
கொடைக்கானலில்…
வீட்டுக்கு போயிட்டு வரேன் என்று ஏட்டு பெருமாளிடம் சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கிளம்பிய இன்ஸ்பெக்டர் வரதன் தன் மொபைல் போனை ஸ்டேஷனில் விட்டுவிட்டு சென்றது நியாபகம் வந்து மீண்டும் ஸ்டேஷன் வந்தார்.
அப்போது ஸ்டேஷனில் உள்ள ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் யாரிடமோ ஃபோனில் ஏட்டும், இன்ஸ்பெக்டரும் பேசிய விஷயத்தை கூறிக்கொண்டு இருந்ததையும், இதற்கு மேல் அவருக்கு ஃபோன் செய்ய வேண்டாம் என்று சொன்னதையும் இன்ஸ்பெக்டர் வரதன் கேட்டுவிட்டு.. “ஹலோ மிஸ்டர்.. யார்கிட்ட இவளோ ரகசியமா தகவல் சொல்லிகிட்டு இருக்கீங்க ? என்று கேட்டார்.
ஃபோன் பேசிவிட்டு மூச்சுவிட்டு கொண்டிருந்த அந்த கான்ஸ்டபிள்.. வரதன் குரல் கேட்டதும் திடுக்கிட்டு திரும்பி பார்த்தார்.
அங்கு இன்ஸ்பெக்டர் வரதன் சிரித்தவாறு நின்று கொண்டிருந்ததை பார்த்த கான்ஸ்டபிளுக்கு தூக்கி வாரிப்போட.. பயத்தில் எதும் பேசாமல் உறைந்து போய் நின்றார்.
“சொல்லுங்க சுந்தரம் சார்.. யார்கிட்ட இவளோ பதட்டமாக இங்க பேசுன விஷயத்தை சொல்லிகிட்டு இருக்கீங்க “ என்று கேட்டார் வரதன்.
இன்ஸ்பெக்டர் வரதன் குரல் கேட்டு பெருமாளும் அங்கு வந்து “என்னாச்சு அய்யா?” என்று கேட்க..
சொல்லுங்க சுந்தரம் என்று வரதன் மீண்டும் கேட்டார்.
அது வந்து அய்யா…என்று கான்ஸ்டபிள் சுந்தரம் இழுத்தார்.
ஒன்னுமில்லை பெருமாள்.. நாம அந்த இறந்து போன பொண்ணு பூஜா பத்தி பேசிட்டு இருந்ததை கேடுட்டு சுந்தரம் சார் யார்கிட்டயோ ரகசியமா ஃபோன்ல தகவல் சொல்லிகிட்டு இருக்காரு. அதான் யாரு என்னன்னு கேட்டுகிட்டு இருக்கேன் என்றார் வரதன்.
சுந்தரம் சார் என்ன இதெல்லாம் ? யார்கிட்ட இதை சொல்லிகிட்டு இருக்கீங்க என்று பெருமாளும் கேட்க..
பயத்தில் தயங்கியவாறே நின்றார் சுந்தரம்.
சார் இந்த ஸ்டேஷன்லயே நீங்க தான் பெரியவரு.. உங்க வயசுக்கு மரியாதை குடுத்து அமைதியா பொறுமையா கேட்டுகிட்டு இருக்கேன். இன்னும் ரெண்டு வாரத்துல உங்களுக்கு ரிட்டையர்மெண்ட் வேற இருக்கு. இதுலாம் மனசில வச்சிட்டு சொல்லுங்க என்றார் வரதன்.
என் வீட்டுல சொல்லிகிட்டு இருந்தேன் என்று சுந்தரம் மலுப்ப..
இதுசரிபட்டு வராது… சுந்தரம் சாரை உள்ள கூட்டிட்டு போய் உங்க ஸ்டைல்ல விசாரணை பண்ணுங்க.. அப்படியே கமிஷனர் ஆபிஸ்ல தகவல் சொல்லிடுங்க என்றார் வரதன்.
சார் அதெல்லாம் வேண்டாம்.. நான் உண்மையை சொல்லிடுறேன். R R ரியல் எஸ்டேட் கம்பெனி ஓனர் ரத்தினம் இருக்காருல, அவர்கிட்ட தான் சொல்லிட்டு இருந்தேன் என்றார் சுந்தரம்.
அவருக்கும் இந்த கேஸ்க்கும் என்ன சம்பந்தம், அவர்கிட்ட ஏன் இதெல்லாம் சொல்லிட்டு இருந்தீங்க ? இந்த கொலைக்கும் அவருக்கும் சம்பந்தம் இருக்கா? என்று கேட்டார் வரதன்.
அவருக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இல்லை, ஆனா…
என்ன ஆனா…? சொல்லுங்க என்று கேட்டார் பெருமாள்.
அவர் பையன் அர்ஜுன் தான் இதுல சம்பந்தப்பட்டு இருக்கான் என்றார் சுந்தரம்.
என்ன சார் சொல்லுறீங்க ? உங்களுக்கு விஷயம் தெரிஞ்சும் சும்மா இருக்கிங்க? அப்போ இந்த பசங்களுக்கும் அந்த பையன் அர்ஜூனுக்கும் தொடர்பு இருக்கா? நீங்க எதுக்கு இங்கு நடக்கிற விஷயத்தை எல்லாம் போன்ல சொல்லிட்டு இருக்கீங்க என்று கேட்டார் வரதன்.
இல்லை சார்.. இந்த பசங்களுக்கும், அவனுங்களுக்கும் உண்மையா சொல்லப் போனா எந்த தொடர்பும் இல்லை சார். அந்த பொண்ணு கொலைக்கு காரணம் அர்ஜுனும் அவன் கூட இருந்த பிரண்ட்ஸ் தான். அவங்க நாலு பேர் சேர்ந்து அந்த கொலையை பண்ணிட்டு அதை மறைக்கிறதுக்கு இந்த பசங்களோட கார்ல அந்த பொண்ணோட பிணத்தை போட்டுட்டாங்க.
என்ன சொல்றீங்க சுந்தரம்? அப்போ கொலை பண்ண அந்த பசங்களை புடிச்சு கைது பண்ணாம நீங்க ஏன் அந்த ரத்தினம் கிட்ட பேசிட்டு இருக்கிங்க? வாங்க இப்போவே போவோம், அந்த பசங்களை இங்க கூட்டிட்டு வந்து விசாரிப்போம், இந்த அப்பாவி பசங்களை நாளைக்கு வெளிய விட்டுடலாம் என்று வேகமாக சொன்னார் வரதன்.
ஐயா அதுல தான் ஒரு பிரச்சனை இருக்கு என்று இழுத்தார் சுந்தரம்.
அதுல என்ன பிரச்சனை..அதான் சம்பந்தப்பட்ட ஆள் யாருன்னு தெரிஞ்சு போச்சு… அந்த பசங்க எங்கேயும் தப்பிச்சு போக முன்னாடி நாம நேரடியா போய் கைது பண்ணலாம் என்று வரதன் கூறினார்.
இல்லங்க ஐயா..அந்த நாலு பசங்கள்ல என் பையன் சிவாவும் ஒருத்தன். அந்த அர்ஜுன் தான் அந்த பொண்ணை கொலை பண்ணிருக்கான். உண்மையை வெளிய சொல்லிக்கூடாதுன்னு என் பையனையும், அவன் கூட இருக்க இன்னும் ரெண்டு பசங்களையும் அந்த ரத்தினம் மிரட்டி வச்சிருக்கார். என் பையன் இதுல சம்பந்தப்பட்டு இருக்கிறதுனால ரத்தினம் அவர் சொல்லுற மாதிரி கேட்க சொல்லுறார். அவர் சொல்லுற மாதிரி கேட்கவில்லை என்றால் என் பையன் வாழ்க்கையும் சேர்ந்து கெட்டு போயிடும்ன்னு சொன்னார். எனக்கும் என் பையனை காப்பாத்திக்க வேற வழி தெரியல..அதனாலதான் அவங்களுக்கு உதவுவதற்கு நான் ஒத்துக்கிட்டேன் என்றார் சுந்தரம்.
சுந்தரம் சார் எனக்கு ஒண்ணுமே புரியல…என்ன நடந்துச்சுன்னு கொஞ்சம் விலாவாரியா சொல்லுறீங்களா என்று கோபமாக கேட்டார் வரதன்.
சொல்லுறேன் ஐயா …நேத்து நைட்டு அர்ஜுனும் என் பையன் சிவா அவனுடைய ஃப்ரெண்ட்ஸ் இன்னும் ரெண்டு பேருன்னு.. நாலு பேரா சேர்ந்து மதுரைக்கு போயிட்டு திரும்ப இன்னைக்கு அதிகாலையில கொடைக்கானல் மலையில ஜீப்ல வந்துட்டு இருந்திருக்காங்க. அர்ஜுன் தான் ஜீப் ஓட்டிக்கிட்டு போயிருக்கான். ஆனா இதுல நாலு பேருமே குடிச்சிட்டு வண்டி ஓட்டி இருக்காங்க. அவங்க ஜீப்ல மழை பாதையில வேகமா போயிட்டு இருந்தப்போ முன்னாடி பைக்ல ஒரு பையனும் , பொண்ணும் போய்கிட்டு இருந்திருக்காங்க. ரோட் வளைவுல ஜீப்பை திருப்புறப்போ ஜீப் கட்டுப்பாட்ட இழந்து அந்த பைக்ல மோதுனதுல பின்னாடி உட்கார்ந்திருந்த அந்த பொண்ணு மட்டும் தடுப்பு கம்பியில மாட்டி அங்க ரோட்டுல விழுந்திருக்கு, ஆனா அந்த பையன் தான் பைக்கோட சேர்ந்து தடுப்பை தாண்டி பள்ளத்துல விழுந்துட்டான். இந்த பசங்க போதையில இருந்தாலும் உடனே காரை விட்டு இறங்கி போய் பார்த்து இருக்காங்க.
இருட்டுல அந்த பைக்கோ அந்த பையனோ எதுவுமே தெரியல, அந்த பொண்ணு அரை மயக்கத்தில் இருந்து இருக்கு. எங்க அந்த பொண்ணு அப்படியே விட்டுட்டு போனா தங்களை காட்டிக் குடுத்துடும்னு பயந்து போய் போதையில் இருந்த இவனுங்க அந்த பொண்ணையும் வண்டில தூக்கிப்போட்டு அவனுங்க தங்கியிருந்த ரிசார்ட்டுக்கு கொண்டு போய்ட்டாங்க. அங்க போன இடத்துல அந்த பொண்ணு மயக்கத்தில் இருந்து முழிச்சு அவங்ககிட்ட இருந்து தப்பிக்க பாத்திருக்கு. தெரியாம விபத்து நடந்திருச்சு, இதை மறந்திரு, நாங்க எவ்வளோ பணம் வேணும்னாலும் கொடுக்கிறோம்ன்னு அப்படி இப்படின்னு சொல்லி அந்த பொண்ணு கிட்ட பிரச்சினையை பெருசு பண்ண வேண்டாம்னு சொல்லி பார்த்திருக்காங்க. எந்த பொண்ணுதான் இதுக்கு ஒத்துக்கும்? அவங்க சொன்னதை கேட்க முடியாது, கண்டிப்பா நான் போலீஸ் கிட்ட சொல்லியே ஆவேன், என்னோட காதலனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல.. நான் உடனே அங்க போகனும், என்ன விடுங்கன்னு அந்த பொண்ணு சொல்லியிருக்கு. ஆனா போதையில இருந்த இந்த பசங்க அந்த பொண்ணு சொன்னதை கேட்காம.. இவளை இப்படியே விட்டா நம்மள காட்டி குடுத்திருவான்னு சொல்லி… அந்த பொண்ணை ஒரு ரூம்ல தள்ளி கதவை பூட்டி வச்சிட்டாங்க. உள்ள இருந்து எந்த சத்தமும் அந்த ரிசார்ட்டை விட்டு வெளிய போகாது. இந்த ரிசார்ட் அர்ஜுன் அப்பா ஓடது. இந்த ரிசார்ட்டை சுத்தி நூறு மீட்டருக்கு வேற எந்த வீடுகளும் கிடையாது. அதுனால இவங்களுக்கு அங்க எந்த பிரச்சனையும் கிடையாது. அந்த தைரியத்துல அடுத்து என்ன பண்ணலாம்னு நாலு பேரும் மாறிமாறி குடிச்சிட்டே யோசிக்க போதை அதிகமாகி அப்படியே படுத்துட்டாங்க. நடுவுல அந்த பொண்ணு கதவை தட்டுற சத்தம் கேட்டு அந்த அர்ஜுன் முழிச்சு பார்த்திருக்கான். சரி ஒரு முறை போய் பேசி பாக்கலாம்னு கதவை திறந்திருக்கான். ஆனா அந்த பொண்ணு இவனை தள்ளி விட்டு தப்பிச்சு போக பார்த்திருக்கு போதையில் இருந்த அர்ஜுன் நிலை தடுமாறி அங்க இருந்த டைனிங் டேபிள் மேலே போய் விழுந்திருக்கான். அந்த பொண்ணு அங்க இருந்து ஓடியிருக்கு. என்ன செய்யன்னு தெரியாம… டேபிள்ல இருந்த கத்தியை எடுத்துட்டு போய் அந்த பொண்ணை வளைச்சு பிடிச்சு கழுத்துல கத்தியைய வச்சி மிரட்டி இருக்கான். அந்த பொண்ணு அடம்பிடிக்கவும், போதையில வெறி ஏறி அந்த பொண்ணை கழுத்தை அறுத்து இருக்கான்.
அந்த பொண்ணு ரத்த வெள்ளத்து அங்கயே விழுந்திருக்கு. இவனும் போதையில அங்கயே படுத்து தூங்கிட்டான். போதை தெளிஞ்சு இந்த பசங்க முழிச்சு பார்த்தப்போ தான் அந்த பொண்ணு செத்துப்போய் அங்க ரத்த வெள்ளத்துல இருக்கிறதை பார்த்திருக்காங்க. அர்ஜுன் கையில கத்தியோட இருந்ததை அப்போதான் உணர்ந்து இருக்கான். என்ன பண்ணன்னு தெரியாம அர்ஜுன் அவன் அப்பா ரத்தினமுக்கு போன் பண்ணி நடந்த விஷயத்தை சொல்லி இருக்கான். அப்போதான் ரத்தினம் என் பையனும் அவங்க கூட இருக்க விஷயம் தெரிஞ்சு எனக்கு கால் பண்ணி அவர் சொல்லுற மாதிரி நடந்துக்க சொன்னாரு. இதை பத்தி எனக்கு ஏதும் தெரியாத மாதிரி நடந்துக்க சொன்னாரு.
நான் இதுல வேற எதுவும் பண்ணல ஐயா.. அந்த பொண்ணு உடம்பை மட்டும் எந்த ஒரு தடயமும் இல்லாம டிஸ்போஸ் பண்ண சொன்னேன், அவ்ளோதான் நான் பண்ணேன். இதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியல. அந்த பொண்ணு ஓட உடம்பு எப்படி இந்த பசங்களோட கார்ல வந்துச்சுன்னு தெரியல. எனக்கு இங்க ஸ்டேஷன் வந்து நீங்க பேசுனது கேட்டதுக்கு அப்புறம் தான் நிலைமை கையை மீறி போனது தெரிஞ்சது. நீங்க இருந்த செக் போஸ்ட் பக்கத்துல எங்கயோ தான் அந்த அவங்க தங்கியிருந்த ரிசார்ட் இருக்கு, எனக்கு தெரிஞ்ச வரை நீங்க கார செக் பண்ணுற சமயத்துல யாருக்கும் தெரியாம அந்த பொண்ணோட உடம்பை இந்த பசங்க கார்ல வச்சிருப்பாங்கன்னு எனக்கு தோணுது. என்னை மன்னிச்சிருங்க ஐயா , என் மேல எந்த நடவடிக்கையும் எடுத்துறாதீங்க, நான் என் பையன் வாழ்க்கையை காப்பாத்த தான் நான் உண்மையை மறைச்சிட்டேன் என்று சொல்லி கெஞ்சினார் சுந்தரம்.
சுந்தரம் சொல்வதைக் கேட்டு தலையை பிடித்துக் கொண்டு உட்கார்ந்தார் வரதன்.
பெருமாள்… இதுக்கு மேல தாமதிக்க வேண்டாம் வாங்க அந்த பையனை போய் அரெஸ்ட் பண்ணலாம் என்றார் வரதன்.
ஐயா நம்ம கிட்ட இப்ப எந்த ஆதாரமும் இல்லை, இப்ப நாம எப்படி அவங்கள அரெஸ்ட் பண்றது என்று வரதனிடம் பெருமாள் கேட்டார்.
அதெல்லாம் பாத்துக்கலாம், நீங்க வாங்க முதல்ல அந்த ரத்தினம் வீட்டுக்கு போவோம் என்று வரதன் சொல்ல.. அந்த சமயம் வரதனின் மொபைல் போன் ஒலித்தது. அதை அட்டென்ட் செய்து பேசினார்.
என்ன வரதன் சார்.. என்னை பாக்க தான் கிளம்பிட்டு இருக்கீங்க போல? இங்க வந்து என்ன பார்க்கிறதுக்கு முன்னால உங்க நம்பருக்கு ஒரு வீடியோ அனுப்பி இருக்கேன். அதை கொஞ்சம் பாருங்க என்று மறுமுனையில் பேசியவர் சொல்ல…
ஹலோ …முதல்ல நீங்க யாரு பேசுறது என்று கேட்க ?
என்ன தெரியலையா வரதன் சார்… ரத்தினம்.. மதுரை R.N ரத்தினம் .. இப்போ நியாபகம் வந்திருக்கும்னு நினைக்கிறேன். சரி நீங்க முதல்ல வீடியோ பாத்திட்டு வாங்க என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார் வரதன்.
உடனே தனக்கு வந்த அந்த வீடியோவை ப்ளே செய்து பார்த்தார் வரதன். அந்த வீடியோவில் இருந்த காட்சியை பார்த்து அதிர்ச்சி ஆனார் வரதன்.
என்னாச்சு ஐயா என்று கேட்டவாறு பெருமாள் அந்த வீடியோவை வாங்கி பார்த்தார்.
செக் போஸ்டில் வரதன் மற்றும் பெருமாள் அந்த பசங்களின் காரில் இருந்து பூஜாவின் பிணத்தை கைப்பற்றும் காட்சி அதில் பதிவாகி இருந்தது.
என்ன சார் இது.. இதை எப்படி வீடியோ எடுத்தாங்க ? இப்போ என்ன பண்ணுறது என்று வரதனிடம் கேட்டார் பெருமாள்.
அதான் பெருமாள் எனக்கும் ஒன்னும் புரியல என்று வரதன் சொல்லி கொண்டிருக்கும்போது மீண்டும் செல்போன் ஒலித்தது. அட்டென்ட் செய்து ஹலோ என்றார் வரதன்…
வீடியோ பார்த்திருப்பிங்கன்னு நினைக்கிறேன்.. இப்போ என்ன பண்ணனும்ன்னு உங்களுக்கே தெரியும். அந்த பசங்க மேல கேசை எழுதி முடிச்சு விடுங்க. உங்களுக்கும், உங்க ஸ்டேஷனுக்கும் என்ன பண்ணனுமோ அதை நான் பண்ணுறேன். இல்லை முடியாது, நான் வந்து உங்க பையனை விசாரிப்பேன் அப்படி இப்படின்னு கிளம்பினிங்கனா.. நான் இந்த வீடியோவை வெளிய விட்டுருவேன். உங்ககிட்டயும் வேற ஆதாரம் இல்லை, அதுனால பார்த்து நடந்துக்கோங்க. நல்லா யோசிச்சு நாளைக்கு விடியுறதுக்கு முன்னாடி ஒரு முடிவை எடுங்க என்று சொல்லிவிட்டு போனை வைத்தார் ரத்தினம்.
இந்த ரத்தினம் குரலை எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு…இந்த ரத்தினம் யாரு ? மதுரை தொகுதி முன்னாள் எம்எல்ஏ பரமசிவத்தோட வலது கையா இருந்தானே… அந்த ரியல் எஸ்டேட்க்காரன் ரத்தினம். அவனையா சொல்லுறீங்க என்று சுந்தரத்திடம் கேட்டார் வரதன்.
ஆமா ஐயா.. அந்த ரத்தினம் தான், இப்போ R.N.ரத்தினம்ன்னு அடையாளத்தோட மதுரையில ரொம்ப பெரியா ஆளாயிட்டான். இங்க கொடைக்கானல்ல ஏகப்பட்ட இடம் அவனுக்கு இருக்கு, அதுல ஒரு ரிசார்ட்ல தான் இந்த பசங்க சம்பவம் பண்ணிருக்காங்க என்றார் சுந்தரம்.
இப்போ என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று தெரியாமல் முழித்தார் வரதன். தப்பு பண்ண பசங்களை தண்டிக்காம, இந்த அப்பாவி பசங்க மேல நடவடிக்கை எடுக்க வரதனுக்கு மனமில்லை. அதே சமயம் அர்ஜுன் மற்றும் அவன் நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க தகுந்த ஆதாரம் ஏதுமில்லை. இப்போ என்ன பண்ணுறது பெருமாள் என்றார் வரதன்.
இந்த ரத்தினத்தை எனக்கு முன்னாடியே தெரியும் பெருமாள். கொஞ்ச வருஷம் முன்னால நான் மதுரை ஒத்தக்கடை ஸ்டேஷன்ல இருந்தப்போ ரியல் எஸ்டேட் பிரச்சனையில எனக்கும் இந்த ரத்தினத்துக்கும் மோதல் வந்திச்சு. அப்போவே இந்த ஆளை உள்ள வச்சிருக்கணும், எம்எல்ஏ தயவுல என்கிட்ட இருந்து தப்பிச்சிட்டான். அவனை பகைச்சிக்கிட்டதுனால என்னை வேற ஊருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணாங்க. பல வருஷம் அப்புறம் இப்பி திரும்ப மாட்டி இருக்கான், அவனை இந்தமுறை ஜெயிலுக்கு அனுப்பாம விடமாட்டேன். நாளைக்குள்ள கண்டிப்பா ஒரு முடிவு எடுத்தே ஆகணும், இந்த பசங்களையும் காப்பாற்றி ஆகணும். இனிமே இது என்னோட சொந்த வழக்கு என்றார் வரதன்.
நாளைக்கு அந்த பொண்ணு பத்தின டீடெயில்ஸ் , போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் எல்லாம் வரட்டும், அதுக்கு முன்னாடி இந்த பூஜாவை கூட வந்த அந்த பையன் பள்ளத்தாக்குல விழுந்ததா சொன்னாங்க, அது எந்த இடம் என்ன ஏது, அந்த பையனுக்கு என்ன ஆச்சுன்னு முதல்ல விசாரிங்க. நான் வெளிய போயிட்டு வரேன், இந்த பசங்களை விடுவிக்கிற வரை நமக்கு தூக்கம் கிடையாது பெருமாள். சுந்தரம் உங்களுக்கு சேர்த்து தான் சொல்லுறேன், உங்க பையன் வாழ்க்கையை காப்பாத்தனும்னா நீங்க ஒரு நியாயமான போலீசா நடந்துக்கோங்க. பெருமாள் கூட போய் என்ன ஏதுன்னு பாருங்க, இங்க நடந்த விஷயம் நம்ம மூனு பேருக்குள்ள மட்டும் இருக்கட்டும். வேற யாருக்கும் தெரிஞ்சா உங்க மேல தான் நான் நடவடிக்கை எடுப்பேன். சுந்தரம் சார், உங்களுக்கு இன்னும் ரெண்டு வாரத்துல பணி நிறைவு இருக்கு, அது நியாபகத்துல இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்பி சென்றார் வரதன்.
என்ன சுந்தரம் சார்.. இப்படி பண்ணிட்டீங்க.. சரி வாங்க நாம போய் அந்த பையனை பத்தி விசாரிசிட்டு வருவோம் என்றார் பெருமாள்.
சுந்தரம் ஏதும் பேசாமல் அமைதியாக பெருமாளுடன் கிளம்பி சென்றார்.
இங்கு நடந்தது பற்றி அறியாத சஞ்சய், செல்வா, விக்கி மூவரும் விசாரணை அறையில் “இந்த பிரச்சினையில இருந்து நாம எப்படி தப்பிக்க போறோம்னு தெரியலையே” என்று தங்களுக்குள் புலம்பி கொண்டு இருந்தார்கள். இந்த ராகுல் எங்க போய் இருப்பான் ? என்ற கேள்வியும் அவர்களுக்குள் மீண்டும் மீண்டும் எழுந்து கொண்டே இருந்தது.
கண்டிப்பா நம்மள ராகுல் வந்து தான் இந்த பிரச்சினையில இருந்து வெளிய கூட்டின்னு போவான் என்று செல்வா சொல்ல…
அவன் நொட்டுவான்…. டிராஃபிக் போலீஸை பார்த்தாலே பதறி ஓடுவான், இதுல அவரு வந்து நம்மள காப்பாத்துவாராம். அவன் எந்த பள்ளத்துல தொங்கிட்டு இருக்கானோ என்றான் விக்கி.
ஆனால் ராகுலையே யாராவது ஒரு ஆள் காப்பாற்ற வேண்டும் என்ற சூழ்நிலையில் தான் ராகுல் மயங்கிய நிலையில் கிடந்தான்.
டேய் இந்த பையன் நம்ம பண்ண விஷயத்தை பார்த்துட்டான்.. அதுனால இவனை என்ன பண்ணணும்னு தெரியும்ல.. பாத்து பண்ணிவிடுங்க என்று ராகுலை தலையில் கட்டையால் அடித்த ஆள்..அவனது கூட்டாளிகளிடம் சொன்னான்.
தெரியும்ங்க.. நாங்க பாத்து பண்ணிடுறோம், நீங்க கிளம்புங்க என்று கூட்டாளி ஒருவன் சொன்னான்.
“டேய் அவனை போடுறா”…என்று குரல் ஒலித்தது…
தொடரும்..
Leave a comment