மதுரையில் ஒரு நாள் !

நேற்று காலை கோவில்பட்டியில் இருந்து பாண்டியநாட்டு தலைநகர் மதுரைக்கு தலைவர் மூலம் ட்விட்டரில் கிடைத்த சொந்தமான தம்பி கமலை சந்திக்க வந்தேன். மதுரை மாட்டுத்தாவனியில் அவனை சந்தித்த பின்பு அங்கிருந்து அவனுடைய வாகனத்தில் திருப்பரங்குன்றம் நோக்கி சென்றோம்.

அரைமணிநேர சுற்றலான பயணமாக இருந்தாலும் இருபுறமும் மரங்கள் சூழ்ந்த சாலையில் ப்ராயணித்தது குளிர்ச்சியாக இருந்தது. ஒருவழியாக திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து சேர்ந்தோம்.

குடவரைக் கோவிலான இதில் குகையை குடைந்து அமைக்கப்பட்ட சந்நிதியில் வீற்றிருக்கும் எம்பெருமான் முருகனையும், துர்கை அம்மனையும் நன்றாக தரிசித்துவிட்டு ,பிரசாதமாக அப்பமும், புளியோதரையும் உண்டுவிட்டு, ஆலய பிரகாரத்தில் சற்று நேரம் இளைப்பாறிவிட்டு அங்கிருந்து மீண்டும் மதுரைக்கு கிளம்பினோம்.

மதிய நேரம் பசிக்க தொடங்கிய சமயத்தில்,விளக்குத்தூண் பகுதியில் உள்ள பனைமரத்து பிரியாணி கடைக்கு தம்பி அழைத்து சென்றான். சின்ன கடையாக இருந்தாலும் 75 வருட பாரம்பரிய மிக்க கடை. அந்த காலத்தில் அங்கிருந்த பனைமரத்து அடியில் வைத்து பிரியாணி ஆக்கி விற்பனை செய்து வந்துள்ளார்கள்.அதன் பேரிலேயே பனைமரத்து பிரியாணி கடை என அழைக்கப்படுவதாக கூறுகிறார்கள். அங்கே சுடச்சுட நல்ல சுவையான சிக்கன் பிரியாணியை உண்டுவிட்டு கிளம்பினோம்.

கோவில் நடை மாலை தான் திறக்கப்படும், தற்போது மீனாட்சியை தரிசிக்க முடியாது என்பதால் நேரத்தை போக்கும் வகையில் திரையரங்கிற்கு சென்று படம் பார்க்கலாம் என முடிவு செய்தோம்.வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததும் ஒரு காரணம்.அருகில் உள்ள வெற்றி திரையரங்கிற்கு தம்பி அழைத்து சென்றான்.ஊரடங்கிற்கு பிறகு நீண்ட நாள் கழித்து திரையரங்கில் படம் பார்க்க சென்றேன். “The Conjuring 3 : சாத்தான் என்னை ஆட்டுவித்தது” எனும் படத்தை பார்த்தோம்.

பின்னர் அங்கிருந்து கிளம்பி தெற்குவாசல் அடைந்து,மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்துக்கு சென்றோம். மாலை நேரம்,சற்று கூட்டம் அதிகமாகவே இருந்தது. பொலிவிழந்த பொற்றாமரை குளம் அருகே வரிசை ஆரம்பமானது.

வரிசையில் நின்று கொண்டே ஆலய பிரகார மேற்சிற்ப கலைகளை பார்த்துக்கொண்டே வந்தேன். அரைமணி நேர காத்திருப்புக்கு பின் மீனாட்சி அம்பாளை தரிசித்தோம்.

அடடா ! என்ன ஒரு காட்சி ! விளக்கின் ஜோதி வெளிச்சத்தில் பச்சை சேலையில் ஜொலித்தால் அன்னை மீனாட்சி. காண கண்கோடி வேண்டும். வரிசையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சந்நிதி கிட்ட நெருங்கும்போது மென்மேலும் ஜொலித்தால். சிறப்பான தரிசனம் முடித்து வெளியே வந்தால் அங்கே பிரசாதமாக லட்டு கொடுத்தார்கள்.

பின் அங்கிருந்து சென்று எல்லாம் வல்ல ஈசனாகிய சொக்கனையும் கண் குளிர தரிசித்து விட்டு, பிரகாரம் சுற்றி வந்தால் அங்கே ஓரிடத்தில், எங்கிருந்து பார்த்தாலும் நம்மை நோக்கி சுழலும் வகையில் மேற்தளத்தில் அழகாக வரையப்பட்ட சிவலிங்கத்தின் ஓவியத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தோம்.

மீனாட்சியை தரிசிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவும் தம்பியின் தயவால் நிறைவேறியது. விளக்குத்தூண் பகுதிக்கு வந்து இரவு உணவாக தோசையை வசந்த் உணவகத்தில் ஊன்றுவிட்டு கிளம்பினோம்.

மதுரைக்கு வந்துவிட்டு ஜிகர்தண்டா சாப்பிடாமல் சென்றால் மீனாட்சியே கோவித்து கொள்வாள். ஆதலால் மதுரை பேமஸ் ஜிகர்தண்டா கடைக்கு சென்று “ஜிகர்தண்டா”வையும் ருசித்துவிட்டு , எனக்காக தன் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு என்னுடன் ஊர் சுற்றி காட்ட வந்த தம்பியிடம் நன்றி கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். மீண்டும் மாட்டுத்தாவனி சென்று அரசு பேருந்தில் வைகையை கடந்து கோவில்பட்டியை இரவு வந்தடைந்தேன். தம்பியால் பயணம் நல்லபடியாக இனிதாக முடிந்தது.

பயணங்கள் முடிவதில்லை…🐎

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑