நெடுஞ்சாலை இரவு Chapter 6

Chapter 6


அங்கு நடந்த சம்பவம் அனைத்தையும் முதலில் இருந்தே பார்த்து கொண்டிருந்தான் ராகுல்.


சம்பவத்திற்கு பத்து நிமிடங்கள் முன்பாக.…


முக்கிய கடமைக்காக காரை விட்டு இறங்கிய ராகுல், கடமையை முடிக்க இடம் பார்த்து கொண்டு இருக்க.. அப்போது பார்த்து அவனது மொபைல் ஒலித்தது. இந்நேரத்தில யாருடா தொந்தரவு பண்ணுறது என்று முணங்கி கொண்டே மொபைலை பார்த்தான். அவனது பள்ளிகூட நண்பன் அலெக்ஸ் பெயர் திரையில் வந்தது.


ஏன்டா என்ன உச்சா கூட போக விடமாட்டியா என்று ஃபோன் அட்டென்ட் செய்த நொடியிலயே அலெக்ஸிடம் கத்தினான் ராகுல்.


நீ இப்போ போவன்னு எனக்கு எப்படிடா தெரியும், சரி என்ன பண்ணிட்டு இருக்க என்றான் அலெக்ஸ்.


அதான் சொன்னேன்ல கொடைக்கானல்ல உச்சா போயிட்டு இருக்கேன்.. நீ எதுக்கு இந்நேரத்தில கால் பண்ண அதை சொல்லு என்று ராகுல் கேட்க…


அங்க போய் ஏன்டா போயிட்டு இருக்க.. சென்னையிலேயே போயிருக்கலாம்ல என்று அலெக்ஸ் கடிக்க..


காமெடி பண்றேன்னு கடுப்பை கிளப்பாத.. அடிக்கிற குளிருக்கு உச்சா வேற அடிக்கடி வருது. இதை கூட நிம்மதியா போக விடமாட்டல.. எதுக்கு கால் பண்ண ? அதை சொல்லு முதல்ல என்று கேட்டான் ராகுல்.


என்ன விட்டுட்டு போயிட்டு உனக்கென்ன நிம்மதி வேண்டிக்கிடக்கு வெண்ணெய் என்று கடுப்பில் கத்தினான் அலெக்ஸ்.


ஃபோன்ல செருப்பால அடிக்க முடியாதுன்னு இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்காத.. ஒழுங்கா எதுக்கு கால் பண்ண அதை சொல்லு என்றான் ராகுல்.


சரி போய் தொலை…இந்த புதுப்படம் எல்லாம் எந்த சைட்ல டவுன்லோட் பண்ணனும் சொல்லுடா.. வீட்டுல போர் அடிக்குது என்று கேட்டான் அலெக்ஸ்.


ஏன்டா டேய்..இதை கேக்கதான் இப்போ கால் பண்ணியா.. ஏன்டா உசுர வாங்குற.. போனை வை.. மெசேஜ் பண்ணுறேன் என்று சொல்லி போனை கட் பண்ணிவிட்டு தன் வேலையையும் முடித்துவிட்டு அங்கிருந்து நடந்து மெயின் ரோட்டின் அருகில் வந்தான்.


அப்போது சற்று தொலைவில் தன் நண்பர்கள் போலீஸிடம் மாட்டிவிட்டதை பார்த்துவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் கண்ணில் படாதவாறு மறைந்து நின்று அங்கிருந்து நடப்பதை பார்த்து கொண்டு இருந்தான் ராகுல்.


சரி சும்மா தான நிக்கிறோம், ஒரு மெமரிஸ்க்காக வீடியோ எடுப்போம் என்று தன் மொபைலில் வீடியோ எடுக்க தொடங்கினான் ராகுல்.


அப்போது அவன் எதிர்பாராத ஒரு சம்பவம் அங்கு நடைபெற்றதை பார்த்து பதறிய ராகுல், மீண்டும் சுயநினைவுக்கு வந்து அங்கு நடப்பதை உற்று கவனித்தான், இவை அனைத்தும் மொபைலில் பதிவாகி கொண்டு இருந்தது.


தன் நண்பர்கள் மாட்டிக்கொண்டதை உணர்ந்த ராகுல், அவர்கள் மூவரையும் போலீஸ் ஜீப்பில் அழைத்து செல்வதை பார்த்துவிட்டு அவர்களை காப்பாற்ற நினைத்தான். தன் மொபைலில் பதிவான வீடியோவை வைத்து அவர்களை காப்பாற்றி விடலாம் என்று முதலில் முடிவு செய்த ராகுல்..” நாம எதாச்சும் செய்ய போய் நம்மளும் அவங்களோட சேர்ந்து மாட்டிக்கிட்டா என்ன பண்ண” மனதிற்குள் என்று யோசித்தான். ஆனா இந்த பிரச்சினையில இருந்து அவர்களை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று உறுதியாக இருந்தான். சரி இப்போ அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்க தொடங்கினான்.

அங்கிருந்து ஆம்புலன்ஸ் கிளம்ப, மறுபுறம் போலீஸ் ஜீப் அங்கிருந்து கிளம்பியது, நாமும் இங்கிருந்து முதலில் கிளம்பலாம் என்று நினைக்கும்போது எதோ ஒரு சத்தம் கேட்க, சுதாரித்து கொண்டவன் கையில் இருந்த மொபைலை அவசர அவசரமாக ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு அருகில் இருந்த வீட்டு காம்பவுண்ட் சுவற்றில் அமைக்கப்பட்டு இருந்த சிறு பிள்ளையார் பீடத்தில் சிலைக்கு பின்னால் மொபைலை மறைத்து வைத்தான், வெளிச்சம் இல்லாமல் இருண்ட பகுதியாக இருந்ததால் இவன் மறைத்து வைத்ததை யாரும் பார்த்திருக்க முடியாது. நாளை மறுபடியும் வந்து மொபைலை எடுத்து செல்ல அந்த பகுதியை அடையாளத்தை நினைவில் வைத்துக்கொண்டான்.


மீண்டும் சத்தம் கேட்டது..”இங்க தான் ஒரு பையன் நின்னுட்டு இருந்தான், எங்க போனான்னு தெரியல..” என்று யாரோ ஒருவர் பேசும் குரல் கேட்க..மொபைலை வைத்துவிட்டு அங்கிருந்து சில அடிதூரம் வெளியே யதார்த்தமாக நடந்து வர..அப்போது “தம்பி இங்க என்னப்பா பண்ற” என்று பின்புறத்தில் இருந்து ஒரு குரல் கேட்க திடுக்கிட்டு திரும்பினான் ராகுல்.


அங்கே ஒரு நடுத்தர வயது ஆள் நின்று கொண்டு இருந்தான்.


யாருப்பா நீ… நைட் இந்நேரத்தில இங்க நின்னு என்ன பண்ணிட்டு இருக்க என்று ராகுலை பார்த்து கேட்க..


அது வந்து… நான் இங்க என்று சொல்லி சுண்டு விரலை உயர்த்தி காட்டினான் ராகுல்.


இவன் எல்லாத்தையும் இங்க இருந்து பார்த்துட்டான் போல என்று சொல்லிகொண்டே மற்றொரு ஆள் ராகுலின் தலையில் ஏதோ ஒன்றை கொண்டு ஓங்கி அடிக்க..மயங்கி விழுந்தான் ராகுல்.



போலீஸ் ஸ்டேசனில்…

யோவ் கான்ஸ்டபிள் மாதவா…இந்த மூனு பேரையும் பத்திரமா உள்ள அழைச்சிட்டு போய் இவனுங்க எல்லார் பத்துன விவரத்தையும் வாங்கு என்று சொல்லி கொண்டே இருந்து இறங்கினார் ஏட்டு பெருமாள்.


பசங்க பத்திரம் மாதவா.. பொண்ணு கொலை கேஸ்.. இவனுங்க மூனு பேரும் சேர்ந்து ஒரு பொண்ணை கொலை பண்ணி கார்ல மறச்சி வச்சிருந்தாங்க. மெயின் ரோடு செக் போஸ்ட்ல எங்ககிட்ட மாட்டிகிட்டாங்க. அந்த பொண்ணு யாரு என்னன்னு தெரியல. அந்த பொண்ணை பத்தி தெரிஞ்சிக்க நம்ம இன்ஸ்பெக்டர் அய்யா ஹாஸ்பிடல் போயிருக்கார். அவர் வர வர இவனுங்க பத்திரமா உள் ரூம்ல வச்சு பாத்துக்கோ. பசங்க கிட்ட இருந்து செல்போன் எல்லாம் வாங்கி வச்சிரு. என் வீட்டம்மா வேற ஃபோன் பண்ணிட்டே இருக்கா, நான் வீடு வரை போயிட்டு காலையில சீக்கிரம் வந்துடுறேன் என்று கான்ஸ்டபிள் மாதவனிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் பெருமாள்.


சார் நாங்க எதும் பண்ணல சார் என்று சஞ்சய் சொல்ல…


தப்பு பண்ணவன் எப்போடா தப்பை ஒத்துக்கிட்டிங்க என்றார் மாதவன்.


நீங்க நினைக்கிற மாதிரி எதும் இல்லை சார், அந்த பொண்ணு யாரு , அது எப்படி எங்க கார்ல வந்திச்சுனு எங்களுக்கு எதும் தெரியாது சார் என்றான் செல்வா.


அதெல்லாம் இருக்கட்டும்.. முதல்ல உள்ள போய் அந்த ரூம்ல இருங்க, நான் போய் பேப்பர் , பென் எடுத்துட்டு வரேன்..உங்களை பத்தின விவரத்தை ஒவ்வொருத்தனா சொல்லுங்க, அதை தெரிஞ்சிப்போம் மொதல்ல என்று சொல்லிவிட்டு சென்றார் மாதவன்.


அவர் அங்கிருந்து கிளம்பியவுடன்.. டேய் இந்த ராகுல் எங்கடா போனான், அவனை ஆள காணும், அவன் எதும் மெசேஜ் போட்டு இருக்கானா என்று சஞ்சய் வேகமாக செல்வாவிடம் கேட்டான்.


எங்க போனான்னு தெரியல.. ஃபோன், மெசேஜ் எதும் பண்ணல என்றான் செல்வா.


நம்மள போலீஸ் செக் பண்ணிட்டு இருக்கப்போ.. அவன் நம்மள மறஞ்சு நின்னுட்டு பார்த்திட்டு தான் இருந்தான், எனக்கு இங்க நடக்கிறது சரியா படல, அதான் அவனை இங்க வராதன்னு நான் மெசேஜ் பண்ணேன், நாம இங்க வந்தபிறகு என்ன ஆச்சுன்னு எனக்கு தெரியல. அவனை பத்தி இப்போ போலீஸ் கிட்ட எதும் சொல்ல வேண்டாம், நாம மூனு பேரும் கொடைக்கானல் வந்த மாதிரி காட்டிப்போம் என்றான் விக்கி.


என்னடா சொல்லுற..ஆனா அதும் சரிதான்..அவன் வெளிய இருந்தாதான் நாம இங்க மாட்டின்னு இருக்கோம்ன்னு வெளிய யாருக்கும் சொல்லவாச்சு முடியும்., நாம் வெளிய வரவும் வசதியா இருக்கும் என்றான் செல்வா.


அவன் இப்போ மதியம் தான வத்தலகுண்டு போயிட்டு அங்க அவன் ஃப்ரெண்ட் கணேஷை பார்த்திட்டு சாயங்காலம் நம்ம கூட வந்து சேர்ந்தான், அதுனால நாம தங்கி இருக்க ரிசார்ட் ல கூட அவனை பத்தி யாருக்கும் தெரியாது. அதுனால அவனை பத்தி யாரும் போலீஸ்ட்ட சொல்ல வேண்டாம்டா , என்றான் சஞ்சய்.


ஆனா நாம எதும் பண்ணாம இப்படி மாட்டிகிட்டோமேடா. இந்த பொண்ணு யாரு என்னன்னு எதுமே தெரியல, இந்த பொண்ணு டெட்பாடி எப்படி நம்ம காருக்குள்ள வந்திருக்கும்? நாம சாயங்காலம் ரிசார்ட்ல இருந்து கிளம்புற முன்னாடி என்னோட ஒரு பேக் ஒன்னு கார் டிக்கியில இருந்துச்சுன்று அதை எடுக்க போனேன். அப்போ பேக்கை எடுத்துட்டு, அலங்கோலமா இருந்த கார் கவரை எடுத்து ஒழுங்கா சுருட்டி அதை ஒரு ஓரமா வச்சிட்டு டிக்கியை பூட்டிட்டு வந்தேன் என்றான் செல்வா.


நம்ம கார் டிக்கி சரியா மூடாம இருந்திருக்கும் போல, அதை எப்படியோ யாரோ கவனிச்சு அவனுங்க பண்ண தப்பை நம்ம கார் டிக்கியில வச்சு மறைச்சு நம்மள மாட்டி விட்டுருக்காங்க. 

செல்வா.. நீ சொல்லுறதை வச்சு பார்த்தா நாம ரிசார்ட் ல இருந்து கிளம்பி வெளிய சுத்திட்டு நேரா தியேட்டருக்கு தான் போனோம். அப்போ கூட நாம டிக்கியை எதும் ஓப்பன் பண்ணலயே என்றான் சஞ்சய்.


டேய் குண்டு பயலே.. நீ தான் உன் பேக்கை எடுத்துட்டு சரியா மூடாம வந்திருக்க.. இதை எவனோ பயன்படுத்தி நம்மள மட்டிவிட்டான். உன்னால நம்ம இப்போ போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கோம்டா. ஆனா உன் கூட சேர்ந்து சுத்துனதுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ அதை நல்லா பண்ணிட்ட, நல்லாரு என்று ஆதங்கமாக பேசினான் விக்கி.


லூசு பயலே.. நான் ஒழுங்கா மூடிட்டு தான் வந்தேன், நீ தான் தியேட்டர்ல இருக்கப்ப செருப்பு போடாம வந்துட்டேன், கார்ல போய் எடுத்துட்டு வரேன்னு சொல்லிட்டு தியேட்டர் பார்க்கிங் போன.. அப்போ நீ தான் சரியா மூடாம வந்திருப்ப என்று விக்கி பக்கம் திருப்பினான் செல்வா.


மாறி மாறி ரெண்டு பேரும் சீற… சஞ்சய் சமாதானம் படுத்த அதற்குள் கான்ஸ்டபிள் மாதவன் அங்கு வந்தார்.


என்னடா இங்க சத்தம்.. அமைதியா இருக்க மாட்டீங்களா? வாங்கடா ஒவ்வொருத்தனா வந்து உங்களை பத்தி சொல்லுங்க என்றார் மாதவன்.

விசாரணை தொடங்கியது…

தொடரும்…

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑