வெள்ளியங்கிரி பயணம், ஒரு புது அனுபவம் ❤️
வணக்கம் நண்பர்களே, நீண்ட நாட்களுக்கு பிறகு இப்பதிவின் மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. கடந்த வாரம் வெள்ளியங்கிரி சென்று வந்தது பற்றிய ஒரு பயண அனுபவமே இந்த பதிவு. வாருங்கள் வெள்ளியங்கிரிக்கு செல்லலாம்.

தலைவர் ரஜினிகாந்த் மூலம் ட்விட்டரில் கிடைத்த நண்பர்கள் ஏராளம். அதில் சில நண்பர்களுடன் வெள்ளியங்கிரி செல்ல ஒரு மாத காலம் முன்னவே திட்டமிட்டு, அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை 22.04.22 இரவு அன்று சென்னையில் இருந்து என் பயணத்தை தொடங்கினேன்.
சென்னையில் இருந்து காட்பாடி சென்ற என்னை சிவராஜ் அண்ணன் காரில் அழைத்து சென்றார். அங்கிருந்து திருப்பூர் சென்று அங்கே செந்தில் அண்ணன் வீட்டில் இரவு தங்கிவிட்டு , மறுநாள் சனிக்கிழமை காலை உணவை அவர்கள் வீட்டிலேயே முடித்துக்கொண்டு கிளம்பினோம். அங்கிருந்து கோயம்புத்தூர் செல்லும் வழியில் திருப்பூர் சுக்ரீஸ்வரர் ஆலயம், பழங்கரை பொன் சோழீஸ்வரர் ஆலயம், அவிநாசி லிங்கேஸ்வரர் ஆலயம், என் நீண்ட நாள் கனவான மருதமலை முருகன் ஆலயம் என இதுவரை பார்த்திராத ஒவ்வொரு ஆலயமாக சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஈஷா வந்தபோது சாயங்காலம் ஆகிவிட்டது.






நாங்கள் வருவதற்கு முன்னரே மற்ற ஊரிலிருந்து வந்திருந்த நண்பர்கள் அனைவரும் ஈஷாவில் குழுமியிருந்தனர். மழை தூர தொடங்கியதால் ஈஷா செல்லாமல் (கண்டிப்பாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை எனும் காரணத்தால்) நாங்கள் நேரடியாக வெள்ளியங்கிரி சென்றுவிட்டோம்.

வெள்ளியங்கிரி அடிவாரம் சென்றபோது மாலை 5 மணி ஆகிவிட்டது, மூன்றாவது காலான மூங்கில் கம்பை வாங்கிக்கொண்டு மலை ஏற தொடங்கும்போது மாலை 5.30 மணி. வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க மொத்தம் 7 மலையை கடந்த செல்ல வேண்டும். முதல் மலை இறுதியில் ஒரு கோவிலும், இரண்டாவது மலை முடிவில் பாம்பாட்டி சித்தர் சிறு குகையும் இருக்கும். இப்படி ஒவ்வொரு மலையாக ஒரு மணி நேர இடைவேளையில் முதல் மூன்று மலைகளை கடந்து சென்றோம்.


கால் நெடுக கம்பை ஊன்றி 4வது மலையில் பாதி தூரம் அடைந்த போது இரவு 9 மணிக்கு மேல் ஆகிவிட்டது. மலையில் ஆங்காங்கே சில கடைகள் இருக்கும், அப்படி ஒரு கடை அருகே இருந்த இடத்தில் ஓரமாக மலைக்கு ஒதுங்கி நின்றோம். ஆனால் மழை மட்டும் மலை ஏற தொடங்கியதில் இருந்து விடாமல் பெய்து கொண்டே இருந்தது.
சரி அங்கேயே சாப்பிட்டு விடலாம் என்று நாங்கள் கொண்டு போயிருந்த இரவு சாப்பாட்டை அங்கேயே சாப்பிட்டுவிட்டு மழை நின்றதும் மீண்டும் மலை ஏறலாம் என காத்திருந்தோம். மலையில் இருந்து கீழ இறங்கி கொண்டிருந்தவர்கள், 6ஆவது மலையில் அட்டை பூச்சி அதிகமா இருப்பதாகவும் பார்த்து செல்லும் படியும் கூறி சென்றார்கள். மழையும் நிக்கவில்லை, நம் நண்பர்களும் பொறுமையாக கிளம்புவோம் என்று அந்த கடையை குத்தகைக்கு எடுத்தவாறு அங்கயே தங்கிவிட்டார்கள்.
நானும்,தம்பி ஷங்கரும், நாகேந்திரன் அண்ணனும் அந்த கூடாரத்துக்கு வெளியே நின்றே (உள்ளே இடமில்லை) மழையையும், குளிரையும் தாங்கிக்கொண்டு நீண்ட நேரம் தலைவர் படங்கள், காமெடி காட்சிகள்ன்னு ஒவ்வொன்னா பேசிட்டே நேரத்தை கடத்துனோம். சந்தானம் பட காமெடி காட்சி மாதிரி ஆகிப்போச்சு, உக்காரவும் முடியாம, தூங்கவும் முடியாம நின்னுட்டே இருந்தோம்.
மணி 2 ஆச்சு நேரம் ஆக ஆக குளிர் அதிகமானது, மழையும் நிற்கவில்லை. அடிக்கிற குளிருக்கு வாய் டைப்படிக்க, கை கால் உதற ஒரே கூத்தா இருந்துச்சு.

ஆண்டவா என்னையா இது இப்படி சோதிக்கிற கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்க விடுயானு வேண்டிக்கிட்டு ஒரு பாறை இடுக்கில் உக்காந்து சற்று கண்ணை மூடுனேன், எப்ப தூங்குனேன்னு தெரியல, ஒரு நாலு மணி வாக்குல எழுப்பி விட்டாங்க. மழை நின்னு போய் இருந்துச்சி, கிட்டத்தட்ட 7 மணி நேரத்துக்கு அப்புறம் “இதுதான் பேட்ட பாயுற நேரம்னு” மலை ஏற ஆரம்பிச்சோம்.
மலை மேல இருந்து கீழ அதும் இரவு நேரத்துல பார்க்கிறப்போ மின் விளக்குகளின் ஒளியில் நகர பார்வை அருமையாக இருந்தது. அதை ரசித்தவாறே மலையில் ஏறிக்கொண்டு இருந்தேன்.

ஆறாவது மலை சற்று வித்தியாசமான அமைப்பை கொண்டது, அதாவது பாதை ஏறி இறங்கும், அதன் முடிவில் சுனை நீர் இருக்கும். பக்தர்கள் அதில் குளித்துவிட்டு மேல சிவனை தரிசிக்க செல்வார்கள். ஆனால் இரவு நேரத்தில் சுனை நீர் அதிக குளிர்ச்சியாக இருக்கும். அதில் நாங்கள் காலை கூட நனைக்கவில்லை, காரணம் அசுத்தமாக இருந்தது. எல்லாம் நம் பக்தர்களின் செயல்தான், இதே சுனை நீரை காலையில் வெளிச்சத்தில் மலையில் இருந்து இறங்கி வரும் போது பார்த்தபோது ஏதோ குற்றாலத்தில் குளிப்பது போல் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக குளித்து கொண்டிருந்தார்கள்.
சுனை நீரை தாண்டி 6வது மலையை கடந்து 7வது மலையில ஏறி கொண்டிருந்த போது “விடியல்” வருவதற்கான அறிகுறி தென்பட்டது, ஐ மீன் சூரிய உதயம் வேற ஏதுமில்லை. ஆதவன் மெல்ல தன் கதிர்களை மேகங்களுக்கு ஊடாக பரப்பி கொண்டிருந்தான். மலையின் உச்சியிலிருந்து சூரிய உதயத்தை பார்ப்பது இதுவே முதல் முறை. அடடா என்ன ஒரு ரம்மியமான காட்சி.




சுற்றிலும் மேற்கு தொடர்ச்சி மலை, காலை வேளையில் இதை பார்க்கும்போது கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது (ஆனால் இதுவே உச்சி வேளையில் அந்த மலையை பார்க்கும்போது பயமாக இருந்தது). சிறிது நேரம் ரசித்து விட்டு, மீண்டும் மலை ஏறினோம். தோ கிலோமீட்டர், தோ கிலோமீட்டர்னு சொல்லி ஒரு வழியா மலைக்கு மேல வந்துட்டோம்.
முகப்பில் இருந்த விநாயகரை தரிசித்துவிட்டு அங்கிருந்து சற்று கீழே இறங்கி வெள்ளியங்கிரி ஆண்டவன், ஈசன், அய்யன் சிவபெருமானை மெய்மறந்து சிறிது நேரம் தரிசித்தேன். அவனை கண்ட போது மலை ஏறி வந்த சிரமங்கள் எல்லாம் ஒன்றுமில்லை என்பது போலானது. கைலாயம் செல்ல வாய்ப்பு அமையுமா என்று தெரியாது, ஆனால் இந்த தென்கைலாயம் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.



வெள்ளியங்கிரி ஆண்டவரை நன்றாக தரிசித்துவிட்டு, பிரசாதம் சாப்பிட்டுவிட்டு அமர்ந்து இருந்தோம். உடன் வந்திருந்த சிவராஜ் அண்ணன் சிவபூஜையில் ஈடுபட்டு இருந்தார். எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத வண்ணம் என்னை அழைத்து ருத்திராட்ச மாலையை அணிவித்தார்..”சிவ சிவ”🙏😍🥺
அவர் பூஜையை முடிக்கும் போது , 8 மணி சிறப்பு பூஜை மேள வாத்தியத்துடன் தொடங்கியது. வாத்திய சத்தங்கள் மலை அதிர, விண்ணதிர ஒலிக்க ஒரு பரவசநிலையாக இருந்தது. இக்காட்சியை காண குடுத்து வைத்திருக்க வேண்டும். இதற்காக தான் என்னவோ இரவு அவ்வளவு நேரம் பாதி வழி தூரத்தில் எங்களை காத்திருக்க வைத்து சிறிய திருவிளையாடல் ஒன்றை எங்களிடம் ஆடி இருக்கிறான் இந்த சொக்கன்.



சிறப்பான தரிசனத்தை முடித்துவிட்டு 9 மணி அளவில் கீழே இறங்க தொடங்கினோம். ஒவ்வொரு மலையாக இறங்க இறங்க வெயில் ஏறிக்கொண்டே போனது. வெயிலின் தாக்கத்தை போக்க அங்கங்கே மோர், சர்பத், தண்ணீர் என அருந்திவிட்டு இறங்கி கொண்டே வந்தேன்.



பொறுமையாக ஒவ்வொரு மலையாக இறங்கி, மூன்றாவது, இரண்டாவது மலையை கடப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ஆனால் முதல் மலையில் இறங்கும் போது இதுக்கு அதுவே பரவாயில்லை என்பது போல ஆகிருச்சு. இறங்க இறங்க பாதை போய்ட்டே இருக்க யப்பா என்ன எப்படியாச்சு கீழ கொண்டு போய் விட்டுரு ஆண்டவானு இருந்துச்சு.



அங்கங்கே உக்காந்து இளைப்பாறி முதல் மலையில் இருந்து கீழே இறங்கி வந்த போது 3 மணி ஆகிவிட்டது. அன்னதானம் சாப்பிட்டு கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து விட்டு நண்பர்களிடம் விடை பெற்றுக்கொண்டு கோயம்புத்தூர் வந்து சேர்ந்தபோது இரவு 7மணி ஆகிவிட்டது. காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ஹோட்டல் அன்னபூர்ணாவில் இரவு உணவை சாப்பிட்டுவிட்டு (என்னா டேஸ்ட்’யா) அங்கிருந்து சென்னைக்கு பஸ்ஸில் ஏறினேன். ஸ்லீப்பர் பஸ், அதில் ஏறி படுத்து தூங்கியது தான் தெரியும், காலையில் 5.30 மணிக்கு கிண்டி வந்தபோது எழுப்பிவிட்டார்கள். அப்படி ஒரு அசதி, இன்னமும் தொடர்கிறது.


இருந்தாலும் இந்த வெள்ளியங்கிரி பயணம் ஒரு மறக்க முடியாத பயண அனுபவம். இதுவரை ட்விட்டரில் மட்டும் பார்த்து பழகிய நண்பர்களை நேரில் பார்த்தது, இயற்கை சூழல், சோதனைகளை கடந்து மலை ஏறி சாதனை புரிந்தது😁 , ஈசன் தரிசனம் என எல்லாம் ஒரு புதுவித அனுபவம் ❤️
இப்பயணத்தை தொடங்கி வழிநடத்தி வெள்ளியங்கிரி அல்லாது மற்ற திருத்தலங்களையும் நான் கண்டு களிக்கும் பாக்கியத்தை அளித்த சிவராஜ் அண்ணனுக்கும், வெற்றிகரமாக முடிக்க உதவிய மற்ற அண்ணன்கள் மற்றும் நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். 🙏
மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம். நன்றி வணக்கம் ❤️
~ Rakks
#வெள்ளியங்கிரி #Velliyangiri
❤️❤️❤️ தரம் 👌🙏
LikeLiked by 1 person