ராஜ்ஜியம் இழந்த ராஜ் டிவி

ராஜ் டிவி ~ 1994 ,அக்டோபர் 24ல் ராஜேந்திரன் மற்றும் அவரது சகோதரர்களால் தொடங்கபட்டது . தமிழின் இரண்டாவது தனியார் தொலைக்காட்சியாக தொடங்கப்பட்ட ராஜ் டிவி , சன் டிவிக்கு போட்டியாக செயல்பட்டது.

raj

ராஜேந்திரன் மற்றும் அவரது சகோதரர்கள் ராஜரத்தினம், ரவீந்திரன், ரகுநாதன் உருதுணையுடன், 1983 ஆம் ஆண்டு ராஜ் வீடியோ விஷன் எனும் வீடியோ கேசட் விற்பனை நிலையத்தை நடத்தி வந்தார்.

images (98).jpeg

பல தயாரிப்பாளர்களிடமிருந்து தமிழ் படங்களின் உரிமைகளை கைப்பற்றினர். பின்னர் படங்களுக்கான தொலைக்காட்சி, கேபிள் மற்றும் வெளிநாட்டு உரிமைகளையும் வாங்க தொடங்கினர். 1987ல் தொலைகாட்சிக்கான தமிழ் நாடகங்கள், டெலி சீரியல்கள், படங்கள் போன்ற தயாரிப்புகளில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர்.

பின்னர் 1992-93, காலக்கட்டத்தில் தூர்தர்ஷன் மெட்ரோ சேனலில் இரவு 8 மணி முதல் 8.30 வரை நிகழ்ச்சி ஒளிபரப்ப அனுமதி பெற்று, சினிமா பாடல் தொடர்பான நிகழ்ச்சியை வழங்கினர். இந்த காலகட்டத்தில் தான், சன் டிவி தொடங்கப்பட,அதற்கு மக்களிடம் கிடைத்த ஆதரவை பார்த்து ராஜ் குழுமமும் தொலைக்காட்சி ஆரம்பிக்க முடிவு செய்தனர்.

 

தங்களிடம் உள்ள ஆயிரக்கணக்கான படங்களின் உரிமைகளை பலமாக கொண்டு 1994ல் ராஜ் டிவியை தொடங்கினார் ராஜேந்திரன். சேனல் ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே சன் டிவிக்கு இணையாக ராஜ் டிவி வளர்ந்தது. 90களில் சன் டிவிக்கு போட்டியே ராஜ் டிவி தான்.

நிறைய எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த் படங்களின் உரிமைகள் இவர்களிடம் தான் உள்ளது.மக்களும் ராஜ் டிவியில் படங்கள், நிகழ்ச்சிகளை விரும்பி பார்த்தனர். ராஜ் டிவியின் பிரபலமான நாடகங்கள் கங்கா யமுனா சரஸ்வதி, மர்மதேசம். இரண்டும் சூப்பர் டூப்பர் ஹிட் சீரியல்கள்.

இவ்வாறு மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மக்களுக்கு வழங்கி வந்தது ராஜ் டிவி. அதே சமயத்தில் தங்கள் குழுமத்தையும் விரிவுபடுத்தி கொண்டே சென்றன..

1998ல், ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் எனும் 24 மணி நேர திரைப்பட சேனல்..

2007ல், ராஜ் மியூசிக் சேனலும் தொடங்கப்பட்டது.

ராஜ் டிவி நெட்வொர்க் மொத்தம் 12 சேனல்கள் உள்ளடங்கியது. தமிழில் 4 சேனல்கள், தெலுங்கில் 3 சேனல்கள், மலையாளம், கன்னடத்தில் 2 சேனல்கள், ஹிந்தியில் ஒரு சேனல். சன் டிவிக்கு இணையாக இவர்களும் மீடியா துறையில் வளர்ச்சி கண்டனர். சேனல்கள் மட்டுமின்றி பட தயாரிப்புகளிலும் ஈடுபட்டனர்.

காதல்னா சும்மா இல்ல, மரியாதை, மகனே என் மருமகனே போன்ற திரைப்படங்களை தயாரித்து உள்ளனர். ஒரு பக்கம் வளர்ச்சி அடைந்தாலும், அந்த வளர்ச்சியை நிறைய தடைகளை கடந்தே அடைந்துள்ளனர்.

ராஜ் டிவி நிறுவனத்தினர் தெலுங்கில் விஸ்ஸா என்ற பெயரில் புதிய டிவியைத் தொடங்கினர்.

uje72z.jpg

அந்த டிவியைத் தொடங்க முறையான லைசன்ஸ் பெறவில்லை என்று கூறி ராஜ் டிவி மீது கடும் நடவடிக்கை பிரயோகிக்கப்பட்டது. ராஜ் டிவிக்கு வழங்கப்பட்டிருந்த டெலிபோர்ட் லைசன்ஸ் (நேரடியாக ஒளிபரப்பு செய்யும் உரிமை) ரத்து செய்யப்பட்டது. இதற்கு காரணம் அப்போதைய மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்.

ராஜ் டிவி மீது தயாநிதி மாறன் கடுமையாக நடந்து கொண்டதால் ஒரு நாள் முழுவதும் அதன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், ராஜ் டிவி நிறுவனத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பு சாதனங்கள், வேன் உள்ளிட்ட பல மின்னணு சாதனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்வாறு தொடர்ந்து அதிரடியாக ராஜ் டிவியைக் குறி வைத்து பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் அந்த டிவி நிலை குலைந்தது. இதைத் தொடர்ந்து தனது நிகழ்ச்சிகளை தாய்லாந்திலிருந்து ஒளிபரப்பு செய்யும் நிலைக்கு ராஜ் டிவி தள்ளப்பட்டது.

இதன்பின்பு தினகரன் கருத்து கணிப்பு மோதல் தொடர்பாக..சன் டிவி vs திமுக என நிலைமாற, தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலக, அதன் தொடர்ச்சியாக கலைஞர் டிவி தொடங்கபட்டது தெரிந்த ஒன்று. ஆனால் ராஜ் டிவி தான் கலைஞர் டிவி தொடங்கபட்டதுக்கு உறுதுணையாக இருந்தது.

ராஜ் டிவியின் தொழில்நுட்ப உதவியோடுதான் கலைஞர் டிவி உருவானது. “திமுகவின் செல்லப்பிள்ளையாக ராஜ் டிவியின் ராஜேந்திரன் மாறி இருப்பது அனைவரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது” என அன்றைய சமயம் வந்த நக்கீரனோ இல்லை குமுதம் ரிப்போர்ட்டரிலோ கட்டுரை படித்த நியாபகம். கலைஞர் டிவி தொடங்கப்பட்டபோது ராஜ் மியூசிக் சேனலும், பின்னர் ராஜ் நியூஸ் சேனலும் ஆரம்பிக்கப்பட்டது.

ராஜ கீதம், ஊர் வம்பு, அகட விகடம்,பீச் கேர்ள்ஸ்,மெகா 10 மூவிஸ் போன்ற நிகழ்ச்சிகளை வழங்கியது ராஜ். இருந்தும் 2010 ஆம் ஆண்டுக்கு முன்பாகவே மக்கள் ராஜ் டிவியிலிருந்து மற்ற சேனல்களுக்கு மாற தொடங்கினர்.விஜய் ,ஜீ தமிழ், கலைஞர் டிவி என மக்களின் சாய்ஸ் மாறியது. ராஜ் டிவியும் சுவாரசியமான நிகழ்ச்சிகளை குடுக்க தவறியது காரணம்.

ஒரு காலத்தில் நேரடி தமிழ் நாடகங்களை ஒளிபரப்பி வந்தவர்கள் தற்போது வட மொழி சேனல்களான கலர்ஸ், சோனியில் ஒளிபரப்பான நாடகங்களை தமிழில் டப் செய்து போட்டு வருகிறார்கள். தற்போது டப்பிங் தொடர்கள், பழைய எம்ஜிஆர், சிவாஜி, ரஜினியின் கிளாசிக் படங்கள் போன்றவற்றை வைத்து சேனலை ஓட்டி கொண்டிருக்கிறார்கள்.

கம்பீரமாக ராஜ்ஜியம் செலுத்தி வந்த ராஜ் டிவி,அரசியல் இன்னல்கள், பிரச்சனைகளை சந்தித்து காலப்போக்கில் போட்டி சேனல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சோர்ந்து போய் இன்று வாழ்ந்துகெட்ட சேனலாக இருக்கிறது.

#RajTv #RajVideoVision #RajTvNetwork

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑