நண்பகல் நேரத்து மயக்கம் ❤️

கேரளாவை சேர்ந்த ஜேம்ஸ் , அவனது மனைவி, மகன் மற்றும் இன்னும் சில குடும்பங்களுடன் ஒரு குழுவாக தமிழகத்தில் உள்ள வேளாங்கண்ணிக்கு ஒரு வேனில் சுற்றுலா வந்துவிட்டு அங்கிருந்து சொந்த ஊர் நோக்கி புறப்படுகிறார்கள். செல்லும் வழியில் ஒரு ஹோட்டலில் வேனை நிறுத்தி மதிய சாப்பாடு சாப்பிட்டுவிட்டு மீண்டும் கிளம்புகிறார்கள். வேனில் சென்று கொண்டிருக்கும் போது பழைய படங்களையும், பாடல்களையும் டிவியில் பார்த்து கேட்டு கொண்டே செல்கின்றார்கள்.

மதிய சாப்பாடு, சாலை பயணம் , ரம்மியமான பாடல் என எல்லாமும் ஒரு சேர அனைவரும் கண் அசந்து உறங்கி போகிறார்கள்.  திடீரென்று ஜேம்ஸ் உறக்கம் கலைந்து கண் விழித்து பார்க்கிறான். ஒரு கிராமத்து சாலையில் வேன் வேகமாக சென்று கொண்டு இருக்கிறது , வேனை நிறுத்த சொல்கிறான். வேனில் இருந்து இறங்கி அருகே இருக்கும் சோளக்காட்டின் வழியே நடந்து சென்று ஒரு கிராமத்திற்குள் செல்கிறான்.

அங்கே ஒரு வீட்டின் வெளியே கொடி கயிற்றில் இருக்கும் லுங்கியை எடுத்து உடுத்தி கொண்டு அந்த வீட்டின் உள்ளே செல்கிறான். அந்த வீட்டில் கண் பார்வை இழந்த(அல்லது ஆபரேசன் செய்த) வயதான பெண் டிவியில் பழைய படம் ஒன்றை பார்த்து கொண்டிருக்கிறாள். மற்றொரு அறையில் ஒரு பெண் தூங்கி கொண்டு இருக்க ஜேம்ஸ் அங்கு தான் போட்டு இருக்கும் சட்டையை கழற்றி விட்டு வேறு ஒரு சட்டை அணிந்து கொண்டு வீட்டில் மளிகை பொருள் எதும் இல்லையா? நான் போய் வாங்கிட்டு வரேன் என்று சொல்லி கொண்டு வெளியே இருக்கும் டிவிஎஸ் 50 வண்டியை எடுத்து கொண்டு சுந்தரமாக கிளம்பி செல்கிறான்.

இதற்குள் ஜேம்ஸ்சை காணவில்லை என அறிந்து அவன் உடன் வந்திருந்த கேரள குடும்பம் அவனை தேடி அந்த கிராமத்திற்குள் வருகிறது. ஊருக்குள்ள ஒருத்தன் புதுசா வந்து வண்டியை திருடி கொண்டு போயிட்டு இருக்கான் என்று ஊர் மக்கள் அவனை துரத்தி செல்கிறார்கள்.

ஜேம்ஸ் எதற்காக அந்த ஊருக்குள் சென்றான்? சுந்தரம் யார் ? சந்தரமாக ஜேம்ஸ் எவ்வாறு மாறினான் ? இதன் பின் என்ன ஆனது என்று சொல்கிறது மம்மூட்டி நடித்து வெளி வந்திருக்கும் இந்த “நண்பகல் நேரத்து மயக்கம்” மலையாள /தமிழ் திரைப்படம்.

மலையாள கரையோர ஜேம்சாகவும், தமிழக கிராமத்து சுந்தரமாகவும் மாறுபட்ட இருவேறு நடிப்பில் இயல்பாய் வந்து நம்மை அந்த வாழ்வியலுக்குள் அழைத்து சென்று இருக்கிறார் மம்மூட்டி. மற்ற கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ள நடிகர்களும் தங்கள் இயல்பான அழகான நடிப்பை குடுத்து இருக்கிறார்கள். படத்தில் பின்னணி இசை, பாடல்களை தவிர்த்து அந்தந்த காட்சியின் நேரடி சத்தங்களை மட்டுமே குடுத்து இருக்கிறார்கள். படம் நெடுகிலும் அந்த காட்சிகளுக்கு ஏற்ப டிவியில் ஓடுகிறது பழைய தமிழ் பட வசனங்களும், பாடல்களும். ஒரு காட்சியில் சிவாஜி பட வசனம் ஓட டிவிக்கு வெளியே மம்மூட்டி தனது நடிப்பை வெளிப்படுத்தி கொண்டு இருப்பார். ஆனால் நடிகர்களின் வசன சத்தத்தையும் மீறிய அந்த அந்த டிவி காட்சிகளின் சத்தம் இரைச்சலும், எரிச்சலுமாக ஒரு கட்டத்தில் மாறியது, கொஞ்சம் சத்தத்தை குறைச்சு இருக்கலாம்.

படத்தில் வெகுவாக என்னை கவர்ந்தது தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும், அவர் காட்சியப்படுத்திய ஃப்ரேம்களும். ஒரு கிராமத்தை நம் கண் முன்னே அவ்வளவு அழகாக காட்டி இருந்தார். ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு அழகாக இருக்கும். அந்த காட்சிகளின் ஊடே நம்மையும் கைபிடித்து அந்த அழகியல் வாழ்வியலுக்குள் நம்மை அழைத்து சென்று இருப்பார்.

ஒரு சட்டகம்…ஒரு சூழல்… இரு வேறு குடும்பம்.. ஒரு அம்மாவும், மகளும் ஒரு சாளரத்தின் வழியாகவும்.. இன்னொரு அம்மாவும், மகனும் வீட்டு திண்ணையிலும் இருவருக்குமான பொதுவான கவலையில் இருப்பதை காட்சியப்படுத்தி இருப்பார்.

ஒரு சில படங்களை பார்த்த பின்பு அதன் தாக்கம் நெடு நேரம் , நெடு நாள் இருக்கும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்று தான் லிஜோ ஜோஸ் இயக்கி உள்ள இந்த படம். படத்தின் தலைப்பிலேயே மலையாள தலைப்பின் கீழே ஒரு மதிய வேலை வேப்ப மர நிழல் போல தமிழ் தலைப்பும் வடிவமைக்கப்பட்டு இருக்கும். படத்தின் கதைகளம் தமிழ் என்பதால் அதற்கு ஏற்றார் போல் படம் நெடுகிலும் தமிழ் பாடல்கள், வசனங்கள் அந்த காட்சிகளின் குறியீடாக வந்து செல்லும். குறிப்பாக படத்தின் இறுதியில் வரும் “ஆடிய ஆட்டம் என்ன”, “வீடு வரை உறவு” பாடல்கள் சிறப்பு.


சுட்டெரிக்கும் வெயில் பொழுதில் ஒரு கிராமத்திற்குள் சென்று அங்குள்ள வீட்டின் திண்ணைகளில் படுத்து வேப்ப மர காற்றில் இளைப்பாறியது போன்ற அனுபவத்தை அந்த  ஒரு வாழ்வியல் உணர்வை தருகிறது மம்முட்டியின் இயல்பான நடிப்பில் வெளிவந்துள்ள இந்த “நண்பகல் நேரத்து மயக்கம்” எனும் மலையாள/தமிழ் படம்.

❤️❤️❤️❤️❤️

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑