சிலருக்கு சிவாலய திருத்தலம், சிலருக்கு திருப்பதி, சிலருக்கு மதுரை என ஒவ்வொருவருக்கும் இறைவனின் சில திருத்தலங்கள் சென்று வந்தால் மனதுக்கு நிம்மதியும், புத்துணர்ச்சியையும், நேர்மறை எண்ணங்களையும் , ஏற்படுத்தும். அதுபோல எனக்கு மிகவும் பிடித்த ஸ்தலம், என் செந்திலாண்டவன் வீற்றிருக்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி திருக்கோவில். கொரோனா ஊரடங்குக்கு பிறகு செந்திலாண்டவனை கடந்த முறை தரிசித்த அனுபவத்தை ட்விட்டரில் பகிர்ந்திருந்தேன், அவற்றை இங்கே ஒரு முழு பதிவாக மீண்டும் பதிவிட்டிருக்கிறேன்.

சிறுவயதில் படையப்பா படம் பார்த்ததில் இருந்து முருகன் மேல் ஒரு அபரிதமான விருப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் வீட்டின் அருகில் இருக்கும் பழனியாண்டவர் கோவிலுக்கு அடிக்கடி அம்மாவுடன் செல்வேன். அவ்வப்போது குலதெய்வம் கோவிலுக்கு செல்லும்போது திருச்செந்தூர் செல்வதும் அங்கே அழகான சிரித்த முகமும் கையில் வேலுடன் காட்சியளிக்கும் முருகனை தரிசிப்பதும் வழக்கம். திருச்செந்தூர்க்கு யாராவது வீட்டில் கிளம்பினால் நானும் அவர்களுடன் கிளம்பிடுவேன். அந்த அளவுக்கு பிடித்த ஸ்தலமாக மாறிப்போனது.
ஒவ்வொரு வருடமும் நான் தவறாமல் திருச்செந்தூர் சென்று முருகனை தரிசித்து விடுவேன். அவனை ஒரு சில நொடிகளே பார்த்தாலும் (அவ்ளோதான் பார்க்க விடுறாங்க) மனம் அங்கேயே லயித்து விடும். அவனை பார்த்து கொண்டே இருக்கலாம் என தோன்றும்.அவனை பார்த்த நொடி, மனதில் கவலைகள் மறந்து புத்துணர்ச்சியும் ஒரு பாசிட்டிவ் எண்ணமும் தோன்றிவிடும், எப்படி நம் தலைவரின் கல்லங்கபடம் இல்லாத புன்னகையுடன் கூடிய புகைப்படத்தை பார்க்கும்போது தோன்றுமே அதுபோல்..இந்த இரண்டு படையப்பர்களும் தான் நான் நேர்மறை சிந்தனையோடு, எதையும் எளிதாக கடந்து போகும் மனதோடு இருப்பதற்கு காரணம்.

கொரோனாவாலும், ஊரடங்காலும் கடந்த ஒன்னரை வருடங்களாக திருச்செந்தூர் செல்ல முடியாமல் போனது. தளர்வுகள் இருந்த நேரத்தில் வாய்ப்புகளும் அமையவில்லை, அவனும் விரும்பவில்லை போலும் இரண்டு வருடங்களுக்கு பிறகு நேற்று தான் திருச்செந்தூர் செல்ல வாய்ப்பு மீண்டும் கிடைத்தது. மதிய பொழுதில் திருச்செந்தூர் சென்று சேர்ந்தேன்.

செந்தூர் மண்ணில் காலை வைத்தவுடன் அவனை தரிசிக்க போகும் ஆவல் அதிகமானது. பிரம்மாண்டமாக எழும்பி நிற்கும் சிற்பங்களை கொண்ட ராஜகோபுரமும் அதன் மையத்தில் இருக்கும் நீல நிற முருகவேலை கண்டவுடன் உடல் மெய்சிலிர்த்து. மயிலின் சத்தமும், கடல் அலைகளின் ஆர்ப்பரிக்கும் சத்தம் கேட்டு மனம் சொன்னது..”எவளோ நாள் ஆச்சு இவற்றை கேட்டு ரசித்து”, உண்மை. நேரத்தை கடத்தாமல் சீக்கிரம் சென்று செந்தில்வேலனை தரிசிக்க சென்றேன் “100 ரூபாய் மணியடி சிறப்பு தரிசனத்திற்கு” அனுமதி சீட்டு பெற்று கொண்டு மாலை 4 மணிக்கு வரிசையில் நிற்க தொடங்கினேன்.

விரைவாக முருகனை தரிசிக்கலாம் என நினைத்தால்..கோவிலில் சரியான பக்தர்கள் கூட்டம். எல்லா சிறப்பு தரிசனத்திலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவில் உட்பிராகரத்தில் தரிசன டிக்கெட் விலையை பொறுத்து இரும்பு தடுப்பு பாதைகள் அமைக்கப்பெற்று அதன் வழியே பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 100 ரூபாய் டிக்கெட்டிற்க்கே பல சுற்று சுற்றவிட்டு இரண்டு மணி நேர காத்திருப்புக்கு பின்பு அவனை தரிசிக்க முடிந்தது.


அந்த இரண்டு மணி நேரம் கோவில் பிரகார தூண்களையும், அதில் செத்துக்கப்பட்டுள்ள சிற்பங்களையும் பார்த்து கொண்டே வந்தேன். அங்கங்கே செந்தூர் ஆண்டவனின் திருவிளையாடல்களை குறிக்கும் ஓவியங்களையும் பார்த்தவாறே சென்றேன். வரிசையில் நின்றவாறே மற்ற சாமி சன்னதிகளை கும்பிட்டு வந்தேன். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து எப்போது முருகனை தரிசிப்போம் என்றாகிவிட்டது. அந்த இரண்டு வருஷம் கூட பெரிதாக தெரியவில்லை, இந்த இரண்டு மணிநேரம் தான் பொறுமையை மிகவும் சோதித்துவிட்டான் இந்த செந்தில்வேலன்.
ஒருவழியாக அவன் சன்னிதானத்துக்குள் சென்று விட பக்தர்களின் “கந்தனுக்கு அரோகரா..முருகனுக்கு அரோகரா” என்ற கோஷத்தில் பக்தி உணர்வுகள் உடம்பில் பீறிட்டது. அந்த பக்தி பரவசத்தோடு, அவன் சன்னதியில் அவனுக்கு நேராக நின்று, விபூதி அலங்காரத்தில் ஜொலிக்கும் தோற்றத்தில், சிரிக்கும் பாலகனாகிய என் படையப்பனை தரிசித்த போது “முருகா..வேலா..செந்தில்நாதா.. செந்திலாண்டவா..”என அவனின் பெயர்களை என்னையறியாமல் உச்சரிக்க தொடங்கினேன். பார்த்த கணம் எதுவும் வேண்டமுடியவில்லை. அவனை அந்த ஒரு சில நொடிகள் மெய் மறந்து பார்த்து கொண்டிருந்தேன். காவலாளி ஒருவர் பலமுறை என்னை அழைத்தபோதும் கேட்கவில்லை, என் மனம் அவனையே லயித்து இருந்தது. என் கையை தட்டி அவர் கூப்பிட்டபோது தான் சுயநினைவு வந்து நகர்ந்தேன்.

அதன் பின் அவனிடம் சொல்ல மறந்த அனைத்தையும் அருகில் இருக்கும் சண்முகர் சன்னதியில் சொல்லிவிட்டு நெற்றியில் விபூதி பட்டை அடித்துக்கொண்டு முருகனை தரிசித்த திருப்தியில் கோவிலை விட்டு வெளியே வந்தேன்.இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு சிறப்பான தரிசனம். தரிசனம் முடிந்து வெளியே வந்தபோது பஞ்சாமிர்தம் பிரசாதமாக கிடைத்தது.
ராஜகோபுரம் அருகே நின்று படம் எடுத்து கொண்டிருந்தபோது , ஒரு பக்தர் அருகே வந்து அவரை புகைபடம் எடுத்து தர சொல்லி கேட்க..நானும் எடுத்து கொடுக்க பதிலுக்கு அவரும் என்னை எடுத்து கொடுத்தார். மும்பையில் இருந்து வந்து இங்கே முருகனை தரிசிக்க வந்திருக்கிறார். போகும்போது கோவில் பிரசாத ஸ்டாலில் வாங்கி வைத்திருந்த லட்டு ஒன்றை எடுத்து என் கையில் கொடுத்துவிட்டு சென்றார். (என்னா மனுஷன்யா..)



கண்குளிர முருகனையும், ராஜ கோபுரத்தையும் தரிசித்துவிட்டு வெளியேறிய போது மனதில் ஆத்ம திருப்தி. கடலில் கால் நனைக்க முடியவில்லை என்பது மட்டுமே ஒரு வருத்தம், ஏமாற்றம். இருந்தாலும் முருகனை தரிசிக்க இம்முறை வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியம். மாலையில், பிரசித்திபெற்ற மணி ஐயர் ஹோட்டலுக்கு எதிரே கார்னரில் அமைந்த உதயம் காபி கடையில் சூடாக காபியும், மொறுமொருப்பான கீரை வடையும் சாப்பிட்டு விட்டு, மீண்டும் அன்பை சந்திக்க வருவேன் என மனதில் கூறிக்கொண்டு திருச்செந்தூரில் இருந்து ஊரை நோக்கி கிளம்பினேன்.
Leave a comment