
Chapter 9
“குட் மார்னிங் சார்.. ஐ’எம் ரோஹித் ஃப்ரம் சென்னை’” நான் இங்க அசிஸ்டென்ட் மேனேஜரா ஜாயின் பண்ண வந்திருக்கேன். திஸ் இஸ் மை அப்பாயின்ட்மெண்ட் ஆர்டர் சார் என்று சொல்லி மீரஜ்பூரில் உள்ள அரசு கூட்டுறவு வங்கி மேனேஜர் சுக்லாவிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான் ரோஹித்.
“ஹலோ ரோஹித்.. ஐ’எம் சுக்லா..நைஸ் டூ மீட் யூ.. பிளீஸ் சிட் டவுன்” என்று கூறி பதிலுக்கு தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை வாங்கி கொண்டார் சுக்லா.
நான் கடந்த 3 வருஷமா இந்த மீரஜ்பூர் கிராமத்துல தான் மேனேஜரா இருக்கேன், எனக்கு சொந்த ஊர் டெல்லி என்றார் சுக்லா.
சார் நான் இன்னைக்கு காலையில டெல்லி வந்துட்டு அங்க இருந்து நேரடியா இங்க பேங்க் வந்துட்டேன். நான் தங்குறதுக்கு ஒரு வீடு இல்லை சின்னதா இடம் வேணும் என்று கேட்டான் ரோஹித்.
நீங்க இந்த ஊருக்கு புதுசுன்னு எனக்கு தெரியும் ரோஹித், இங்க தங்குறதுக்கு ஹோட்டல் எல்லாம் கிடையாது. இங்க நம்ம பேங்க் ஆளுங்க தங்குறதுக்கு குவார்ட்டர்ஸ் இருக்கு. உங்களுக்கு அதுல ஒரு வீட்டை ரெடி பண்ண சொல்லிருக்கேன். நாளைக்கு ரெடி ஆகிரும். அதுவரை என் வீட்டுல தங்கிக்கோங்க. அதே மாதிரி நகரத்துல இருக்க வசதி இங்க கிடைக்காது. உங்களுக்கு இது எல்லாம் புதுசா இருக்கும். போக போக எல்லாம் பலகிடும் என்றார் சுக்லா.
ரொம்ப நன்றி சார்.. உடனே வந்து சேர சொல்லி ஆர்டர் வந்துச்சு. அதுனால என்னால முன்னாடியே வந்து இங்க எல்லாத்தையும் ரெடி பண்ண முடியல என்றான் ரோஹித்.
இதுல என்ன இருக்கு.. உங்க நிலைமை புரியுது. ஆபிஸ் பாய் பலராம் கிட்ட உங்களை அறிமுக படுத்தி வைக்கிறேன். உங்களுக்கு எல்லா உதவியும் அவன் செஞ்சு குடுப்பான். என்ன ஒன்னு .அவனை நீங்க கவனிக்கனும் என்றார் சுக்லா.
கண்டிப்பா சார்.. நான் பாத்துக்கிறேன் என்றான் ரோஹித்.
சரி வாங்க.. உங்களுக்கு நம்ம பேங்க் ஸ்டாஃப் கிட்ட அறிமுக படுத்திவைக்கிறேன் என்றார் சுக்லா.
“இவர்தான் ரோஹித்.. நம்ம வங்கியோட புதிய துணை மேலாளர்” என்று ஹிந்தியில் சொல்லி மற்றவர்களிடம் ரோஹித்தை அறிமுக படுத்தி வைத்தார் சுக்லா.
“நமஸ்தே” என்று தனக்கு தெரிந்த ஒன்னு ரெண்டு ஹிந்தி வார்த்தையை பிரயோகப்படுத்தி அறிமுகப்படுத்தி கொண்டான் ரோஹித்.
இது தான் உங்க கேபின்.. இங்க உங்க வேலைக்கு சம்பந்தபட்ட கோப்புகள் எல்லாம் இருக்கு. இப்போதைக்கு இதை பாருங்க, அதுல எதும் புறியலன்னா என்கிட்ட அல்லது அக்கவுண்ட் செக்ஷன் தேவி மேடம் கிட்ட கேளுங்க.. சொல்லித்தருவாங்க என்று சொல்லிவிட்டு சுக்லா தன் அறைக்கு திரும்பினார்.
தன் கேபினை சுற்றி பார்த்துவிட்டு தனக்கான மேஜை நாற்காலியில் வந்து அமர்ந்தான் ரோஹித். முதல் வேலை, அதுவும் அரசாங்க வங்கியில் துணை மேலாளர் பொறுப்பு, தனக்கான தனி இருக்கை என்று தன்னை நினைத்து பெருமைப்பட்டு கொண்டான் ரோஹித். முதல் வேலையாக அம்மா துர்காவிற்கு ஃபோன் செய்து வங்கியில் வேலைக்கு சேர்ந்து விட்டதையும், தனக்கான தனி கேபின் பற்றியும் பெருமையாக சொல்லி கொண்டு இருந்தான். அம்மாவிடம் பேசி முடித்துவிட்டு சந்தியாவிற்கு ஃபோன் செய்தான்.. தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார் என்று கம்ப்யூட்டர் வாய்ஸ் சொல்ல.. என்னாச்சு இவளுக்கு, எங்க போய் தொலைஞ்சா இவ என்று தனக்கு தானே பேசிக்கொண்டான் ரோஹித்.
முதல்நாள் பொழுது வங்கியை பற்றியும் அங்கு இருப்பவர்களை பற்றியும் தெரிந்து கொள்வதில் முடிந்துவிட்டது. பின்னர் வேலை முடிந்து சுக்லாவுடன் அவர் வீட்டிற்கு சென்றான் ரோஹித்.
இன்னைக்கு வெள்ளிக்கிழமையில.. அதான் வேலை முடிய இவளோ நேரம் ஆகிடுச்சு.. வாங்க ரோஹித் கிளம்பலாம் என்று சுக்லா அழைத்தார். அப்போது தான் வாட்ச்சில் நேரத்தை கவனித்தான் ரோஹித்.. 7.45 மணி ஆகியிருந்தது. போகலாம் சார் என்று சொல்லி சுக்லாவுடன் கிளம்பினான்.
வங்கியில் இருந்து சுக்லாவின் வீட்டிற்க்கு பைக்கில் செல்லும்போது அந்த ஊரை பார்த்தவாறு சென்றான். ஆனால் எல்லா வீடுகளிலும் மின் விளக்குகள் அணைக்கப்பட்டு கதவுகள் மூடப்பட்டு இருந்தன. வீதிகளில் யாரும் தென்படவில்லை, தெரு விளக்கு வெளிச்சத்தில் பைக்கை ஓட்டி சென்றார் சுக்லா.
என்ன சார்.. மணி 8 தான் ஆகுது, ஆனா தெருவுல யாரையுமே காணும், ஒரு சத்தம் கூட கேட்கல என்று ரோஹித் கேட்டான்.
இது கிராமம் ரோஹித் சார்.. இங்க இப்படித்தான் இருக்கும். 7.30 மணிக்கு மேல இங்க யாரையும் பாக்க முடியாது. கடுமையா வேலை செய்யுற மக்கள் இங்க அதிகம். காலையில சூரியன் உதிக்கிறதுக்கு முன்னாடியே இந்த ஊர் முழிச்சிடும். அதிகாலையில் எந்திரிச்சு காட்டு வேலைக்கு போயிட்டு வந்து பக்கத்துல இருக்க செங்கல் சூளைக்கு வேலைக்கு போயிடுவாங்க. பொழுது சாஞ்சதும் தான் வீடு திரும்புவாங்க . அப்புறம் நைட்டு 7.30 மணிக்கு எல்லாம் சாப்பிட்டு தூங்கிருவாங்க. இதுதான் அவங்க பழக்கம் என்றார் சுக்லா.
ரோஹித்துக்கு இது புதிதாக இருந்தது, மீரஜ்பூர் பற்றியும் அதன் மக்களை பற்றியும் சுக்லா சொல்வதை அமைதியாகவும் ஆச்சர்யத்துடனும் கேட்டு கொண்டே வந்தான்.
சுக்லாவின் வீட்டில் இரவு உணவை முடித்துவிட்டு படுத்து உறங்கினான். மறுநாள் தூக்கம் கலைந்து எந்திரித்தபோது 10 மணி ஆகியிருந்தது.
குட் மார்னிங் ரோஹித் சார்.. நல்ல தூக்கம் போல என்று கேட்டார் சுக்லா. ஆமா சார்.. ரெண்டு நாளா தொடர்ந்து ட்ரெயின் டிராவல் பண்ணதுல உடம்பு அசதியா இருந்துச்சு. இப்போதான் சரி ஆன மாதிரி இருக்கு என்றான் ரோஹித்.
சரி சரி..போய் குளிச்சு ரெடி ஆகிட்டு வாங்க.. சாப்பிடலாம் என்றார் சுக்லா.
குளித்துவிட்டு ரெடியாகி வந்தான் ரோஹித். சுக்லா காலை உணவை டேபிளில் எடுத்து வைத்தார். இருவரும் பேசிக்கொண்டே காலை உணவை முடித்தனர்.
“சப்பாத்தியும் குருமாவும் நல்லா இருந்துச்சு சார்..எப்படி சார் இப்படி சமைக்க கத்துக்கிட்டிங்க? நானும் இனிமேதான் சமைக்க கத்துக்கன்னும் என்றான் ரோஹித்.
சும்மா சொல்லாதிங்க ரோஹித் சார்.. சுமாராதான் நான் சமைப்பேன். கண்டிப்பா நீங்க சமைக்க கத்துகிட்டு தான் ஆகனும், அப்போதான் இங்க இருக்க முடியும். இந்த ஊருல டீ கடை தவிர சாப்பிட ஹோட்டல் எல்லாம் எதும் கிடையாது என்றார் சுக்லா.
ஓஹோ இது வேறயா.. அப்போ வேற வழி இல்லை..கண்டிப்பா சமைக்க கத்துக்குறேன் என்றான் ரோஹித்.
சரி.. சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க.. இன்னும் கொஞ்ச நேரத்துல பலராம் வருவான். அவன் கூட போய் உங்க வீட்டை பார்த்திட்டு வாங்க, அதுக்கு அப்புறம் நான் இந்த ஊரை சுத்தி காட்டுறேன் என்றார் சுக்லா.
அவர் சொன்னது போல் பலராம் அங்கு வந்து சேர.. இருவரும் சேர்ந்து வீட்டை பார்க்க சென்றனர். பழைய கட்டிடம் தான் என்றாலும் ஒரு குடும்பம் வசிக்க அந்த வீடு போதுவானதாக அழகாக இருந்தது. வீட்டை சுற்றி முற்றி பார்த்தான், ரொம்ப பிடித்து இருந்தது. வீட்டிற்கு மேலே மாடியும் இருந்தது, அங்கு சென்று பார்த்த போது அந்த ஊரை ஓரளவுக்கு அவனால் பார்க்க முடிந்தது. இதுவரை நகரத்தில் வானுயர கட்டிடங்களை பார்த்து பழகிய ரோகித்துக்கு இங்க வீடுகள் எல்லாம் தரையோடு தரையாக இருப்பதையும், ஒரு சில வீடுகள் மட்டும் மாடியுடன் சேர்ந்து இருப்பதையும் பார்க்க முடிந்தது.
சார் போகலாமா.. சுக்லா சார் கூப்பிடுறார் என்றான் பலராம்.
போலாம் என்று சொல்லிவிட்டு கீழே நடந்தான் ரோஹித்.
இவர்கள் மூவரும் ஊரை சுற்றி பார்க்க காலாற நடந்து சென்றனர்.
புதிதாக வந்த ரோஹித்தை மீரஜ்பூர் மக்கள் வித்தியாசமாக பார்த்தனர், அவர்கள் விநோதமாக பார்ப்பது ரோஹித்துக்கு ஒரு வித கூச்சத்தை ஏற்படுத்தியது.
முதல்ல இந்த ஊர் பஞ்சாயத்து தலைவரை பார்த்திட்டு வரலாம் என்று சொல்லி பஞ்சாயத்து தலைவர் வீட்டிற்க்கு அழைத்து சென்றார் ரோஹித். இவங்க தான் இந்த ஊருல எல்லாமே, இவர் சொல்றது கேட்டு தான் இந்த ஊர் மக்கள் நடப்பாங்க. இவங்க வம்சம் வம்சமா பஞ்சாயத்து தலைவரா இருந்து வராங்க, இவங்களை எதிர்த்து போட்டியிட யாரும் இங்க இல்லை. அதுக்கு காரணம் நம்ம பஞ்சாயத்து தலைவர் தான் என்றார் சுக்லா.
ஏன் சார் அவளோ கெட்டவரா என்று கேட்டான் ரோஹித்.
அட அப்படி சொல்ல வரல… இவர் இந்த ஊருக்கு நிறைய நல்லது பண்ணியிருக்கார், யார் எப்போ என்ன உதவி கேட்டாலும் இவர் தயங்காம செஞ்சு குடுப்பாரு. மக்களுக்கு ஒன்னுன்னா அரசாங்கத்தை கூட எதிர்த்து கேள்வி கேட்க யோசிக்க மாட்டாரு. இந்த தொகுதி சட்டசபை உறுப்பினரை கூட ஒரு சமயம் இந்த ஊர் மக்களுக்காக எதிர்த்து பேசினார். அன்னைக்கு நானே அதை நேரடியா பார்த்தேன், அதுக்கு அப்புறம் தான் புரிஞ்சுது, இந்த மக்கள் ஏன் அவர் மேல அவளோ மரியாதை வச்சு இருக்காங்கன்னு என்று சுக்லா அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரை பற்றி சொல்லி கொண்டே வர.. ரோஹித்துக்கு “யாருடா அவரு.. அவரை பார்த்தே ஆகனும்” என்று தோன்றியது. இவர்கள் பேசி கொண்டே பஞ்சாயத்து தலைவர் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
அங்கே அவர்களை வரவேற்று அமர செய்தார் பஞ்சாயத் தலைவரின் மனைவி
நமஸ்தே..டீ குடிங்க.. அவர் இப்போ வந்திடுவாரு என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இவர்கள் மூவரும் டீ குடித்து கொண்டு இருக்க.. பஞ்சாயத் தலைவர் அங்கு வந்தார்.
நமஸ்தே சுக்லா சார்.. என்ன திடீர்னு நம்ம வீட்டு பக்கம் வந்து இருக்கீங்க ? யார் இந்த தம்பி ? புதுசா இருக்காரு என்று கேட்டார்.
நமஸ்தே சார்.. இவர் தான் ரோஹித்.. நம்ம வங்கிக்கு புதுசா வந்திருக்க அசிஸ்டென்ட் மேனேஜர் என்று அறிமுக படுத்தி வைத்தார் சுக்லா.
நமஸ்தே சார் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான் ரோஹித்.
நமஸ்தே ரோஹித்.. நான் ராணா சிங், இந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார்.
நீங்க எந்த ஊரு என்று கேட்டார் ராணா சிங்.
நான் சென்னை சார் என்றான் ரோஹித்.
ஓ தமிழா நீங்க..சென்னை.. ரஜினிகாந்த் ஊர்ல இருந்து வரீங்களா.. அச்சா.. எனக்கு அவர் ஸ்டைலும், வெளிப்படையான பேச்சும் ரொம்ப பிடிக்கும் , அவர் படங்களை கூட பார்த்து இருக்கேன் என்று ராணா சொல்ல..
அப்படியா.. எந்த ரஜினி படம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று ஒரு ரஜினி ரசிகனாக ஆர்வ மிகுதியில் ரோஹித் கேட்க..
எனக்கு சிவாஜி, ரோபாட் ரொம்ப பிடிக்கும் என்று ராணா சொல்ல.. அதை ஆர்வமாக கேட்டான் ரோஹித்.
டீ குடித்து கொண்டே மற்ற விஷயங்களை பற்றி கேட்டு ரோஹித்திடம் தெரிந்து கொண்ட ராணா சிங்… உங்க தமிழ் தேசம் விட்டு இங்க வந்து இருக்கிங்கன்னு வருத்தப்படாதிங்க ரோஹித், நாங்க எல்லாரும் இருக்கோம். உங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் நான் பண்ணுறேன் என்றார் ராணா சிங்.
ரொம்ப நன்றி சார்.. என்று அப்போ நாங்க கிளம்புறோம் என்று ரோஹித் சொல்ல.. நாளைக்கு நம்ம வீட்டுக்கு மதியம் சாப்பிட வந்திருங்க என்று மூவரையும் பார்த்து ராணா சொன்னார்.
இருக்கட்டும் சார்.. உங்களுக்கு எதுக்கு சிரமம் என்று சுக்லா சொல்ல..
இதுல என்ன இருக்கு சுக்லா சார்.. தம்பி வேற நம்ம ஊருக்கு புதுசா வந்து இருக்காரு, நான் அவரை கவனிக்கல’ன்னா அது நல்லாருக்குமா சொல்லுங்க என்று ராணா கேட்க..
சரி சார் நாங்க வந்திடுறோம் என்று சொல்லிவிட்டு அங்கு இருந்து கிளம்பினார்.
ராணா சார் ரொம்ப நல்லவரா இருக்காரு, பார்த்து கொஞ்ச நேரம் கூட ஆகல.. அதுக்குள்ள என்ன பத்தி எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சுக்கிட்டு… அவர் வீட்டுக்கு நாளைக்கு சாப்பிட வேற வர சொல்லி இருக்காரு என்று பெருமையாக சுக்லாவிடம் கூறினான் ரோஹித்.
அதுதான் ராணா சார்….எல்லாரையுமே ஒன்னா பார்க்கக் கூடியவர். அவருக்கு இந்த மேல இருக்கிறவன், கீழே இருக்கிறவன் அப்படி எல்லாம் பார்க்க தெரியாது என்றான் பலராம்.
இவர்கள் பேசிக் கொண்டே ஊரை சுற்றி வந்தனர். அன்றைய தினம் அந்த ஊரை சுற்றிபார்ப்பதிலும், ஊர் மக்களை பார்ப்பதிலும் சென்றது. இரவு உணவை முடித்து விட்டு சுக்லா வீட்டில் இருந்த தன் பெட்டி படுக்கைகளை எடுத்து கொண்டு தன்னுடைய வீட்டிற்க்கு வந்து எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு நிம்மதி பெருமூச்சு விட்டு பாயை விரித்து படுத்தான் ரோஹித். எப்போது தூங்கினான் என்றே அவனுக்கு தெரியாது.
காலையில் யாரோ அவனது வீட்டின் கதவை வேகமாக தட்டும் சத்தம் கேட்டது.
தூக்கத்தில் இருந்த ரோஹித் திடுக்கிட்டு எழுந்தான்.. யாரு இவளோ அவசரமா கதவை தட்டுறது, மணி வேற 5.30 தான் ஆகுது என்று தனக்கு தானே பேசிக்கொண்டே படுக்கையை விட்டு எழுந்தான். அந்த சத்தம் ஒருவித பயத்தை ஏற்படுத்தியது.
மீண்டும் கதவை தட்டும் சத்தம் கேட்க…
சீக்கிரம் லாரியை விட்டு கீழ இறங்குடா என்று லாரி கதவை தட்டியவாறே போலீஸ் ஒருவர் ராஜபாண்டியை பார்த்து கத்தினார்.
அப்போது வேலு.. உன் கதையை கொஞ்சம் நிப்பாட்டு.. அங்க வேற எவனோ கதவை தட்டுறான் என்று ரோஹித்தை பார்த்து கூறினான்.
இவர்கள் பேசிக்கொண்டே வர.. ராஜபாண்டி ஹரியானாவில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் எல்லைக்குள் நுழைந்திருந்தார். அங்கு தான் காவல் சோதனை சாவடியில் இருந்த ஒரு போலீஸ்காரர் கத்திகொண்டே லாரியை கதவை தட்டினார்.
இதுதான் ஹரியானா ராஜஸ்தான் பார்டர்.. இருங்க நான் வந்துடுறேன், நீங்க கீழ இறங்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு லாரியிலிருந்து இறங்கி சென்றார் ராஜபாண்டி.
தொடரும்…
Leave a comment