சொர்ணமலை கதிர்வேல் முருகன் ❤️

பெரும்பாலான கோவில்களில் முருகனை சிலை வடிவில் தான் பிரதிஷ்டை செய்து வழிபடுகிறார்கள். வெகு சில கோவில்களில் மட்டும் வேல் வடிவில் முருகன் காட்சியளிக்கிறார். சிலைக்கு பதிலாக முருக வேலையே மூலவராக பிரதிஷ்டை செய்து முருகன் சிலைப்போல் அலங்காரம் செய்து வழிபடுகிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு வழிபாட்டு தலம் தான் எங்கள் ஊர் கோவில்பட்டியில் அமைந்துள்ள சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில்.
இங்கு ஆறடி உயரத்தில் ஐம்பொன்னில் செய்யப்பட்ட வேல் வடிவத்தில் மூலவராக முருகன் அருள்பாலிக்கிறார். முருகன் சிலைக்கு அபிசேகம்,பூஜை செய்வது போல இங்கு வேலுக்கும் அனைத்து வித அபிசேகம், பூஜைகள் செய்யப்படுகின்றன.



அலங்காரம் செய்யப்பட்ட முருக வேலை பார்க்கும்போது அந்த முருகனையே பார்த்தது போன்று இருக்கும். சுற்றி எரியும் தீபங்களின் ஒளியில் வேல் வடிவான முருகப்பெருமான் பிரகாசிப்பார். அதை பார்க்கும் போதே மனதுக்கு இலகுவாக இருக்கும். மலையின் மீது இருப்பதால் பிரகாரத்தில் எப்போதும் குளிர்ச்சியான காற்று நிலவும்.
அமைதியும், குளிர்ச்சியும், மன நிம்மதியும், ஆன்மீகத்தையும் ஒரு சேர இத்தலத்தில் பெறலாம்.
கல்லூரி படிக்கும் காலங்களில் வார இறுதியில் அவ்வப்போது நண்பனுடன் சேர்ந்து இங்கு வந்துவிடுவேன். மாலை வேளையில் மலையின் மீது இருந்து சூரியன் மறையும் காட்சியை பார்க்க ரம்மியமாக இருக்கும். இங்கிருந்து பார்க்கும்போது மொத்த ஊரும் அதன் சுற்றுவட்டாரமும் தெரியும்.




அந்த குளிர்ச்சியான சூழலும், வேலனும் மனதுக்கு நிம்மதியை தருவார்கள். ஊருக்கு வரும்போது தவறாமல் செல்ல நினைக்கும் இடம் இந்த கதிரேசன் மலை.
பொங்கல் விடுமுறையில் ஊருக்கு சென்றபோது மறக்காமல் அந்த வேலனை தரிசித்து வந்தேன்.
ஒவ்வொரு முறை சென்று வந்த பிறகு இத்தலத்தை பற்றி எழுத நினைப்பேன். அது அப்படியே கடந்து போய் கொண்டே இருந்து தற்போது இந்த தைப்பூச திருநாளில் எழுத நேரம் கிடைத்தது.
இக்கோவில் உருவான விதத்தை கீழே காணலாம். சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில் அல்லது கதிரேசன் மலை கோவில் என்று அழைக்கப்படுகிறது இத்திருத்தலம்.
பல வருடங்களுக்கு முன்பு கோவில்பட்டியில் இருந்து இலங்கைக்கு வணிகம் செய்ய சென்றுள்ளார்கள் சில வணிகர்கள். இலங்கையில் உள்ள கண்டி கதிர்காமம் கோவில் முருகனை தினமும் தரிசித்து தங்கள் வணிகத்தை தொடங்கிருக்கிறார்கள்.
பின்னர் வணிகம் முடித்துவிட்டு கோவில்பட்டி திரும்பும் போது கதிர்காம முருகனை இனிமே காண முடியாதே என்ற வருத்தத்தில் இருந்த வணிகர் சுப்ரமணியரின் கனவில் தோன்றிய முருகன்..” கதிர்காமத்தில் இருந்து பிடிமண்ணை எடுத்து சென்று உன் ஊரில் உள்ள மலைக்குன்றில் மூலவராக, எனது வேலை வைத்து வழிபடு, என்று கூறி மறைந்துவிட்டார். முருகன் கூறியபடியே கோவில்பட்டி திரும்பிய வணிகர் சுப்ரமணியர், சொர்ணமலை குன்றில் பிடி மண்ணை வைத்து வேலை பிரதிஷ்டை செய்து அங்கு ஒரு சிறு கோவில் எழுப்பி முருகனை வழிப்பட தொடங்கி இருக்கிறார். இவ்வாறு கோவில் தல வரலாறு கூறுகிறது.
இங்கே ஆறடி உயரத்தில் ஐம்பொன்னாலான கதிர்வேல் முருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு 2006 ஆம் ஆண்டு மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டு கோவில் புதுப்பிக்கப்பட்டன. கோபுரங்கள், தூண்கள் எழுப்பப்பட்டு மாணிக்க விநாயகர், தண்டாயுதபாணி, பைரவருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டன.
பௌர்ணமி நாட்களில் கிரிவலம் சுற்றி வர ஏதுவாக சாலை வசதி அமைக்கப்பட்டது. இத்தலத்திற்கு படிகள் மூலமாகவும், பின்புற சாலையில் வாகனம் மூலமாகவும் செல்லலாம்.
இந்த கிரிவலப்பாதையில் புலி குகை என்று சொல்லப்படும் குகை ஒன்று உள்ளது. முன்பு இந்த குகையில் புலி நடமாட்டம் இருந்ததாகவும், சித்தர்கள் வாழ்ந்ததாகவும், இந்த குகை உள்ளே இருக்கும் ரகசிய சுரங்க பாதை வழியாக செண்பகவல்லி அம்மன் கோவிலை சென்று அடையலாம் என்றும் என் சிறு வயதில் வெவ்வேறு கதைகள் கேள்விபட்டு இருக்கிறேன்.


ஆனா நான் அந்த குகை பக்கம் போனது இல்லை. இங்கு பிரதிஷ்டை செய்யபட்டு இருக்கும் 6 அடி உயர ஐம்பொன் வேல், வச்சிரவேலாக அமைந்திருக்கிறது.
ஒவ்வொரு வேலும் ஒரு மகிமையை கொண்டது.
வீரவேல் – காமம்,
வெற்றிவேல் – குரோதம்,
ஞானவேல் – லோபம்,
வைரவேல் – கோபம்,
சக்திவேல் – மதம்,
சந்தான வேல் – மாச்சரியம் என ஆறு வேல்களும் ஆறு கெட்ட குணங்களை அகற்றும்.
இந்த ஆறு வேலும் சேர்ந்து ஓரே வேலாக சொர்ணமலை கதிரேசன் முருகன் கோயிலில் ஆறு அடி உயரத்தில் குடிக்கொண்டுள்ளது.

சொர்ணமலை கதிர்வேல் முருகனுக்கு அரோகரா ❤️
#தைப்பூசம் #Thaippoosam #ஓம்முருகா
#கோவில்பட்டி #kovilpatti #முருகா
Leave a comment