
பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி பட்டையை கிளப்பியது. புதினத்தை திரையில் காண மக்கள் ஆர்வமாக திரையரங்கு சென்று பார்த்து ரசித்து கொண்டாடினார்கள். கலவையான விமர்சனம் வந்தாலும் மக்களால் படம் ஏற்றுக்கொள்ளப்பட்டு கடந்த ஆண்டின் பெரும் வெற்றி படமாக அமைந்தது.
எனக்கு முதல் பாகத்தை பார்த்த போது அடுத்து இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று இருந்த ஆர்வம் அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து விட்டது. நேற்று படம் பார்க்கும்போது கூட எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி படத்தை பார்க்க தொடங்கினேன்.
இளம்வயது கரிகாலன், நந்தினி இடையே ஆன காட்சிகளுடன் படம் ஆரம்பமானது. இளம்வயது நந்தினியாக நடித்துள்ள சாராவும் அவ்வளவு அழகு, அந்த கதாபாத்திரத்துக்கு கட்சிதமான தேர்வு.

அதன் பின்பு மீண்டும் உலக நாயகன் கமல் அவர்களின் குரலில் பொன்னியின் செல்வன் ஆரம்பமானது (இவர் கதை சொல்லும்போதும் ஒரு வசீகரம் இருக்கிறது).
விக்ரம், ஐஸ்வர்யாராய், கார்த்தி, த்ரிஷா, ஜெயம்ரவி என முக்கிய கதாபாத்திரங்கள் மொத்த படத்தையும் தாங்கி நிற்கிறார்கள். அதிலும் நந்தினி கதாபாத்திரமாக வரும் ஐஸ்வர்யா ராய் வேற லெவல் ~” உயிர் உங்களுடையது தேவி”😍

அருள்மொழி வர்மன் பாத்திரத்துக்கு நியாயம் செய்து இருக்கிறார் ஜெயம் ரவி. வானதி, பூங்குழலி கதாபாத்திரங்களுக்கு இந்த பாகத்தில் காட்சிகள் குறைவு.

வொர்த் என்றால் கரிகாலன், நந்தினி காட்சிகள்..வந்தியத்தேவன், குந்தவை சந்திக்கும் காட்சிகள், இடைவேளை காட்சிகளில் அருள்மொழி வர்மன் ,போர் காட்சிகள்( இன்னும் சிறப்பாக கூடுதல் காட்சிகள் வைத்து இருக்கலாம்) , இறுதிக்கட்ட அரியணை காட்சிகள். இவை எல்லாம் இந்த பாகத்தில் எனக்கு பிடித்த காட்சிகள்.

ஊமை ராணி கதாபாத்திரத்துக்கு முதல் பாகத்தில் குடுத்த பில்டப்புக்கு இந்த பாகத்தில் அவளின் பெயருக்கு ஏற்ப அமைதியாக வந்து மற்ற உயிர்களை காப்பாற்றி தன் உயிரைவிட்டு சென்றுவிட்டாள். முதல் பாகத்தில் ஊமையாக இருந்த சில கதாபாத்திரங்களுக்கு இரண்டாம் பாகத்தில் சில வார்த்தை பேச வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகத்தில் கதை, கதாப்பாத்திரத்தில் நிறைய மாற்றங்கள். புத்தகத்தில் படித்தது ஒன்று, திரையில் பார்த்தது ஒன்று. புதிதாக பார்ப்பவர்களுக்கு ஒன்றும் கவலையில்லை. கதை அறிந்தவர்களுக்கு தான் இரண்டாம் பாகம் பெரும் ஏமாற்றம். தனக்கு தோன்றியவாறு இஷ்டத்துக்கு கிண்டி நமக்கு குடுத்திருக்கிறார் மணி.
முதல் பாகத்திலயே மணிமேகலை கதாபாத்திரம் இல்லை, ஒருவேளை வந்தியத்தேவன், குந்தவையின் காதலுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று எண்ணி மணிமேகலை கதாபாத்திரத்தையே தூக்கிவிட்டார் போல மணிரத்னம். இதுமட்டுமின்றி முக்கிய கதாபாத்திரம் சேந்தன் அமுதனை இந்த படத்தில் டம்மி ஆக்கிவிட்டு.. மதுராந்தகனை அரியணையில் ஏற்றி விட்டார்.
கரிகாலனின் மறைவுக்கு பிறகு வரும் இறுதிகட்ட காட்சிகள் எல்லாம் ஏனோ தானோ ரகம். கல்கியின் பொன்னியின் செல்வன் புத்தகத்தில் வரும் இறுதி காட்சிகளுக்கும், படத்தில் மணிரத்னம் எடுத்து வைத்திருக்கும் காட்சிகளுக்கும் நிறைய வேறபாடுகள். என்ன மணி சார் இதெல்லாம் ?
புத்தகம் படித்தவனாக பார்க்காமல், ஒரு படமாக பார்க்கும்போது முந்தைய பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகம் எனக்கு பிடித்திருந்தது (பாடல்களை தவிர). ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை படத்துக்கு பெரும் பலம்.

ஆனால் எது எப்படியோ பல வருடங்களாக எடுக்க முடியாமல் இருந்த கல்கியின் பொன்னியின் செல்வன் காவியத்தை வெற்றிகரமாக எடுத்து இரண்டு பாகமாக வெளியிட்டு வெற்றி கண்டுவிட்டார் மணிரத்னம். அதற்கு மட்டும் வாழ்த்துக்கள் சார்.
~ ராக்ஸ்
Leave a comment