
டேய் ஜெய்..ஓடாத…இங்க வீட்டுக்குள்ள வாடா..
சொல்ல சொல்ல கேட்காமல் வீட்டின் பார்க்கிங் ஏரியாவில் ஓடிக்கொண்டிருந்தான் ஜெய்.
இப்போ நீ வரலன்னா.. உன்ன இங்கயே விட்டுட்டு போயிடுவோம் என்று ராகுல் சொன்னதும் வேகமாக வீட்டுக்குள்ளே வந்த ஜெய்…நாம இப்போ எங்கப்பா போறோம் என்று கேட்டான்.
கோவிலுக்கு போறோம் என்று கூறி கொண்டே ஜெய்யை தூக்கி மடியில் வைத்து கொண்டாள் பாட்டி சிவகாமி.
அங்க போய் என்ன பண்ண போறோம் என்று ஜெய் மீண்டும் கேட்க..
சாமி கும்பிடதான்டா போறோம், வேற எதுக்கு கோவிலுக்கு போவாங்க என்று சொல்லி செல்லமாய் கொஞ்சினாள் ஜெய்யின் அம்மா ப்ரீத்தி.
நான் வரல என்று ஜெய் சினுங்க..
கோவில்ல நாளைக்கு திருவிழாடா கண்ணா.. ராட்டினம், ஊஞ்சல், டெல்லி அப்பளம், பஜ்ஜி எல்லாம் அங்க இருக்கும் என்று சொல்லி கொண்டே ஜெய்யை தூக்கி கொண்டார் தாத்தா பரமசிவம்.
அப்போ நானும் வரென் என்று ஜெய் சொல்ல..
இல்ல நீ இங்கேயே இரு..நாங்க எல்லாம் கார்ல போய்ட்டு வரோம் என்றான் ராகுல்.
அப்பா என்னையும் கூட்டிட்டு போங்க நானும் வருவேன் என்று ஜெய் தாத்தாவின் மடியில் இருந்து இறங்கி ராகுலின் முதுகில் ஏறிக்கொண்டான்.
ராகுலின் சிறுவயதிலேயே பணி நிமித்தம் காரணமாக சொந்த ஊரை விட்டுவிட்டு சென்னைக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்து விட்டார் பரமசிவம். ராகுலின் திருமணத்திற்கு பிறகு சொந்த ஊரில் உள்ள தன்னுடைய இடத்தில் வீடு கட்ட துவங்கினார். ஓராண்டு காலம் தன் மனைவி சிவகாமியுடன் அங்கேயே தங்கி வீட்டு வேலைகளை மேற்பார்வை பார்த்தார் பரமசிவம். ராகுல் தன் மனைவி ப்ரீத்தி மற்றும் மூன்று வயது மகன் ஜெய்யுடன் சென்னையிலே இருந்தான்.
கடந்த வாரம் தான் வீடு கிரகப்ரேவேஷம் முடிந்தது, ஊர் திருவிழாவும் நெருங்கி வந்ததால் அதையும் முடித்துவிட்டு சென்னை செல்லலாம் என்று முடிவெடுத்து இருந்தான் ராகுல்.
நாளை ஊர் திருவிழா ஆரம்பம், பகலில் கூட்டம் அதிகமாக இருக்கும், கோவிலுக்கு உள்ளே செல்வது சுலபம் அல்ல. அதனால் தற்போது சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வந்து விடலாம் என்று முடிவு செய்து எல்லோரும் அந்த மாலை பொழுதில் கோவிலுக்கு கிளம்பி கொண்டிருந்தார்கள்.
ப்ரீத்தி..நான் போய் கார் ஸ்டார்ட் பண்றேன்..நீங்க வீட்ட பூட்டிட்டு வாங்க என்று சொல்லிவிட்டு ராகுல் வெளியே சென்றான். எங்கு தன்னை விட்டுவிட்டு சென்று விடுவார்களோ என்ற பயத்தில் ஜெய்யும்..நானும் கூட வரேன் என்று சொல்லி வேகமாக அப்பாவை நோக்கி ஓடினான்.
அதற்குள் தாத்தா பரமசிவம்.. இருடா..அப்பா காரை வெளிய எடுத்து நிறுத்திக்கட்டும்..அப்புறம் போகலாம் என்று சொல்லி ஜெய்யை தூக்கி கொண்டார்.
சிவகாமி வீட்டை பூட்டி விட்டு வர.. ஐவரும் சேர்ந்து கோவிலுக்கு சென்றார்கள். ஜெய் ஒரே குஷியாக இருந்தான். அவனை தாண்டி ராகுல் தான் மனதளவில் அதீத ஆர்வத்துடன் இருந்தான். அவனது ஆறாம் வகுப்பு விடுமுறையில் கடைசியாக திருவிழாவிற்கு சென்றான், அதன்பிறகு இப்போது தான் செல்கிறான். அதனால் அவனும் சந்தோசமாக இருந்தான், இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.
கோவிலுக்கு சற்று முன்பாகவே காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து நடந்து சென்றார்கள். ஜெய்யை தூக்கிகொண்டு அந்த தெரு வீதிகளையும், கடைகளையும் பார்த்தவாரும், ஜெய்யின் கேள்விகளுக்கு பதில் சொல்லி கொண்டும் வந்தான் ராகுல்.
டெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜி, காலிஃப்ளவர் பக்கோடா கடைகள், விளையாட்டு பொருட்கள் கடைகள் என வரிசையாக வியாபித்து விழாக்கோலம் பூண்டு இருந்தன அந்த வீதி. இதையெல்லாம் ஒவ்வொன்றாக பார்த்து கொண்டு அமைதியாக வந்தான் ஜெய்.
கோவில் அருகில் நெருங்கியபோது ஒரு கடையின் பெயர்ப்பலகையை சுட்டிக்காட்டி அது வேண்டும் என்றான் ஜெய். எது வேணும்ன்னு சொல்றான் என்று ராகுலும் பார்க்க.. அங்கே இருந்த ஹோட்டல் பெயர் பலகையில் இடம் பெற்று இருந்த தோசை படத்தை கைகாட்டி வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தான் ஜெய்.
கோவிலுக்கு போயிட்டு வந்து வாங்கிக்கலாம் என்று ராகுல் சொல்ல.. “எனக்கு இப்பவே வேணும்” என்று அழுது அடம்பிடிக்க தொடங்கினான் ஜெய்.
அங்கு ராட்டினம் தெரியுது பாரு அதுல போலாமா என்று பேச்சை மாற்றினார் பரமசிவம்.
ராட்டினம் எங்க என்று வேகமாக தாத்தாவிடம் கேட்டான்.
அவனை தூக்கிக் கொண்டு..அதோ அங்க தெரியுது பாரு என்று தூரத்தில் தெரிந்த இராட்டினத்தை காட்டி நடந்தார்.
முதல்ல சாமி கும்பிட்டுட்டு அதுக்கப்புறம் ராட்டினத்துல போலாம்னு சொல்லி சமாதானப்படுத்தி விட்டு எல்லோரும் கோவிலுக்குள் சென்றார்கள்.
பல வருடங்களுக்கு பிறகு செண்பகவல்லி அம்பாளையும், பூவனநாத சுவாமியையும் தரிசனம் செய்தது ராகுலுக்கு நிறைவாக இருந்தது. பின்பு எல்லோரும் கோவிலுக்கு பின்புறம் உள்ள திடலில் அமைக்கப்பட்டு இருந்த பொருட்காட்சிக்கு சென்றனர். ராட்டினத்தை பார்த்ததும் அதில் ஏற வேண்டும் என்று ஜெய் அடம்பிடித்தான். ப்ரீத்தி வரவில்லை என்று கூறிவிட்டாள். ராகுலும், ஜெய்யும் மட்டும் இராட்டினத்தில் ஏறினர். ஜெய் முதலில் பயந்து அழுதாலும் பின்னர் சந்தோஷத்தில் கத்திக்கொண்டே வந்தான். ராட்டினம் உச்சிக்கு சென்று நின்ற போது அங்கிருந்து கீழே உள்ள ஆட்களையும், கோவிலையும் சுட்டி காட்டினான். ராட்டினம் சுற்றி வரும்போது கீழே நின்று கொண்டு இருந்த அம்மா, தாத்தா, பாட்டியை பார்த்து டாட்டா காட்டி கொண்டும் கத்திக்கொண்டும் இருந்தான் ஜெய். ராகுலுக்கு உள்ளே இருந்த குழந்தை தனம் வெளிப்பட்டு அவனும் ஜெய்க்கு ஈடாக சேர்ந்து கத்தினான்.
ஒருவழியாக ராட்டினத்தை முடித்து விட்டு இருவரும் வந்தனர். பின்னர் மற்ற விளையாட்டுகளில் எல்லாம் ஜெய் விளையாடிவிட்டு வந்தபிறகு அங்கிருந்து அனைவரும் கிளம்பினார்கள். அருகில் இருந்த டெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜி எல்லாம் வாங்கி சாப்பிட்டுக் கொண்டே அந்த கூட்டத்தில் நடந்து கொண்டிருந்தார்கள். கோவிலை தாண்டி அந்த ஹோட்டல் அருகே வந்த போது ஜெய் மீண்டும் தோசை வேண்டும் என்று கேட்டான். அந்த ஹோட்டல் புதியதாக இருந்தது. சரி வாங்க சாப்பிட்டுவிட்டே வீட்டுக்கு செல்வோம் என்று பரமசிவம் சொல்ல எல்லோரும் ஹோட்டலுக்கு சென்றார்கள்.
அந்த ஹோட்டல் உள்ளே நுழையும் போதே ராகுலுக்கு இங்கு இதற்கு முன்பாக வேறு ஒரு ஹோட்டல் இருந்ததும், அதன் பெயர் என்னவென்றும் யோசித்து வாரே உள்ளே சென்றான். அனைவரும் டேபிளில் அமர..ராகுல் யோசித்துக் கொண்டிருந்ததை பார்த்து என்னாச்சு என்று ப்ரீத்தி கேட்க..
அது ஒன்னுமில்ல.. இங்க இதுக்கு முன்னாடி வேற ஒரு ஹோட்டல் இருந்துச்சு, சின்ன வயசுல கோவிலுக்கு போய்ட்டு வரப்போ இங்க சாப்பிட்டுட்டு தான் போவோம். அதான் அந்த ஹோட்டல் பேரு என்னன்னு யோசிசிட்டு இருக்கேன் என்றான் ராகுல்.
ஆங்.. நியாபாகம் வந்திருச்சு…“அம்மா மெஸ்”
அம்மா மெஸ்லாம் எப்பவோ மூடிட்டாங்க, ரொம்ப நாளா இங்க எந்த கடையும் இல்லாம சும்மா தான் இருந்துச்சு. இப்போ ரெண்டு மாசம் முன்னாடி தான் இந்த “ஆஹா ஹோட்டல்” ஆரம்பிச்சாங்க என்றார் பரமசிவம்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் ஆர்டர் எடுக்க வந்தவர்.. என்ன சாப்பிடுறீங்க? என்று கேட்க..
எனக்கு தோசை வேணும்..ஸ்பெஷல் தோசை வேணும் என்று ஜெய் வேகமாக கூறினான்.
டேய்..நீ எப்பவுமே வீட்ல தோசைதான சாப்பிடுற.. வேற எதாச்சும் சாப்பிடலாமா என்று சிவகாமி பாட்டி கேட்க…இல்ல எனக்கு தோசை தான் வேணும்..ஸ்பெஷல் கோன் தோசைதான் வேணும் என்று ஜெய் அழுத்தமாக சொன்னான்.
அவனுக்கு ஒரு ஸ்பெஷல் தோசை குடுத்திருங்க.. அப்படியே எனக்கும் ஒரு ஸ்பெஷல் தோசை என்று ராகுல் கூற..மற்றவர்கள் அவர்களுக்கு விரும்பிய உணவை ஆர்டர் செய்தார்கள்.
ஏங்க… அவன்தான் தோசை கேக்குறான்.. நீங்களாச்சும் வேற எதாச்சும் சாப்பிடலாம்ல என்று கேட்டாள் ப்ரீத்தி.
இல்ல ரொம்ப வருஷம் அப்புறம் சின்ன வயசு நியாபகம் எல்லாம் வந்திருச்சு, அதான் நானும் சாப்பிடலாம்னு என்று ராகுல் இழுத்தான்.
இவன் சின்ன பையனா இருந்தப்போ மாசம் ஒன்னு ரெண்டு தடவ கோவிலுக்கு வருவோம். கோவில்ல சாமி கும்பிட்டுட்டு வரப்ப “அம்மா மெஸ்” போய் சாப்பிடுவோம். அந்த காலத்துல நம்ம ஊர்ல ரெண்டு மூணு ஹோட்டல் தான் பிரபலமானது. அதுல ஒன்னு தான் அம்மா மெஸ். பழைய வீட்டையே ஹோட்டலா மாத்தி வச்சிருந்தாங்க, வெளிய இருந்து பார்த்தாலே உள்ள சாப்பிடுறது தெரியும். அப்படி ஒருநாள் ஹோட்டல் தாண்டி போறப்போ அந்த கோன் மாதிரியிருக்கிற தோசையை பார்த்திட்டு எனக்கும் வாங்கிகுடுங்கனு அடம்பிடிச்சான். இவனை சமாதானம் படுத்த முடியாம அன்னைக்கு வாங்கி குடுத்தோம். அப்போ ஆரம்பிச்சது.. அதுக்கு அப்புறம் ஒவ்வொரு முறை கோவிலுக்கு போறப்பவும் அம்மா மெஸ் போய் தோசை சாப்பிட்டுட்டு தான் வருவோம், அவனுக்கு அந்த தோசை அவ்வளவு பிடிக்கும் என்று ராகுலின் சிறுவயது சேஷ்டைகளை கூறினாள் சிவகாமி.
உண்மை தான்..அம்மா மெஸ் ஸ்பெஷல் தோசை என்றால் ராகுலுக்கு அவ்வளவு பிடிக்கும் எப்போது சென்றாலும் அவன் விரும்பி சாப்பிடுவது ஸ்பெஷல் தோசை. அவனது அப்பாவும், அம்மாவும் பரோட்டா, பூரி என்று சாப்பிட்டாலும் இவன் ஸ்பெஷல் தோசை மட்டுமே கேட்பான். அம்மா மெஸ் ஸ்பெஷல் தோசை பெயருக்கு ஏற்றார் போல் ஸ்பெஷலாகவே இருக்கும். பொன்னிறமாக, முறுமுறுப்பாக நெய் மனம் கமல ஊற்றிக் அதை முக்கோண கூம்பு வடிவில் சுருட்டி எடுத்துக்கொண்டு வருவார் சப்ளையர்.
அதை அங்கிருந்து கொண்டு வருவதை பார்த்துவிட்டு ராகுல் உற்சாகத்துடன் கத்துவான். சாம்பார், தேங்காய் சட்னி, வெங்காய சட்னி, மல்லி சட்னி 3 வகை சட்னியுடன் பரிமாறி செல்வார் சப்ளையர். ராகுலுக்கு சாம்பாரும் தேங்காய் சட்னியும் தான் அதில் விருப்பம். தோசையின் பக்கவாட்டில் இருந்து அந்த முறுமுறுப்பான பகுதியை கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து சிறு கிண்ணத்தில் வைக்கப்பட்டு இருக்கும் சாம்பாரில் முக்கி எடுத்து ரசித்து, ருசித்து சாப்பிடுவான் ராகுல். அவன் சாப்பிடும் அழகை பரமசிவமும், சிவகாமியும் ரசித்து பார்ப்பார்கள்.
இதெல்லாம் மனதில் ராகுல் நினைத்துக் கொண்டிருக்க சப்ளையர் இரண்டு ஸ்பெஷல் தோசைகளை எடுத்துக் கொண்டு வந்தார். அந்த தோசையை பார்த்தவுடன் ஜெய் உற்சாகத்தில் கத்தினான்.
“இவனும் சின்ன வயசுல எப்போ வெளிய கூட்டிட்டு போனாலும் தோசை தான் கேப்பான். இப்போ ஜெய்யும் அதே மாதிரி இருக்கான். அதுசரி அவன் மவன் தான இவன்… அப்பா மாதிரியே இப்போ பிள்ளையும் வந்திருக்கு” என்று சொல்லி சிரித்தார் பரமசிவம்.
ராகுல் சட்டென்று தன் அப்பாவை பார்க்க.. அவர் குனிந்து சிரித்துக்கொண்டார்.
சரியான தோசை பைத்தியம் ரெண்டு பேரும் என்று சொல்லி அம்மா சிவகாமியும் சிரித்துக் கொண்டிருந்தாள்.
இதைக்கேட்டு ப்ரீத்தியும் சிரிக்க..
இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்த ஜெய்.. “அப்பா.. அப்போ நீயும் தோசை பைத்தியமா” என்று சத்தமாக கேட்டு சிரிக்க.. இவர்கள் மட்டுமின்றி அருகில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களும் சிரித்துவிட்டர்கள்.
இதை எதிர்பாராத ராகுல்..டேய் படவா..என்று சொல்லி அவனும் சிரித்துவிட்டான்.
இவர்கள் டேபிளில் வைக்கப்பட்டிருந்த தோசைகளும் தங்களுக்குள் ஒன்றை ஒன்று பார்த்து சிரித்துக் கொண்டன.
😁😁😁
Leave a comment