ராசுக்குட்டியின் சிவராத்திரி

சூரியன் மெல்ல உதித்து தன் கதிர்களால் வெளிச்சத்தை பரப்பி கொண்டிருந்தது. பறவை கூட்டங்கள் வானத்தில் சுற்றி கொண்டு இருந்தன. சேவல் கூவும் சத்தமும், வீட்டின் கதவை திறக்கும் சத்தமும் ஒரு சேர அமைய வெளிக்கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் விசாலம். வீட்டினுள் இருந்து சுப்ரபாதம் ஒலித்து கொண்டு இருந்தது. வாசலை பெருக்கி தண்ணீர் தெளித்து கோலமிட்டு சாணி பிள்ளையார் பிடித்து கோலத்தின் நடுவே வைத்து அதன் மேல் செம்பருத்தி பூவை சொருகி வைத்துவிட்டு உள்ளே சென்றாள். வீட்டின் வெளியே எரிந்து கொண்டு இருந்த மின்விளக்கு வெளிச்சத்தில் வாசர்கோலம் பளிச்சிட்டது. இவை அனைத்தும் சேர்ந்து அந்த காலை வேளை ரம்மியமாக காட்சியளித்தது.  

விசாலம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள், நல்ல அசந்து தூங்கிக் கொண்டிருந்த ராசுகுட்டியை தட்டி எழுப்பி விட்டாள். ராசுகுட்டிக்கு பிடிக்காத பாடல் என்றால் அது சுப்ரபாதம்தான், தூக்கத்தை கலைக்கும் அந்த சத்தத்தை காலை வேளையில் கேட்கும் போது அவனுக்கு கோவம் கோவமாக வரும்.  டேய் ராசு.. சீக்கிரம் எந்திரிடா குலதெய்வம் கோவிலுக்கு போகனும் என்று சொன்னதுதான் தாமதம்,  படக்கென விழித்து உட்கார்ந்து கொண்டான். என்ன அதிசயம் எப்பவும் உன் கூட அரை மணி நேரம் போராடனும் அப்பதான் எந்திரிப்ப இப்ப கோவிலுக்கு போறோம்னு சொன்னதும் உடனே எந்திரிச்சிட்டியே. சரி சரி சீக்கிரம் போய் பல்லை விளக்குடா, வெந்நீர் கொதிச்சுட்டு இருக்கு என்று சொல்ல கண்களை நன்றாக விரித்துக்கொண்டு படுக்கையில் இருந்து துள்ளிகுதித்து எழுந்து முக மலர்ச்சியுடன் கொல்லை பக்கம் சென்றான் ராசுகுட்டி.

எப்பவும் குலதெய்வம் கோவிலுக்கு செல்வது என்றால் அவனுக்கு கொள்ளை பிரியம், உடனே கிளம்பிவிடுவான். அங்கு அவனுக்கு பிடித்த நிறைய விஷயங்கள் இருக்கின்றன. விசாலாட்சி காபி போட்டு வருவதற்கு முன்னர் ராசுகுட்டி குளித்து முடித்து வந்து பூஜையறையில் நின்று கொண்டு அங்கு இருக்கும் சிவலிங்கத்தை தொட்டு வணங்கி விட்டு வந்து உட்கார காபி டம்ப்ளரை ராசுவிடம் குடுத்தாள்.  காபியை குடித்துக்கொண்டே அய்யா எங்கம்மா என்று கேட்டான். நிலத்துக்கு தண்ணி பாய்ச்ச வயக்காட்டு பக்கம் வர போயிருக்காருடா. இன்னைக்கு எதுக்கும்மா கோவிலுக்கு போறோம் ? இன்னைக்கு சிவராத்திரி டா… இன்னைக்கு குலதெய்வத்தை போய் வேண்டிக்கிறது ரொம்ப விசேஷம்.  நம்ம ஜனம் எல்லாம் அங்க வருவாங்க. உங்க பெரியப்பா, பெரியம்மா, வள்ளியும் கூட கோவிலுக்கு வருவாங்க.

பெரியம்மா வராங்களா..ஹைய்யா அப்போ சர்க்கரை பொங்கல் சாப்பிடலாம், வள்ளி அக்கா கூட விளையாடலாம். சரி சரி..அங்க டேபிள் மேல உனக்கு போட்டுக்க துணி எடுத்து வச்சிருக்கேன், நீ சீக்கிரம் காபி குடிச்சிட்டு போய் துணியை மாத்தி ரெடியாகு. அய்யா இப்ப வந்துருவாக.. வந்ததும் நம்ம உடனே கிளம்பனும். பூஜை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி நாம கோவிலுக்கு போய் சேரனும் என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்றாள் விசாலாட்சி.  

அம்மா நாம கோவிலுக்கு எதுல போறோம் என்று கேட்டான் ராசு. இன்னிக்கு நாம குதிரை வண்டியில போறோம்டா.. தாத்தா குதிரை வண்டி அனுப்பி வைக்கிறேன்னு சொல்லி இருக்காரு. இன்னும் கொஞ்ச நேரத்துல முத்து மாமா குதிரை வண்டியை ஓட்டிட்டு வந்துருவான்னு சொல்ல… குதிரை வண்டியா ..ஐ ஜாலி என்று கத்தி கொண்டு வேகமாக காபியை குடித்து முடித்தான்.  அம்மா எப்பம்மா குதிரை வண்டி வரும் ? என ராசு கேட்க..நீ முதல்ல கிளம்பி கோவிலுக்கு கொண்டு போக தேவையான எல்லாத்தையும் என்கூட இருந்து எடுத்துவை என்று விசாலாட்சி சொல்லிக் கொண்டிருந்தாள்.

இவனுக்கு உற்சாகம் தாங்கவில்லை வேகமாக உடைகளை மாற்றிவிட்டு கண்ணாடி முன்னாடி நின்று தன் தலைமுடியை ஒற்றை கையால் கோதிக்கொண்டு வேகமாக வாசலுக்கு விரைந்தான். குதிரை வண்டியை எதிர்நோக்கி வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்த சமயம் அவன் அய்யா காளையனும் வந்து விட்டார். ஆனால் இவன் அய்யாவை கண்டுக்கவில்லை,  எப்போதும் வெளியே போயிட்டு வந்தால் வேகமாக ஓடி வந்து கட்டி கொள்வான். ஆனால் இன்று எதையும் கண்டுக்காமல் வாசலுக்கும் தெருவுக்கும் இடையே குறுக்கும் நெடுக்குமாக லாந்திக்கொண்டிருந்தான்.

விசாலம் இவனுக்கு என்னடி ஆச்சு…நான் வந்ததை கூட கண்டுக்காம வெளிய லாந்திக்கிட்டு கிடக்கான் என்று கேட்டார் காளையன். நான்தாங்க குதிரை வண்டியில கோவிலுக்கு போறோம்ன்னு சொன்னேன்.. சொன்னதிலிருந்து வண்டி எப்ப வரும் எப்ப வரும்னு என்கிட்ட நச்சரிச்சிட்டே இருந்தான். இவனை பக்கத்துல வச்சுட்டு வேலை பார்க்க முடியாதுன்னு தான் வெளிய வாசல்ல போய் பாருன்னு சொல்லி அனுப்பிவிட்டேன் அதான் அவன் குறுக்க மறுக்க லாந்திட்டு இருக்கான் என்றாள் விசாலாட்சி.

ஓஹ் இதான் விஷயமா… டேய் ராசு குதிரை வண்டி வரும்போது வரும்.. நீ முதல்ல வந்து அம்மாவோட சேர்ந்து எல்லாத்தையும் எடுத்துவை என்ற அதற்றினார் அய்யா. இவனும் வேறு வழியில்லாமல் வீட்டிற்குள் வந்தான், இவன் உள்ளே வரவும் வெளியே வண்டி சத்தம் கேட்க வேகமாக வாசலுக்கு ஓடினான். குதிரை வண்டியை ஓட்டிக்கொண்டு வந்து வாசலில் நிப்பாட்டினான் முத்து.ஒருவித பயம் கலந்த மகிழ்ச்சியுடன் குதிரையை பார்த்து கொண்டிருந்தான். ஏலே.. இங்க வந்து அம்மாக்கு ஒத்தாசை பண்ணுல என்று அய்யா அழைத்ததும் வீட்டிற்குள் வேகமாக ஓடினான். ஹ்ம்ம்…உங்க அண்ணன் அண்ணின்னு இங்க நாம எல்லாம் ஒண்ணா இருந்தவரை நானும் அக்காவும் ஆளுக்கு ஒன்னு செஞ்சு சீக்கிரம் வேலையை முடிப்போம். வள்ளியும் கூடமாட ஒத்தாசை பண்ணுவா. அவ படிப்புக்காக அக்காவும், அத்தானும்  அவ கூடவே போய் திருச்சியில தங்கிட்டாங்க. இப்போ எல்லாத்தையும் ஒண்டி ஆளா நானே பாக்க வேண்டியிருக்கு என்று புலம்பிகொண்டே  பூஜைக்கான பொருட்கள் எல்லாவற்றையும் விசாலாட்சி எடுத்து வைத்தாள்.

வாஸ்தவம் தான்… முன்னாடி எல்லா விஷேச நாட்களுக்கும் ஒண்ணா இருந்து கொண்டாடுவோம். இப்போ எல்லாம் மாறிபோச்சு, சரி அதபத்தி பேசி என்ன ஆகபோது, கிளம்புற சோலிய பார்ப்போம் என்று சொல்லிக்கொண்டே அனைத்தையும் சரி பார்த்துவிட்டு ஒவ்வொன்றாக எடுத்து வண்டியில் ஏற்றி கொண்டிருந்தார் காளையன், ராசுவும் கூட இருந்து எடுத்து வைத்து கொண்டிருந்தான். கிளம்புவோமா விசாலம்… நேரமாகுது, இப்போ கிளம்புனா தான் பூஜைக்கு சரியா போய் சேர முடியும். இந்நேரம் அண்ணன், அண்ணி, வள்ளி கண்ணு மூணு பேரும் ஊருக்கிட்ட நெருங்கிருப்பாங்க, நாம போய் சேருறதுக்கும் அவங்க வரதுக்கும் சரியா இருக்கும் என்றார் காளையன். கிளம்பலாம்ங்க…எல்லாம் எடுத்து வச்சுட்டேன்..நீங்க எல்லாம் சரி பாத்துட்டிங்கள்ல.. அப்புறம் அங்க போய் அது இல்லை இது இல்லைன்னு என்னை கத்த கூடாது என்றாள் விசாலம். அதெல்லாம் சரியா இருக்கு நீ அடுப்பு, விளக்கு எல்லாம் அனைச்சி இருக்கானு பாத்துட்டு கதவை சாத்து.. கிளம்புவோம் என்றார்.

முருகா…நல்ல படியா போய்ட்டு வரணும் என்று பூஜையறையில் வேண்டிக்கொண்டு நெற்றியில் விபூதி, குங்குமத்தை வைத்து கொண்டு வீட்டை பூட்டி விட்டு வெளியே வந்தாள் விசாலம். வண்டியில் முன்னாடி உட்கார அடம்பிடித்து கொண்டு இருந்த ராசுவின் தலையில் ஒரு குட்டு வைத்து நெற்றியில் விபூதியை பூசிவிட்டாள். டேய் ராசு…ஒழுங்கா அடம்பிடிக்காம பின்னாடி என் பக்கத்துல வந்து உட்காரு இல்லைனா உன்னை இங்கேயே விட்டுட்டு போயிடுவோம் என்று காளையன் அதட்ட.. அதைக் கேட்டு மேலும் ஆர்ப்பாட்டம் செய்தான் ராசுக்குட்டி. வேறு வழியில்லாமல்…முத்து அவனை முன்னாடி உன் பக்கத்துல உக்கார வச்சுக்கோப்பா இவன் தொல்லை தாங்க முடியாது, அப்புறம் போகும்போதே அழுதுட்டு இருப்பான் என்றாள் விசாலம். சரிக்கா.. நான் பாத்துக்கிறேன், டேய் ராசு இங்க வா என்று அவனை கூப்பிட்டு தூக்கி தன் பக்கத்தில் உட்கார வைத்துகொண்டான் முத்து. அவனை செல்லம் குடுத்து கெடுக்கிறதே நீதான் விசாலம்..சரி நேரமாகுது.. முத்து நீ  வண்டியை கெளப்புடா கிளம்புவோம் என்றார். குலதெய்வம் கோவிலை நோக்கி குதிரை வண்டி கிளம்பியது.

குதிரை வண்டியில் அமர்ந்தவாறே செல்லும் வழியில் உள்ள ஒவ்வொன்றையும் பார்த்து ரசித்து கொண்டு வந்தான் ராசு. முத்துவுடன் சேர்ந்து அவ்வப்போது ராசு கேட்கும் விசித்திர கேள்விகளுக்கு பதில் கூறி கொண்டே வந்தார்கள் காளையனும், விசாலமும். எட்டையபுரம் வந்து அடைந்த போது அங்குள்ள மகாகவி பாரதியார் மணிபண்டபத்தையும், அங்குள்ள அவரின் சிலையையும் ராசுவிடம் காட்டி… பாரதியார் பற்றி சொல்லி கொண்டே வந்தார் காளையன் . எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டு கொண்டு வந்தான் ராசு.

திடீரென்று அவனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது.. அம்மா குலதெய்வம்ன்னா என்னம்மா என்று கேட்டான். குலதெய்வங்கிறது நம்ம வம்சத்தை காக்குற சாமிடா என்றாள் விசாலம்.

அவங்களுக்கு ஏன் குலதெய்வம்ன்னு பேர் வந்துச்சு என்று மறுபடியும் கேட்டான் ராசு.

குலதெய்வமும் நம்மள மாதிரி சாதாரண மனுஷங்களா பிறந்து மக்களோட மக்களா வாழ்ந்து, மக்கள் குறைகளை, கஷ்டங்களை தீர்த்து  வச்சு அவங்களுக்கு காவல் காத்து நின்னவங்க. அவங்க இறந்தது அப்புறம் அந்த ஆன்மாவை நம்ம சாமியா நினைச்சு வீட்டுல கும்பிடுற ஆரம்பிச்சிடுறோம். ஒவ்வொரு வீட்டுக்கும், ஊருக்கும் இப்படி சில காவல் தெய்வங்கள் இருக்கும், அவங்களை தான் குலதெய்வம்ன்னு சொல்லுவோம். இந்த குலதெய்வங்கள் அந்த குலம் சார்ந்த மக்களை காத்து அருள்வாங்க. நம்ம கும்பிடுற மத்த சாமிகளை விட குலதெய்வதுக்கு வலிமை அதிகம். நாம கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து காக்கிறது குலதெய்வம்தான் என்றாள் விசாலம்.

அப்போ மத்த சாமி எல்லாம் நாம கூப்பிட்டா ஓடி வராதா என்றான் ராசு.

ஏலே..மத்த சாமியும் வரும், ஆனா முதல்ல வரது நம்ம குலசாமிதான் என்று ஆவேசமாக கூறினார் காளையன்.

சரி ஐயா..நம்ம சாமி எப்படி குலதெய்வமா மாறுச்சு என்று மீண்டும் கேள்வியை எழுப்பினான் ராசு.

பலவருஷங்களுக்கு முன்னால நம்ம குலம் சார்ந்த முன்னோர்கள் வெவ்வேறு ஊருகளை தாண்டி கடைசியா இங்க எட்டயபுரம்ல புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்தாங்க. அவங்க எல்லாரும் எட்டையபுரத்துக்கு வருவதற்கு முன்னால ஒவ்வொரு ஊரை கடந்து வரப்போ நிறைய கஷ்டங்களை, இன்னல்களை சந்திக்க வேண்டியதா இருந்துச்சு. அதுல ஒன்னு வழிப்பறி கொள்ளையர்கள். அப்படி ஒரு நாள் நாடோடியா காட்டுப்பகுதியில  இரவு நேரத்துல போய்ட்டு இருந்தப்போ வழிப்பறி கொள்ளையர்கள் இவங்களை சுத்தி வளைச்சு கத்தியை காட்டி மிரட்டி காசு, நகை, உணவு தானியங்கள்ன்னு எல்லாத்தையும் கேட்டாங்க. இவங்க கூட்டத்துல பெண்கள், குழந்தைகள் இருந்ததுனால அவங்க யாருக்கும் ஏதும் ஆகிற கூடாதுன்னு பயந்துட்டே கொள்ளையர்கள் கேட்கிறதை குடுத்துடலாம்னு நினைச்சாங்க. அப்போ அவங்க கூட்டத்தில இருந்து ஒரு பொண்ணு மட்டும் தைரியமா இவங்களை எதிர்த்து குரல் குடுத்தாங்க. அது மட்டுமில்லாம அந்த கொள்ளையர்களை தனியாளா எதிர்த்து தன் உயிரை கொடுத்து போராடி அவனுங்களை கொன்னு அந்த மக்களை காப்பாத்துனா. அவ உயிரை குடுத்து நம்மள எல்லாம் காப்பாத்தி இருக்கா, இனிமே அவதான் நம்ம குலசாமின்னு அந்த மக்கள் நினைச்சாங்க. அந்த பொண்ணு இறந்த இடத்துலயே அவளை அடக்கம் பண்ணி கல் நட்டி தெய்வமா வழிபட ஆரம்பிச்சாங்க. நம்ம பிழைக்க இந்த ஊரு தான் சரியானது அவங்க முடிவு பண்ணி இருந்த ஊருதான் எட்டையபுரம்.

அவங்க எல்லாரும் நேரா எட்டையபுர அரண்மனைக்கு போய் ராஜாவிடம் முறையிட அவரும் அந்த ஊருல இருக்க அனுமதிச்சார். அதுல இருந்த படிச்ச, விவரம் தெரிஞ்ச மக்கள் இருந்தது கேள்விப்பட்டு அவங்களை எட்டயபுர  அரண்மனையில அலுவல் கணக்கு வேலைகளுக்கு மற்ற அரசு வேலைகளுக்குன்னு சேர்த்துகிட்டாரு. அந்த மக்களும் அங்கேயே இருந்து வேலையும் பார்த்து வம்சத்தையும் வளர்த்து வாழ்ந்து வந்தாங்க. ஒவ்வொரு வருஷமும் தவறாம அந்த பொண்ணு இறந்த தினம் அன்னைக்கு பூஜை பண்ணி வழிபட்டு வந்தாங்க. அந்த ஆன்மாவும் அவங்களுக்கு குலதெய்வமா இருந்து எல்லாம் தந்து அவங்க குலத்தை காத்து வந்தாள். நோய், வலி, கஷ்டம்ன்னு எல்லாத்தையும் தீர்த்து வைத்தாள்.

இந்த குலதெய்வத்தை பத்தி கேள்விப்பட்ட ராஜா அதை சோதிச்சுப்பார்க்க நினைச்சார். அவருக்கு கால் வலின்னு பொய் சொல்லி என்னை இந்த வலியில இருந்து காப்பாத்துன்னு அந்த குலதெய்வத்துக்கிட்ட பொய்யா வேண்டிக்கிட்டாரு. சோதிச்சு பார்க்க நினைச்சவருக்கு உண்மையாவே கால் வலி ஏற்பட.. அந்த கோவத்துல அந்த குலதெய்வம் இனி இங்க இருக்க கூடாதுன்னு தன் காவலாளிகளை ஏவி ஊரைவிட்டு தள்ளி வேறு எங்கயாவது கொண்டு போட சொல்லிட்டாரு. என்னை மதிக்காத நம்பாத இந்த ஊருக்குள்ள இனிமே நான் வரமாட்டேன்னு சொல்லி பக்கத்தில இருந்த வேற ஒரு ஊருல எல்லைச்சாமியான கருப்பசாமியின் அடைகளத்துல போய் உக்காந்திருச்சு அந்த குலதெய்வம். இப்படித்தான் நமக்கு குலதெய்வம் வந்துச்சு, இதுதான் காலம்காலமா நம்பப்பட்டு சொல்லப்பட்டு வர கதை என்றாள் விசாலம். இதை அனைத்தையும் ஆர்வமாக கேட்டு வந்தான் ராசு.

இப்படியே மாறி மாறி பேசிக்கொண்டு வந்ததில் நேரம் போனது தெரியவில்லை. இரு பக்க கரிசல் காடுகளுக்கு நடுவே தார் சாலையில் வண்டி சென்று கொண்டிருந்தது, கிட்டத்தட்ட  ஊரை நெருங்கிவிட்டார்கள். இடப்பக்க கரிசல் காட்டுக்கு எதிர் திசையில் வலதுபுறம் ஒரு பெரிய அரச மரம் வீற்றிருக்கும். அது தான் அந்த ஊர் வந்ததுக்கான அடையாளம். அதை உறுதிப்படுத்தும் விதமாக மரத்தின் அருகே சற்று சிதிலமடைந்த நிலையில் சோழபுரம் என்னும் ஊரின் பெயரை தாங்கி நிற்கும் இரும்பு பெயர் பலகை அடிக்கும் காற்றுக்கு ஆடிக்கொண்டிருந்தது. அரச மரத்தை ஒட்டிய மண் சாலை ஊருக்குள் கூட்டி சென்றது.

சோழபுரம், இவர்கள் வசிக்கும் கோவிற்புரியில் இருந்து 20 மைல் தொலைவில் அமைந்துள்ள சிறு கிராமம், மொத்தமே ஐம்பது வீடுகளுக்குள் தான் இருக்கும். ஊருக்கு மேற்கே உள்ள தென்னந்தோப்பு பகுதியில் அமைந்து உள்ள ராக்காயி அம்மன் தான் இவர்களின் குலதெய்வம்.  காளையனின் வம்சா வழியினர் மட்டுமே இங்கு காலம்காலமாக பூஜித்து வருகின்றனர். பொதுவான சாமி அல்லாத பிற குலதெய்வ கோவிலுக்கு மற்றவர்கள் செல்ல மாட்டார்கள். மேலும் ராக்காயி துடியான அம்மன் என்பதால் அவ்வூர் மக்கள் அங்கு பெரும்பாலும் செல்ல மாட்டார்கள்.

மண் சாலையின் இரண்டு புறமும் அமைந்த புளியமரத்தில் ஏராளமான புளியங்காய் காய்த்து தொங்கியது, ராசு அவற்றை வேடிக்கை பார்த்து கொண்டே வந்தான். இரண்டு பக்கமும் மரம் சூழ இருந்ததால் குளுமையாக இருந்தது அந்த சாலை. இவர்கள் குதிரை வண்டியில் செல்வதை ஊர் மக்கள் அங்கங்கே நின்று வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர். அவர்கள் அவ்வாறு பார்ப்பது ராசுவுக்கு கம்பீரமாக இருந்தது. ஒரு நாட்டின் இளவரசன்..இல்லை இல்லை நாட்டாமை சரத்குமார் போல் தன்னை நினைத்து கொண்டு வந்தான். மண் சாலையை கடந்து ஊரின் மய்யத்துக்கு வந்து அங்கேயுள்ள கண்மாய் கரையில் குதிரை வண்டியை நிறுத்தினான் முத்து. அங்கிருந்து அரை மைல் தூரத்தில் கோவில் இருந்தது. முற்செடி நிறைந்த ஒத்தையடி பாதை என்பதால் வண்டி அங்கு செல்லாது. எனவே கண்மாய் கரையில் வண்டியை நிறுத்திவிட்டு பூஜை பொருட்களை எடுத்துக்கொண்டு நடந்து சென்றனர்.

பெரும்பாலான வீடுகள் திண்ணைகளை கொண்டிருந்தன. அதில் வீட்டின் பெருசுகள் பெரிய புட்டிகளை அணிந்தபடி உக்கார்ந்து அன்றைய தினசரிகளில் வந்த செய்தியை புரட்டிகொண்டும், தெருவில் ஆள் நடமாட்டத்தையும் நோட்டமிட்டு கொண்டும் இருந்தனர். ஊர் மக்களில் சிலர் காளையனின் குடும்பத்தை அடையாளம் கண்டு கொண்டு அவர்களை நலம் விசாரித்தார்கள். காளையனும் அவர்களுக்கு சிரித்தபடி பதில் வணக்கம் வைத்துவிட்டு நடந்து சென்றான். செல்லும் வழியில் அந்த ஊரின் தபால்காரர் மணியன் வீட்டை கடந்து செல்லும்போது அவர் பார்த்து விட்டார். காளையா..எப்படியா இருக்க? என்று கேட்டுக் கொண்டே திண்ணையில் உட்கார்ந்து இருந்த மணியன் வெளியே வந்தார்.

நல்லா இருக்கேன்யா..நீங்க எப்படி இருக்கீங்க.. வீட்டம்மா, பிள்ளை குட்டிகள்லாம் நல்லாருக்காங்களா என்று கேட்டான். எல்லாரும் நல்லாருக்கோம்.. எங்க இந்த பக்கம் வரதே இல்லை…குலதெய்வம்ன்னு ஒன்னு இருக்கிறதையே மறந்துட்டீங்களா என்று மணியன் கேட்டு முடிப்பதற்க்குள் விசாலம் குறுக்கிட்டு அண்ணேன் அப்படி சொல்லாதீங்க.. முந்தைய கசப்பான சம்பவத்துனால வர முடியல. நாம இங்க வரணும்னு நினைச்சாலும் ராக்காயி மனசு வைக்கணும்ல…அவ இப்போதான் உத்தரவு குடுத்து இருக்கா..இன்னைக்கு சிவராத்திரி வேற…இதை விட வேற நாள் வேணுமா என்ன.. எல்லா சனத்தையும் இன்னைக்கு இங்க ஒண்ணா பார்த்திடலாம்.. அதான் குடும்பத்தோட வந்தோம், இவுங்க அண்ணன் அண்ணியும் குடும்பத்தோட வந்துட்டு இருக்காங்க என்றாள் விசாலம். அதுவும் சரிதான் அதுக்குன்னு ஒரு நேரம் காலம் கூடி வரணும். உங்க அண்ணன் வீரய்யன் இப்போதான் வந்துட்டு போறாரு. சரி சரி முதல்ல நீங்க வீட்டுக்குள்ள வாங்க.. வந்து இளநீர் குடிச்சுட்டு போலாம் என்றார் மணியன்.

இல்லையா பரவால்ல இருக்கட்டும் ,பூஜைக்கு நேரமாகுது என்று சொல்லி காளையன் கிளம்ப முற்பட..அட அஞ்சு நிமிஷத்துல ஒன்னும் குடி மூழ்கி போய்டாது , அதுமில்லாம பூசாரியே இப்போதான் வந்து இருக்காரு..இன்னும் நேரம் ஆகும், பொறுமையா இளநீரை குடிச்சுட்டே போலாம் என்று சொல்லி மணியன் அழைத்தார். எப்போதும் காளையன் குடும்பம் ஊருக்கு வரும்போது எல்லாம் அவர்களை வீட்டிற்குள் அழைத்து இளநீர் கொடுத்து அனுப்புவது மணியணின் வழக்கம். மணியனின் மனைவி செல்வி வெளியே வந்து காளையனின் குடும்பத்தை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றாள். வாங்கனே..வாங்க அண்ணி.. நாற்காலியில உட்காருங்கா…எல்லாம் எப்படி இருக்கீங்க பார்த்து ரொம்ப வருஷம் ஆகுற மாதிரி இருக்கு இப்பதான் இந்த பக்கம் வர நேரம் கிடைச்சுதா பக்கத்துல தான் இருக்கு ஒரு எட்டு வந்து பார்த்துட்டு போக கூடாதா என்று அவள் பங்கிற்க்கு கேட்க.. என்ன பண்றது இப்பதான் நேரம் அமைஞ்சிருக்கு…முன்னாடி எல்லாரும் ஒன்னா இருந்தப்ப அடிக்கடி வந்து போய்ட்டுருந்தோம். இப்போ ஏதும் விசேஷ நாளா இருந்தா மட்டும் தான் வர மாதிரி ஆகிப்போச்சு என நொந்து கொண்டார் காளையன்.

சரி சரி விடுங்க அண்ணேன்.. இப்போ வந்துட்டிங்கள்ல இதேமாதிரி இனிமே அடிக்கடி வந்து போங்க..ராக்காயி பார்த்துப்பா.. முதல்ல இளநீர் குடிங்க ..நான்பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன்..டேய் சேகரு மூனு இளநீர் வெட்டி சீக்கிரம் எடுத்துட்டு வாடா என்று வீட்டின் வேலையாளை ஏவினால் செல்வி. அவன் வந்து அனைவருக்கும் இளநீரை குடுத்தான்.. எனக்கு பெரிய இளநீர் வேணும் என ராசு கேட்க..அட இவ்ளோநேரம் இவனை கவனிக்கவே இல்லையே..பெரிய இளநீரா ஒன்னு வெட்டி குடுப்பா..பிள்ளை குடிக்கட்டும் என்று மணியன் சொல்லிக்கொண்டே.. என்னடா ராசு எப்படிடா இருக்க.. என்ன தெரியுதாடா நான் தான் மணி மாமா என்றார். நான் நல்லா இருக்கேன் மாமா நீங்க எப்படி இருக்கீங்க என்று கேட்டுக் கொண்டே இளநீரை குடித்தான் ராசுக்குட்டி. பரவால்ல பய நியாபகம் வச்சிருக்கானே..என்னடா படிக்கிற என்று கேட்டார்.. அஞ்சாம் வகுப்பு படிக்கிறேன் மாமா என்று பதில் கூறினான் ராசு.சரி அண்ணே பூஜைக்கு நேரமாகுது.. வீரா அண்ணன் வந்துட்டாகன்னு வேற சொல்றீங்க நாங்க போய்ட்டுவரோம். பூஜையை முடிச்சிட்டு வந்து சாவகாசமா  பேசுறேன் என்று சொல்லிக் கொண்டு கிளம்பினான் காளையன்.

செல்லும் வழியில் அங்கங்கே இருந்த சிதிலமடைந்த காரை வீடுகள் ராசுக்குட்டிக்கு பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது. புதர்மண்டியும், கதவுகள் உடைந்தும் , சுவர்கள் இடிந்தும் நாதியற்று கிடந்த வீட்டின் நிலைகளை பார்த்துக் கொண்டே வந்த ராசு, அம்மா ஏம்மா இந்த வீடு எல்லாம் இடிஞ்சு போய் இருக்கு என்று கேட்டான் ராசு. இந்த வீட்டுல இப்போ யாருமே இல்லைடா ராசு, இங்கிருந்த எல்லாரும் ஊர காலி பண்ணி போய்ட்டாங்க அதான் இப்படி இருக்கு.

ஏன்மா ஊரை காலி பண்ணி போனாங்க ?

இந்த ஊர்ல முன்னாடி பஞ்சம் வந்தப்போ வறுமையினால வாழ வழியில்லாம இந்த வீடுகள்ல இருந்த மக்கள் ஊரை காலி பண்ணி வேற வேற ஊருக்கு வேலை தேடி போய்ட்டாங்க. அவங்க என்ன ஆனங்கன்னு கூட யாருக்கும் தெரியாது. ஆனா அவங்க வாழ்ந்த அடையாளமா இந்த வீடுகள் மட்டும் தான் இருக்கு என்று சொல்லி முடித்தாள் விசாலம். அம்மா அவங்க எல்லாம் திரும்பி வருவாங்களா என்று ராசு கேட்கும் போது, அங்கு நின்று கொண்டிருந்த நாய் புதிய மனிதர்களான இவர்களின் வருகையை பார்த்து குரைக்க…இதை எதிர்பார்க்காத ராசு பயந்து அலறி காளையனின் கைகளை இறுக பற்றிக்கொண்டு பக்கவாட்டில் தயங்கி தயங்கி நடந்து வந்தான் ராசு. அய்யா இருக்கும் தைரியத்தில் பயத்தை வெளிக்காட்டாமல் நாயை முறைத்து கொண்டே வர… நீ தனியா வரப்போ உன்னை கவனிச்சிக்குறேன் என்பது போல் அந்த நாயும் இவனை பார்த்தது, விறுவிறுவென நடந்தான் ராசு.

அங்கிருந்து சிறிது தூரத்தில் பெட்டிக்கடை கிழவியின் கடையை கடந்து சென்ற போது அங்கு கண்ணாடி குடுவையில் இருந்த கலர் கலரான பர்ஃபியும் , அப்பள பூவையும் பார்த்துவிட்டு வாங்கித் தருமாறு காளையனிடம் ராசுக்குட்டி கேட்க..இப்போலாம் ஒன்னும் கிடையாது, கோவிலுக்கு போய் பூஜை முடிச்சுட்டு வரும்போது வாங்கி தரேன் வா என்று காளையன் கூற..இல்லை எனக்கு இப்பவே வேணும் என்று அடம்பிடித்தான் ராசு . ஏலே இப்போ நீ ஒழுங்கா வரியா இல்ல உன்னை இங்கயே விட்டு போகவா அப்புறம் பின்னாடி நாய் தொரத்திட்டு வரப்போகுது என்று பயமுறுத்தினார் காளையன்.

வேணாம் வேணாம் என்று ராசு அலற…பேசாம வாடா என்று விசாலம் அவனை இழுத்து கொண்டு நடந்தாள். முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு நடந்து வந்தான் ராசுகுட்டி. அங்கிருந்து ஒத்தையடி பாதை தொடங்கியது, முற்செடிகள் நிறைந்த பாதையில் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக நடந்து சென்று கொண்டிருந்தனர். சற்று தொலைவில் கோவில் தெரிந்தது, கோவிலை கண்ட ராசுக்குட்டி வேகமாக முன்னோக்கி நடந்தான், ஆவலில் ஓடினான். டேய் ராசு பார்த்து போடா முள்ளு எதுவும் குத்திராம என்று சொல்ல..அதை காதில் வாங்காமல் ஓடிக்கொண்டிருந்தான் ராசு. சொல்லுறதை காதுல வாங்குறானா பாரு என்று விசாலம் திட்டி கொண்டே வந்தாள்.

கோவில் வாசலில் ராசுவின் பெரியம்மா பொங்கல் வைப்பதற்கான வேலைகளை தயார் படுத்திக் கொண்டிருந்தாள். அதை கவனித்த ராசு…பெரியம்மாவை பார்த்த மகிழ்ச்சியில் பெரியம்மா என்று கத்திக் கொண்டே வேகமாக ஓடினான். ராசுவின் குரலை கேட்டு திரும்பிய பெரியம்மா டேய் ராசுகுட்டி வந்துட்டியா டா என்று ராசுவை தூக்கி இடுப்பில் வைத்து கொண்டாள். எப்படிடா இருக்க ராசு , பாத்து எவ்ளோ நாள் ஆச்சு என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே காளையனும், விசாலமும் வந்து சேர்ந்தார்கள். அண்ணி எப்படி இருக்கீங்க ?? அண்ணன், வள்ளி கண்ணு எப்படி இருக்காங்க ?? நீங்க எல்லாம் எப்ப வந்தீங்க என்று அடுக்கடுக்கான கேள்விகளால் விசாரித்தான் காளையன்.

நான் நல்லா இருக்கேன் தம்பி..நாங்க எல்லாரும் நல்லாருக்கோம்..நீங்க எப்படி இருக்கீங்க என்று நலம் விசாரித்தாள். அக்கா பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு என்று விசாலம் சொல்ல.. வாம்மா விசாலம் நல்லா இருக்கியா என்று கேட்டாள் பெரியம்மா. ரொம்ப நாள் ஆச்சு, இன்னைக்கு தான் நாம பார்க்கணும்னு இருக்கு..அது சரி நீ எப்படி இருக்க என்று கேட்டாள் பெரியம்மா. அண்ணன் எங்க அண்ணி என்று கேட்டான் காளையன். இதோ தோப்புக்குள்ள வாழை இலை பறிக்க போய் இருக்காரு என்றாள் பெரியம்மா. பெரியம்மா..வள்ளி அக்கா எங்க என்று ராசு கேட்டுக் கொண்டிருக்கும் போதே ராசுவின் கண்களை கைகளால் வைத்து மறைத்தாள் வள்ளி. வள்ளி அக்கா என்று கத்திக்கொண்டே அவள் கைகளை எடுத்துவிட்டு அவளை திரும்பி பார்த்தான். பெரியம்மா கீழே இறக்கி விட அவனை தூக்கி இடுப்பில் வைத்து இரு கண்ணங்களிலும் மாறி மாறி முத்தமிட்டு கொஞ்சினாள்.

வள்ளி திருச்சியில் கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள். ஒரே பெண் பிள்ளை என்பதால் அவளை தனியாக விடுதியில் அனுப்பி படிக்க வைக்க மனமில்லாமல் மாயனும், அவரின் மனைவியும் திருச்சி   சென்று விட்டனர். அங்கு மாயனின் மனைவிக்கு உரிய விவசாய நிலத்தை கவனித்துக்கொண்டும், வள்ளியின் படிப்பை  பார்த்து கொண்டும் அங்கேயே இருந்தார் மாயன். இதனால் எந்த ஒரு விசேஷ நிகழ்ச்சிக்கும் இவர்களால் குடும்பமாக கலந்து கொள்ள முடியவில்லை. குடும்பத்தின் சார்பாக யாராச்சும் ஒருத்தர் வந்து செல்வர். முன்பு ஒரே வீட்டில் அனைத்துப் பண்டிகைகளுக்கும் ஒன்றாய் இருந்த குடும்பம் தற்போது கால சூழ்நிலையால் அங்கங்கே இருக்கிறார்கள். கோவில் திருவிழா, தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போது மட்டும் ஒன்று கூடுவது தற்போது வழக்கமாகி போய்விட்டது.

அந்த நாட்கள் எப்போது வரும் என்று காத்துக் கொண்டு இருப்பார்கள், பண்டிகைகளுக்கு இரண்டு மூன்று நாட்கள் முன்பே வந்து பண்டிகையை சிறப்பாக கொண்டாடிவிட்டு இரண்டுநாள் கழித்து செல்வார்கள். அந்த நாட்கள் ஒரே களேபரமாக ஜாலியாக இருக்கும். ஆனால் கடந்த இரண்டு வருடமாக எந்த ஒரு விசேஷ நிகழ்ச்சிக்கும் மாயனின் குடும்பத்தாரால் சொந்த ஊருக்கு வர முடியவில்லை. அது போன்ற ஒரு நிகழ்வாக தான் ரொம்ப நாள் கழித்து தற்போது இந்த சிவராத்திரி அமைந்திருக்கிறது. வருடத்தில் ஒருமுறை வரும் சிவராத்திரியை குலதெய்வ கோவிலில் சென்று வழிபடுவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் தவறாமல் வந்து விடுவார்கள். இரண்டு வருடத்திற்கு முன்பு ஏற்பட்ட கோவில்  பிரச்சனைகளால் யாரும் வர முடியாமல் போய்விட்டது, பிரச்சனையில் சுமூக முடிவு ஏற்பட்டு இந்த வருடம் தான் எல்லோரும் ஒன்று கூடி இருக்கிறார்கள்.

காளையனும் விசாலமும் கோவிலின் வெளியே  கையில் அரிவாளுடன் கம்பீரமாக வீற்றிருக்கும் கருப்பசாமியை வணங்கி வேண்டினர். விசாலத்தின் பின்னால் மறைந்து கொண்டே பயத்துடன் கருப்பசாமி சிலையை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டு நின்றான் ராசு. டிவியில் “விடாது கருப்பு” நாடகத்தை பார்த்ததில் இருந்து ராசுவுக்கு கருப்பசாமி என்றாலே பயமாகி போனது. பக்கத்து வீட்டு ப்ரியா அக்காவும் அடிக்கடி இவன் அடம்பிடிக்கும்போதெல்லாம் கருப்பு குதிரைல வந்து உன்னை தூக்கிட்டு போய்டும்.. ஒழுங்கா சேட்டை பண்ணாம இரு என்று பயம் காட்டி வைத்திருந்ததாள். அதற்கு ஏற்றார் போல இவனும் கையில் அரிவாளுடன் இருக்கும் எந்த சாமியை பார்த்தாலும் பயந்து போய் ஒளிந்து கொள்வான்.

ஏலே முன்னால வந்து கருப்பனை கும்பிடு என்று காளையன் கூப்பிட.. அவன் பயந்து போய்ட்டான் சித்தப்பா என்று வள்ளி சொல்லி சிரிக்க.. நீ ஒழுங்கா சேட்டை பண்ணாம இருந்தா உன்னை கருப்பன் ஒன்னும் பண்ண மாட்டாருடா..இங்க வந்து நில்லு என்று அவனை பிடித்து இழுத்தார் காளையன். நான் வரமாட்டேன் என்று ஓடி கோவிலுக்குள் சென்றான் ராசு. இவன் என்ன கருப்பசாமிக்கே இப்படி பயப்படுறான்.. அப்போ ராக்காயி அம்மனை பார்த்தா என்ன ஆவான் என்று பேசிக்கொண்டே கருப்பசாமியை வணங்கிவிட்டு கோவில் உள்ளே சென்றனர்.

அங்கே துடியான சாமியான ராக்காயி அம்மன் கம்பீர தோரணையில் கையில் சூலத்தை ஏந்தி அமர்ந்தவாறு காட்சி அளித்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களிலேயே உக்கிரத்தை காட்டி கொண்டு இருந்தாள், ராக்காயி துடியானசாமி என்றாலும் குலதெய்வம் என்பதால் பயம் கலந்த பக்தியுடன் அவளை இந்த குடும்பத்தினர் வணங்கி வந்தனர். எந்த ஒரு நல்ல காரியம் தொடங்கும் போதும் முதலில் அவளை மனதார வணங்கி அதை ஆரம்பிப்பது தான் வழக்கம். இவர்கள் எண்ணம் போலவே ராக்காயியும் நல்லபடியாக அந்த காரியத்தை நிறைவேற்றி வைப்பாள்.

ராக்காயி அம்மனை தைரியமாக நின்று வணங்கி கொண்டு இருந்தான் ராசு. அவனுக்கு ராக்காயியை விட வெளியே இருக்கும் கருப்பசாமியை பார்த்தால் தான் பயம் வந்து ஒட்டிக் கொள்ளும். எல்லோரும் ராக்காயியை பயபக்தியுடன் வணங்க ராசு மட்டும் குழந்தை ஏதோ பொம்மை பார்ப்பது போலவே பார்த்து நின்று கொண்டிருப்பான். உனக்கு ராக்காயியை பார்த்தா பயமில்லையா என்று கேட்டால் எனக்கு ராக்காயி அம்மனை ரொம்ப பிடிக்கும் என்பான். ராக்காயி அம்மனை காளையனும் விசாலமும் மிகுந்த பக்தியுடன் வணங்கி கொண்டு இருந்தனர். பின்னாலிருந்து குரல் ஒலித்தது.. காளையா எப்படிடா இருக்க என்று கேட்டுக்கொண்டே வீரய்யன் உள்ளே வந்தார். வீரய்யனை பார்த்த மகிழ்ச்சியில் அண்ணா என்று அவரை கட்டி தழுவிக்கொண்டார் காளையன். பார்த்து ரொம்ப நாள் ஆச்சு…எப்படிம்மா இருக்க விசாலம்…நல்லாருக்கேன் அத்தான்..நீங்க நல்லாருக்கிங்களா என்றால் விசாலம். நல்லாருக்கேன்ம்மா என்றார் மாயன். பெரியப்பா எப்படி இருக்கீங்க என்று ராசு கேட்க, வாடா என் தங்கமே என்று ராசுவை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு அவனை கொஞ்சினார்.

கோவில் பூசாரி பூஜைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்தார்.  கோவில் பிரச்சினை முடிந்து இருந்தாலும் இவர்கள் இரண்டு குடும்பத்தை தவிர ஒரு சிலர் மட்டுமே வந்திருந்தனர். முன்பு திருவிழா போல அனைத்து விசேஷ தினத்துக்கும் கூடிய சொந்தங்கள் தற்போது அவரவர் கால சூழ்நிலையில் குலதெய்வ கோவிலுக்கு வருவதையே நிறுத்திவிட்டனர். அவர்களுக்கு தோணும் பட்சத்தில் ஏதோ ஒரு நாளில் வந்து  கோவிலில் பூஜை செய்துவிட்டு செல்கின்றனர். சிவராத்திரி அன்னைக்கு கூட யாரும் வராம இருக்காங்களே என்று வீரய்யனிடம் சொல்லி நொந்து கொண்டான் காளையன்.

சரி விடுடா பாத்துக்கலாம்..வரவங்க வரட்டும், எல்லாத்தையும் ஆத்தா பாத்துக்குவா,தலக்கட்டு நாமளே இப்பதான் வந்திருக்கோம் இனிமே ஒவ்வொருத்தரும் வருவாங்க. முதல்ல கோவிலை எடுத்து கட்டணும்டா காளையா…எனக்கு இது ரொம்ப நாளா தோனிட்டு இருக்கு, வெறும் அம்மன் சன்னதியும் அதை சுத்தி இந்தச்சின்ன பிராகர மண்டபம் மட்டும் தான் இருக்கு…கருப்பன் வேற வெயில்லயும், மழையிலையும் காஞ்சுட்டு இருக்கான். அவனுக்கு ஒரு சன்னதி எழுப்பனும்.. கோவில் பிரகாரத்தை பெருசு பண்ணனும், யாரும் கோவிலுக்கு வாந்தி போனா அவங்க தங்குற அளவுக்காச்சும் மண்டபம் வேணும். சிவராத்திரி அன்னைக்கு கோவில்ல ராத்திரி தங்கி இருந்து விடிய விடிய முழிச்சு இருக்கிறது தான வழக்கம். ஆனா இங்க ஒரு முப்பது பேரு  சேர்ந்தாப்புல தான் உள்ள நிக்க முடியும்..மத்தவங்க வெளிய வெயில்ல நின்னு ஆத்தாள கும்பிடற மாதிரியில ஆகிபோது. இப்படி இருக்கப்போ யாருடா வருவா சொல்லு, எல்லாம் பொழப்பு தேடி ஒவ்வொரு திசைக்கு போய் வாழ்க்கையில முன்னேறி நிக்கிறாங்க. அப்படி இருக்கவங்க எந்த வசதி யும் இல்லாத இந்த இடத்தில வந்து அம்மனை கும்பிட்டு போறதுல விருப்பம் இல்லாம தான் அவங்க தேதிக்கு வந்து ஆத்தாள கும்பிட்டு போறாங்க.

நீங்க சொல்றது சரிதான் அண்ணா, சிவராத்திரியை முடிச்சிட்டு முதல்ல கோவிலை புதுப்பிக்கிற முயற்சியை ஆரம்பிப்போம், நம்ம சனங்க எல்லாருக்கும் ஒரு கடுதாசியை போட்டு விவரத்தை சொல்லி எல்லாருக்கும் பொதுவான ஒரு நாளா பார்த்து வரச்சொல்லி கலந்து ஆலோசிப்போம் அண்ணா என்றான் காளையன். சரிடா தம்பி அப்படியே செஞ்சிருவோம் என்று அமோதித்தார் வீரய்யன்.

இவர்கள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் வெளியே பெரியம்மா சர்க்கரைப் பொங்கல் செய்து கொண்டிருந்தாள். ராசு அருகில் நின்று ஆர்வமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு இருப்பு கொள்ள முடியவில்லை, பொங்கல் பானையை சுற்றி சுற்றி வந்தும், குறுக்கும் நெடுக்குமாக லாந்திக்கொண்டும் இருந்தான். பொங்கல் எப்போ பெரியம்மா தயார் ஆகும் என ராசு நச்சரிச்சிட்டு இருந்தான். அட பரக்காவெட்டி பயலே, கொஞ்சம் அனத்தாம இருடா.. பொங்கல் செஞ்சு சாமிக்கு படச்சு பூஜை பண்ண பிறகுதான் நாம சாப்பிடணும், இல்லாட்டி ஆத்தா கோச்சுக்குவா, நீ அங்குட்டு போய் விளையாடு போ என்று பெரியம்மா விரட்டினாள். இவன் விட்டா இப்போவே பானைக்குள்ள கையைவிட்டு எடுத்து தின்னுருவான் போலயே.. இந்த பயல அங்க கொஞ்சம் கூட்டிட்டு போமா என்று விசாலம் வள்ளியிடம் கூறினாள்.

டேய் ராசு ஏன்டா இப்படி அலையுற..பொங்கல் முழுசா உனக்குத்தான்.. சாமிக்கு படிச்சிட்டு அப்புறமா நாம சாப்பிடலாம் என்றாள் வள்ளி. போக்கா..நீ கேட்டப்பலாம் பெரியம்மா உனக்கு பொங்கல் செஞ்சு கொடுப்பாங்க..பெரியம்மா செய்யுற பொங்கல் தான் எனக்கு பிடிக்கும், அதை சாப்பிடறதுக்கு தான் நான் கோவிலுக்கே வந்தேன் என ராசு சொல்ல.. அடப்பாவி பயலே சாமி கும்பிட வரலயா நீ..பொங்கல் சாப்பிட தான் வந்தியா என்று வள்ளி கிண்டல் செய்ய.. அப்போ நான் வைக்கிற பொங்கல் நல்லா இல்லை..வீட்டுக்கு வா வெழுத்துவிடுறேன் என விசாலம் முறைக்க.. ஏய் சும்மா இருங்களேன்டி ஆளாளுக்கு பிள்ளையை வம்பிழுத்திட்டு இருக்கீங்க, நீ வாடா கண்ணு உனக்கு பெரியம்மா மிட்டாய் தரேன்னு சொல்லி ஆசை சாக்லேட் எடுத்து ராசுவிடம் கொடுத்தாள்.

நீ வைக்கிற மாவிளக்கு தான்ம்மா ரொம்ப பிடிக்கும், அதை எப்பம்மா செய்வ என்று ராசு விசாலத்திடம் கேட்டான். ஏலே அப்போ நீ உண்மையாவே கோவிலுக்கு திங்க தான் வந்திருக்கியாலே என்று பெரியம்மாவும் கிண்டல் செய்ய…பல் இளித்தான் ராசு. சொல்லப்போனால் குலதெய்வம் கோவிலுக்கு போறோம்னு சொன்னதும் ராசு குஷி ஆனத்துக்கு காரணமே இதுதான். பெரியம்மா செய்யும் தித்திப்பான சக்கரை பொங்கல், அம்மா செய்யும் மாவிளக்கு, பம்பு செட்டில் குளியல், தென்னந்தோப்பில் ஆட்டம் என அவனுக்கு பிடித்தமான பொழுதாக இருக்கும்.

டேய் ராசு பம்பு செட்டுல குளிக்கலாமா என்று கேட்டு கொண்டே பெரியப்பா அவனை தோளில் தூக்கிப்போட்டு கூட்டி சென்றார். கோவில் இருக்கும் இடம் மட்டும் பொட்டல் காடு போல இருக்கும், வலது பக்கம் கிணறும் தென்னந்தோப்பும் இருக்கும், பின் பக்கம் வாழை தோப்பு, எதிர்த்திசையில் சூரியகாந்தி தோட்டமும் இருக்கும். தோப்பில் உள்ள பம்பு செட்டில் குளிப்பது என்றால் ராசுவிற்கு அவ்வளவு இஷ்டம். வீட்டில் குளிப்பதற்கு அழும் ராசு, மோட்டார் பம்பு செட்டில் குளிப்பது என்றால் உடனே உற்சாகமாகிடுவான். கோவிலை ஒட்டி உள்ள கிணறும் அதை ஒட்டிய மோட்டார் பம்ப்பும் அதிலிருந்து தென்னந்தோப்புக்கு தண்ணீரும் செல்லும். கிணற்றில் இருந்து தண்ணீர் மோட்டார் மூலம் சிறு தொட்டியில் விழுந்து அதில் இருந்து தென்னந்தோப்பில் உள்ள மரங்களுக்கு தண்ணீர் சென்று சேரும். அந்த சிறு தொட்டியில் உக்காந்து தான் ராசு உட்கார்ந்து குளிப்பான். உடைகளை களைந்து தொட்டி அருகே நின்று கொண்டிருந்த ராசுவை தூக்கி தொட்டிக்குள் எறிந்தார் வீரய்யன். மோட்டார் பம்பில் இருந்து வரும் வேகமான தண்ணீரில் குற்றால அருவியில் குளிப்பது போல் நின்று குளித்து கொண்டு நன்றாக  ஆட்டம் போட்டு கொண்டு இருந்தான் ராசு.

சிறிது நேர குளியலுக்கு பின்பு ஆடைகளை மாற்றி விட்டு தொப்புக்குள் விளையாட சென்றான். அவனுக்கு துணையாக வள்ளியும் உடன் சென்றாள். தொட்டியில் தண்ணீர் நிறைந்து அங்கு அமைத்து வைத்திருக்கும் பாத்தி வழியாக ஒவ்வொரு மரத்திருக்கும் செல்லும். அதில் வள்ளியும், ராசுவும் சேர்ந்து பேப்பர் கப்பல் செய்து கப்பல் விட்டு விளையாடி கொண்டு இருந்தனர். வள்ளி கப்பல் செய்து தண்ணீரில் விட..அதன் பின்னாடியே சென்று பாத்து கொண்டு இருப்பான் ராசு. சில நேரங்களில் செருப்பை கூட தண்ணீரில் மிதக்க விட்டு அது எவ்வளவு தூரம் செல்கிறது என்று பின்னாடியே சென்று பார்ப்பான் ராசு. அவ்வப்போது  தென்னந்தோப்பில் கீழே விழுந்து கிடக்கும் சிறு சிறு இளநீர் கூடுகளை எடுத்து தூரமாக எரிந்து விளையாடுவதும், ஓடிப்பிடித்தும்  விளையாடுவார்கள்.

இவர்கள் கப்பல் விட்டு விளையாடிக் கொண்டிருக்கும்போது மயில் கூவும் சத்தம் கேட்டது. ராக்காயி அம்மன் கோயில் அமைந்துள்ள இடத்தை சுற்றி தென்னந்தோப்புகளும் வாழை தோப்புகளும் இருப்பதால்  இந்த பகுதியில் மயிலின் நடமாட்டம் சற்று அதிகமாக இருக்கும். மயில் கூவும் சத்தம் மட்டுமே கேட்கும் , ஆனால் அதை அவ்வளவு எளிதாக நேரில் பார்க்க முடியாது,  மனிதர்களின் நடமாட்டங்கள் அல்லது சிறு சத்தங்கள் கேட்டாலும் ஓடி ஒளிந்து விடும். மயில் வந்து சென்றதுக்கான அடையாளமாக மயில் இறகுகள் மட்டும் ஆங்காங்கே சிதறி கிடக்கும். மயிலிறகை போட்டி போட்டு எடுப்பார்கள் ராசுவும் அங்குள்ள மற்ற பிள்ளைகளும், சில நேரம் சண்டையும் நடக்கும். மயிலிறகு கிடைக்காத விரக்தியில் சில நேரம் ராசு சோர்ந்து போய் உக்கார்ந்து விடுவான். வள்ளி தான் அவனுக்கு மயிலிறகு கொண்டு வந்து குடுத்து அவனை சமாதானப்படுத்துவாள். “மயிலிறகை நோட்டுப் புத்தகத்தில் வச்சா மயில் குட்டி போடும்” என்று அவன் பள்ளி நண்பன் பாலு சொன்னதை கேட்டு அதை செய்து பார்க்க அம்மாவிடம் கொடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ளுமாறு கூறுவான்.

அன்றும் இவர்கள் தோப்பில் விளையாடி கொண்டிருக்கும்போது மயிலின் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க, அங்கே ஒரு ஆண் மயில் தன் தோகைகளை அழகாக விரித்து இவர்களுக்கு காட்சியளித்தது. அதை பார்த்ததும் ராசுக்குட்டியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, ரொம்ப அழகா இருக்குல என்று வள்ளியிடம் சொல்லி கொண்டு இருந்தான். தூரத்தில் தெரிந்த மயிலை கிட்ட சென்று பார்க்க முற்பட்டபோது வள்ளி அவனை பிடித்து தடுத்தாள்.நீ பக்கத்தில போகாத மயில் சென்று விடும் என்று சொல்ல அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் மெதுவாக அடி எடுத்து வைத்து கிட்ட நெருங்கிக் கொண்டே சென்றான் ராசு. மிக அருகில் சென்றபோது தென்னை மரத்திலிருந்து சிறு தேங்காய் கூடு கீழே விழ அந்த சத்தத்தில் மயில் பதறி போய் தன் தோகையை சிலிர்த்துவிட்டு வேகமாக ஓடி பறந்து சென்றது.

மயில் பறந்த சத்தத்தில் ராசு பயந்து பதறி போய் கீழே விழுந்து அங்கிருந்து வேகமாக ஓடிவந்து வள்ளியை கட்டிக் கொண்டான். இவ்வளவு பயம் இருக்குல அப்புறம் எதுக்கு அது பக்கத்துல போன என்று திட்டிக்கொண்டே ராசுவின் மண்டையில் செல்லமாக ஒரு குட்டு கொட்டினாள் வள்ளி. நான் ஒன்னும் பயப்படல இங்க பாத்தியா எனக்கு என்ன கிடைச்சிருக்கு என்று சொல்லி ராசு வள்ளியிடம் அங்கிருந்து அவன் பொறுக்கி எடுத்து வந்த மயிலிறகை நீட்டினான். வண்ணங்கள் நிறைந்த அந்த மயிலிறகை வாங்கிய வள்ளி அதை  தன் முகத்தில்  படரவிட்டாள்..ராசுவின் காதில் மயிலிறகை விட்டு கூச்சம் காட்ட..சுகமா இருக்கு என்று சொல்லிக்கொண்டே கூச்சத்தில் நெளிந்தான் ராசு. அவனுக்கு இதுபோல் இறகால் கூச்சமிடுவது, தலையை வருடுவது, உள்ளங்காலில் விரலால் சுரண்டுவது போன்றவை ரொம்ப பிடிக்கும். இரவு தூங்கும்போது தலையை வருடிவிட சொல்லி விசாலத்திடம் கேட்பான். விசாலமும் இவனுக்கு எப்போவும் இதே வேலையா போச்சு என்று முணங்கிக்கொண்டே வருடிவிடுவாள்.

சிவராத்திரிக்கு வந்திருந்த மற்ற சொந்த பந்த குடும்பங்களில் உள்ள பிள்ளைகளும் அருகில் இருக்கும் பருத்திகாட்டில் வேலை செய்பவர்களின் பிள்ளைகளும் தென்னந்தோப்பில் விளையாடி கொண்டிருந்தனர். ராசுவும் அவர்களுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அங்கே புதிதாக ஒரு பொண்ணு இவர்கள் அருகில் வந்து நின்றாள்.

யாருமா நீ..உன் பேரு என்ன..எந்த ஊருல இருந்து வந்திருக்க என்று வள்ளி கேட்டாள்.

என் பேரு தர்ஷினி..நான் இந்த ஊருதான் அக்கா.. எங்க அம்மா இங்க தான் பருத்திகாட்டுல வேலை பார்த்துட்டு இருக்காங்க. இங்க பிள்ளைங்க எல்லாம் விளையாடறாங்கன்னு சொல்லிட்டு நானும் விளையாட வந்தேன் என்றாள்.  என்ன படிக்கிற என்று வள்ளி கேட்க நான் இந்த ஊர் ஊராட்சி பள்ளிகூடத்துல அஞ்சாவது படிக்கிறேன் அக்கா என்றாள் தர்ஷினி. ராசுவிற்கு தர்ஷினியை பார்த்ததும் பிடித்து விட்டது, அவனும் அஞ்சாவது தான் படித்து கொண்டு இருந்தான். அங்கே அவன் வயதுக்கு ஒத்த ஆட்கள் யாரும் இல்லை. எல்லோரும் அவனைவிட சிறியவர்களாக இருந்தனர்.. வள்ளியும் பெரியவளாக இருந்தாள். நானும் உங்க கூட சேர்ந்து விளையாடலாமா என்று வள்ளியிடம் தர்ஷினி கேட்க.. அப்போது வள்ளியை பெரியம்மா கூப்பிட…டேய் ராசு இவளை உன்கூட விளையாட்டுக்கு சேர்த்துக்கோ நான் போய்ட்டு வரேன் என்று சொல்லிவிட்டு வள்ளி சென்றாள்.

வா தர்ஷினி நாம போய் விளையாடலாம் என்று ராசு கூட்டி கொண்டு சென்றான். அவர்கள் மற்ற சிறு பிள்ளைகளோடு சேர்ந்து கண்ணாமூச்சி ஆட்டம், ஓடி பிடித்து விளையாடுவது,  திருடன் போலீஸ் என விளையாடிக் கொண்டிருந்தனர். அங்கே தர்ஷினியுடன் விளையாடிக் கொண்டிருந்தததில் நேரம் போனதே தெரியவில்லை. இதே வேளையில் பெரியம்மா பொங்கலும் வைத்து முடித்து விட்டாள், பூஜைக்கான ஏற்பாடுகளும் முடிந்து விட்டன. ஏலே ராசு சாமி கும்பிட வாடா.. பூஜை பண்ண போறாங்க என்று விசாலம் அங்கிருந்தபடியே கூப்பிட… நான் போயிட்டு சாமி கும்பிட்டு வரேன்..நீயும் வரியா என்று தர்ஷினியை கேட்க.. இல்ல நான் வரல நீ போயிட்டு வா.. நான் அப்புறமா வரேன் என்று சொல்லிவிட்டு அவள் கிளம்ப..ராசு வேகமாக ஓடி கோவிலுக்குள் வந்தான். சாமிக்கு முன்பு படைக்கப்பட்டிருந்த பொங்கல் பானையை பார்த்துக் கொண்டே இருந்தான் ராசு.

அதன் பக்கத்திலேயே வாழையிலையில் விசாலம் மாவிளக்கு செய்து அதில் திரியை வைத்து விளக்கு ஏற்றி வைத்திருந்தாள். மாவிளக்கு என்பது பச்சரிசி மாவுடன் வெல்லப்பாகை சேர்த்து பிசைந்து வாழை இலையில் உருண்டையாக உருட்டி வைத்து அதன் நடுப்பகுதியில் குழி போல் அமைத்து அதில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி சாமி சன்னதியில் வைத்து வழிபடுவார்கள். இது பொதுவாக குலதெய்வ கோவிலில் விசேஷ நாட்களிலோ அல்லது வேண்டுதல் நிறைவேற குலதெய்வத்தை வேண்டிக்கொண்டோ மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம்.

ராசுவிற்கு எப்போது தான் பூஜை முடியும் பொங்கலையும், மாவிளக்கயும் சாப்பிடலாம் என்று காத்துக் கொண்டிருந்தான். கோவிலில் பெரிய மணியின் கணீர் சத்தத்துடன் பூஜை தொடங்கியது.  முதலில் கருப்பசாமியிடம் இருந்து பூஜையை தொடங்கினார் பூசாரி. அபிஷேகம் முடிந்து  பதினெட்டு படிகளிலும் கற்பூரத்தை ஏத்தி  பூஜை செய்து தீபாராதனை காட்டினார். வெள்ளை தலைப்பாகை, பட்டு வேஷ்டியில் கம்பீரமாக வீற்றிருந்தார் கருப்பசாமி.

பின்னர் ராக்காயி அம்மனுக்கு அபிஷேகத்தை முடித்து அலங்காரம் செய்தார் பூசாரி. சிவப்பு நிற பட்டு சேலையில் தங்க ஆபரணங்களுடன் ஜொலித்தாள். அந்த கம்பீர தோரணையில் அவ்வளவு அற்புதமாக காட்சியளித்தாள் ராக்காயி. பூஜையை முடித்து தீபாராதனை காட்டிவிட்டு மாயனை நோக்கி பூசாரி வர கண்களில் ஒற்றிக்கொண்டார் மாயன். ஒவ்வொருவராக வர ராசுவின் பக்கம் வந்த பூசாரி அவனுக்கு விபூதியை பூசி விட்டு ஆசீர்வதித்தார் பரவாயில்லையே பையன் ருத்ராட்சம் எல்லாம் போட்டு இருக்கான்..ரொம்ப பக்திமானா இருக்கானே என்று சொல்லி ஆச்சரியப்பட்டார் பூசாரி.

யாரு இவனா பக்திமான் ? சன் டிவில ரஜினி நடிச்ச அருணாச்சலம் படத்தை பார்த்துட்டு எனக்கும் அதே மாதிரி ருத்ராட்ச கொட்டை வேணும்னு அடம்பிடிச்சுல கழுத்துல மாட்டி இருக்கான். அவன்கிட்ட உன் பேர் என்னன்னு கேளுங்க அய்யா..அப்புறம் தெரியும் உங்களுக்கு என்று விசாலம் சொல்லி முடிக்க.. அப்படியா உன் பேர் என்னடா என்று ராசுவிடம் பூசாரி கேட்க “அதான்டா இதான்டா அருணாச்சலம் நான்தான்டா” என்று ராசு தனக்கே உரிய பாணியில் சொல்ல மொத்த கோவிலும் சிரிப்பலையில் அதிர்ந்தது. இந்த பேரு அருணாச்சலமும் நல்லாத்தான்டே இருக்கு என்று சொல்லிக்கொண்டே மீண்டும் விபூதியை பூசிவிட்டு ஆசீர்வதித்தார் பூசாரி.

ஒரு வழியாக பூஜை நல்லபடியாக முடிய பிரசாதத்தை எடுத்துக்கொண்டு பூசாரி வெளியே வந்தார். காலை சாப்பாடு அங்கேயே ஏற்பாடு செய்யப்பட, வாழை இலை போட்டு அனைவருக்கும் இட்லி, சாம்பார் , சட்னியும், பொங்கலும் மற்ற இதர பிரசாதமும் பரிமாறப்பட்டது. ராசுகுட்டியும் முதல் ஆளாக போய் பந்தியில் அமர்ந்து கொண்டான். அவனுக்கு வாழை இலை போடப்பட்டு அதில் சுடச்சுட சர்க்கரை பொங்கலை வைத்து அதில் நெய் ஊற்றி பரிமாறினால் பெரியம்மா. சூடான பொங்கலில் நெய்யை ஊற்றி முந்திரி பருப்புடன் சேர்த்து சாப்பிடுவதென்றால் அவ்வளவு பிடிக்கும், அதுவும் பெரியம்மா செய்த சர்க்கரை பொங்கல் என்றால் அவ்வளவு விரும்பி சாப்பிடுவான். இலையில் வைத்த இட்லியை விட்டுவிட்டு சர்க்கரை பொங்கல் மட்டும் இரண்டு முறை வாங்கி நன்றாக சாப்பிட்டான் ராசுகுட்டி.

ஏலே..இலையில இட்லி சாப்பிடாம அப்படியே இருக்கு, பொங்கலை மட்டும் சாப்பிட்டுட்டு இருக்க, இட்லி சாப்பிடு என்று விசாலம் அதட்ட..விடு விடு அவனுக்கு எது பிடிச்சிருக்கோ அதை சாப்பிடட்டும் என்று பெரியம்மா அவனுக்கு ஆதரவாக சொல்லிக்கொண்டே ..இன்னொரு கரண்டி பொங்கல் வைக்கவா என்று கேட்க வைங்க பெரியம்மா என்று ராசு சொல்ல.. வேண்டாம்னு சொல்றானா பாரு என்று சொல்லி வள்ளி சிரிக்க.. பிள்ளை சாப்பிடறதை கண்ணுவைக்காதடி என்று பெரியம்மா செல்லமாக வள்ளியை திட்டினாள். பொங்கலை நன்றாக சாப்பிட்டுவிட்டு கைகழுவி கொண்டிருந்தான் ராசு, அப்போது தூரத்தில் தோப்பில் தர்ஷினி உக்கார்ந்து இருப்பதை பார்த்தான். உடனே வேகமாக பெரியம்மாவிடம் ஓபி சென்று எனக்கு இன்னும் கொஞ்சம் பொங்கல் தாங்க என்று கேட்க..இப்போதான சாப்பிட்டு கைகழுவிட்டு வர..அதுக்குள்ள திரும்பவுமா என்று இந்தமுறை காளையன் கேட்க.. இது என் தோழிக்கு என்றான். ஏது தோழியா ? அது யாருடா தோழி உனக்கு..அதும் இந்த ஊருல என்று பெரியம்மா கேட்க..குடுங்க பெரியம்மா அப்புறம் சொல்றேன் என்று பெரியம்மாவிடம் பொங்கலை வாங்கி கொண்டு தென்னந்தோப்பை நோக்கி ஓடினான்.

இவன் யாருக்கு கொடுக்க இப்படி ஓடிக்கிட்டு இருக்கான்..கேட்டா தோழின்னு சொல்றான் என்று பெரியம்மா கேட்க… அது பக்கத்துல பருத்திக்காட்டுல வேலை பார்க்கிறவங்க யாரோ ஒருத்தரோட பொண்ணு தோப்புல விளையாட வந்துச்சு. இவனும் அந்த பொண்ணு கூட தான் விளையாடிட்டு இருந்தான். அந்த பொண்ணுக்காக தான் கொடுக்க போறான் என்று சொல்லிக்கொண்டே வள்ளி கோவில் ஜன்னல் வழியாக எட்டி வெளியே தோப்பை பார்க்க..அவள் நினைத்ததை போல ராசு நேராக தர்ஷினியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தான். தர்ஷினி அங்கிருந்த தென்னை மரத்தடியில் உட்கார்ந்து இருந்தாள். ராசு நேராக சென்று அவளிடம் பொங்கலை சாப்பிட சொல்லி நீட்டினான். ஆனால் அவளோ கோவில் பிரசாதம் என்பதால் வாங்க மறுத்தாள். வேண்டாம் வேண்டாம் அப்புறம் உங்க சாமி என் கண்ணை குத்திரும் என்று தர்ஷினி சொல்ல.. அதெல்லாம் சாமி ஒன்னும் செய்யாது, நம்மள மாதிரி சின்ன பசங்களை ராக்காயி அம்மனுக்கு ரொம்ப பிடிக்குமாம். எங்க பெரியம்மா தான் சொன்னாங்க என்று ராசு சொல்ல.. அப்போ உங்க சாமி என்னை ஏதும் பண்ணாதா..நானும் உங்க சாமியை கும்பிடலாமா என்று கேட்க.. எல்லா சாமியும் ஒன்னுதான், எந்த சாமியும் யாரையும் ஏதும் பண்ணாது. நீ தைரியமா சாப்பிடு என்று சொல்லி அவளிடம் பொங்கலை குடுத்தான்.

சாமி நம்மள மாதிரி சின்ன பசங்களை ஏதும் பண்ணாதுன்னா அப்போ நீ எதுக்கு கருப்பசாமியை பார்த்து பயப்படுற என்று தர்ஷினி கேட்க.. அது உனக்கு எப்படி தெரியும் என்று ராசு கேட்டான். காலையில கருப்பசாமிக்கு பூஜை பண்ணுறப்போ நீ பயந்து போய் உங்க அம்மா பின்னாடி நீ நின்னதை நான் பார்த்தேன் என்று தர்ஷினி சொல்ல ராசுவுக்கு வெக்கமா போச்சு. அதே சமயம் அவள் சொன்னது சரி என்று பட்டது, அட ஆமா..நான்தான் எந்த தப்பும் பண்ணல அப்புறம் எதுக்கு கருப்பசாமியை பார்த்து பயப்படனும், இனிமே பயப்பட மாட்டேன்..கருப்பன் என்னோட நண்பன் என்றான் ராசு. என்னது உன் நண்பனா என்று சிரித்தவாரே தர்ஷினி கேட்டாள்.

ஆமா என் நண்பன் தான்..நீ சீக்கிரம் சூடு ஆறுறதுக்கு முன்னாடி பொங்கலை சாப்பிடு, எங்க பெரியம்மா பண்ணது சூப்பரா இருக்கும் என்றான் ராசு. தர்ஷினி அவனிடமிருந்து இலையை வாங்கி அதிலிருந்த பொங்கலை சாப்பிட்டாள். எப்படி இருக்கு.. சூப்பரா இருக்குல என்றான் ராசு. சூப்பரா இருக்கு என்று அவள் சொல்ல ராசுவுக்கு  சந்தோசமாக இருந்தது. பொங்கலை சாப்பிட்டுவிட்டு அங்கேயே விளையாடி கொண்டு இருந்தார்கள். அப்போது வள்ளி அங்கே வந்து மாவிளக்கையும், தேங்காய் துண்டையும் ராசுவிடம் கொடுத்தாள். மாவிளக்கை தேங்காய் துண்டுடன் சேர்த்து சாப்பிடுவது அவ்வளவு ருசியாக இருக்கும். ராசுவுக்கு மாவிளக்கும் ரொம்ப பிடிக்கும், அதும் தேங்காய் துண்டுடன் சேர்த்து சாப்பிடுவது ரொம்ப இஷ்டம் அவனுக்கு. தர்ஷினிக்கும் மாவிளக்கை கொஞ்சம் குடுத்து தேங்காய் துண்டுடன் சேர்த்து சாப்பிட சொன்னான்.

விளையாட ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே தர்ஷினிக்கும் ராசுகுட்டியை எளிதில் பிடித்து விட இருவரும் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்திற்கு பிறகு கோவில் பூஜை எல்லாம் முடித்துவிட்டு எல்லாரும் புறப்பட தயாரானார்கள். ஏலே ராசு சீக்கிரம் வா..நேரமாச்சு ஊருக்கு கிளம்பனும் இல்லைனா இங்கயே விட்டுட்டு போயிடுவேன் என்று விசாலம் கூப்பிட்டாள். எங்க அம்மா கூப்பிடுறாங்க..நான் போய்ட்டு வரேன் தர்ஷினி, அடுத்தமுறை நான் வரப்போ பார்ப்போம்.. இல்லைனா நீயும் எங்க கூட ஊருக்கு வரியா..குதிரை வண்டியில போலாம் என்று ராசு கூப்பிட..எங்க அப்பா திட்டும், நான் போய்ட்டு வரேன் என்று சொல்லிவிட்டு பருத்திக்காட்டை நோக்கி தர்ஷினி சென்றாள். இவனும் கோவிலை நோக்கி ஓடினான்.

ஏலே வரதுக்கு இவ்ளோ நேரமா..சீக்கிரம் உள்ள போய் அம்மனை கும்பிட்டு வா..நேரமாகுது என்று விசாலம் கூறினாள். ராசுவும் கோவிலுக்குள் சென்று ராக்காயி அம்மனிடம் சீக்கிரம் நான் தர்ஷினியை பார்க்கனும் என்று வேண்டிக்கொள்ள..விபூதி பூசிவிட்டு அவனை ஆசிர்வதித்தார் பூசாரி. வெளியே வந்த ராசு கம்பீரமாக வீற்றிருந்த கருப்பசாமியை நேரெதிராக நின்று கண்களை மூடாமல் வேண்டினான். இப்போது அவன் கண்களுக்கு கருப்பன் பயமாக தெரியவில்லை, தைரியமாக இருந்தான். ஆனாலும் அவனுக்கு அங்கிருந்து கிளம்ப மனமே இல்லை. தென்னந்தோப்பில் விளையாடுவது, மோட்டார் பம்பில் குளிப்பது, முக்கியமாக தர்ஷினியை விட்டு போவது இதை எல்லாம் நினைக்கும்போது அவனுக்கு கவலையாக இருந்தது, இருந்தாலும் அவனுக்கு வேறு வழியில்லை.

எல்லாரும் ராக்காயி அம்மனை கும்பிட்டு விட்டு கோவிலில் இருந்து கிளம்ப தயாராகினர். ராசு பருத்திக்காட்டை நோக்கி பார்க்க அங்கு தர்ஷினி நின்று கொண்டு இருந்தாள். அங்கிருந்தபடியே இவனுக்கு கை காட்ட, பதிலுக்கு இராசுவும் கை காட்டிவிட்டு கிளம்பினான். அண்ணன் கிளம்பலாமா என்று காளையன் கேட்க கிளம்பலாம்ப்பா.. என்று சொல்லி கொண்டே ஒத்தையடி பாதையில் நடக்க தொடங்கினர். இப்ப நாங்களும் உங்கக்கூட கோவிற்புரி தான் வரோம்ன்னு மாயன் சொல்ல.. என்ன அண்ணே சொல்றீங்க..கோவிற்புரி வரீங்களா.

ரொம்ப சந்தோஷம் அண்ணே.. நானே உங்கள கூப்பிடனும்னு நினைச்சுகிட்டு இருந்தேன்.. எங்க கூடவே வந்து  கொஞ்ச நாள் இருந்துட்டு போங்கன்னு.. இப்போ அதுக்குள்ள நீங்களே வரேன்னு சொல்லிட்டீங்க. ஆமாப்பா.. வள்ளிக்கு இப்போ ஒரு வாரம் லீவு, அதான் சிவராத்திரியை முடிச்சிட்டு அப்படியே நம்ம வூட்டுக்கு வந்து கொஞ்ச நாள் இருந்துட்டு போலாம்னு முடிவு பண்ணி கிளம்பி வந்துட்டோம். குடும்பமா ஒன்னா வந்து ரொம்ப நாளாச்சு என்று மாயன் சொல்ல.. ரொம்ப சந்தோசம் அத்தான்.. ரொம்ப நாளுக்கு அப்புறம் இப்போதான் வீடு நிறைஞ்சு இருக்க போகுது, வாங்க எல்லாரும் போகலாம் என்று அழைத்தாள் விசாலம். இதைக்கேட்ட ராசு..”ஐ ஜாலி” என்று சந்தோசத்தில் கத்திக்கொண்டே.. அப்போ நாளைக்கு ஸ்கூலுக்கு போகமாட்டேன் என்று விசாலத்திடம் சொல்ல…லீவ் எல்லாம் போடக்கூடாது, நாளைக்கு ஒழுங்கா ஸ்கூலுக்கு ஓடிரனும் என்று காளையன் அதட்டினார். ராசு அடம்பிடிக்க.. சரி சரி அதை நாளைக்கு பாத்துக்கலாம்.. இப்ப நீ பேசாம வேகமாக நட என்று பெரியம்மா சொல்ல.. ராசு அமைதியாக வந்தான்.

கொஞ்ச தூரம் சென்ற நிலையில் பெட்டி கடை தூரத்தில் தெரிய.. சாமி கும்பிட்டு வரும்போது வாங்கி தரேன் என்று காளையன் சொன்னதை நினைவு வைத்து  அப்பளப்பூ வாங்கி தர சொல்லி கேட்டான். இவன் அடம்பிடிப்பதை பார்த்து உனக்கு என்னடா வேணும் என்று பெரியப்பா கேட்க.. அப்பளப்பூ வாங்கித்தாங்க பெரியப்பா என்றான் ராசு. அவன் என்ன கேக்குறானோ அதை குடுங்கம்மா என்று பெரியப்பா கடைக்கார பாட்டியிடம் சொல்ல… பத்து விரலுக்கும் பத்து அப்பளப்பூ வாங்கி மாட்டிக்கொண்டான். செல்லும் வழியில்  ஒவ்வொரு அப்பளப்பூவாக கடித்து சாப்பிட்டு கொண்டே வந்தான் ராசு.

அண்ணேன் நீங்க எதுல வந்தீங்க என்று காளையன் கேட்க.. நான் கார்ல வந்தேன்ப்பா, நீங்க என்ன குதிரை வண்டியில வந்தீங்க போல..சரி வாங்க இப்ப எல்லாரும் ஒன்னாவே கார்ல போயிடுவோம் என்று மாயன் அழைத்தார். கார்ல இடம் பத்துமா அண்ணே, இப்போ பிள்ளைக எல்லாம் வளர்ந்துட்டாங்க என்று காளையன் சொல்ல.. ஊரு பக்கம்தானே.. கார்ல சீக்கிரம் போயிடலாம் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி உட்கார்ந்துக்கலாம் என்றார் காளையன்.  கொண்டு சென்ற சாமான்கள், பைகள் எல்லாவற்றையும் குதிரைவண்டியில் ஏற்றிவிட்டு முத்துவை வர சொல்லிவிட்டு இவர்கள் அனைவரும் மாயன் கார் ஓட்ட ஒன்றாக கோவிற்புரி சென்றார்கள். காரில் கீழஈரால் வழியாக சென்றபோது சாலையோர தின்பண்ட கடையில் வண்டியை நிப்பாட்டினார் மாயன். ஒவ்வொரு முறையும் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் கீழஇராலில் சேவ்வும் , திருவிழா மிட்டாயும் வாங்கி செல்வது வழக்கம். நயம் கருப்பட்டியில் செய்த திருவிழா மிட்டாய், சீனி பாகில் செய்த சீனி மிட்டாய்யை அங்கேயே சுடச்சுட வாங்கி சாப்பிட்டு விட்டு வீட்டிற்கும் மொத்தமாக வாங்கி செல்வது இவர்களின் வழக்கம்.

திருவிழா மிட்டாய் என்றால் ராசுவுக்கு அவ்வளவு பிடிக்கும், கருப்பட்டி பாகு வடிய அதை நன்றாக சுவைத்து சாப்பிட்டு கொண்டே காரில் வந்தான் ராசுக்குட்டி. எல்லாரும் ஒன்றாக பேசிக் கொண்டே வந்தனர். அப்போது திருவிழா மிட்டாயை சாப்பிட்டு கொண்டே.. எம்மா திருவிழா மிட்டாய்ன்னு எப்படி பேரு வந்துச்சு  என்று ராசு விசாலத்திடம் கேட்டான். இதுக்கு பேரு கருப்பட்டி மிட்டாய், முன்னாடி எல்லாம் திருவிழா சமயத்தில் மட்டுமே கருப்பட்டி மிட்டாய்யை விசேஷமாக செஞ்சு கடைகள்ல  விற்பனை செய்வாங்க. அதன் காரணமா இதற்கு திருவிழா மிட்டாய்ன்னு இன்னொரு பெயர் வந்திருச்சு. அப்புறம் அப்படியே காலப்போக்கில திருவிழா மிட்டாய்ன்னே பெரும்பாலும் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க என்று ராசுவிடம் அதற்கான காரணத்தை விசாலம் கூறினாள். இதற்கு பதில் சொல்லி முடிப்பதற்குள் சிவராத்திரி என்றால் என்னம்மா என்று கேட்டான் ராசு. சிவனுக்கு உகந்த நாள் சிவராத்திரி,  அன்னைக்கு எல்லாரும் குலதெய்வம் கோவிலுக்கு போய் வழிபடுவது வழக்கம்.

சிவராத்திரின்னு சொல்றிங்க அப்புறம் எதுக்கும்மா சிவன் கோவிலுக்கு போகாம நாம குலதெய்வம் கோவிலுக்கு போறோம்? நம்ம ராக்காயி அம்மன் கோவில்ல சிவனே கிடையாது அப்புறம் ஏன் இந்த கோவிலுக்கு வரணும் ? சிவராத்திரி சிவன் கோவிலுக்கு தான போகணும் என்று ராசு கேட்க அதை சற்றும் எதிர்பாராத விசாலமும் பெரியம்மாவும் ஓரிரு நொடி ஸ்தம்பித்து போயி இருவரும் பார்த்து கொண்டனர். இவன் எப்போ இப்படி எல்லாம் கேள்வி கேட்க ஆரம்பித்தான் என்று பெரியம்மா கேட்க.. இவன் தொல்லை தாங்க முடியலைக்கா, எப்ப பாரு இந்த மாதிரி ஏதாவது விதாண்டாவாதமா கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கான். எனக்கு பதில் சொல்லி முடியலை என்று விசாலம் பெரியம்மாவிடம் நொந்துக்கொண்டாள். இவன் கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியாமல் போனது விசாலத்திற்கும் பெரியம்மாவிற்கும்.. பதில் சொல்லுங்கம்மா…பெரியம்மா நீங்கலாச்சும் பதில் சொல்லுங்க என்று ராசு நச்சரிக்க  அதெல்லாம் அப்படித்தான் நீ பேசாம வரப்போறியா இல்லையா என்று பெரியம்மா அதட்டினாள்.. இதை ஏதும் காதில் வங்காதவாரு மாயனும், காளையனும் முன்னிருக்கையில் அமர்ந்து வந்து கொண்டிருந்தனர்.

அப்பா.. சிவராத்திரினா என்னப்பா ? அன்னைக்கு சிவன் கோவிலுக்கு தானே போகனும். அம்மா ஏதோ குலதெய்வம் கோவிலுக்கு போகனும்ன்னு சொல்லுறா என்ற குரலை கேட்டு விழித்துப் பார்த்தான் ராசுகுட்டி. அவனுடைய ஆறு வயது மகள் தர்ஷினி ராசுவிடம் இந்த கேள்வியை கேட்டுக் கொண்டிருந்தாள். இதை எதிர்பாராத ராசுக்குட்டியின் மனதில் வியப்பும் புன்னகையும் ஒரு சேர அமைய.. படக்கென்று திரும்பி பால்கனியில் அமர்ந்திருந்த அம்மா விசாலத்தை பார்த்தான். இவர்கள் இருவரையும் கவனித்துக் கொண்டிருந்த விசாலமோ ராசுவின் பார்வைக்கான அர்த்தத்தை புரிந்து கொண்டு வெடுக்கென்று அந்த பக்கமாக திரும்பிக் கொண்டாள். ராசு சிரித்துக் கொண்டே உன் பாட்டிகிட்ட கேளு தர்ஷினி என்று சொல்லிக்கொண்டே காலம் எவ்வளவு வேகமாக ஓடிருச்சுல்ல என்று நினைத்தவாறே பழைய நினைவுகளை மனதில் ஓட விட பின்னணியில் டிவியில் “நினைத்தாலே இனிக்கும்..” பாடல் ஒலிக்க தொடங்கியது

நன்றி.

11 thoughts on “ராசுக்குட்டியின் சிவராத்திரி

Add yours

  1. ராசு குட்டி, சிவராத்திரி, குதிரை வண்டி, குலதெய்வம், கருப்பசாமி தோற்றம், தென்னந்தோப்பு, பம்பு செட்டு, மயில், சன் டிவி, ரஜினி, அருணாசலம், ரூத்ராச்சம், தோழி.

    சிறு வயது நினைவலைகள் ❤️..

    குதிரை வண்டியில் பள்ளி பயணம்..

    குலதெய்வம் கோவில் பயணம் என் சிறு வயதை நினைவுபட்டுத்தியது..

    அருமையான கதை அண்ணே 👌

    உங்கள்,
    தமிழரசன் சண்முகம்

    Liked by 1 person

  2. ரொம்ப நல்லா இருக்கு ராக்ஸ் ணா 🤘❤
    கிராமத்து ஞாபகம் 🥰❤

    Liked by 1 person

    1. அந்தகால வாழ்க்கை முறையை மிக தத்ரூபமாக வடித்திருக்கிறார் ராக்ஸ் அண்ணா… இதைப்படிக்கும்போது மிகச்சிறப்பான அனுபவம் பெற்றேன்…

      Liked by 1 person

  3. Takkunu chinna vayasula nadandhadha ellam thirumba nenaika vachuteenga na..Unga story la vara madhiri dhan enoda chinna vayasula enga family um irundhom..aana ipo ellam thani thaniya irukom…Adhigama Time spend panna mudiyala…Next time meet family members elam onna meet pannumbodhu adhigama time spend pannanum family oda..adha story mooliyama puriya vachuteenga..

    Thank u 😇 sema feel..

    Story writing super na..👌👌❣️

    Liked by 1 person

Leave a reply to Arjun Cancel reply

Website Powered by WordPress.com.

Up ↑