மானஸாவின் டீ கடை !

மானஸா சம்யுக்தா, ஒரு சிறிய கிராமத்தில் வாழும் நடுத்தர குடும்பத்து சிறுமி. சிறுவயது முதல்லே வருங்காலத்தில் படித்து முடித்தவுடன் தொழில் தொடங்குவதை கனவாக கொண்டு வாழ்ந்து வருகிறாள். அவளுக்கு ஆதரவாக தாத்தாவும், பொம்பளை பிள்ளைக்கு எதுக்கு கனவுலாம் என எதிராக குடும்பமும் உள்ளது இருந்தாலும் தன் கனவை விட்டுக்குடுக்காமல் இருக்கிறாள்.
வருடங்கள் ஓடுகிறது… MBA இறுதியாண்டு படிக்கும் தருவாயில், அவள் அப்பாவிற்கு நியாபக மறதி நோய் ஏற்பட்டு வேலைக்கு போகமுடியாத சூழல் உருவாக, அக்கா காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேற, மருத்தவரான தாத்தாவின் கிளினிக் வருமானத்தில் குடும்பம் இயங்குகிறது. இந்த சமயத்தில் அவள் அண்ணன் படித்து பட்டம்பெற்று அமெரிக்காவில் பணிபுரிய ஆணையும் கிடைக்கப்பெற, குடும்பத்தோடு அங்கு செட்டிலாக தயாராகிறார்கள். அப்போது மானஸாவின் தாத்தா இறந்து போக, அதோடு சேர்ந்து அவள் கனவும் புதைந்து போகிறது.
பின் அமெரிக்காசென்று சான் பிரான்சிஸ்க்கோ பல்கலைக்கழகத்தில் MBA பட்டம் பெற்று அண்ணனின் வற்புறுத்தலால் வேலைக்கு செல்கிறாள். அங்கு விஜய்யின் அறிமுகம் கிடைக்க, நாளடைவில் நட்பு காதலாக விஜய்க்கு மாற..மானஸாவிடம் அதை சொல்லாமல் அவள் வீட்டிற்கு சென்று திருமணத்திற்கு சம்மதம் வாங்குகிறான். ஆனால் லட்சியத்தை அடையாமல் திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லாமல் இருக்கும் மானஸா, அதை விஜயிடம் கூற.. அவன் ஏற்றுக்கொள்ளாமல் நட்பை முறித்துக்கொண்டு செல்கிறான்.
தன் கனவான தொழில் தொடங்குவது பற்றி வீட்டில் கூற..அம்மாவும் அண்ணனும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.”நான் சாதிச்சுட்டு தான் இந்த வீட்டுக்கு திரும்ப வருவேன்”ன்னு சபதம் போட்டு “பெண்ணே எழுது புது கோலம் எழுது”ன்னு கோலங்கள் அபி மாதிரி புயலா கிளம்புறா மானஸா.

இப்படி அடுத்தடுத்த சில திருப்பங்களுடன் கூடிய காட்சிகளுடன் ஓரளவுக்கு நகர்கிறது #MissIndia படத்தின் முதல் பகுதி.. காபி தேசமாக விளங்கும் அமெரிக்காவில் என்னை போன்ற டீ பைத்தியமான மானஸா டீ கடை தொடங்கும் முயற்சியில் ஈடுபடுகிறாள்.
அங்கு ஏற்கனவே கார்ப்பரேட் மான்ஸ்டர் ஆன கைலாஷின் காபி கடை மிகவும் பிரபலமாக இருக்கிறது. எடுத்த சபதம் முடிப்பேன் என கைலாஷிடம் கூறிவிட்டு, இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் நபராக வரும் விக்ரமின் உதவியுடனும் தன் தோழிகளுடனும் சேர்ந்து டீ கடையை ஆரம்பிக்கிறாள் மானஸா. காபி ரசிகர்களை தன் டீ கடைக்கு வரவைத்து அமெரிக்கர்களுக்கு டீயின் மகத்துவத்தை உணர்த்துகிறாள்.
பள்ளிக்காலத்தில் நாம் தமிழ் துணைப்பாடத்தில் படித்த சபேசன் காபி, நடேசன் காபி கதை கணக்கா கைலாஷிற்கும் மானஸாவிற்கும் தொழில் போர் தொடங்கி காபி vs டீ என ஆகிறது.இடையில் நிறைய பிரச்சனைகள் ஏற்பட, அதையெல்லாம் தாண்டி இறுதியில் தன்னுடைய சாதாரண டீ கடையை எவ்வாறு ஸ்டார்பக்ஸ் போன்று ஒரு ப்ராண்டாக மானஸா உயர்த்தினாள் என்பதை நாடகத்தன்மையுடன் சுமாரான விறுவிறுப்பற்ற திரைக்கதையுடன் செல்கிறது இரண்டாம் பகுதி.
நிறம், திடம், குணம், தெலுங்கு மனமிருந்தும் இந்த டீயில் சுவை இல்லை.
ஒரு முறை வேண்டுமானால் இந்த டீயை பருகலாம் ⭐
பி.கு ~ மானஸாவின் டீ கடை பெயர் #MissIndia

#MissIndiaOnNETFLIX #KeerthySuresh
Leave a comment