நெடுஞ்சாலை இரவு Chapter 2

Chapter 2

அதே இரவு நேரம்… கொடைக்கானல்…

“நீ சொன்ன மாதிரியே படம் சூப்பரா இருந்துச்சுடா.. செம வொர்த்” என்று ராகுலை பார்த்து சொல்லி கொண்டு தியேட்டரில் இருந்து வெளியே வந்தான் சஞ்சய்.

“ஆமாடா ராகுல், படம் தியேட்டர்ல பார்க்க வொர்த் தான்… நல்லவேளை லேப்டாப்ல படத்தை பார்க்கலாம்ன்னு இருந்தேன், இது தியேட்டர்ல பார்த்தா தான் நல்லாருக்கும்” என்றான் செல்வா.

அந்த ஒரு பாட்டு மட்டும் இல்லேனா இந்த அளவுக்கு படத்துக்கு பப்ளிசிட்டி இருந்திருக்காது என்றான் விக்கி.

படம் பார்த்திட்டு வொர்த்ன்னு தெரிஞ்சனாலதான் உங்களை படம் பார்க்க திரும்ப கூட்டினு வந்தேன், உங்களுக்கும் படம் கண்டிப்பா பிடிக்கும்னு தெரியும்டா என்றான் ராகுல்.

கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்திருந்த நண்பர்கள் நால்வரும் அன்று இரவு படத்தின் கடைசி காட்சி பார்த்துவிட்டு தியேட்டரில் இருந்து வெளியே வந்தார்கள்.

டேய் வெளிய நில்லுங்கடா… நான் பார்க்கிங்ல போய் காரை எடுத்துட்டு வரேன்னு சொல்லிவிட்டு செல்வா சென்றான், இரு நானும் வரேன் என்று சொல்லி விக்கியும் சென்றான்.

ராகுலும், சஞ்சையும் பேசிக்கொண்டே வெளியே சாலைக்கு சென்றார்கள்.

அந்த நடுநிசி பொழுதும், அதிக குளிர் காற்றும் டீ குடிக்க வேண்டும் போல தோன்றியது இருவருக்கும்.. ஒருமித்த குரலில் டீ குடிப்போமா என்று ராகுலும், சஞ்சையும் ஒருவரையொருவர் பார்த்து கேட்க.. வா போவோம் என்று சொல்லிக்கொண்டே தியேட்டர் எதிரே இருந்த கடைக்கு இருவரும் சென்றார்கள்.

அண்ணா…ரெண்டு டீ என்றான் ராகுல்.

இவர்கள் இருவரும் டீ குடித்து கொண்டிருக்கும்போது செல்வாவும், விக்கியும் இணைந்து கொண்டார்கள்.

அண்ணா..இன்னும் நாலு டீ என்றான் சஞ்சய்.

நீங்க ரெண்டு பேரும் தான் டீ குடிச்சிட்டிங்களே..இன்னும் ரெண்டு டீ யாருக்குடா? என்று கேட்டான் செல்வா.

எங்களுக்கு தான் என்று சொல்லி கொண்டே டீ கிளாஸை சஞ்சையிடம் நீட்டினான் ராகுல்.

சரியான டீ சைச்சோ ரெண்டு பேரும் என்றான் விக்கி.

நீ ரொம்ப பேசுற.. டீக்கு காசு குடுத்துட்டு வா என்று விக்கியிடம் சொல்லிவிட்டு காரில் சென்று உட்கார்ந்தான் சஞ்சய்.

டீ கடையிலிருந்து கிளம்பி அவர்கள் தங்கி இருந்த ரிசார்ட்டுக்கு செல்ல தொடங்கினர்.
மீண்டும் தாங்கள் திரையில் பார்த்த படத்தை பற்றி பேசிக்கொண்டே சென்றார்கள் ஒவ்வொருவரும் படத்தில் அவர்களுக்கு பிடித்த காட்சிகளைப் பற்றி பேசிக்கொண்டே போனார்கள்.

“நான் மட்டும் அதே மாதிரி குழிக்குள்ள விழுந்திருந்தா சனியன் ஒளிஞ்சதுன்னு சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பி ஓடி இருப்பீங்கல” என்றான் விக்கி.

“Definitely Definitely” என்று வேகமாக பதில் கூறினான் செல்வா.

டேய் குண்டு பயலே.. நீயெல்லாம் விழுந்து இருந்தா கயிறு கட்டிகூட தூக்கி இருக்க முடியாது என்று பதிலுக்கு செல்வா மேல் வார்த்தையால் பாய்ந்தான் விக்கி.

இவர்கள் இருவரும் மாறி மாறி கலாய்த்து வருவதை பார்த்து சத்தகமாக சிரித்து கொண்டு வந்தனர் ராகுலும், சஞ்சையும்.

அப்போது “டேய் கொஞ்சம் வண்டிய ஓரமா நிப்பாட்டுங்கடா உச்சா வருது” என்றான் ராகுல்.

ஹோட்டல் பக்கம் வந்துட்டோம் இன்னும் கொஞ்சம் தூரம் தான் ஒரு பத்து நிமிஷம் பொறுடா என்றான் செல்வா.

இல்லை, அதெல்லாம் முடியாது ரொம்ப அவசரம் உடனே காரை நிப்பாட்டு என்று வேகமாக கூறினான் ராகுல்.

சரி சீக்கிரம் போயிட்டு வா..நாங்க அந்த மெயின் ரோட்ல இருக்க கடையில நின்னு ஸ்னாக்ஸ் வாங்கிட்டு இருக்கோம்..வந்து சேரு என்று சொல்லி ராகுலை இறக்கிவிட்டு சென்றான் செல்வா. கார் அந்த ரோட்டில் சென்று இடது பக்கம் திரும்பி மெயின் ரோடை பிடித்த போது இஞ்சின் ஆஃப் ஆகி கார் நின்றது.

ஒழுங்கா வண்டி ஓட்டுறியா என்று செல்வாவின் பிடதியில் அடித்தவாறு விக்கி கத்தினான்.

எழவெடுத்தவனே வண்டி ஆஃப் ஆயிடுச்சுடா என்று பதிலுக்கு செல்வா கத்திக்கொண்டே மீண்டும் காரை ஸ்டார்ட் செய்தான். இவர்கள் வண்டி ஃப் ஆன சமயத்தில் தூரத்தில் செக் போஸ்ட் ஒன்று அமைக்கப்பட்டு அங்கு போலீஸ் சோதனை செய்து கொண்டு இருந்தார்கள்.

போச்சு நீ வேற வண்டி ஆஃப் பண்ணி ஆன் பண்ணிட்ட… நம்ம மேல சந்தேகப்பட்டு இப்ப நம்மை காரை நிப்பாட்ட போறாங்க என்று சஞ்சய் செல்வாவிடம் கூறினான்.

இவர்கள் கூறியது போலவே இதை தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த போலீஸ்காரர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு விட்டது. இவர்கள் அருகில் சென்றவுடன் காரை நிப்பாட்டுமாறு போலீஸ் ஒருவர் சைகை காண்பித்து காரை நிறுத்த சொன்னார்.
இவர்களும் வேறு வழியின்றி காரை நிறுத்தினார்கள். சஞ்சையும், விக்கியும் செல்வாவை முறைத்துப் பார்த்தனர்.

இந்த நேரத்துல எங்க போயிட்டு வரீங்க ? என்று போலீஸ் ஒருவர் இவர்களை விசாரித்தார்.

சார் படத்துக்கு போயிட்டு வரோம் என்றான் செல்வா.

படத்துக்கு போயிட்டு வரீங்களா..இந்த நேரத்துல என்னடா படத்துக்கு போயிட்டு வரீங்க.. இங்க இருக்கிறதே ஒரே தியேட்டர், அதுவும் கடைசி ஷோ 9 மணிக்கு முடிஞ்சிறும். யார்கிட்ட பொய் சொல்றீங்க ? ஒழுங்கா உண்மையை சொல்லுங்க என்று அதட்டினார்.

இல்லை சார் உண்மையாவே படத்துக்கு தான் போயிட்டு வரோம், இந்தாங்க நீங்களே

இந்த டிக்கெட்டை பாருங்க என்று சஞ்சய் படத்திற்கான டிக்கெட்டை காட்டினான்.

இந்த படத்துக்கு முதல்முறையா இன்னைக்கு நைட்டு ஷோ போட்டு இருக்காங்க. நீங்க வேணா விசாரிச்சு கூட பாருங்க என்று சஞ்சய் மீண்டும் உறுதியாக கூறினான். எதேச்சையாக படத்துக்கான டிக்கெட்டுகளை தூக்கி எறியாமல் பத்திரப்படுத்தி வைத்திருந்தான் சஞ்சய்.

டிக்கெட்டுகளை சோதித்து பார்த்து கொண்டிருந்த போலீஸிடம் இன்னொரு போலீஸ்காரர் சொன்னார்.. “ ஆமா சார், இன்னைக்கு மட்டும் சிறப்பு காட்சி அனுமதி வாங்கி அந்த தியேட்டர்ல நைட்டு ஷோ போட்டு இருக்காங்க, அதுவும் இல்லாம இந்த படத்தை நம்ம ஊருல வேற எடுத்து இருக்காங்க, அதுனால நல்லா ஹிட் ஆகிருச்சு. ஊர்க்காரங்களும் இந்த படத்தை போய் போய் பார்த்திட்டு வராங்க. அதான் இன்னைக்கு லீவ் நான்னு சிறப்பு காட்சிக்கு அனுமதி வாங்கி போட்டு இருக்காங்க என்றார்.


டிக்கெட் கரெக்டா தான் இருக்கு, சரி குடிச்சு இருக்கீங்களா இல்லையான்னு மட்டும் இதுல ஊதுங்க என்று சொல்லி அவர்களை சோதித்தார். எங்களுக்கு அந்த பழக்கம் கிடையாது என்று செல்வா சொல்ல..

உங்களை நம்ப முடியாது என்று போலீஸ் சொல்ல.. மூவரும் தங்களை பரிசோதித்து காட்டினர். அதில் இவர்கள் மூவரும் குடிக்கவில்லை என்று உறுதியானது. காரின் உட்புறம் ஒரு போலீஸ்காரர் சோதனை செய்தார்.

சரி இங்க எங்க தங்கி இருக்கீங்க என்று போலீஸ் விசாரிக்க.. ஹோட்டல் பெயரை சொல்லி அங்கு தான் தங்கி இருக்கிறோம், சென்னையிலிருந்து வந்திருக்கிறோம் என்று சஞ்சய் கூறினான்.

காருக்குள்ள எதும் இல்லை சார் என்று போலீஸ்காரர் கூறினார்.

சரி சரி தம்பிங்களா கிளம்புங்க, வேற எங்கையும் போகாம சீக்கிரம் ஹோட்டலுக்கு போய் தூங்குங்க என்று அனுப்பி வைத்தார் அந்த போலீஸ்காரர்.

நன்றி சார் என்று சொல்லிவிட்டு செல்வா, சஞ்சய், விக்கி மூவரும் காரில் ஏறினார்கள். இந்த ராகுல் எங்கடா போனான் என்று சஞ்ஜய் கேட்டு கொண்டிருந்தான். அவனுக்கு கால் பண்ணு என்று சொல்லிவிட்டு செல்வா காரை ஸ்டார்ட் செய்தான். அந்த சமயத்தில் ஒரு போலீஸ்காரரின் செல்போன் ஒலித்தது. அப்போது திடீரென்று வந்த அந்த போலீஸ்காரர் தம்பி காரை நிறுத்துங்க.. வண்டி பின்னாடி செக் பண்ணனும் என்றார்.

சார் நீங்க மத்த வண்டியை போய் பாருங்க என்று இன்னொரு போலீஸ்க்காரரிடம் சொன்னார்.

என்னடா ஆச்சு.. திரும்ப என்னத்த செக் பண்ணப்போறாங்க என்று விக்கி கேட்டான்.

தெரியல என்று சொல்லிவிட்டு காரின் உள்ளே இருந்தபடி கார் டிக்கியை திறந்துவிட்டு வெளியே சென்றான் செல்வா. சஞ்சையும் விக்கியும் காரின் உள்ளே அமர்ந்து இருந்தனர்.

செல்வா அருகில் நிற்க… காரின் பின்புறத்தை சோதித்தார் அந்த போலீஸ்காரர். டிக்கியில் எதுவும் இல்லை, காரின் கவர் மற்றும் சுருட்டப்பட்டு இருந்தது. அதுல என்ன இருக்கு என்று போலீஸ் காரர் கேட்க… வெறும் காலி கவர்தான் என்று செல்வா சொன்னான்.

சரி அந்த கவரை எடு எதுக்கும் அதையும் சோதனை பண்ணிடலாம் என்று போலீஸ் கூற.. செல்வா கார் கவரை வெளியே இழுத்தான். அவன் இழுக்க முற்படும்போது கனமாக இருந்த காரணத்தினால் அவனால் ஒரு ஆளாக அதை இழுக்க முடியவில்லை.

அப்போது காரில் இருந்து இறங்கி வெளியே வந்த சஞ்சய், என்னாச்சுடா? என்று செவ்வாவிடம் கேட்டான்.


இந்த கார் கவரை வெளியே எடுக்க முடியல என்று சொல்ல… இருவரும் சேர்ந்து கார் கவரை உள்ளிருந்து வெளியே இழுக்க முற்பட்டனர். கவர் கனமாக இருந்த காரணத்தினால் வேகமாக இழுத்த போது கவர் வெளியே வந்து விழ.. இவர்களும் கவரை இழுத்த வேகத்தில் கால் தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது அந்த கவர் திறந்து விட.., அதில் இருந்து வெளிபட்டதை பார்த்து சஞ்சய், செல்வா, போலீஸ் என அனைவரும் அதிர்ந்து போய் நின்றார்கள்.

தொடரும்…

Click here to Read Chapter 1

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑