அப்போது கல்லூரி படித்து கொண்டிருந்த சமயம். எப்போதும் வீட்டில் அம்மாகிட்ட திட்டு வாங்கிக்கொண்டே புதிய தலைமுறை சேனலை பார்த்து சிலிர்த்து போய் சில்லறைய சிதறவிட்ட காலம். கல்லூரியில ஃபிரீ பீரியட்ல நண்பர்கள் சேர்ந்து வகுப்பறையிலேயே நேர்பட பேசு பாணியில் விவாதம் செய்த நாட்கள் அவை.என்ஜினீயரிங் விட்டுவிட்டு விஷுவல் மீடியா படிக்கலாம்ன்னு கூட அப்போ தோணுச்சு.
அதன் பின்பு, 2012 ஆம் ஆண்டில் அதுவரை NDTV Hindu வாக இருந்த சேனல் தந்தி டிவி யாக உருப்பெற்றது. பாண்டேவின் கேள்விக்கென்ன பதிலால் தினத்தந்தி போல் தந்தி டிவியும் பட்டி தொட்டி எங்கும் பரவியது.
2014ல் VV மினரல்ஸ் வைகுண்டராஜன் நியூஸ்7 சேனல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரியுடன் பிரம்மாண்டமாக புதிய தலைமுறை பாணியில் ஆரம்பமாகி நடுநிலையான செய்திகளை வழங்கியது. 2016ல் முகேஷ் அம்பானியின் நெட்ஒர்க் 18 குழுமத்தில் இருந்து 24 மணி நேர செய்தி சேனலாக தொடங்கப்பட்டது News18 தமிழ்நாடு.

இப்படி நிறைய செய்தி சேனல்கள் ஆரம்பத்தில் நடுநிலையாக தொடங்கப்பட்டு பின்னர் ஆளும் தரப்புக்கு சாதகமாகவும், கட்சி சார்பாகவும் இரண்டு, மூன்று ஆண்டுகளிலேயே மாற தொடங்கின. 2015க்கு பின்னர் புதிய தலைமுறை தடம் புரண்டது. 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் சமயத்தில் இருந்து நியூஸ்7 நடுநிலை மாற தொடங்கின. கடந்த சில காலமாக நியூஸ் 18 தமிழ்நாடு…
இப்படி நடுநிலையோடு ஆரம்பிக்கப்பட்ட பல செய்தி சேனல்கள் தற்போது நடுநிலையற்று இயங்கி வருகின்றன. ஒவ்வொரு சேனல் உரிமையாளர்கள் மீதும் வழக்கு இருக்கிறது. SRM பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை முறைகேடு, வருமான வரி, கல்லூரி மாணவர்கள் இறப்பது போன்றவை புதிய தலைமுறை உரிமையாளர் பச்சமுத்து மீது உள்ள வழக்குகள். நியூஸ்7 உரிமையாளர் வைகுண்டராஜன் மீது தாதுமனல் கொள்ளை வழக்கு இருக்கிறது.
ஆரம்பகாலத்தில் சன் நியூஸ்ல் பணியாற்றிய மாலன், நெல்சன் சேவியர் போன்றோர் புதிய தலைமுறை, நியூஸ் 7ல் தற்போது பணியாற்றி வருகின்றனர். இதுபோன்று சன் நியூஸில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்பு வெவ்வேறு சேனல்களுக்கு பணி மாறி சென்று, அங்கு உயற்பதவியில் அமர்ந்து அந்த தொலைக்காட்சி செய்திகளை தங்கள் கட்டுக்குள் வைத்து இருக்கிறார்கள்.
தற்போது நிறைய செய்தி சேனல்கள் தமிழகத்தில் இருந்தாலும் மக்கள் அதிகம் பார்க்கும் சேனலாக முதலில் இருப்பது பாலிமர் நியூஸ். எந்த ஒரு விவாத நிகழ்ச்சியும் கிடையாது மற்ற செய்தி சேனல்களை போல இல்லாமல் ஓரளவுக்கு நடுநிலையாக செய்திகளை வழங்கி வருகிறது. தாமரை கட்சிக்கு அவ்வப்போது மறைமுகமாக வருடிவிடும் சேனல்தான் பாலிமர். பாலிமர்க்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் சன் நியூஸ் இருக்கிறது. முதல் 5 இடங்களில் நியூஸ் 7 இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இத்தனை செய்தி சேனல்களில் ஒரு நடுநிலையான செய்தி சேனல் கூட இல்லை என்பதே உண்மை. தங்களுக்குள் ஒரு சித்தாந்தத்தை வைத்துக்கொண்டு அதை நோக்கி செல்கிறார்கள். ஒருவரை தூக்கி காட்டியும், ஒருவரை கீழிறக்கியும், சில செய்திகளை மறைத்தும், திரித்தும் மக்களுக்கு வழங்குகிறார்கள். இப்போது நடுநிலையாக காட்டிக்கொண்டாலும் வரும் தேர்தல் காலத்தில் எல்லா சேனல்களின் சுயரூபம் தெரியவரும். ஒருகாலத்தில் சிலிர்த்து போய் பார்த்த சேனல்கள் தற்போது சில்லறையாய் மாறி போய் இருக்கின்றன.
#TamilNewsChannels #SunNews #Puthiyathalaimurai #News7Tamil #News18Tamilnadu #ThanthiTv #PolimerTv #NewsChannels
Leave a comment