

Chapter 5
எதிரே சென்ற லாரியின் ஹார்ன் சத்தத்தில் திடுக்கிட்டு எழுந்தான் அவன்.
தம்பி பதறாதப்பா.. உனக்கும் எதும் ஆகல.. இந்தா முதல்ல தண்ணியை குடி என்று தண்ணி பாட்டிலை குடுத்தார் ராஜபாண்டி.
பதட்டத்தில் இருந்த அவன் ராஜபாண்டி, வேலு இருவரையும் மாறி மாறி பார்த்தான். தான் எங்கு இருக்கிறோம், யார் இவர்கள் என்று யோசிக்க..
தம்பி பயப்படாத.. முதல்ல தண்ணியை குடி என்று மீண்டும் பாட்டிலை நீட்டினார் ராஜபாண்டி.
தயக்கத்துடன் தண்ணி பாட்டிலை வாங்கியவன் பின்னர் கடகடவென தண்ணீரை முழுவதும் குடித்தான்.
மெல்ல மெல்ல குடிப்பா…தம்பி என்றார் ராஜபாண்டி.
நான் எப்படி இங்க வந்தேன் .. நீங்க யாரு என்று பயந்தபடி கேட்டான் அவன்.
நீ யார் என்னன்னு எங்களுக்கு தெரியாது. நாங்க போயிட்டு இருக்கப்போ நீ லாரி முன்னாடி குறுக்க வந்து விழுந்துட்ட.. உயிர் இருக்கிறது தெரிஞ்சு கீழ விழுந்து கிடந்த உன்னை தூக்கி ரோட்டுல ஓரமா போட்டுட்டு நாங்க கிளம்ப நினைச்சோம். ஆனா அண்ணன்தான் உன் மேல இரக்கப்பட்டு வண்டியில ஏத்தி படுக்க வச்சார் என்றான் வேலு.
வேலு சொல்வதை அமைதியாக கேட்டு கொண்டிருந்தான் அவன்.
சரி முதல்ல நீ யாருன்னு சொல்லு… எதுக்காக எங்க லாரி முன்னாடி வந்து விழுந்த ? உடம்புல காயம்லாம் இருக்கு ? பொதுவா நாங்க எப்பவும் வெளியாட்களை இப்படி எல்லாம் ஏத்திட்டு போறது இல்லை. உன்னை நாங்க கூட்டிட்டு போறது எங்களுக்கு பயமா இருக்கு என்றான் வேலு.
டேய் வேலு… கொஞ்சம் பொறுமையா இருடா.. அவனே இப்போதான் நினைவு திரும்பி இருக்கான், அவன்கிட்ட போய் கேள்வியா கேட்டுகிட்டே இருக்க என்றார் ராஜபாண்டி.
தம்பி உன் பேர் என்னப்பா என்று கேட்டார் ராஜபாண்டி.
என் பேரு ரோஹித்… நீங்க இப்போ எந்த பக்கம் போறீங்க என்று கேட்டான்.
நாங்க தெற்கு பக்கம் போயிட்டு இருக்கோம் என்றான் வேலு.
நானும் உங்க கூடவே வந்துடுறேன் என்றான் ரோஹித்.
வேலுவும், ராஜபாண்டியும் ஒருவரையொருவர் பார்க்க..
அவர்கள் இருவரும் யோசிப்பதை பார்த்து..சரி…என்ன பாதி வழியில ஆச்சு இறக்கி விட்டுருங்க என்றான் ரோஹித்.
முதல்ல நீ யாருனு சொல்லு.. அப்புறமா உன்னை எங்க இறக்கி விடனும்ன்னு நாங்க முடிவு பண்ணிக்கிறோம். இங்க எல்லாம் யாரையும் நம்ப முடியாது, இந்த இடம் அப்படி என்றான் வேலு.
என் பேரு ரோஹித்…
அதான் சொல்லிட்டியே… மேல சொல்லு என்று இடைமறித்து பேசினான் வேலு.
என்னை ஒரு கும்பல் கொலை பண்ண வந்தாங்க, அவங்க என்னை கொலை பண்ண முயற்சி பண்ணப்போதான் அவங்ககிட்ட இருந்து தப்பிச்சு ஓடி வந்தேன். அப்போ எதிர ஒரு லாரி வரதை பார்த்து பயத்துல ஓடி வந்திட்டு இருந்த நான் கால் தடுமாறி விழுந்துட்டென். அப்புறம் எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியல.. முழிச்சு பார்க்கிறப்போ இங்க லாரியில உங்க கூட இருக்கேன் என்றான் ரோஹித்.
யாரோ குறுக்க வரதை பார்த்து தான் நான் லாரியை ப்ரேக் அடிச்சு நிப்பாட்டுனேன். ப்ரேக் அடிச்ச வேகத்துல ஏற்பட்ட சத்தத்துல வேற எதும் கேக்கல, ஆனா உன் மேல லாரி மோதலன்னு மட்டும் எனக்கு உறுதியா தெரிஞ்சது. அதுனால தான் தைரியமா இறங்கி உன்னை உசுப்பி பார்த்தேன், நீ உயிரோட இருக்கிறது தெரிஞ்சது, சரி உன்னை ரோட்டுல ஓரமா தூக்கி படுக்க வச்சிட்டு போகலாம்ன்னு தூக்குறப்போ தான் நீ எதோ தமிழ்ல முணங்குன, உன் கையில முருகன் வேல் பச்சை குத்தி இருந்திச்சு, அதான் மனசு கேட்காம உன்னை லாரியில ஏத்தி அங்க இருந்து கூட்டிட்டு வந்துட்டேன் என்றார் ராஜபாண்டி.
ராஜபாண்டி சொல்வதை கவனமாக கேட்டு கொண்டு இருந்தான் ரோஹித்.
அண்ணே அவனை யாரோ கொல்ல வந்தாங்கன்னு சொல்றான் அதை முதல்ல கேட்காம என்னமோ சொல்லிட்டு இருக்க…டேய் உன்னை யாரோ கொல்ல முயற்சி பண்ணி துரத்திட்டு வந்தாங்கன்னு சொன்ன ? அப்படி என்ன தப்பு பண்ண ? யாரு அவங்க ? எதுக்கு உன்னை கொல்ல வந்தாங்க ? முதல்ல அதை சொல்லு என்றான் வேலு பதட்டமாக.
நான் எந்த தப்பும் பண்ணல என்றான் ரோஹித்.
சரி முழுசா காரணத்தை சொல்லுப்பா.. உண்மை என்னன்னு தெரியுற வர எங்களுக்கு படபடப்பாக இருக்கும் என்றார் ராஜபாண்டி.
சொல்றேன் அண்ணே.. நான் ஹரியானா மீரஜ்பூர்ல இருக்க..என்று ரோஹித் சொல்லி கொண்டிருக்கும் போது..லாரியின் இருபுறமும் இரண்டு பைக்குகளில் சிலர் சூழ்ந்து கொண்டு கட்டைகளை வைத்து தட்டி லாரியை நிறுத்துமாறு கத்தினர்.
போச்சு…என்ன கொல்ல தான் இவங்க துரத்திட்டு வராங்க, என்னை எப்படியாச்சும் காப்பாத்துங்க என்று கெஞ்சினான் ரோஹித்.
தம்பி நீ பின்னாடி படுத்துக்கோ.. டேய் வேலு நீ அவங்க கண்ணுல இந்த தம்பி படாத மாதிரி பார்த்துக்கோ என்று சொல்லி லாரியை வேகமாக செலுத்தினார் ராஜபாண்டி.
இதெல்லாம் நமக்கு தேவையா அண்ணா.. இவன் யார் என்னன்னு நமக்கு இன்னும் தெரியல, இப்போ இவனை வேற துரத்திகிட்டு வராங்க. பேசாம இவனை இறக்கி விட்டு நம்ம போறது தான் நமக்கும், லாரிக்கும் நல்லது என்றான் வேலு.
டேய் மொதல்ல நான் சொன்னதை செய்.. எனக்கு தெரியும் என்ன பண்ணனும்னு என்று ராஜபாண்டி சொல்ல..
அண்ணா சொன்னா கேளுங்க.. இவனை காப்பாத்த போய் நமக்கு எதும் ஆச்சுன்னா அண்ணாச்சிக்கு என்ன பதில் சொல்ல என்று வேலு கேட்கும் போதே
டேய் வேலு.. நல்லா பாரு யாரு நம்மள பின்தொடர்ந்து வராங்கன்னு, அப்புறம் உனக்கே புரியும் என்று சொன்னார் ராஜபாண்டி
அப்போது தான் வேலு அவர்களை கவனித்தான். அண்ணே இவனுங்க என்று இழுக்க…
அவனுங்களே தான்… இவங்க கிட்ட இப்போ மாட்டுனா கையில இருக்க எல்லாத்தையும் புடுங்கிட்டு விட்டருவாங்க.. முடிஞ்ச வர லாரியை நிப்பாட்டமா ஓட்டுறேன் என்றார் ராஜபாண்டி.
சரி அண்ணே என்று சொல்லி ரோஹித் வெளியே தெரியாதவாரு கேபினில் மறைத்தான் வேலு.
இது எதுவும் ரோஹித்துக்கு புரியவில்லை, இருந்தாலும் அப்போது எதும் கேட்டுக்கொள்ளாமல் அமைதியாய் இருந்து கொண்டான்.
பைக்கில் வந்தவர்கள் லாரியை முந்த முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.
லாரியை நிப்பாட்டாமல் ராஜபாண்டி சென்று கொண்டிருந்தார்.
ஒருகட்டத்தில் லாரியை முந்தி வேகமாக சென்று பைக்கை நிப்பாட்டி சாலையை வழிமறித்து நின்றார்கள் அந்த பைக்கில் வந்தவர்கள்.
முகத்தை மறைத்துக்கொண்டு கையில் கட்டை வைத்துக்கொண்டு வேகமாக லாரியை நோக்கி வந்தார்கள்.
அருகே வந்தவுடன் ராஜபாண்டி, வேலு இருவரையும் கீழே இறங்க சொல்லி ஆக்ரோஷமாக ஹிந்தியில் கத்தினார்கள்.
இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது, மாட்டுனோம் என்று முணங்கி கொண்டே கீழே இறங்கினார் ராஜபாண்டி.
இறங்கியவுடன் ராஜபாண்டி கண்ணத்தில் ஒரு அரை விழுந்தது, லாரியை நிப்பாட்ட சொன்னா நிப்பாட்ட மாட்டியா? அவளோ தைரியமா என்று அந்த கூட்டத்தில் இருந்த ஒருவன் கத்தினான்.
எடு எடு.. எல்லா பணத்தையும் எடு என்று ஒருவன் கத்த..
ஒன்னுமில்லை என்று ராஜபாண்டி சொல்ல..
அவரை நம்பாமல் அவரது உடைகளை சோதனை செய்தான் ஒருவன், சட்டை பாக்கெட்டில் ஐந்தாறு ரூபாய் தாள்கள் இருந்தன. அதை எடுத்துகொண்டு மேற்படி அவரிடம் காசு கொடுக்குமாரு மிரட்டினான்.
பின் வேலுவை சோதனையிட்டு அவனிடம் எதும் இல்லை என்று தெரிந்து கோவத்தில் அவனை அடிக்க பாய்ந்தான்.
அப்போது போலீஸ் பேட்ரோல் காரின் சைரன் சத்தம் ஒலிக்க.. அந்த வழிப்பறி திருடர்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்டு வேகமாக அங்கிருந்து பைக்கில் கிளம்பினார்கள்.
ராஜபாண்டியும், வேலுவும் வேகமாக லாரியில் ஏறி வண்டியை கிளப்பினார்கள்.
லாரியின் தொலைவில் போலீஸ் சைரன் ஒலித்து கொண்டு வர.. பாதுகாப்பு உணர்வுடன் ராஜபாண்டி வேகமாக லாரியை ஓட்டி சென்றார்.
லாரி பல கிலோமீட்டர்கள் தாண்டி ஒரு தாபாவில் நின்றது. மூவரும் லாரியை விட்டு இறங்கி டீ குடிக்க சென்றனர்.
யாரு இவங்க..எதுக்காக துரத்துனாங்க என்று ரோஹித் கேட்டான்.
இவங்க வழிப்பறி திருடனுங்க.. நெடுஞ்சாலையில் தனியா வரும் லாரியை குறிவைத்து மிரட்டி வழிப்பறி பண்ணுவாங்க, அவனுங்க கேட்டதை குடுத்துட்டா பிரச்சினை பண்ணாம ரெண்டு மூணு அடியோட தப்பிச்சிடலாம். இல்லேனா சில சமயம் இரத்தம் பார்க்க வேண்டி இருக்கும், உயிர் போக கூட வாய்ப்பு இருக்கு. இவனுங்க எப்போ எந்த மாதிரி நடந்துப்பாங்கன்னு கணிக்க முடியாது. இந்த டெல்லி ஜெய்பூர் தேசிய நெடுஞ்சாலையை சுத்தி நெறய கிராமங்கள் இருக்கு, இந்த கிராமப்பகுதியை சேர்ந்தவங்கள்ல ஒரு சிலர் இப்படி குழுவா பிரிஞ்சு வழிப்பறி, கொள்ளை, கொலை ன்னு எல்லா விதமான குற்ற செயல்ல ஈடுபடுவாங்க. இவங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகம். இவங்களோட மெயின் டார்கெட் தனியா வர வாகனங்கள் தான். அதுனாலயே இந்த நெடுஞ்சாலையில் வாகனங்கள் தனியா வராம ஒரு சேர போவாங்க.
ஆனா இதெல்லாம் கொஞ்ச வருஷம் முன்னாடி வர தான் இருந்திச்சு. அதுக்கு அப்புறம் இந்த நெடுஞ்சாலையில் எந்த பிரச்சனையும் இல்லாம தான் இருந்திச்சு. இப்போ திரும்பவும் ஆரம்பிச்சுட்டாங்க போல.. முதல்ல இந்த மாதிரி பணம் புடுங்க ஆரம்பிப்பாங்க, போக போக லாரிக்குள்ள இருக்க சரக்குகளை கூட விடமாட்டங்க என்றார் ராஜபாண்டி.
இதெல்லாம் வெறும் சாதாரண விஷயம் தான், இதைவிட மோசமான சம்பவங்கள் நிறைய இந்த நெடுஞ்சாலை பயணத்தில இருக்கு, எங்களுக்கு ஒவ்வொரு முறை இந்த சாலை பயணத்தை முடிச்சு வீடு திரும்புறது சவாலான விஷயம் என்றான் வேலு.
இவை அனைத்தையும் பொறுமையாக கேட்டு கொண்டு இருந்தான் ரோஹித்.
சரி எங்களை விடு..உன் கதைக்கு வருவோம், நீ ஆரம்பி என்றான் வேலு.
ரோஹித் தன் கதையை ஆரம்பித்தான்…
தொடரும்….
Leave a comment