நெடுஞ்சாலை இரவு Chapter 8

Chapter 8

போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிள் மாதவனின் விசாரணை ஆரம்பமானது.


“டேய் முதல்ல நீ வா.. வந்து உன் பேர், விலாசம், இங்க கொடைக்கானலுக்கு என்ன திட்டத்தோட வந்திங்க எல்லாத்தையும் ஒழுங்கு மரியாதையா ஒன்னு விடாம உண்மையை சொல்லு” என்று சஞ்சய்யை பார்த்து கூப்பிட்டார் மாதவன்.


“சார் என்னோட பேர் சஞ்சய் என்று தன்னை பற்றி கூற ஆரம்பித்தான்.. எனக்கு சொந்த ஊரு தூத்துக்குடி, நான் சென்னையில ஐடி கம்பெனியில வேலை பாக்குறேன். இவனுங்க செல்வா, விக்னேஷ் ரெண்டு பேரும் என் பிரெண்ட்ஸ். நாங்க மூனு பேரும் சென்னையில ஒன்னா ஒரே வீட்டுல தங்கி வேற வேற கம்பெனியில வேலை பார்க்கிறோம். நேத்து நைட்டு தான் திடீருனு முடிவு பண்ணி அப்படியே கொடைக்கானல் கிளம்பி இன்னைக்கு காலையில வந்துட்டோம். ஆபிஸ்ல வொர்க் பிரஸர்.. அதான் சின்னதா ஒரு ட்ரிப் போலாம்னு கிளம்பினோம். இங்க லேக் பக்கத்தில ஒரு ரிசார்ட்ல தான் தங்கி இருக்கோம் சார்” என்றான் சஞ்சய்.


“சரி உங்க மூனு பேரை பத்தி சொன்ன.. அந்த பொண்ணை பத்தி எதும் சொல்லவே இல்லையே.. யாருடா அந்த பொண்ணு ? எப்படி உங்களுக்கு பழக்கம் ? எதுனால அந்த பொண்ணை கொலை பண்ணிங்க ? ” என்று கேட்டார் மாதவன்.


“சார் சத்தியமா அந்த பொண்ணு யாருன்னு எங்களுக்கு தெரியாது சார். அந்த பொண்ணு பாடி எப்படி எங்க காருக்குள்ள வந்திச்சுன்னு எங்களுக்கு தெரியல. வேற யாரோ இந்த பொண்ணை கொலை பண்ணி எங்க கார்ல போட்டு மறைச்சு வச்சு எங்களை மாட்டி விட்டுருக்காங்க” என்றான் செல்வா.


“ஆமா நீங்க பெரிய இவனுங்க.. உங்களை மாட்டி விடுறாங்க.. டேய் ஒழுங்கா உண்மையை சொல்லுங்க” என்றார் மாதவன்.


“சார் எங்க யாருக்குமே எந்த பொண்ணுங்க கூடவும் பழக்கம் கிடையாது சார். நாங்க சிங்கிள் பசங்க சார்” என்றான் சஞ்சய்.


“சென்னையில ஐடி கம்பெனியில வேலை பார்க்குறீங்க.. கேட்டா பொண்ணுங்க பழக்கமே இல்லைன்னு சொல்லுறீங்க. இதை இப்பவுள்ள சின்ன புள்ளைங்க கூட நம்ப மாட்டாங்க” என்றார் மாதவன்.


“பொண்ணுங்க பழக்கம் எல்லாம் இருந்தா நாங்க ஏன் சார் இப்படி தனியா வர போறோம், எங்க கேர்ள் பிரெண்ட்ஸ் கூட வந்திருக்க மாட்டோமா ? நாங்க அதுக்கு சரிபட்டு வரமாட்டோம் சார்” என்றான் விக்கி.


“ஓஹோ அப்போ உங்களுக்கு பொண்ணுங்க சகவாசமே இல்லை.. கேர்ள் பிரெண்ட்ஸ்ம் இல்லை.. அதுனால யாரோ ஒரு பொண்ணை கரெக்ட் பண்ணி கூட்டி வந்து இங்க அந்த பொண்ணு கூட எதோ தகராறு ஆகி அந்த பொண்ணை போட்டு தள்ளிட்டிங்க.. அப்படித்தானே” என்றார் மாதவன்.


“கதை சூப்பர் சார்.. இது எந்த படத்தோட கதை” என்று கேட்டான் விக்கி.


“என்னடா கேட்ட.. கதையா? நான் என்ன உங்களுக்கு கதை சொல்லுற மாதிரி தெரியுதா? கொலையும் பண்ணிட்டு நக்கல் வேறயா” என்று அதட்டினார்.


“பின்ன என்ன சார்.. நீங்களே யோசிச்சு ஒரு கதையை ரெடி பண்ணி சொல்லிட்டு இருக்கீங்க. எங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்க தப்பு பண்ணலன்னு உங்களுக்கு எப்படி புரிய வைக்கனு எங்களுக்கு தெரியல” என்று எதிர்த்து பேசினான் விக்கி.


“என்னடா என்கிட்டயே துள்ளிட்டு வர.. அவளோ தைரியமா உனக்கு” என்று கோபமாக மாதவன் கேட்டார்.


“சார் அவன் அப்படிதான் சார்.. ஓவரா பேசிருவான்…நீங்க பிளீஸ் கோவப்படாதிங்க..” என்று சொன்னான் சஞ்சய்.


“டேய் விக்கி கொஞ்சம் அமைதியா இருடா” என்றான் செல்வா.


“சார் நீங்க வேனா போய் முதல்ல நாங்க தங்கி இருந்த ரிசார்ட், இந்த ஊரு டோல்கேட் எல்லாத்தையும் செக் பண்ணி பாருங்க.. நாங்க மூனு பேருதான் இங்க கொடைக்கானல் வந்தோம், அதும் இன்னைக்கு காலையில தான். நாங்க யாரையும் கூட்டிகிட்டு வரல” என்று வேகமாக சொன்னான் சஞ்சய்.


“அதெல்லாம் நாங்க விசாரிக்கிறோம்.. எங்களுக்கு நீங்க சொல்லி தர வேணாம். இருங்கடா அந்த பொண்ணு யாரு என்னன்னு தெரியல.. இன்ஸ்பெக்டர் வரட்டும், அப்புறம் இருக்கு உங்களுக்கு கச்சேரி” என்று சொல்லிவிட்டு கிளம்பினார் மாதவன்.

“என்னடா இவரு நம்ம சொல்லுறதை கேட்கவே மாட்டேங்குறாரு. இவங்களுக்கு எப்படி புரிய வைச்சு நாம இந்த பிரச்சனையில இருந்து வெளிய வரது?” என்று கேட்டான் செல்வா.


“ராகுல் வேற என்ன ஆனான்னு தெரியல” என்றான் விக்கி.


“இப்போதைக்கு அவன் தான் நமக்கு இருக்க ஒரே நம்பிக்கை” என்றான் சஞ்சய்.

**
சஞ்சய், விக்கி, செல்வா, ராகுல் இவர்கள் நால்வரும் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள், சொந்த ஊரான மதுரையில் ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் ஒன்றாக படித்தவர்கள். அப்போது ஏற்பட்ட நட்பு தற்போது வரை தொடர்கிறது. கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி ஒன்றாக சென்னை வந்தார்கள். தற்போது சென்னையில் ஒரே இடத்தில தங்கி வெவ்வேறு இடங்களில் வேலை பார்த்து வருகிறார்கள். சஞ்சய், விக்கி, செல்வா இவர்கள் மூவரும் ஐடியில் வேலை பார்க்க.. ராகுல் பேங்கில் வேலை பார்த்தான். வார் இறுதியில் ஒன்றாக சேர்ந்து ஊர் சுத்துவார்கள். ஒன்றாய் சேர்ந்து கொண்டு ஒருவரையொருவர் மாற்றி மாற்றி கலாய்த்து கொள்வார்கள். பேச்சிலர்கள் என்பதால் வார விடுமுறையில் ஒன்றாக சேர்ந்து சமையல் என்ற பெயரில் எதாவது ஒன்றை கிண்டி சாப்பிட்டு கொண்டிருப்பார்கள்.


சஞ்சய் எதையும் சற்று ஆழ்ந்து யோசித்து செயல்படும் சுபாவம் உள்ளவன். எல்லாரையும் ஒன்றாக அரவணைத்து செல்வான், எடுக்கும் முடிவுகளும் சரியானதாக இருக்கும். வார இறுதியில் வெளியே எங்கயாவது சென்று ஊர் சுற்ற வேண்டும், வார நாட்களில் டீ கடைக்காவ்து வெளியே செல்ல வேண்டும், இல்லை என்றால் பைத்தியம் பிடித்து விடும் , அப்படி ஒரு கேரக்டர் தான் சஞ்சய்.


செல்வாவோ எந்த ஒரு விஷயத்தையும் அவனது வீட்டில் கேட்டு முடிவு எடுக்கிறானோ இல்லையோ கண்டிப்பாக சஞ்சையிடம் கேட்டு தான் முடிவு எடுப்பான். சஞ்சையும் , விக்கியும் சேர்ந்து கொண்டு செல்வாவை கலாய்ப்பார்கள், ஆனால் அதை எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டான், அவனும் அவர்கள் கூட சேர்ந்து சிரித்து கொண்டு இருப்பான். எந்த ஒரு உதவி என்றாலும் தயாங்கமல் செய்ய கூடியவன் செல்வா. விக்கி நக்கலும், எளிதில் கோபமும் பட கூடிய சுபாவம் உள்ளவன். அந்த கோவம் எல்லாம் சிறிது நேரத்தில் காற்றில் கரைந்து விடும். இடம், பொருள் பார்க்காமல் சட்டென்று எதையும் பேசிவிடுவான். சஞ்ஜய், செல்வா இருவரையும் ஒரே நேரத்தில் கலாய்க்க கூடிய திறன் கொண்டவன். இவனுடன் ஒத்து போக கூடிய ஒரு கேரக்டர் ராகுல்.


ராகுல்.. எதையும் பெரிதாக எடுத்து கொள்ளமாட்டான். தனக்கு தோன்றியதை செய்வான். பிரச்சினை வந்தால்..விடு பாத்துக்கலாம் , தலையவா வெட்டிருவாங்க ? எல்லாம் சரியாகிவிடும் , பாத்துக்கலாம் என்று இருப்பான். மற்றவர்கள் என்ன நினைத்தால் என்ன, எனக்கு இது சரியா இருக்கு, நான் பண்றேன் என்று இருப்பவன். இவன் விரும்பாத ஒன்றை யாராவது இவனிடம் சொல்லும்போது.. கத்த மாட்டான், கோபப்பட மாட்டான்.. போகிற போக்கில் சட்டென்று முகத்திற்கு முன்பாகவே மூஞ்சியில் அடித்தார் போல் சொல்லிவிட்டு போயிடுவான்.

இவர்கள் மூன்று பேரில் நம்பர் ஒன் சோம்பேறி இவன்தான். வார நாட்களில் எங்கேயும் வெளியே போகலாம் என்று கூப்பிட்டால் நான் வரல என்று சொல்லி கட்டிலில் படுத்து விடுவான். ஆனால் டீ கடை மற்றும் தியேட்டர் என்றால் மட்டும் எப்போது கூப்பிட்டாலும் முதல் ஆளாக ரெடியாகி விடுவான். ராகுலும், சஞ்சையும் டீ பைத்தியம் என்றால்.. ராகுலும், விக்கியும் சினிமா பைத்தியம். சஞ்சைக்கு பெரிதாக படம் பார்க்க விருப்பம் இருக்காது, குறிப்பிட்ட படங்களை மட்டும் பார்க்க கூடியவன். செல்வா ஹாலிவுட் படங்களை மட்டும் தியேட்டரில் பார்ப்பான்.


இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித குணம் கொண்டவர்கள், எந்த பிரச்சினை என்றாலும் ஒன்றாக கூடி பேசி சமாளித்து விடுவார்கள். நால்வரும் சேர்ந்து விட்டால் கலகலப்புக்கு அங்கே பஞ்சம் இருக்காது.


அன்று ராகுலுக்கு அவன் வேலை பார்க்கும் வங்கியில் வேலை பளு அதிகமாகி மனதளவில் மிகவும் சோர்வாகி விட்டான். வேலை முடித்து வரும்போதே சஞ்சய்க்கு கால் பண்ணி.. “ என்னால முடியல.. வேலை பிரஸர் அதிகமா இருக்கு, நாளைக்கு சனிக்கிழமை லீவ், திங்களும் எனக்கு லீவ் தான், எங்கயாச்சு போகனும் போல இருக்கு, சீக்கிரம் ஒரு பிளான் பண்ணு.. நான் வீட்டுக்கு வந்திட்டு இருக்கேன் “ என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.


அவன் வீட்டிற்கு வந்து சேர்ந்த போது.. “கொடைக்கானல் போலாமா?” என்று விக்கி கேட்டான்.


“எங்க நாளும் சரி.. அடுத்த மூனு நாள் நிம்மதியா இருக்கனும்” என்று சொன்னான் ராகுல்.


“என்னடா அவளோ பிரஸரா.. ??” என்று கேட்டான் செல்வா.


“ஆமா..அந்த மேனேஜர் படுக்காலி பய என்னை வச்சு செஞ்சிட்டான்., ஆள் இல்லைன்னு தெரியும், தெரிஞ்சும் ரெண்டு ஆள் சேல்ஸ் டார்கெட்டை என்ன பாக்க சொன்னா நான் என்ன பண்ண ? என்னோட வேலையவே என்னால ஒழுங்கா பாக்க முடியாது. இதுல மத்தவங்க வேலையும் சேர்ந்து நான் எங்க பாக்க? வந்த கோபத்துக்கு கீபோர்ட் தூக்கி அவன் தலையில அடிக்கனும் போல இருந்துச்சு” என்று பொறுமி தள்ளினான் ராகுல்.

“சரி விடுறா.. கோவப்படாத.. நீ போய் ரெடி ஆகு.. நைட்டு சாப்பாடு முடிச்சிட்டு அப்படியே கொடைக்கானல் கிளம்புவோம்” என்று ஆறுதல் சொன்னான் செல்வா.

கொடைக்கானலில் தங்குவதற்கு ரிசார்ட் பார்த்து கொண்டிருந்தான் சஞ்சய். எல்லாரும் தயாராகி காரில் ஏறி கொண்டு இருக்க.. ராகுலுக்கு அவன் மேனேஜரிடம் இருந்து கால் வந்தது.


இந்த வெண்ணெய் எதுக்கு இப்போ கால் பண்றான் என்று யோசித்து, அதை கண்டுக்காமல் விட்டான். மீண்டும் மீண்டும் அழைப்பு வந்து கொண்டு இருக்க.. ஒரு கட்டத்தில் கடுப்பாகி ஃபோன் எடுத்தான்.


“ஹலோ எதுக்கு சும்மா சும்மா இப்போ கால் பண்ணிட்டே இருக்கீங்க.. வீட்டுக்கு வந்து கூட நிம்மதியா இருக்க விடமாட்டிங்களா” என்று வேகமாக கேக்க எண்ணிய ராகுலுக்கு முன்பாக.. அவன் மேனேஜர் கத்த ஆரம்பித்தார்.


“ராகுல்.. ஃபோன் பண்ணா உடனே எடுக்க மாட்டீங்களா? அவளோ பெரிய ஆளா நீங்க ?” என்று மேனேஜர் கேட்க..


“இப்போ எதுக்கு கத்திட்டு இருக்கீங்க ? எதுக்கு இப்போ கால் பண்ணிங்க ? முதல்ல அதை சொல்லுங்க” என்று பதிலுக்கு கேட்டான் ராகுல்.


“நீங்க பண்ணாம விட்ட வேலைக்கு நாளைக்கு நம்ம ரெண்டு பேருக்கும் சீனியர் மேனேஜர் கூட மீட்டிங் இருக்கு. நாளைக்கு நீங்க கண்டிப்பா வரனும்” என்றார் மேனேஜர்.

“சார் என்ன விளையாட்டா இருக்கா? நான் ஊருக்கு கிளம்பி போயிட்டு இருக்கேன். என்னால நாளைக்குலாம் வர முடியாது. நீங்க தான என் மேனேஜர், நீங்க போய் பதில் சொல்லுங்க” என்றான் ராகுல்.


“உங்களுக்கு நான்தான் மேனேஜர்.. நான் சொல்லுறத தான் நீங்க கேக்கனும், நீங்க ஒன்னும் எனக்கு சொல்ல வேணாம். நாளைக்கு நீங்க கண்டிப்பா வந்து தான் ஆகனும், இல்லேனா நீங்க அடுத்து வேலையில இருக்க முடியாது” என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தார் மேனேஜர்.


“ராகுல் பொறுமை இழந்து கையில் வைத்திருந்த பேக்கை வேகமாக விட்டு எறிந்தான்.
டேய் நாளைக்கு மீட்டிங் வர சொல்லுறான் டா அந்த ஆளு, வரலைன்னா வேலையில இருக்கக் முடியாதுன்னு மிரட்டுறான்” என்றான் ராகுல்.


“சரிடா இப்போ என்ன பண்ணலாம்.. அங்க ரிசார்ட் வேற புக் பண்ணியாச்சு” என்றான் செல்வா.


“அந்த ஆளுக்கு நாளைக்கு இருக்கு.. இப்போ நீங்க கிளம்பி போங்கடா.. நாளைக்கு மீட்டிங் முடிச்சிட்டு நான் நைட்டு வந்துடுறேன்” என்றான் ராகுல்.


“என்னடா நீ.. சரி பாத்து பொறுமையா ஹேண்டில் பண்ணு.. வேலை முக்கியம்.. நாளைக்கு மீட்டிங் முடிச்சிட்டு எனக்கு கால் பண்ணு” என்றான் சஞ்சய்.


ராகுலை விட்டுவிட்டு இவர்கள் மூவரும் காரில் கொடைக்கானல் கிளம்பி சென்றார்கள்.
வெறுப்பாக அவர்கள் செல்வதை பார்த்து கொண்டு இருந்தான் ராகுல். அடுத்த நாள் வேண்டா வெறுப்பாக மீட்டிங் ஹாலில் மேனேஜர் அருகே அமர்ந்திருந்தான் ராகுல்.


சீனியர் மேனேஜர் அப்போது உள்ளே வந்தார். ராகுல் நீங்க இங்க என்ன பண்ணுறீங்க? உங்க மேனேஜரை மட்டும் தான நான் வர சொன்னேன் என்றார்.

அவர் சொன்ன அடுத்த கணம்.. மேனேஜரை முறைத்தான் ராகுல்.

“சார் நீங்க வர சொன்னதா சொல்லி.. ஊருக்கு போயிட்டு இருந்த என்னை இவர்தான் பாதியில நிப்பாட்டி இங்க கூட்டு வந்து உட்கார வச்சிருக்கார். மீட்டிங் வரலைன்னா வேலையில இருந்து தூக்கிருவேன் என்னு சொன்னார். அதுனாலதான் நான் வந்தேன். என்னோட டார்கெட் மட்டும் இல்லை.. மத்தவங்க டார்கெட்டையும் சேர்த்து என்ன முடிக்க சொல்லி தினமும் என்ன மென்டல் டார்ச்சர் பண்ணுறாரு. இப்படியே போச்சுன்னா நான் என்ன முடிவு எடுத்தாலும் அதுக்கு இவர்தான் காரணம்” என்றான் ராகுல்.


“ராகுல் நீங்க பொறுமையா இருங்க.. இதை பத்தி அப்புறம் நம்ம பேசலாம், உங்களை இங்க வரவச்சதுக்கு உங்க மேனேஜருக்கு பதிலா நான் சாரி கேட்டுகிறேன்.. நீங்க இப்போ ஊருக்கு கிளம்பி போயிட்டு வாங்க, கூட ஒரு நாள் லீவ் எடுத்துக்கோங்க ராகுல். நீங்க கிளம்புங்க.. நான் உங்க மேனேஜர் கிட்ட பேசிக்கிறேன்” என்று சொல்லி ராகுலை அனுப்பி வைத்தார் சீனியர் மேனேஜர்.


அவருக்கு நன்றி சொல்லிவிட்டு..தன் மேனேஜரை முறைத்தபடி அங்கிருந்து வெளியே சென்றான் ராகுல். கோவமாக வெளியே சென்றவன்.. கொடைக்கானலுக்கு பேருந்தில் கிளம்பினான்.முதலில் நேராக வத்தலகுண்டு சென்று அவன் பள்ளி நண்பன் கணேஷை பார்த்துவிட்டு அங்கிருந்து கொடைக்கானலுக்கு சென்றான். இவன் செல்லும்போது இரவு ஆகிவிட்டது.


சஞ்சைக்கு ஃபோன் செய்து பேருந்து நிலையம் வர சொன்னான், அவர்கள் ஏற்கனவே அந்த பகுதியில் இருக்க.. அருகில் இருக்கும் இடத்திற்கு வர் சொன்னார்கள். கையில் கனமான பேக் இருந்ததால் அதை தற்போதைக்கு பேருந்து நிலைய லாக்கரில் வைத்துவிட்டு.. அவர்கள் சொன்ன இடத்துக்கு போய் சேர்ந்தான் ராகுல். அவர்களை பார்த்த பிறகு தான் அவன் நிதானமாக இருந்தான். நடந்தவாரு கொடைக்கானல் எரியை சுற்றி வந்தனர்.


“இரவு படத்துக்கு போலாமா?” என்று ராகுல் கேட்க..

“இங்க வந்து படம் தான் போகணுமா?” என்று சஞ்சய் கேட்க..

“இது நல்ல படம், வா போலாம்” என்று தியேட்டருக்கு அழைத்து சென்றான் ராகுல். அதன்பின் நடந்த சம்பவங்கள் வேறு…


வெளியே சென்று இருந்த ஏட்டு பெருமாளும், இன்ஸ்பெக்டர் வரதனும் ஸ்டேஷன் வந்து சேர்ந்தார்கள்.


“மாதவன்.. பசங்க எதும் சொன்னாங்களா?” என்று விசாரித்தார் வரதன்.


“அவங்க பண்ணலயாம்.. அவங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொல்லுறாங்க சார். இதுதான் சார் அந்த மூனு பசங்க பத்தின விவரங்கள்” என்று கோப்புகளை குடுத்தார் மாதவன்.


“இவனுங்களை இப்படி எல்லாம் கேட்டா சொல்ல மாட்டாங்க சார்.. நாலு சாத்து சாத்துனா தான் வழிக்கு வருவாங்க, நான் போய் விசாரிச்சிட்டு வரேன்” என்றார் பெருமாள்.


“பொறுங்க பெருமாள்.. அவசரப்படாதிங்க.. சின்ன பசங்களா இருக்காங்க.. எனக்கு இவங்களை பார்த்தா தப்பு பண்ண மாதிரி தோணல.. நான் அவங்களை அப்புறமா விசாரிக்குறேன்” என்றார் வரதன்.


“அந்த பொண்ணு யாரு என்னன்னு எதும் தெரிஞ்சதா சார்?” என்று கேட்டார் பெருமாள்.

“ஆமா.. அந்த பொண்ணுகிட்ட நம்ம சோதனை பண்ணப்போ எதும் நமக்கு ஆதாரம் கிடைக்கல.. ஒரு மொபைல் கூட இல்லை. ஆனா ஹாஸ்ப்பிடல்ல போஸ்ட்மார்ட்டம் அனுப்புனப்போ.. அங்க இருந்த நர்ஸ் அந்த பொண்ணோட ஆடையில உள்பக்கத்துல இருந்த பாக்கெட்ல ஒரு சின்ன பேப்பர் துண்டு இருந்ததா சொல்லி குடுத்தாங்க. அந்த பேப்பர் துண்டை பார்கிறப்போ அது எதோ வண்டி ரிப்பேர் பண்ண மெக்கானிக் ஷாப் ரசீது மாதிரி இருந்துச்சு” என்றார் வரதன்.


“ரசீதா..? அப்படின்னா அந்த ரசீதுல எதும் பேரு, வண்டி நம்பரு எதும் போட்டு இருக்கா?” என்று ஆர்வமாக கேட்டார் பெருமாள்.


அந்த பொண்ணு பேரு.. “பூஜா.. பூஜா ஃபெர்னாண்டஸ்”. ரசீதுல அந்த பேருதான் போட்டு இருக்கு, வண்டி நம்பரும் இருக்கு. இந்த மெக்கானிக் கடை இருக்கிற இடம் “கோவா” என்றார் வரதன்.

(கோவா போய் பூஜாவை பார்த்திட்டு வருவோமா?.. )

தொடரும்…

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑