Chapter 3
லாரியிலிருந்து கீழே இறங்கி சென்று பார்த்தார் டிரைவர் ராஜபாண்டி.
லாரி முன்பாக ஒரு ஆள் சாலையில் இடப்பக்கமாக முகத்தை பதித்தவாரு குப்புற விழுந்து கிடந்தான். வெள்ளை நிற சட்டையும், அடர் நிற பேண்ட்டும் உடுத்தி இருந்த அவன் ஆடையில். சேறும், சகதியுமாக இருந்தது.
“அண்ணே என்னாச்சு அண்ணே” என்று வேலு கேட்க…
“எவனோ குறுக்க வந்து விழுந்து கிடாக்கான் ..இதை பார்த்தா நம்ம வண்டியில இடிச்ச மாதிரி தெரியல, ஆனா இவன் இருக்கானா செத்துட்டானா என்று தெரியவில்லை..நான் என்னன்னு பாக்குறேன்”…என்று சொல்லிக்கொண்டே அந்த ஆள் அருகே சென்றார் ராஜபாண்டி.
அவனை மெதுவாக தட்டி எழுப்பி பார்த்தார்.. எந்த ஒரு அசைவும் இல்லை.. அவனை புரட்டி போட்டார்.. முகத்தில் சில கீரல்கள் தவிர வேறு எந்த ஒரு காயமோ, ரத்தமோ உடம்பில் பெரியதாக தெரியவில்லை.. மூச்சு இருக்கிறதா என்று கை வைத்து பார்த்தார் ராஜபாண்டி.
“என்ன ஆச்சு அண்ணா…” என்று வேலு மீண்டும் கேட்க
“இளம் வயசு பையன்டா.. ஆனா மூச்சு இருக்கு.. ஒன்னும் ஆகவில்லை” என்று மெதுவாக கூறினார் ராஜபாண்டி.
“அப்போ ஓரமா தூக்கி போட்டு வாங்க அண்ணா… நமக்கு எதுக்கு வம்பு” என்றான் வேலு.
அப்படியே விட்டு செல்ல மனமில்லை என்றாலும் வேறு வழி இல்லாமல் அந்த ஆளை தூக்கி சாலை ஓரமாக இருந்த புதர் செடி அருகே போட்டார் ராஜபாண்டி.
இங்கு நடப்பதை எல்லாம் தூரத்தில் இருந்து ஒரு கும்பல் பார்த்து கொண்டிருந்தது..சாலையில் இருந்து பார்த்தால் தெரியாதவாரு இருட்டில் மறைந்து நின்றார்கள்.
அதே சமயத்தில் அந்த நெடுஞ்சாலையில் மற்ற வாகனங்களும் ஹார்ன் சத்தம் தூரத்தில் கேட்க..
காட்டில் இதை பார்த்து கொண்டு இருந்த அந்த கும்பல் ஃபோனில் யாரிடமோ எதோ பேசி முடித்து விட்டு.. “ச்சலோ” என்று சொல்லி கொண்டு வேகமாக அங்கிருந்து சென்றனர்.
“அண்ணே சீக்கிரம் வந்து வண்டியை எடுங்க.. மத்த வண்டி வர சத்தம் கேட்குது” என்று பதட்டமான குரலில் வேலு கூப்பிட..
இதை யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதிபடுத்தி கொண்டு…”இதோ வந்துட்டேன்டா” என்று சொல்லிக்கொண்டே வேகமாக லாரியில் ஏறி அங்கிருந்து கிளம்பினார் ராஜபாண்டி.
அந்த இடத்திலிருந்து கிளம்பி தூரமாக சென்ற பிறகு ஒரு தாபாவில் லாரியை ஓரங்கட்டி..லாரி இன்ஜினை அணைத்துவிட்டு லாரியிலிருந்து கீழே இறங்கினார் ராஜபாண்டி.
டேய் வேலு “ நீ வண்டியில இரு.. நான் போய் சாப்பிட்டு வரேன், அதுக்கு முன்னால நீ அவனுக்கு நம்ம டிரஸ்ல ஒன்னை எடுத்து அவனுக்கு மாத்தி விடு” என்றார் ராஜபாண்டி.
இதெல்லாம் நமக்கு தேவையா அண்ணே..இவன் யார் என்னன்னே தெரியல.. ரோட்ல ஓரமா போட்டு வந்தவனை இப்போ திரும்ப லாரியில ஏத்தி படுக்க வச்சிருக்கீங்க என்று கேட்டான் வேலு.
“எல்லாம் எனக்கு தெரியும், ஒன்னும் ஆகாது.. நீ பயப்படாத” என்று சொல்லி கொண்டு தாபாவிர்க்குள் சென்றார் ராஜபாண்டி.
வேலுவும் வேறு வழி இல்லாமல் ராஜபாண்டி சொன்னது போல் அந்த ஆளுக்கு தன்னுடைய உடைகளில் ஒன்றை எடுத்து மாட்டிவிட்டு அவனை பின்புற கேபின் பலகையில் படுக்க வைத்தான்.
இவன் யாரு என்னன்னே தெரியல.. இவரு வேற வண்டியில ஏத்தி படுக்க வச்சி இருக்காரு. இவனுக்கு ஏன் உடுப்பை எல்லாம் எடுத்து மாட்டி விட வேண்டியதா போச்சு. இவனை வச்சு என்ன பிரச்சினை எல்லாம் வரபோதுன்னு தெரியலையே என்று தனக்கு தானே புலம்பி கொண்டு இருந்தான் வேலு.
இந்த சமயத்தில் சாப்பாடு பார்சல் வாங்கி கொண்டு வந்தார் ராஜபாண்டி. என்னடா எதோ தனியா புலம்பிட்டு இருக்க போல என்று வேலுவை பார்த்து கேட்டான்.
“அதெல்லாம் ஒன்னுமில்ல..” என்று வேலு மலுப்ப..
“அதான் மூஞ்சியில தெரியுதே.. உனக்கு இவனை வண்டியில ஏத்தி படுக்க வச்சி நம்ம கூட கூட்டிட்டு போறது பிடிக்கல.. அதான உன் பிரச்சினை” என்றார் ராஜபாண்டி.
“ஆமா எனக்கு இது பிடிக்கல.. சொன்னா மட்டும் கேட்கவா போறீங்க” என்று திரும்ப கேட்டான் வேலு.
டேய் நம்ம வண்டியில ஒன்னும் கிடையாது.. நாளைக்கு காலையில தான் நம்ம லோட் ஏத்த போறோம்.. அதுக்கு முன்னால இவனை இறக்கி விட்டு போயிருவோம் என்று ராஜபாண்டி கூற..
ஆமா இவன் மேல உனக்கு ஏன் இவளோ திடீர் பாசம்.. யாரோ ஒருத்தன் மேல ஏன் இவளோ கரிசனம் உனக்கு என்று வேலு கேட்டான்.
“அப்படி இல்லடா… இவன் நம்ம ஊருக்கார பய மாதிரி இருக்கான்” என்று சொல்லி கொண்டிருக்கும்போது வேலு இடைமறித்து..
இவனை எதை வச்சு நம்ம ஊர்க்காரன்னு சொல்லுற ? ஆள் நல்லா செவப்பா வடக்கன் மாதிரி இருக்கான்.. இவனை போய் நம்ம ஊருன்னு சொல்லுற என்று வேலு கேட்க..
அவன் வலது கையில பாருடா… “ஓம் முருகா”ன்னு பச்சை குத்தி இருக்கான். அது மட்டும் இல்லாம அவனை நான் தூக்கி ரோட்டுல ஓரமா போடுறப்போ தமிழ்ல தான் ஏதோ முணங்குனான். அதான் அவனை அப்படியே விட்டுவிட்டு வர மனசு இல்லை என்றார் ராஜபாண்டி.
ஓஹோ.. ஊர் பாசம், மொழி பாசம், எனக்கு இது சரியா படல.. அவ்ளோதான் சொல்லுவேன்.. சரி சரி முதல்ல அந்த பார்சலை குடு என்றான் வேலு.
வேலு சாப்பிட தொடங்க… ராஜபாண்டி மீண்டும் பாடலை கேட்டவாரு லாரியை ஓட்ட..லாரி மீண்டும் தேசிய நெடுஞ்சாலையில் ஜெய்பூர் நோக்கி செல்ல ஆரம்பித்தது.
அப்போது எதிரே சென்ற ஒரு லாரி அதீத ஒலியுடன் ஹாரன் சத்தத்தை எழுப்ப.. லாரி கேபினில் படுத்திருந்த அந்த அடையாளம் இல்லாத இளையன் அந்த அதீத சத்தத்தில் திடுக்கிட்டு அலறி எழுந்தான்.
தொடரும்…
Leave a comment