பொன்னியின் செல்வன் பாகம் 1 !

பொன்னியின் செல்வன் 🌟🌟🌟🌟

முதலில் பொன்னியின் செல்வன் படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்து இன்று திரையில் அதைக்காண வழி செய்த மணிரத்னத்தி்ற்கு வாழ்த்துக்கள்.

பொதுவாக ஒரு கதையை நான் படிக்கும்போது என் எண்ணத்திற்க்கேற்ப கதாபாத்திரங்களை, காட்சிகளை கற்பனை செய்து கொள்வேன். அதுபோல் பொன்னியின் செல்வன் படிக்கும்போதும் கற்பனை செய்து வைத்திருந்தேன். என்னதான் படித்து இருந்தாலும் இந்த புதினத்தை எவ்வாறு படமாக எடுத்து இருப்பார் மணிரத்னம்.. வந்தியத்தேவன், கரிகாலன், அருள்மொழி வர்மன், குந்தவை, நந்தினி கதாபாத்திரங்களின் காட்சி அமைப்புகள் எவ்வாறு இருக்கும்.. வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியான் இடையேயான காட்சிகள், குந்தவையும் நந்தினியும் நேரெதிர் சந்திக்கும் காட்சிகள், அருள்மொழிவர்மன் உடனான வந்தியத்தேவனின் காட்சிகள் என ஒவ்வொன்றும் திரையில் பார்க்க எவ்வாறு இருக்கும் என்ற ஆவலோடு ஏற்கனவே காத்திருந்தேன். போதாக்குறைக்கு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தலைவர் வேறு அவர் பங்கிற்கு பொன்னியின் செல்வன் புதினத்தை பற்றி பேசி மேற்கொண்டு ஆவலை தூண்டிவிட்டார். சரி எப்படியாவது முதல் காட்சி பார்த்து விடவேண்டுமென்று டிக்கெட் புக் செய்துவிட்டேன். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு சைதாப்பேட்டை ராஜ் தியேட்டர் சென்றிருந்தேன்.

 

மணி 4.30 : ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவரின் குரலில் தொடங்கியது பொன்னியின் செல்வன் பாகம் 1.

புதினத்தில் படித்த ஒவ்வொரு கதாபாத்திரத்தையும், காட்சிகளையும் ஏ.ஆர்.ரகுமானின் அளவான பாடல்கள் மற்றும் பின்னணி இசையோடும், ரவிவர்மணின் கண்களை குளிர்விக்கும் அற்புதமான காட்சிகளோடும் நம் கைப்பிடித்து சோழ தேசம் நோக்கி அழைத்து சென்று ஒன்றன்பின் ஒன்றாக நமக்கு அறிமுக படுத்தி கொண்டே வருகிறார் மணிரத்னம்.

வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் காட்சியாக இருக்கட்டும், இளைய பிராட்டி குந்தவையை முதன் முதலாக சந்தித்து  வந்தியத்தேவன் பேசும் காட்சிகள், அதே வந்தியத்தேவன் மாயமோகினி , பேரழகி பழுவூர் ராணி நந்தினியை முதல் முறையாக சந்தித்து அவள் அழகில் மயங்கி பேசும் காட்சிகளாக இருக்கட்டும், தன் அழகில் பெரிய பழுவேட்டரயரை கட்டிப்போட்டு உரையாடும் காட்சிகள், குந்தவையும், நந்தினியும் பார்த்து பேசிகொள்ளும் காட்சிகள், அருள்மொழி வர்மன் மற்றும் வந்தியத்தேவன் சண்டை இட்டுக்கொள்ளும் காட்சி இன்னும் ஏராளமான காட்சிகள் ஒவ்வொன்றும் நாம் புதினத்தில் படிக்கும் போது கிடைத்த உணர்வை அப்படியே இருமடங்காக திரையில் நமக்கு கிடைக்க செய்து இருக்கிறார்.

இந்த முதல் பாகத்தில், நாயகனே வந்தியத்தேவன் கார்த்திதான். சிறப்பான தேர்ந்த நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். அவரும் ஆழ்வார்க்கடியான் ஜெயராம் வரும் காட்சிகள் எல்லாம் ரசித்து பார்த்தேன். நந்தினியாக ஐஸ்வர்யாராய் கொள்ளை அழகு, உண்மையாவே உலக அழகிதான். பெரிய பழுவேட்டரையர் சரத்குமாரை தன் அழகில் மயக்கி தன் கையில் வைத்து ஆட்டம் காண்பிக்கும் மாய மோகினி. மறுபக்கம் குந்தவையாக திரிஷா தன் அழகாலும், சிறப்பான நடிப்பாலும் கவர்ந்து செல்கிறார். வந்தியத்தேவனும் குந்தாவையும் படகில் சந்தித்து உரையாடும் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த காட்சிகள் குளுமை. போர்கண்ட சிங்கமாகவும், மனதில் ஆரா ரணத்துடன் வளம் வரும் ஆதித்ய கரிகாலன் விக்ரம், அருள்மொழி வர்மனாக ஜெயம்ரவி, சின்ன பழுவேட்டரையர் பார்த்திபன் மற்ற கதாபாத்திரங்கள் என ஒவ்வொருவரும் தங்கள் சிறப்பான பங்கை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

புதினத்தை காட்டிலும் படத்தில் சிறு சிறு மாற்றங்கள் ஆங்காங்கே இருக்கின்ற.. காட்சிகளாக எதிர்பார்த்தவை கதை போகிறபோக்கில் அங்கங்கே உரையாடல்களில் கொடுத்து இருக்கிறார். இரண்டு பாக புத்தகத்தை இரண்டே முக்கால் மணி நேர படத்தில்  காட்சியப்படுத்தி இருப்பது சிறப்பு. படத்தின் இறுதியில் முக்கியமான திருப்புதல் காட்சியை வைத்து இரண்டாம் பாகத்துக்கு தொடக்கம் குடுத்து முதல் பாகத்தை முடித்திருக்கிறார் மணிரத்னம்.

பாகுபலி படத்துடன் ஒப்பிட்டு பொன்னியின் செல்வன் பார்க்க வருபவர்களுக்கு ஏமாற்றங்கள் இருக்கும். இது பல வித போர் காட்சிகள் கொண்ட கதையல்ல.. பல கதாப்பாத்திரங்கள் கொண்ட கதை..அறியனையை கைப்பற்ற துடிக்கும் சூழ்ச்சிகள் நிறைந்த சகுனி ஆட்டத்தின் கதை தான் இந்த பொன்னியின் செல்வன்.

 

காலையில் பார்த்து இருந்தாலும் மீண்டும் ஒருமுறை திரையரங்கில் காண வேண்டும் இந்த பொன்னியின் செல்வனை.

பொன்னியின் செல்வன் ~ வந்தான் வென்றான் ❤️

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑