மர்மதேசமும் ரகசியமும் !

மர்மதேசம்

சின்ன வயசுல பயந்து பயந்து கண்ணை கையால பொத்திக்கிட்டு விரல் இடுக்கு வழியா பார்த்து ரசித்த எத்தனையோ 90ஸ் கிட்ஸில் நானும் ஒருத்தன்.

விடாது கருப்புல வர அந்த குதிரை, கருப்பசாமி இதெல்லாம் பார்த்து பயந்த நியாபகம் இருக்கு, ஆனா முழுக்கதையும் சரியா நினைவில இல்லை. சரின்னு சன் டிவியில இப்போ போடுறான்னு பார்க்க ஆரம்பிச்சிருக்கேன். முதல் எபிசோடே பயமாதான் இருந்துச்சு.

ஒவ்வொரு எபிசோடும் விளம்பரத்தோட பார்க்க கடுப்பா இருக்கேன்னு யூட்டுப்ல பார்க்கலாம்னு போனப்போ தான் மர்மதேசம்லயே நிறைய பகுதி இருக்குனு தெரிஞ்சது. “ரகசியம், விடாது கருப்பு, சொர்ணரேகை,இயந்திர பார்வை, எதுவும் நடக்கும் “னு மொத்தம் 5 சீசன். ஒவ்வொன்னும் வெவ்வேறு கதையம்சம் கொண்டது.

சரி வெட்டியாதான இருக்கோம், முதல்ல இருந்து பார்க்கலாம்னு மர்மதேசம் ரகசியம் பார்க்க யூட்டுப்ல முதல் எபிசோட தட்டிவிட்டேன். மிரட்டலான டைட்டில் சாங் ஆரம்பத்துல வர பைரவர் சிலை க்ளோஸ் அப் காட்சிகளும், நாய் சிலை அப்படியே உண்மையான நாய்யா மாறி வெறித்தனமா குரைக்கிறத முதல் தடவை பார்த்ததும் கொஞ்சம் பீதியா ஆயிடுச்சு. இதெல்லாம் பார்க்கும்போது சட்டுனு டைம் ட்ராவல் பண்ணி சின்ன வயசுக்கு போனமாதிறி இருந்துச்சு.

முதல் எபிசோட்ல ஒரு முன்னோட்டம் மாதிரி குடுத்து சீரியல் பார்க்கிற ஆர்வத்தை தூண்டி விட்டு, அடுத்தடுத்த எபிசோட் பார்த்துட்டே போக மொத்த 73 எபிசோட்ஸும் 2 நாள்ல பார்த்து முடிச்சேன். எந்த ஒரு எபிசோடும் போர் அடிக்காம அடுத்தடுத்து என்ன நடக்கும்னு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். முதல் பாதி கிராமத்துலயும், மீதி எபிசோட்ஸ் சென்னையிலயும் நடக்கிற மாதிரி கதையமைப்பு.

ரகசியம் ~ சித்தர்ப்பட்டி கிராமத்துல இருக்கிற சித்தேஸ்வர் கோவில்ல நடக்கிற கொலைகள், அதை சுற்றி நடக்கும் மர்மங்கள் தான் கதை.

சித்தேஸ்வரர், பைரவர் சிலை, கருப்பு வேட்டை நாய், ஆஸ்ரம வைத்தியத்தில் தெளியும் பைத்தியங்கள், கோவில் பட்டர், நாத்திக சிந்தனை கொண்ட அவரோட மகன் மணி, எல்லாம் தெய்வத்தின் செயல்னு நம்புற பட்டரின் மகள் லலிதா, வைத்தியரும் அம்பலகால கடிகையும், அண்ணாமலை, பைரவ செட்டியார், அக்னிராசு, டாக்டர் கே.ஆர், பிரசாத், ருத்ராபதி, ரகு,நம்பூதிரி, குருஜி..முக்கியமா ஊமைசாமி. இவங்க எல்லாரையும் இணைக்கிறது மரப்பெட்டியும் அதுல இருக்கிற நவபாஷாண சிவலிங்கங்களும் தான்.

ஒவ்வொரு கதாபாத்திரமும் சரியா அமஞ்சிருக்கும்.பிடிச்ச கதாபாத்திரங்கள் வைத்தியர், மோகன் ராம், துடிப்பான அக்னி,பூவிலங்கு மோகன், அஜய் ரத்னம், சத்தமில்லாம தன் இருப்பை அவ்வப்போது காட்டும் ஊமைசாமியா வர சாருஹாசன்.

ஆரம்பத்தில கடவுள் செயலா தெரியுற ஒவ்வொரு சம்பவமும்,அதோட மர்மமும் காட்சிகள் போக போக, அந்த மர்ம முடிச்சுகள் ஒவ்வொன்னா அவிழ்கிற இடமும் செம்ம த்ரில்.

கிராமத்துல கோவில் கொலைகள் மர்மம்னா, நகரத்துல ட்ரக் கொலைகள். கிராமத்துல நாய் வச்சு மிரட்டுன இயக்குனர், நகரத்துல ட்ரக் வச்சு மிரட்டி இருப்பார். அந்த ட்ரக் லாரியும், அதோட ஹாரன் சத்தம் வச்சே மிரட்டலா காட்சி படுத்தி இருப்பாங்க. இந்த நாடகம் பார்த்த விளைவோ என்னவோ,சின்ன வயசுல
லாரியும் ஹாரன் சத்தம் கேட்டாலே பயமா இருக்கும்.

மொத்ததுல செம்ம த்ரில் தொடர் இந்த மர்மதேசம். இதுதான் தமிழ்ல வந்த முதல் திகில் தொடர். முதல் எபிசோட்ல ஆரம்பிச்ச த்ரில் கடைசி விளக்கவுரை எபிசோட் வரை தொடரும். காரணம் எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜனும் இயக்குனர் நாகாவும். இவர்களோட தரமான படைப்புதான் இந்த மர்மதேசம். இதன் சிறப்பே, இவளோ வருஷம் கழிச்சு பார்க்கிறப்போவும் ஃபிரெஸ்ஷா சலிப்புத்தட்டாம இருக்கிறதுதான். 👍👌

அடுத்தது “விடாது கருப்பு”…🐎

 

#Marmadesam #VidathuKaruppu #SunTv #Serial #90sKids

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑