நெடுஞ்சாலை இரவு Chapter 4

Chapter 4

காரின் பின்புறத்தில் இருந்து கார் கவரை இழுக்க முயற்சித்த போது அந்த கவரின் கணம் தாளாமல் சஞ்சய்யும், செல்வாவும் கால் தடுமாறி கீழே விழ .. அப்போது கார் கவர் வெளியே வந்து விழுந்தது. அந்த காரின் கவர் திறக்கப்பட்ட நிலையில் இருக்க அதிலிருந்து வெளிப்பட்டதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.


சார் ஒரு பொண்ணு சார் என்று ஏட்டு பெருமாள் அலறினார்.


என்னது நம்ம கார்ல பொண்ணா என்று விக்கி வேகமாக காரில் இருந்து இறங்கி ஆர்வமாக வந்தான்.


என்னடா கீழ விழுந்து கெடக்குறீங்க என்று அவர்களை பார்த்து சிரித்தவாறு .. ஆமா பொண்ணு எங்க என்று கேட்டான் விக்கி.


சஞ்சய் கோவத்தில் முறைத்தபடி கீழே கண் காட்டினான்.


அங்கு அந்த கார் கவரில் ஒரு பெண் கழுத்து அறுபட்டு படுத்து இருந்ததை பார்த்து உறைந்து போனான் விக்கி.


“என்னயா சொல்ற… பொண்ணா ? “என்று கேட்டவாரு எஸ்.ஐ வரதன் அங்கு வந்தார்.


“ஆமா சார்… கழுத்து அறுத்து கிடக்குது” என்று கூறியவாறு அந்த பொண்ணை கைக்காட்டினார் ஏட்டு பெருமாள்.


“யோவ்…எதுக்கும் முதல்ல உயிரு இருக்கானு பாருயா” என்றார் வரதன்.


உயிர் இருக்கிறதா என்று சோதனை செய்தார் ஏட்டு.… சார் உயிர் இல்லை சார்… பொணம் சார். இவனுங்க தான் நல்லவங்க மாதிரி நம்மகிட்ட பேசிட்டு இந்த பொண்ணை கொன்னு காருல மறைச்சு எடுத்துட்டு போறாங்க சார் என்றார் ஏட்டு பெருமாள்.


விக்கி, சஞ்சய், செல்வா மூவரும் ஏட்டு பெருமாள் சொன்னதை கேட்டு பயந்து நடுங்கி ஒருவரையொருவர் பார்த்து ஒன்று சேர்ந்து நின்றார்கள்.


எஸ்.ஐ வரதன் தன் பங்கிற்கு ஒருமுறை அந்த பெண்ணுக்கு உயிர் இல்லாததை உறுதிபடுத்தி விட்டு.. ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தார்.
என்ன செய்வது என்று தெரியாமல் பயத்தில் உறைந்து போயிருந்த மூவரும்…இது எப்படிடா நம்ம காருக்குள்ள வந்துச்சு என்று தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்க..

டேய் மூனு பேரும் இங்கவாங்கடா என்று கூப்பிட்டார் வரதன்.


“என்னடா இதெல்லாம்… யாருடா இந்த பொண்ணு ? எதுக்குடா அந்த பொண்ணை கொலை பண்ணிங்க ? உங்க பிளான் என்னடா ? சொல்லுங்க” என்று உடல் அதிற கேட்டார் வரதன்.

“சார் எங்களுக்கு எதும் தெரியாது சார். இப்போதான் சார் இந்த பொண்ணையே பார்க்கிறோம். இந்த பொண்ணு யாருனு எங்களுக்கு சத்தியமா தெரியாது சார்” என்றான் சஞ்சய்.


“ஆமா சார்..எங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை சார்” என்று செல்வா சொல்ல..

“அப்புறம் எப்படிடா இந்த பொண்ணு பாடி உங்க காருக்குள்ள வந்திச்சு” என்று ஏட்டு பெருமாள் கேட்க..

“பாய்ன்ட்…இது ஒரு நல்ல கேள்வி.. இதையேதான் நாங்களும் எங்களுக்குள்ள கேட்டுட்டு இருக்கோம் சார். ஆமா இது எப்படி சார் எங்க காருக்குள்ள வந்திருக்கும்” என்று விக்கி பெருமாளை பார்த்து கேட்க..

“ஏதே..நான் உன்னை கேள்வி கேட்டா நீ திரும்ப எங்களை கேள்வி கேக்குற.. என்னா திமிரு இருக்கணும் உனக்கு” என்று அதட்டினார் ஏட்டு பெருமாள்.


“வாயை மூடுறா குரங்கு.. கொஞ்ச நேரம் சும்மா இருடா” என்பது போல் விக்கியை முறைத்தான் சஞ்சய்.

“சார்…சாரி சார்…எங்களை காப்பாத்துங்க சார்..சத்தியமா எங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தம் இல்லை. இது எப்படி நடந்துச்சுன்னு எங்களுக்கு தெரியாது. நீங்க தான் இந்த பிரச்சினையில் இருந்து எங்களை காப்பாத்தனும்” என்று கெஞ்சினான் செல்வா.


“டேய் டேய்..நடிக்காதிங்கடா.. இந்த மாதிரி எத்தனை கேஸ் நாங்க பார்த்து இருப்போம். நீங்களே அந்த பொண்ணை இங்க கூட்டின்னு வந்து நல்லா அனுபவிக்க பார்த்திருப்பீங்க.. அந்த பொண்ணு முடியாதுன்னு சொல்லி இருக்கும். நீங்க அந்த பொண்ணை கட்டாயப்படுத்தி கடைசில போட்டு தள்ளி இருக்கீங்க. எப்படிடா போட்டீங்க? ஒழுங்கா உண்மையை சொல்லுங்கடா.. சின்ன பசங்களா இருக்கீங்க.. என்னை தேவை இல்லாம உங்க மேல கை வைக்க வச்சிடாதிங்க.. அப்புறம் அடிதாங்க மாட்டிங்க.. சொல்லுங்கடா உண்மையை ” என்று அதட்டி கேட்டார் எஸ்.ஐ. வரதன்.

“சார் சார்…அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை சார். நீங்க எங்களை முழுசா செக் பண்ணிக்கோங்க.. வேணும்னா நாங்க தங்கி இருந்த ஹோட்டல் வந்து கூட கேட்டு பாருங்க, அங்க சிசிடிவி கேமராவுல கூட செக் பண்ணி பாருங்க.. எங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த பொண்ணு யாருனு தெரியாது சார் எங்களுக்கு” என்றான் சஞ்சய்.

“நாங்க என்ன பண்ணனும் நீங்க சொல்லுறீங்களா.. ஏட்டையா இது சரிபட்டு வராது.. காரை சீஸ் பண்ணி ஸ்டேஷன் கொண்டு போங்க.. இவனுங்களை நம்ம ஜீப்ல ஏத்துங்க. போய் விசாரிக்க வேண்டிய விதத்துல விசாரிச்சா தான் உண்மையை சொல்லுவாங்க போல” என்றார் வரதன்.

அவர்கள் சொல்லியதை நம்பாமல் அவர்களை அழைத்து சென்று ஜீப்பில் ஏற்றினார் பெருமாள். இவர்கள் ஜீப்பில் ஏறும்போது அலறல் சத்தத்துடன் ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது. அந்த பெண்ணின் உடலை ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

ஏட்டு பெருமாள் ஜீப்பில் இவர்களை ஏற்றி கொண்டு போலீஸ் ஸ்டேஷன் கூட்டி செல்ல.. மறுபுறம் எஸ்.ஐ. வரதன் ஆம்புலன்சை பின்தொடர்ந்து தன் பைக்கில் சென்றார்.

இதையெல்லாம் தூரத்தில் நின்றவாறு யாருக்கும் தெரியாத வகையில் ராகுல் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தான் இந்த சம்பவம் நடைபெறுவதற்கு முன்பிருந்தே அங்கு என்ன நடந்தது என்பது ராகுலுக்கு தெரியும்.

தொடரும்…

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑