நெடுஞ்சாலை இரவு Chapter 7

Chapter 7



“இங்க பாரு ரோஹித்.. இதுக்கு மேல இது சரியாவரும்ன்னு எனக்கு தோணல.. ஆறு வருஷம் மேல ஆகிடுச்சு , நாம படிச்சு முடிச்சு. ஆனா நீ இப்போ வரை எந்த வேலைக்கும் போகாம இருக்க. இன்னும் எவளோ நாள்தான் இப்படியே உட்க்காந்து கவர்மென்ட் வேலைக்கு படிச்சு எக்ஸாம் எழுதிட்டு இருக்க போற? நாம கல்யாணம் பண்ணி ஒன்னு சேரனும் அப்படிங்கிற எண்ணமே இல்லையா?  நாம ரெண்டு பேரும் ஒரே கோர்ஸ் தான் காலேஜ்ல படிச்சோம், நீ என்ன விட நல்லா மார்க் எடுத்து இருக்க. இதை வச்சே நான் வேலை பார்க்கிற கம்பெனியில உனக்கு வேலை வாங்கி குடுப்பேன், ஆனா நீதான் என் பேச்சை கேட்காம, வேலைக்குன்னு போனா கவர்மென்ட் வேலைக்கு தான் போவேன்னு அடம்பிடிச்சுட்டு இருக்க.

எங்க வீட்டுல என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கட்டாயப்படுத்திட்டே இருக்காங்க. நானும் அவங்க கேக்குறப்போ எல்லாம் எதாச்சும் ஒரு காரணம் சொல்லி தள்ளி போட்டுக்கிட்டே வரேன். ஆனா இந்த முறை அவங்க ரொம்ப உறுதியா இருக்காங்க, இதுக்கு மேல என்னால அவங்க பேச்சை தட்ட முடியாது. நீ சீக்கிரம் ஒரு வேலைக்கு போயிட்டு எங்க வீட்டுல வந்து என்னை பொண்ணு கேட்பன்னு நானும் இவளோ நாளா காத்திருந்தது போதும், இதுக்கு மேல என்னால பொறுக்க முடியாது.


நான் முதல்ல கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் என் தங்கச்சிக்கு கல்யாணம் ஆகும், நான் தள்ளிப்போட போட அவளுக்கு கல்யாணம் தடை ஆகும். அப்பா அம்மாக்கு வயசாகிருச்சு, முன்னாடி மாதிரி அவங்களால வேலை பாக்க முடியல. அவங்க நல்லா இருக்கப்போவே கல்யாணம் பண்ணி வச்சு எங்க ரெண்டு பேரோட வாழ்கையை நல்லபடியா அமைச்சு குடுக்கனும்ன்னு விரும்புறாங்க. அதுல தப்பு இருக்கிற மாதிரி தெரியல. நம்ம காதலுக்காக நாம காத்திருக்கலாம், எதுக்காக மத்தவங்க காத்திருக்கனும்.


ஒன்னு , நீ கவர்மென்ட் வேலை தான் முக்கியம்னு நினைச்சா என்னை மறந்திரு இல்லை நான் முக்கியம்னு நினைச்சா நான் சொல்லுற வேலைக்கு வந்து சேரு. உனக்கு ஒரு வாரம் டைம் குடுக்குறேன், நல்லா யோசிச்சு ஒரு முடிவை சொல்லு. இதுக்கு மேல நான் எதும் பேச போறது இல்லை, என்னால முடியல.. நாம காதலிக்காம இருந்து இருக்கலாம் ரோஹித்.


இந்தா காபிக்கு காசு.. சீக்கிரம் ஒரு முடிவு எடுத்துட்டு எனக்கு கால் பண்ணு, அதுக்கு முன்னால என்கிட்ட எதுவும் பேசி என்னை சமாதான படுத்த முயற்சி பண்ணாத “ என்று சொல்லிவிட்டு தன்னை எதுவும் பேசவிடாமல் வேகமாக காஃபி ஷாப்பை விட்டு அன்று வெளியேறிய சந்தியாவை பற்றி தற்போது நினைத்து பார்த்தான் ரோஹித்.


கல்லூரி படிக்கும்போதும் சரி, படித்து முடித்த பின்பும் சரி, அதுவரை ரோஹித்தின் முயற்சிக்கு உறுதுணையாக எப்பவும் இருந்த சந்தியாவா இப்போ இப்படி பேசிட்டு போறது என்று இப்போது வரை அதை நினைத்து பார்த்து ஆச்சரியப்பட்டு கொண்டு இருந்தான் ரோஹித்.


சந்தியா, ரோஹித் இருவரும் கல்லூரி முதல் வருடத்தில் இருந்தே காதலித்து வந்தார்கள். கல்லூரி பேருந்தில் தான் முதன்முதலில் சந்தியாவை பார்த்தான் ரோஹித். பேருந்தின் இருக்கைகளில் ஜன்னல் ஓர இருக்கை ஒன்றில் அமர்ந்து எதோ ஒரு நினைப்பில் வெளியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். அப்போது கையில் இன்ஜினியரிங் புத்தகத்தை வைத்துகொண்டு பேருந்தின் உள்ளே காலி இருக்கையை தேடி நடந்து சென்று கொண்டிருந்த போது பேருந்து ஓட்டுநர் ப்ரேக் போட.. பேருந்து குலுங்கியதில் சந்தியா கால் தடுமாறி.. கைகளில் இருந்த புத்தகத்தை கீழே தவறவிட்டு அருகில் இருந்த பிடி கம்பியை தாங்கி பிடித்து கீழே விழாமல் நின்றாள்.


அப்போது சுற்றி இருந்தவர்கள் உடனே பதறி கீழே விழுந்த புத்தகங்களை எடுத்து அவளிடம் குடுத்தார்கள். இதை எல்லாம் பார்த்துவிட்டு அடுத்த நொடியே முகத்தை மீண்டும் ஜன்னல் பக்கம் திருப்பி வெளியே பார்த்து கொண்டிருந்தான் ரோஹித்.


“ப்ரோ.. உங்க கால் பக்கம் என்னோட பேனா கிடக்குது, அதை கொஞ்சம் எடுத்து குடுங்க” என்று ரோஹித்தை பார்த்து சந்தியா கேட்டாள். எதோ யோசனையில் இருந்தவன் காதில் சந்தியா சொன்னது கேட்கவில்லை. வெளியே பார்த்த வாரே இருந்தான்.


“ப்ரோ…உங்களை தான் கூப்பிடுறேன்” என்று மீண்டும் சந்தியா அவன் தோளை தட்டி கூப்பிட..

இதை எதிர்பாராத ரோஹித்.. “மேல ஏன் கை வைக்குற.. என்ன வேணும் உனக்கு இப்போ “ என்று கோபமாக கத்த.. சந்தியா அந்த நொடி பயந்து போனாள்.


ரோஹித் கத்தியதை பேருந்தில் இருந்த அனைவரும் திரும்பி பார்க்க.. அப்போது தான் சுயநினைவுக்கு வந்து அங்கு நடந்ததை உணர்ந்தான். சாரி.. என்ன வேணும், நீ சொன்னது கவனிக்காம எதோ டென்ஷன்ல கத்திட்டேன் என்றான் ரோஹித்.


பயத்தில் இருந்த சந்தியா.. “என் பேனா ஒன்னு உங்க கால் பக்கத்தில இருக்கு, அதை எடுத்து குடுங்க” என்று மெல்லிய குரலில் சொல்ல..


“சாரி..சாரி..” என்று சொல்லி கொண்டே வேகமாக குனிந்து அந்த பேனாவை எடுத்து சந்தியாவிடம் குடுத்தான் ரோஹித்.


“தாங்க்ஸ் ப்ரோ.. சாரி நீங்க டென்ஷன்ல இருப்பிங்கன்னு எனக்கு தெரியாது..உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேன் ” என்றாள் சந்தியா.


“இல்லை தப்பு ஏன் மேல தான்.. நான்  கத்திருக்க கூடாது..சாரி நான் தான் சொல்லனும்.. ஏன் நிக்கிற.. இங்க உக்காரு” என்று தன் அருகில் அமர இடம் குடுத்தான் ரோஹித்.


அவள் தயங்க.. கத்த மாட்டேன் பிளீஸ் உட்காரு என்று அவளை தன் அருகில் அமர சொன்னான். தயங்கியவாரு சந்தியா அவன் அருகில் அமர்ந்தாள்.

“நான் ரோஹித்.. கம்ப்யூட்டர் சயின்ஸ் ஃபர்ஸ்ட் இயர்” என்று தன்னை அறிமுக படுத்திகொண்டான் ரோஹித்.


“என் பேரு சந்தியா.. நானும் ஃபர்ஸ்ட் இயர் தான்” என்றாள் அவள்.


இதுதான் இவர்கள் இருவருக்குமான முதல் சந்திப்பு. கல்லூரி பேருந்தில் ஆரம்பித்த இந்த சந்திப்பு.. காலப்போக்கில்  மாநகர பேருந்தில் ஒன்றாய் சேர்ந்து ஊர் சுற்றும் அளவிற்கு நட்பாகி, பின்பு நாளடைவில் நட்பு என்று நினைத்த பந்தம் காதலாய் உருமாறி போனது. எப்போதும் அவனுக்கு துணையாக சந்தியா இருந்தாள், ரோஹித்தும் தான். சந்தியா மட்டும் தான் துணையாக ரோஹித்துக்கு இருந்தாளா என்றால் இல்லை..  முகில் இருந்தான், சிறந்த நண்பனாக.


சந்தியாவிடம் எதும் சொல்ல முடியாத விஷயம் என்றால் அடுத்ததாக ரோஹித் நாடுவது முகிலை தான். முகிலுக்கு ரோஹித்தை விட்டால் வேறு யாரும் கிடையாது. எப்போதும் இவர்களுடன் தான் இருப்பான்.


ஆரம்பம் முதலே ரோஹித் சொல்லிக்கொண்டே இருப்பான்.. தான் ஒரு அரசாங்க ஊழியனாக வர வேண்டும், அதுதான் என் லட்சியம் என்று. அப்புறம் எதுக்கு இன்ஜினியரிங் எடுத்த என்று சந்தியா மற்றும் பிறர் கேட்கும்போது “ ஒரு கெத்துக்காக தான்” என்பான் ரோஹித்.


அவனின் லட்சியத்துக்கு உறுதுணையாக இருந்தாள் சந்தியா. அவன் சோர்வாக இருக்கும்போதும், துவண்டு போகும்போதும் அவனை சமாதானப்படுத்தி ஊக்குவிப்பாள். இதன் காரணமாகவே ரோஹித்துக்கு அவளை அதிகம் பிடிக்கும்.


இப்படி கடந்த கால கல்லூரி வாழ்க்கை திடீரென நினைவில் வந்து கொண்டிருந்தபோது.. “டேய் சீக்கிரம் எல்லாத்தையும் எடுத்துவைடா… அதை பண்ணாம என்னத்த யோசிச்சிட்டு இருக்க..டிரெயினுக்கு நேரமாகுது” என்றாள் ரோஹித்தின் அம்மா துர்கா.


எடுத்து வச்சிட்டு தான் இருக்கேன்.. இன்னும் கொஞ்சம் தான் பேக் பண்ணனும், இன்னும் பத்து நிமிஷத்துல முடிச்சிட்டு நானே கீழ இறங்கி வரேன். நீ போய் எனக்கு பிடிச்ச பொரிகடலை உருண்டை, முறுக்கு, சாப்பாடு எல்லாம் எடுத்துவை துர்கா என்றான் ரோஹித்.


ரோஹித்துக்கு அவன் அம்மாவை எப்பவும் பெயர் சொல்லி கூப்பிடுவது தான் ரொம்ப பிடிக்கும். அம்மா என்று கூப்பிட்டதை விட துர்கா என்று கூப்பிட்டது தான் அதிகம். சில சமயம் சந்திரமுகி படத்தில் வருவது போல் “தர்கா “ என்று கூப்பிட்டு வெறுப்பேற்றுவது உண்டு.


அதெல்லாம் எடுத்து வச்சாச்சு, நீ சீக்கிரம் கிளம்பி வா என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார் துர்கா.


தன் உடமைகளை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு தயார் நிலையில் மாடியிலிருந்த தன் அறையில் இருந்து கீழே இறங்கி வந்தான் ரோஹித்.


“நான் ரெடிம்மா..” என்று சொல்லிக்கொண்டே வந்து துர்காவை கட்டி அணைத்தான் ரோஹித்.


டேய் நீ எனக்கு இருக்க ஒரே பிள்ளை.. அவளோ தூரம் போய் வேலைக்கு போகனுமா? இங்கேயே எதாச்சும் பாக்க கூடாதா ? இல்லை காத்திருந்தது தான் காத்திருந்த..இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்து வேற அரசாங்க வேலைக்கு போகலாமே என்றாள் துர்கா.


“மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா துர்கா..இது என்னோட ரொம்ப நாள் போராட்டத்துக்கு பிறகு இப்போதான் வேலை கிடைச்சு இருக்கு, இந்த வேலை இல்லாம நான் எவளோ இழந்திருக்கேன், எவளோ வலி, வேதனையா அனுபவிச்சேன், துணையா இருந்த சந்தியா கூட இப்போ என்கூட இல்லை.. இதெல்லாம் தெரிஞ்சும் இப்படி சொல்லுறியே துர்கா, எனக்கு மட்டும் உங்களை எல்லாம் விட்டுட்டு பாஷை தெரியாத ஊர்ல போய் வேலை பாக்கணும் ன்னு விருப்பமா என்ன ? எல்லாம் ஒரு ரெண்டு மூனு வருஷம், அப்புறம் இந்த பக்கம் நான் டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்துடுறேன். இத்தனை வருஷம் இங்கேயே இந்த வீட்டுக்குள்ள அடைஞ்சு கிடந்தேன், இந்த வேலை மூலமா எனக்கு புது உலகத்தை பாக்க ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. நான் போயிட்டு வாரேன் அம்மா” என்றான் ரோஹித்.


“சரிடா நீ நல்லபடியா போயிட்டு வா, அங்க எதும் சரியா இல்லேனா சொல்லு நான் கிளம்பி அங்க வந்து உன்னை பார்த்துக்கிறேன்” என்று அன்போடு கூறினாள் துர்கா.


“நீ அங்க போய் உன் மவன் கூட இருந்துட்டா இங்க யாரு என்னை கவனிச்சிக்கிறது யாரும்மா துர்கா.. டேய் ரோஹித் உங்க அம்மா விட்டா பேசிகிட்டே இருப்பா.. டிரெயினுக்கு நேரமாச்சு.. கார்ல போய்கிட்டே மத்த விஷயத்தை பேசிக்கலாம்.. இப்போ வாங்க எல்லாரும் கிளம்பலாம்” என்றார் ரோஹித்தின் அப்பா வசந்த்.


“என் பிள்ளை கிட்ட கொஞ்ச நேரம் பேசுறது உங்களுக்கு பொறுக்காதே.. நாங்க கிளம்பிட்டோம், நீங்க போய் காரை ஸ்டார்ட் பண்ணுங்க” என்றாள் துர்கா.


மூவரும் கிளம்பி ரெயில்வே ஸ்டேஷனுக்கு சென்றனர். இவர்கள் சென்ற நேரத்தில் ரோஹித் நண்பன் முகிலும் அங்கு வந்து சேர்ந்தான்.


“வாப்பா முகில்.. நல்லா இருக்கியா ?” என்று ரோகித்தின் பெற்றோர் முகிலை நலம் விசாரித்தனர்.


“நான் நல்லா இருக்கேன்.. நீங்க நல்லா இருக்கீங்களா ” என்று பதிலுக்கு முகிலும் நலம் விசாரித்தான்.


“டேய் மச்சான்..ரொம்ப சந்தோசமா இருக்குடா எனக்கு, இதுக்காக தான் நான் இவளோ நாளா காத்திட்டு இருந்தேன், அங்க போயிட்டு இது சரியில்லை, அது சரியில்லைன்னு சொல்லி எதாச்சும் ஒரு காரணம் சொல்லிகிட்டு திரும்ப வந்திராத.. எதையும் தைரியமா எதிற்கொள்ளு, எல்லாம் நல்ல படியா நடக்கும், பாத்து பத்திரமா போயிட்டு வா, அங்க போயிட்டு கால் பண்ணு” என்று அக்கறையோடு பேசினான் முகில்.


“சரிடா சரிடா நான் பார்த்துக்கிறேன்.. டேய் சந்தியா உன்கிட்ட எதுவும் சொன்னாலா? நான் கால் பண்ணேன் அவ எடுக்கல.. அவகிட்ட நேர்ல சொல்லலாம்னு அவளோட வீட்டுக்கு போனேன். அங்க அவ இல்லை.. குடும்பத்தோட எதோ சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு திருப்பதி போய் இருக்கிறதா பக்கத்து வீட்டுக்காரர் சொன்னாரு. இந்த சமயம் அவளதான் மிஸ் பண்றேன்” என்றான் ரோஹித்.


அவதான் நீ வேண்டாம்னு சொல்லிட்டு எப்பவோ போய்ட்டா.. அவளா இல்லை அரசாங்க வேலையான்னு முடிவு பண்ணி சொல்ல சொன்னப்போ நீ எந்த ஒரு முடிவும் சொல்லாம விட்டுட்ட. அது அவளுக்கு இன்னும் கோவத்தை கிளப்பி விட்டுடுச்சு. உன் மேல இருக்குற கோவத்துல அவ என் கூடவும் இப்போ பேசுறது இல்லை. அதனால அவளை பத்தி எனக்கு எதுவும் தெரியாது என்றான் முகில்.


“டேய்..சந்தியா அன்னைக்கு பேசிட்டு போனதுக்கு அப்புறம் நான் என்ன செய்யறதுன்னு தெரியாம ரொம்ப குழம்பி போயிட்டேன்டா. அவளையும் விட முடியாம அரசாங்க வேலைக்கு முயற்சி பண்ணுறதையும் விட முடியாம என்ன பண்றதுன்னு தெரியாம ரொம்ப தவிச்சு போயிட்டேன். என்ன முடிவு எடுக்கன்னு எனக்கு தெரியல. அவளும் எனக்காக எவ்வளவு நாள் தான் காத்திருப்பா? அவள் சொல்றதெல்லாம் ஒரு பக்கம் நியாயமா தான் இருந்துச்சு. நான் குழம்பி போய் இருந்த நேரம் தான் எனக்கு இந்த வேலைக்கான அப்பாயின்மெண்ட் ஆர்டர் வந்திச்சு. அந்த நொடி அவளோ சந்தோசமா இருந்தேன், இந்த சந்தோசத்தை அவ கூட சேர்ந்து கொண்டாட நினைச்சு அவகிட்ட கால் பண்ணி சொல்ல நினைக்கிறப்போ தான் அவளோட நம்பர் ரீச் ஆகல. நேர்ல போய் பார்த்தபோ தான் ஊருல இல்லைன்னு தெரிஞ்சது, எனக்கு வேற உடனே வந்து வேலையில சேர சொல்லிருந்தாங்க. அதனாலேயே கடந்த ரெண்டு நாளா அவ கிட்ட பேச முயற்சி பண்ணுறேன் ஆனா அவளை காண்டாக்ட் பண்ண முடியல, இல்லேனா நான் திருப்பதிக்கே உன்னையும் கூட கூட்டிட்டு போய் அவளை தேடி கண்டுபிடிச்சு இந்த விஷயத்தை சொல்லி இருப்பேன், ஆனா என்னால முடியல. நீ எப்படியாச்சும் அவகிட்ட பேச முயற்சி பண்ணு , நானும் ஊருக்கு போய் சேர்ந்து முதல் வேலையா அவகிட்ட நான் கால் பண்ணி பேசுறேன்” என்றான் ரோஹித்.


சரி நீ கவலைப்படாத.. நான் அவ வீட்டுக்கு நாளைக்கு போய் பாக்குறேன், ஊருக்கு வந்துட்டாளா இல்லையான்னு பாத்து சொல்லுறேன். நீ நல்ல படியா பாத்து போயிட்டு வாடா என்று ரோஹித்தை கட்டி அணைத்து முதுகில் தட்டி குடுத்தவாரு சொன்னான் முகில்.


இவர்கள் பேசிக்கொண்டிருந்த போது டெல்லி செல்லும் ரயில் வந்து கொண்டிருந்தது.
பாத்து பத்திரம்டா.. நல்ல படியா போயிட்டு வா என்று சொன்ன துர்காவிடமும், வசந்திடமும் ஆசிர்வாதம் வாங்கி கொண்டு இருவரையும் கட்டி அணைத்துவிட்டு ரயிலில் ஏறினான் ரோஹித்.

துர்கா கண் கலங்க.. வசந்த் ஆறுதல் கூற.. முகில் சந்தோசத்தில் கையசைக்க.. ரயில் சென்னையிலிருந்து டெல்லியை நோக்கி கிளம்பியது.


ஆம்.. ரோஹித்திற்கு டெல்லி அருகே மீரஜ்பூர் எனும் கிராமத்தில் உள்ள அரசு கூட்டுறவு வங்கியில் துணை மேலாளர் பதவி கிடைத்துள்ளது. அதில் சேர தான் டெல்லியை நோக்கி சென்று கொண்டிருக்கிறான். முதல்முறையாக வேலைக்கு செல்கிறான், அதுவும் வட இந்தியாவிற்கு என்பதால் தான் வீட்டிலும், இரயில்வே ஸ்டேஷனிலும் இவளோ களேபரம். இந்த முக்கியமான நேரத்தில் சந்தியா இவனுடன் இல்லாதது இவனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இதை தாண்டி மீரஜ்பூரில் ரோஹித்திற்கு பெரிய சவால்கள் காத்திருந்தன…

தொடரும்…

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑