கோடை கொண்டாட்டம் டூ விசில் போடு எக்ஸ்பிரஸ் 🚂

“விசில் போடு எக்ஸ்பிரஸ்” என்ற பெயரில் சென்னையில் நடந்த பஞ்சாப் அணியுடனான போட்டியை ரசிகர்கள் கண்டு ரசிப்பதற்காக பிரத்யேகமாக சிறப்பு ரயிலை தென்னக ரயில்வே உதவியுடன் ஏற்பாடு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம்.


சென்னை போட்டியை நேரடியாகக் காண தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள ரசிகர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்தது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல் மற்றும் திருச்சியைச் சேர்ந்த 750க்கும் அதிகமான ரசிகர்கள், சென்னையில் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுவதைக் காணும் வாய்ப்பைப் பெற்று நேரடியாக கண்டு ரசித்தனர்.

கன்னியாகுமரியில் இருந்து ஏப்ரல் 29ம் தேதி புறப்பட்டு திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக ஏப்ரல் 30ம் தேதி சென்னை சென்றடைந்தத இந்த ரயில்…சென்னையில் இருந்து ஏப்ரல் 30ம் தேதி இரவு மீண்டும் குமரிக்கு திரும்பியது. ரசிகர்களுக்கான பயணம், தங்கும் இடம், போட்டி டிக்கெட்டுகள், உணவு உள்ளிட்ட செலவுகள் ஆகியவற்றை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகமே ஏற்று இந்த முயற்சியை வெற்றிகரமாக நிறைவேற்றியது.

இவ்வாறு செய்வது முதல் முறை அல்ல.. இதற்கு முன்பே 2018 ஆம் ஆண்டு இதேபோன்ற சிறப்பு ரயிலை சென்னையில் இருந்து புனேவிற்கு ரசிகர்களை அழைத்துச் சென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம்.

சென்னை சூப்பர் கிங்ஸின் இந்த விசில் போடு எக்ஸ்பிரஸ் ரயில் போட்டிக்கு முன்னோடி யார் என்பது தெரியுமா ? தொடர்ந்து படியுங்கள்.

ஏவிஎம் நிறுவனம் தயாரித்த மின்சார கனவு திரைப்படம் 1997 ஆம் ஆண்டு வெளியானது. அந்த வருடம் ஏவிஎம் நிறுவனத்திற்கு 50ஆம் ஆண்டு பொன்விழா நிறைவு ஆண்டாகும். இரண்டையும் கொண்டாடும் விதமாக ஏவிஎம் நிறுவனம் சன் டிவி மற்றும் 3 ரோசஸ் உடன் இணைந்து ஒரு போட்டியை நடத்தியது. சன் டிவியில் போட்டி தொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து அனுப்புபவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை சிறப்பு ரயிலில் அழைத்து வந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அதற்கேற்ப போட்டி நடத்தி அதில் வெற்றி பெற்ற 1000 பேரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து சென்னைக்கு அழைத்து சென்று நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டு பின்னர் அவர்களை ஏவிம் பொன்விழா நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றுள்ளார்கள். அந்த நிகழ்ச்சி அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் முன்னிலையில் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுளார்கள்.

அதன்பிறகு சில ஆண்டுகளுக்கு கோடை விடுமுறை காலத்தில் “கோடை கொண்டாட்டம்” என்ற பெயரில் இதே போட்டியை நடத்தியது சன் டிவி நிறுவனம். அதாவது சன் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்களுக்கு இடையே அவ்வப்போது கேட்கப்படும் கேள்விகளுக்கான சரியான பதிலை அஞ்சல் அட்டையில் எழுதி அதை சன்டிவிக்கு அனுப்பவேண்டும். அதில் வெற்றி பெறுபவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை அழைத்து சென்று அங்கு நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு ரசிப்பார்கள்.

இந்த போட்டிக்காக சன்டிவி நிறுவனம் தெற்கு ரெயில்வே உடன் இணைந்து பிரத்யேக ரயில் ஒன்றை ஏற்பாடு செய்து அதில் வெற்றி பெற்றவர்களை எந்த செலவுமின்றி அழைத்து செல்வார்கள். சரியாக பள்ளி முழு ஆண்டு தேர்வு முடிந்த பின்பு ஏப்ரல் மாதத்தில் இந்த போட்டி துவங்கி கேள்விகள் கேட்கப்படும், மே மாதத்தில் ரயில் கொண்டாட்ட பயணம் நடக்கும்.


எங்க வீட்டிலும் நாங்கள் இரண்டு மூன்று அஞ்சல் அட்டைகளை அனுப்பியது நியாபகத்திற்கு வருகிறது (ஆனா சன் டிவி துவங்கி சென்னை சூப்பர் கிங்ஸ் வர நடத்திய இந்த போட்டிகள் ல என் பேர் ஒருதடவை கூட வரல… வெரி சேட்).

இவை எல்லாம் எனக்கு தெரிந்து 2000 ஆம் ஆண்டு நடந்தது. சன் டிவி போலவே ஜெயா டிவியும் ரயிலில் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை அழைத்து சென்று இதே போட்டியை நடத்தினார்கள்.


2005ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் படத்திற்கு ஒரு புரோமோஷனாக படக்குழுவுடன் இணைந்து ஜெயா டிவி இதே போட்டியை “கோடை கொண்டாட்டம் ஸ்பெஷல்” என்ற பெயரில் நடத்த போவதாக செய்தி தரவுகள் சொல்கின்றன. இதில் வெற்றி பெறுபவர்கள் கமல் மற்றும் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்தவர்களுடன் இணைந்து இதில் பயணிப்பார்கள் என்று விளம்பரப்படுத்தி ஜெயா டிவி இந்த போட்டியை நடத்தியது.

பின்னர் சில ஆண்டுகளுக்கு பிறகு கலைஞர் டிவி தொடங்கிய போது இதே வகை போட்டியை நடத்தியதாக நியாபகம். உங்களுக்கும் இந்த நிகழ்ச்சி தொடர்பான நினைவுகள், அனுபவங்கள் இருந்தால் பகிரவும்.

நன்றி வணக்கம்.

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑