Chapter 10

கடற்கரை பகுதி, கோவா 🏖️
அந்த கடற்கரை பகுதியில் அமைந்து இருந்த தேவாலய மணி ஓங்கி ஒலித்தது. அந்த சத்தம் கேட்டு மரங்களில் கூடி இருந்த பறவைகள் எல்லாம் சிறகடித்து பறந்தன. அலையோசை, மணியோசை, பறவைகளின் கூக்குரல்கள் என அந்த ரம்மியமான காலை பொழுது அழகாக இருந்தது.
அன்றைய செய்தித்தாளை படித்தவாறு வீட்டின் வெளியே அமைந்திருந்த திண்ணையில் அமர்ந்து இருந்தார் ஃபெர்னாண்டஸ்.
“குட் மார்னிங் டாடி” என்று சொல்லியவாறே டீ கப்புடன் வந்து அமர்ந்தாள் பூஜா.
“குட் மார்னிங் டியர்.. என்ன சீக்கிரமே எந்திரிச்சிட்ட? அதும் இன்னைக்கு சண்டே வேற” என்று டீ குடித்து கொண்டே கேட்டார் ஃபெர்னாண்டஸ்.
“தூக்கம் வரல டாடி.. அதான்” என்றாள் பூஜா.
டீ குடித்துகொண்டே வீட்டின் வெளியே பார்த்து கொண்டிருந்தாள். அவள் பார்வையில் யாரையோ எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பது தெரிந்தது. அதை ஃபெர்னாண்டஸ் கவனிக்கவில்லை, செய்தி தாளில் மூழ்கி இருந்தார்.
கோவா நகரில் சொந்தமாக ஹோட்டல் வைத்திருக்கும் ஃபெர்னாண்டஸிர்க்கு பூஜா ஒரே மகள்.. சிறு வயதிலேயே தனது அம்மாவை இழந்தவள். ஃபெர்னாண்டஸ் தான் அன்போடும், அக்கறையோடும் வளர்த்து வந்தார். இப்போது பூஜா வளர்ந்து விட்டாள், கல்லூரி படிப்பை முடித்து விட்டு அப்பாவிற்கு துணையாக ஹோட்டலை கவனித்து வருகிறாள். மேடு ஏற்றத்தில் அமைந்து இருந்த இவர்கள் வீட்டின் வழியே தான் கடற்கரைக்கும், அங்கு உள்ள தேவாலயத்திற்கும் , கடைகளுக்கும் செல்ல முடியும். ஞாயிறு வேளைகளில் ஏராளமான உள்ளூர் மக்களும், சுற்றுலாவாசிகளும், சிறுவர்களும் கடலில் ஆட்டம் போட வந்து செல்வார்கள்.
நீச்சல், மீன் பிடித்தல், போட்டிங், ஸர்ஃபிங் (அலைச்சறுக்கு) என எல்லாவித நிகழ்வுகளும் அந்த கடற்கரையில் காணலாம். ஸ்ர்ஃபிங் செய்ய சில இளைஞயர்கள் வருவார்கள். அவர்கள் கடலில் லாவகமாக செல்வதை சிறுவர்கள் வேடிக்கை பார்த்து ரசித்து கொண்டு இருப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து எப்படியாவது தாங்களும் ஸர்ஃபிங் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சிறுவர்கள் அந்த இளைஞயர்களை சுற்றி வருவார்கள். அதில் ஒருவனை மட்டும் எப்போதும் சில சிறுவர்கள், இளசுகள் சுற்றியே இருக்கும்.
ஃபிட்டான உடல், ஸ்டைலிஷான தோற்றம், மாடர்ன் உடை என பார்ப்பதற்கு சினிமா ஹீரோ போல் இருப்பான், அவனை சுற்றி இருப்பவர்களை எப்போதும் கலகலப்பாக வைத்திருப்பான் அந்த இளைஞன், அவன் பெயர் ஜெரோம்.
தினமும் காலை வேளையில் அந்த கடற்கரை பகுதிக்கு வருவான் ஜெரோம். அங்குள்ள தேவாலயம் சென்றுவிட்டு கடலில் இறங்குவான். விடுமுறை நாட்களில் எப்போதும் கடலிலும், கடற்கரையிலும் தான் இருப்பான். அவனுடைய பொழுதுப்போக்கே ஸர்ஃபிங் தான்.
எப்போதும் கடற்கரையில் பொழுதுபோக்கி விட்டு அந்த பகுதி சிறுவர்களுடன் பேசியவாரு பூஜாவின் வீட்டை தாண்டி தான் செல்வான் ஜெரோம்.
அவளின் வீட்டை ஜெரோம் கடக்கும்போது எல்லாம் சரியாக வீட்டின் வெளியே நின்றவாறு அவனை எதேற்சையாக பார்ப்பது போல் பார்ப்பாள் பூஜா.
அந்த தேவாலயத்தில் தான் முதன் முதலில் ஜெரோமை பார்த்தாள் பூஜா. அன்று முதல் அவன் மேல் விருப்பம் ஏற்பட்டது. இதுவரை பேசியது இல்லை என்றாலும் தினமும் அவனை மறக்காமல் பார்த்து விடுவாள், எப்படியாவது அவனுடன் பேசி விட வேண்டும் என்றும் தோன்றும் போது எல்லாம்.. நாமளே நேரடியா போய் பேசினா நம்மள பத்தி தப்பா நினைப்பான் என்று அவளே எண்ணிக்கொண்டு பேசாமல் இருப்பாள் பூஜா. அதையும் தாண்டி அவனிடம் பேசலாம் என்று நினைத்து செல்லும்போது எல்லாம் அவனை சுற்றி சிறுவர்கள் , நண்பர்கள் இருப்பார்கள், அதனால் திரும்பி வந்துவிடுவாள்.
ஆனால் அவனை பார்க்காமல் இருந்தது இல்லை.. ஒரு நாள் பார்க்காமல் விட்டாலும் இல்லை அவன் அங்கு வரவில்லை என்றாலும் இவளுக்கு என்னவோ போல் இருக்கும். அன்றும் அப்படித்தான் அவன் வருகைக்காக காத்திருந்தாள் பூஜா.
அவள் காத்திருந்த நேரம், ஜெரோம் அந்த வழியாக வந்தான். அப்போதும் அவன் கூடவே சிறுவர்களும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவளின் பார்வை ஜெரோம் மீதே இருந்தது.
“பூஜா.. என் கார் சாவியை எடுத்துட்டு வாம்மா” என்று பூஜாவின் அப்பா பெர்னாண்டஸ் கேட்டார்.
“இருங்கப்பா எடுத்து தரேன்” என்று சொல்லிவிட்டு சாவியை எடுக்க வீட்டின் உள்ளே சென்றால் பூஜா.
அவள் சென்ற அந்த சமயத்தில் வெளியே எதோ ஒரு சத்தம் கேட்க.. வேகமாக வெளியே வந்து பார்த்தாள் பூஜா.
வீட்டின் வெளியே சற்று தள்ளி நிறுத்தி இருந்த இவர்களின் கார் கண்ணாடியை யாரோ தட்டிவிட்டு சென்றதில் கார் அலாரம் அடிக்க தொடங்கியது. அந்த தெருவில் வேகமாக சென்ற ஒரு இளைஞன் பைக்கில் செல்லும் போது காரை தட்டிவிட்டு நிக்காமல் சென்று விட்டான்.
சத்தம் கேட்டு பூஜாவின் அப்பா திரும்பி பார்க்கும்போது அந்த பக்கமாக ஜெரோம் நின்று கொண்டிருந்தான்.
அதை பார்த்தவர்.. ஜெரோம் மற்றும் அந்த சிறுவர்கள் தான் அவரின் காரை எதோ செய்துவிட்டதாக எண்ணி வேகமாக கத்திகொண்டே ஜெரோமை நோக்கி வந்தார். அங்கு அவர் காரின் பக்கவாட்டு கண்ணாடி உடைந்து இருந்தது. அதை பார்த்து கோவபட்ட ஃபெர்னாண்டஸ், ஜெரோமிடம் சண்டைக்கு சென்றார்.
“என் இப்படி பண்ண? எதுக்காக என் கார் கண்ணாடியை உடைச்ச? ” என்று கோவமாக கேட்க..
“இதை நான் உடைக்கல சார்… எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. பைக்குல போன ஒருத்தன் தான் இதை பண்ணிட்டு போயிட்டான்” என்று ஜெரோம் சொன்னதை காதில் வாங்காமல் கத்திக்கொண்டு இருந்தார் ஃபெர்னாண்டஸ்.
சிறிது நேரத்தில் சலசலப்பு ஏற்பட.. பூஜா அங்கு வந்து தன் அப்பாவை சமாதானம் செய்து அழைத்து சென்றாள்.
அங்கு இருந்து செல்லும்போது.. ஜெரோமுடம் சாரி என்பது போல் முகபாவனை செய்தாள் பூஜா.
அதை புறிந்தவாரு தலையசைத்தான் ஜெரோம்.
பின்னர் மற்றொரு நாளில் இருவரும் தேவாலயத்தில் சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்தது.
உங்க கிட்ட கொஞ்சம் பேசலாமா என்று கேட்டவாறு தன் பேச்சை ஆரம்பித்தாள் பூஜா.
“சாரி அன்னைக்கு என்ன எதுன்னு தெரிஞ்சிக்காம அப்பா உங்களை திட்டிட்டார்.. அவருக்கு பதிலாக நான் உங்க கிட்ட சாரி கேட்டுகிறேன்” என்றாள் பூஜா.
“பரவால பூஜா.. நான் அதை அன்னைக்கே மறந்துட்டேன். அது சரி, ஒருவழியா தைரியம் வந்திருச்சு போல என்கிட்ட பேசுறதுக்கு?” என்று கேட்டான் ஜெரோம்.
“ஆமா என் பேர் எப்படி தெரியும் ? நான் இவளோ நாள் பேச முயற்சி பண்ணேன்னு உனக்கு முன்னாடியே தெரியுமா?” என்று ஆச்சரியத்தோடு கேட்டாள் பூஜா.
“எனக்கு உன் பேரும் தெரியும், தினமும் நீ என்னை உங்க வீட்டை கடந்து போறப்போ பார்க்குறதும் எனக்கு தெரியும் பூஜா” என்றான் ஜெரோம்.
ஜெரோம் சொல்வதை கேட்டு வெட்கத்தில் தலை குனிந்து நின்றாள் பூஜா. ஆனாலும் தன்னை பற்றி எப்படி தெரியும் என்று குழம்பி போனாள்.
“பூஜா ரொம்ப யோசிக்க வேண்டாம்.. எனக்கு உன்னை ஒன்றரை வருஷம் முன்னாடியே தெரியும். உன்னை முதல் முதலா காலேஜ்ல பார்த்தப்போவே எனக்கு உன்னை பிடிச்சு போச்சு” என்றான் ஜெரோம்.
“காலேஜ்ல தெரியுமா ? நீ யாரு? உன் பேரு என்ன ? என்னை எப்படி தெரியும்? எந்த டிபார்ட்மெண்ட்ல நீ படிச்ச ? உன்னை காலேஜ்ல நான் பார்த்ததே இல்லையே” என்று கேள்வியாக கேட்டு கொண்டு போக..
வெயிட் வெயிட்.. நான் சொல்றேன் பூஜா..
என் பேரு ஜெரோம்.. நீ படிச்ச காலேஜ்ல தான் நானும் படிச்சேன். நான் ஃபைனல் இயர் கடைசி செமஸ்டர்ல தான் உன்னை பார்த்தேன். அப்போ நீ செகண்ட் இயர் படிச்சிட்டு இருந்த. நீ என்னை பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. காலேஜ் முடிஞ்ச பிறகு என்னால உன்னை பார்க்க முடியல.. விசாரிச்ச அப்போ தான் உன் வீடு இங்க இருக்கிறது தெரிஞ்சது. உன்னை பார்க்க வர சாக்குலதான் நான் தினமும் இங்க கடலுக்கு வரேன். உனக்காக தான் ஸர்ஃபிங் கூட கத்துக்கிட்டேன். எனக்கு உன்னை டிஸ்டர்ப் பண்ண விருப்பமில்லை, உனக்கு என் மேல விருப்பம் வந்து நீயா என்கிட்ட பேச வரணும்ன்னு காத்திருந்தேன். இன்னைக்கு அது நடந்திருச்சு. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் பூஜா, நீ தப்பா எடுத்துகிட்டாலும் பரவால்ல.. எனக்கு இதுக்கு மேல வேற சான்ஸ் கிடைக்குமான்னு தெரியல..
“ஐ லவ் யூ பூஜா.. லவ் யூ சோ மச்.. நான் உன்கூட சேர்ந்து வாழனும்னு ஆசை படுறேன்” என்று வேகமாக சொல்லி முடித்தான் ஜெரோம்.
இதை எதிர்பாராத பூஜா.. என்ன செய்வது என்று தெரியாமல்.. ” நான் வரேன் ஜெரோம்” என்று சொல்லிவிட்டு வேகமாக வீட்டிற்க்கு சென்றாள்.
அவள் செல்வதை ரசித்து பார்த்து கொண்டு இருந்தான் ஜெரோம்.
அன்று முழுவதும் அவளின் எண்ண ஓட்டத்தில் ஜெரோம் கூறிய வார்த்தைகள் மட்டுமே கேட்டு கொண்டிருந்தன. அவனே எல்லாவற்றையும் பேசியதும், சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவன் தன் காதலை சொன்னது பூஜாவுக்கு என்னவோ போல் இருந்தது. இதை ஏற்றுகொள்ளலாமா வேண்டாமா என்று குழம்பி கொண்டாள். ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும், நம்மளை பற்றி தெரிந்து இருக்கும் ஜெரோமை பற்றி தனக்கு எதும் தெரியவில்லை என்று தன்னை தானே நொந்துகொண்டாள் பூஜா. அன்றைய இரவு அவளுக்கு தூக்கம் வரவில்லை, சந்தோசமும், வெக்கமும் சேர்ந்து ஒரு புதுவித உணர்ச்சியால் தவித்தாள். மறுநாள் ஜெரோமிடம் தன் காதலை வெளிப்படுத்த தயாராகி கொண்டு கண் அசந்தாள் பூஜா.
ஆனால் மறுநாள் நடந்ததே வேறு…
ஜெரோமை சந்திக்க தேவாலயம் சென்றாள் பூஜா, ஆனால் அங்கு ஜெரோம் தென்படவில்லை. கடற்கரைக்கு சென்று பார்த்த போதும் அவனை அங்கு காணவில்லை. அருகில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவர்களிடம் விசாரித்து பார்த்தாள் பூஜா. இன்னைக்கு ஜெரோம் அண்ணன் வரல என்று அந்த சிறுவர்கள் கூறினார்கள்.
எங்க போயிருப்பான்.. நேத்து தான் பாத்தோம்.. அவன்தான் நம்மகிட்ட பேசினான்.. இன்னைக்கு நாம பேசலாம்ன்னு வந்தா அவனை காணுமே. டேய் ஜெரோம்.. என்னடா இப்படி புலம்ப விட்டுட்டு போயிட்ட. எங்கடா போன என்று அந்த கடற்கரை மணலில் நின்று கடற்கரையை பார்த்தவாறே தனக்கு தானே பேசிக்கொண்டு இருந்தாள் பூஜா.
அன்று முழுவதும் ஜெரோம் வரவில்லை, அவனை நினைத்தவாறே அந்த நாளை கடந்தாள். மறுநாளும் அவன் வரவில்லை, ஒரு வாரம் ஆன போனதும் அவன் அங்கு வரவில்லை. பயந்து போனால் பூஜா, எதிர்மறை எண்ணங்கள் அவளை சூழ்ந்தன. இருந்தாலும் ஏதும் ஆகியிருக்காது என்று தன்னை சமாதானம் படுத்தி கொண்டு இருந்தாள்.
அவனுக்கு ஏதும் ஆகியிருக்க கூடாது என்று வேண்டிக்கொள்ள தேவாலயம் சென்றாள் பூஜா. அவள் அங்கு அமர்ந்து பிரார்த்தனை செய்து முடித்துவிட்டு கண் திறக்கும்போது அவள் அருகே ஜெரோம் அமர்ந்திருந்தான்.
மெல்லிய குரலில் “ என்னை ரொம்ப மிஸ் பண்ண போல…ஒரு வாரமா என்னை விசாரிச்சுட்டு இருந்தியாமே. என்ன விஷயம் “ என்று ஒன்றும் தெரியாது போல் கேட்டான் ஜெரோம்.
அதிர்ச்சியாய் பார்த்த அவளின் முகம் அடுத்த விநாடியே கோவமாக மாறியது.
“டேய் எருமை.. எங்கடா போய் தொலைஞ்ச? நீ வாட்டுக்கு அன்னைக்கு என்னை லவ் பண்ணுறேன்னு சொல்லிட்டு போயிட்ட நான் அன்னைக்கு இரவு முழுவதும் தூங்காம அதையே நினைச்சுட்டு அடுத்த நாள் உன்கிட்ட வந்து பேசலாம்னு வந்தா.. உன்னை ஒரு வாரமா காணோம். நான் எவ்வளவு தேடினேன் தெரியுமா ? என்ன இப்படி தவிக்க விட்டு போயிட்டல்ல.. என்கிட்ட பேசாத” என்று சொல்லிவிட்டு கோபமாக தேவாலயம் விட்டு வெளியே சென்றாள் பூஜா.
ஜெரோம் அவளை கூப்பிட.. காதில் வாங்காமல் சென்று கொண்டே இருந்தாள் பூஜா. அவன் எவ்வளவோ முறை “சாரி சாரி..” என்று கெஞ்சி பார்த்தும் பூஜா செவி சாய்க்கவில்லை.
அவள் செல்வதை பார்த்து..” உன்னோட கோவம் போகிற வரைக்கும் நான் உனக்காக காத்திருக்கேன். உனக்கு கோவம் எப்போ போகுதோ அப்ப வந்து என்கிட்ட பேசு… நான் இனிமே இங்க தான் இருப்பேன்..” என்று அழுத்தமாக கூறினான் ஜெரோம்.
ஜெரோமை கண்டுகொள்ளாமல் கோவமாக போய் விட்டாள் பூஜா. அவளின் கோவம் வெகுநாள் நீடிக்கவில்லை.. மறுநாளே ஜெரோமை பார்க்க வந்தாள். இருவரும் கடற்கரை மணலில் அமைதியாக ஏதும் பேசாமல் அமர்ந்து இருந்தனர்.
“சரி எனக்கு புரியுது, நீ என் மேல கோவமா இருக்க.. நான் சொல்லாம போனது என்னோட தப்புதான். என்னோட சூழ்நிலை அப்படி.. அன்னைக்கு நான் உன்ன பார்த்து ஐ லவ் யூ’ன்னு சொல்லிட்டு போன கொஞ்ச நேரத்துல எனக்கு முக்கியமான ஒரு வேலை வந்துருச்சு. அதனால நான் அப்படியே கிளம்பி சென்னை போயிட்டேன். உன்னோட நம்பர் என்கிட்ட கிடையாது, அதனால உன்கிட்ட என்னால தகவல் சொல்ல முடியல” என்றான் ஜெரோம்.
“அப்படி என்ன முக்கியமான விஷயம்?” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியவாறு கேட்டாள் பூஜா.
“நானும் என்னோட பிரண்ட்ஸும் சேர்ந்து ஒரு ப்ராஜெக்ட் பண்ணிருந்தோம், அந்த ப்ராஜெக்ட் விஷயமா சென்னைக்கு போக வேண்டியதா இருந்துச்சு. நாங்க சென்னை போய்ட்டு அந்த கம்பெனி மேனேஜர் கிட்ட எங்க ப்ராஜெக்ட்ட விளக்கி சொன்னோம். அவங்களுக்கு அது பிடிச்சு போய் எங்களோட ப்ராஜெக்ட்ட செலக்ட் பண்ணிட்டாங்க. அந்த ப்ராஜெக்ட்டை இன்னும் முழுசா விளக்கிட்டு வர கொஞ்சம் லேட் ஆயிருச்சு” என்று தன் பக்க நியாயத்தை சொன்னான் ஜெரோம்.
புரிந்து கொண்ட அவள்.. முதல் வேலையாக அவன் மொபைல் நம்பரை வாங்கி கொண்டாள்.
“என் நம்பருல இருந்து உனக்கு மிஸ்டு கால் கொடுத்திருக்கேன். இனிமே எங்கயாவது போறதுக்கு முன்னால என்கிட்ட சொல்லிட்டு போ..” என்றாள் பூஜா.
“சரி டி..” என்றான் ஜெரோம்…
“என்ன சொன்ன ?” என்று பூஜா கேட்க..
“சாரி சொன்னேன்” என்று ஜெரோம் சிரிக்க…
“போடா எருமை” என்று சொல்லி அவன் கைகளை இறுக பற்றி தோளில் சாய்ந்துகொண்டாள் பூஜா.
அவர்கள் காதல் பயணம் அந்த கடற்கரையில் இருந்து ஆரம்பமானது.. நாட்கள் செல்ல செல்ல அவர்கள் இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தனர். இனி எல்லாம் ஜெரோம் தான் என்று அவளும், எல்லாமே பூஜா தான் என்று அவனும் நினைக்க தொடங்கினர். ஒரு நல்ல நாளில் ஜெரோமை தன் அப்பாவிடம் அறிமுகம் செய்து வைக்க காத்திருந்தாள் பூஜா.
**
கொடைக்கானல் போலீஸ் ஸ்டேஷனில்..
“ஏட்டையா.. அந்த ரசீதுல இருக்க மெக்கானிக் ஷாப் ஃபோன் பண்ணி எதும் தகவல் கிடைக்குதான்னு பாருங்க … கோவா போலீஸ்க்கு ஃபோன் பண்ணி.. அங்க லோக்கல் ஸ்டேஷன்ல பொண்ணு மிஸ்ஸிங் கேஸ் எதும் இருக்கானு விசாரிங்க. விடியிறதுக்கு முன்னால எனக்கு அந்த பொண்ணை பத்தின விவரம் எல்லாம் வேணும்” என்றார் இன்ஸ்பெக்டர் வரதன்.
“சரிங்க ஐயா.. அப்புறம் ஐயா இந்த பசங்க மேல FIR போட்டுடலாமா?” என்று கேட்டார் பெருமாள்.
“அவங்களை விசாரிச்சு பார்த்ததுல அவங்க மேல தப்பு இருக்க மாதிரி தெரியல பெருமாள். பசங்க கண்ணுல பயம் தான் தெரியுது, அது தப்பு பண்ண பயமில்லை.. நாம இப்படி மாட்டிக்கிட்டோமே அப்படிங்கிற பயம் தான் இருக்கு. அவங்க தங்கி இருந்த ரிசார்ட், டோல் கேட் கேமரால எல்லாம் பார்த்தப்போ இவங்க மூனு பேர் மட்டும் தான் இருக்காங்க, இன்னைக்கு காலையில தான் இங்க கொடைக்கானல் வந்து இருக்காங்க. காலையில அந்த பொண்ணு பத்தின விவரம் கிடைக்குற வரை கொஞ்சம் காத்திருப்போம், அதுக்கு அப்புறம் இவங்கள பார்த்துக்கலாம், ஏற்கனவே ஒரு கேஸ்ல தப்பே பண்ணாத ரெண்டு பசங்க மேல சரியா விசாரிக்காம கேஸ் போட்டு அவங்க வாழ்க்கை என்னால கெட்டு போனதை இன்னும் என்னால மறக்க முடியல. இந்த பசங்களும் ரொம்ப சின்ன பசங்களா இருக்காங்க, இவங்களை பத்தி சென்னையில இருக்க நம்ம ஆட்கள் கிட்ட விசாரிக்க சொல்லி இருக்கேன். அதுனால எல்லாத்தையும் நாளைக்கு பார்த்துக்கலாம் , பசங்க பத்திரமா இருக்கட்டும், நான் வீட்டுக்கு போயிட்டு கொஞ்சம் தூங்கிட்டு வரேன்” என்று ஏட்டு பெருமாளிடம் சொல்லி விட்டு கிளம்பி சென்றார் இன்ஸ்பெக்டர் வரதன்.
இவர்கள் இருவரும் பேசியதை ஸ்டேஷனில் உள்ள ஒரு கான்ஸ்டபிள் ஒட்டு கேட்டுவிட்டு.. வரதன் கிளம்பி சென்றதும் ஃபோனில் யாரிடமோ அங்கு நடந்ததை மொத்தமாக சொல்லிக்கொண்டு இருந்தார்.
“நான் தான் சொன்னேன்ல.. ஒரு அடையாளம் கூட இல்லாம எல்லாத்தையும் அழிச்சிட்டு பாடியை டிஸ்போஸ் பண்ணுங்கன்னு.. இப்போ பாருங்க, அந்த பொண்ணு டிரஸ்ல எதோ ரசீது கிடைச்சு, அதை வச்சு இப்போ விசாரணை ஆரம்பிச்சுட்டாங்க.. இதுக்கு மேல என்னால எதும் பண்ண முடியாது, இனிமே நானும் உங்களுக்கு ஃபோன் பண்ண மாட்டேன், நீங்களும் எனக்கு தயவு செஞ்சு ஃபோன் பண்ணாதிங்க” என்று சொல்லிவிட்டு அந்த கான்ஸ்டபிள் ஃபோனை வைத்தார்.
“இங்க நடந்ததை யாருகிட்ட சொல்லிக்கிட்டு இருக்கீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா மிஸ்டர்…” என்று பின்பக்கத்தில் இருந்து இன்ஸ்பெக்டர் வரதன் குரல் ஒலித்தது.
தொடரும்…