
“Neruppudaa… Nerungudaa..” மொபைலில் ரிங்க்டோன் சத்தம் நீண்ட நேரமாய் கணீரென ஒலித்து கொண்டிருந்தது. ஐந்தாவது முறையாக ஒலித்து அணைய, திடுக்கிட்டு தூக்கம் கலைந்து எழுந்து மொபைலை பார்த்தபோது திரையில் தோன்றிய பெயரை கண்டு புன்னகைத்த அடுத்த நொடியே பயம் வந்து ஒட்டிக்கொண்டது.
சஞ்சனாவிடம் இருந்து ஐந்து மிஸ்ட் கால்கள்…
நேரத்தை பார்த்தான்..
6.48 PM என மொபைல் திரையில் காட்டிக்கொண்டு இருந்தது. மொபைலில் 6 மணிக்கு அடித்த அலாரம் சத்தத்தையும் மீறி தூங்கி போயிருந்தான்.
சஞ்சனாவுக்கு திரும்ப கால் பண்ணலாமா வேணாமா.. பண்ணாலும் திட்டுவா.. பண்ணலைனாலும் திட்டுவாளே ராட்சசி.. போச்சு இன்னைக்கு செத்தேன் என்று தனக்கு தானே பேசி கொண்டிருந்தான். சரி கால் பண்ணுவோம் என மொபைல் டையலரை அழுத்தியபோது சஞ்சனாவிடம் இருந்து வாட்சப் மெசேஜ் வந்திருந்தது.
மெசேஜை ஓப்பன் பண்ணாமலே நோட்டிஃபிகேஷன் வழியாக பார்த்தான்
“Erumai..Call attend pannama enna pandra..
I will reach station at 8.00 PM, dont be late as usual, Come on time” கூடவே 4 ஆங்கிரி எமோஜி” சேர்த்து அனுப்பி இருந்தாள்.
கோவமா இருக்காளே.. சரி சமாளிப்போம் என சமாதான படுத்தி கொண்டு வாட்சப் மெசேஜை ஓப்பன் செய்தான்
“Sorry da..Thoongitten
I will reach station before you”
அவளுக்கு சமமாக 4 பல்லை இளிக்கும் எமோஜியை சேர்த்து அனுப்பி வைத்தான்
“Kilicha” என அவளிடமிருந்து உடனே பதில் வந்தது
மீண்டும் அதே 4 எமோஜியை போட்டு “On d way” என மெசேஜை தட்டிவிட்டு அவளின் பதிலுக்கு எதிர்பாராமல் கிளம்ப முற்பட்டான்.
ஆனால் அவனின் என்ன ஓட்டம் முழுவதும் சஞ்சனா நிரம்பி இருந்தாள். அவளை பற்றிய நினைப்பிலேயே ஊருக்கு செல்வதற்கு தேவையானவற்றை எடுத்து பைக்குள் திணித்து கொண்டு அறை சுவற்றில் ஒட்டியிருந்த தலைவரின் பேட்ட பட போஸ்டரை பார்த்து ஒரு வணக்கம் வைத்துவிட்டு வீட்டை பூட்டி கொண்டு வெளியே வந்தான்.
வாசலில் நிறுத்தியிருந்த தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பும் முன்பு வாட்சில் நேரத்தை பார்த்தான். 7.30 மணி ஆக இரண்டு நிமிடம் இருந்தது. அரைமணி நேரத்தில அவளுக்கு முன்னால் தாம்பரம் போயிடலாம்னு மனதிற்குள் சொல்லிக்கொண்டே காதில் ப்ளுடூத் மாட்டிக்கொண்டு Spotify ல் பாடலை பிளே செய்துவிட்டு ஸ்கூட்டியை கிளப்பினான்.
ஆலந்தூரில் உள்ள தன் வீட்டில் இருந்து கிளம்பி ஜிஎஸ்டி சாலைக்கு வந்தபோது எதிர்பாராத விதமாக மழை பெய்ய ஆரம்பித்தது. சில நொடிகளில் மழையின் வேகம் அதிகமானது. சாலை ஓரத்தில் சற்று ஒதுங்கி செல்லலாம் என்றால் தாமதமாகிவிடும் என்று மழையில் நனைந்தபடியே வண்டியை ஓட்டினான்.
ஏர்போர்ட்டை தாண்டி பல்லாவரத்தை நெருங்கும்போது மழை இன்னும் வேகமெடுத்து பெய்ததில் ட்ராபிக் ஜாம் ஆகி வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. ஒரு கட்டத்திற்கு மேல் வாகனங்கள் நகர முடியாமல் அங்கங்கே ஸ்தம்பித்து நின்றன. இவனும் வாட்சில் மணியை பார்த்தான் தாமதமாகிக் கொண்டே இருப்பது தெரிந்தது.. போச்சு இன்னைக்கு அவ கிட்ட திட்டு வாங்க போறேன் என மனசுல நினைச்சிட்டே வண்டியை மெதுவாக திருகிக் கொண்டு இருந்தான்.
ஒருபக்கம் கனமழை இன்னொரு பக்கம் ட்ராபிக்னு இவன் பொறுமையை சோதித்தது , இது பத்தாதுன்னு வண்டிகளுடைய ஹாரன் சத்தம் வேறு இவனுக்கு கடுப்புகளை ஏற்படுத்தியது. எப்படா இது சரியாகும்னு நெனச்சுட்டு இருக்கும்போது சட்டுனு மழை நின்னுருச்சு. அப்பாடா மழை விட்டுருச்சுனு நிம்மதி பெருமூச்சு விட்டுட்டு இருக்கும்போது எங்கிருந்தோ வந்த சாரக் காற்று இவனை தழுவிச் செல்ல, அந்த சமயம் இளையராஜாவின் குரலில்
“தென்றல் வந்து தீண்டும் போது…
என்ன வண்ணமோ மனசுல…
திங்கள் வந்து காயும் போது…
என்ன வண்ணமோ நினைப்புல…
வந்து வந்து போகுதம்மா…
எண்ணமெல்லாம் வண்ணமம்மா…
எண்ணங்களுக்கேற்றபடி…
வண்ணமெல்லாம் மாறுமம்மா…
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்…
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா…”
என இவன் காதில் பாடல் ஒலிக்க அந்த நிமிடம் மெய்மறந்து நின்றான். அந்த தென்றல் காற்றும் ராஜாவின் வசீகரமான குரலும் இவனுக்கு மீண்டும் சஞ்சனாவின் நினைவுகளை மீட்டு வந்தது. இந்த பாடலுக்கும் இவன் சஞ்சனாவை முதன்முதலில் சந்தித்ததுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அதனாலோ என்னவோ இவனுக்கு இந்த பாடல் மிகவும் நெருக்கமான ஒன்றாகி போனது.
ராகதேவனின் இசையுடன், காலதேவன் கைப்பற்றி காலம் கடந்து மூன்று வருடம் பின்னோக்கி சென்றான்.
ராபின் அப்போது சென்னையில் உள்ள தனியார் யுனிவர்சிட்டியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் படித்து கொண்டிருந்தான். செகண்ட் செமெஸ்டர் விடுமுறையும் தாண்டி நான்கு நாட்கள் விடுமுறைக்கு பின்பு அன்றுதான் கல்லூரிக்கு வந்திருந்தான். நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர்களை பார்த்ததில் அவர்களுடன் பேசி கொண்டிருந்தான். வகுப்பறையில் அருகில் அமர்ந்து இருந்த உயிர் நண்பன் ஜெய், அவர்கள் வகுப்புக்கு புதிதாக வந்திருக்கும் பொண்ணுங்க பத்தி சிலாகித்து சொல்லி கொண்டிருந்தான். இப்படி பேசிக்கொண்டு இருந்ததில் பொழுது போனதே தெரியவில்லை.
மாலை கல்லூரி முடிந்து வெளியே வந்தான் ராபின். எப்போதும் வீட்டிற்கு செல்லும் முன்பு கல்லூரிக்கு அருகில் இருக்கும் சேட்டா கடையில் ஜெய் மற்றும் வகுப்பு நண்பர்களுடன் சேர்ந்து டீ குடித்துவிட்டு செல்வது வழக்கம். ராபின் மேடவாக்கத்தில் உள்ள மாமா வீட்டில் இருந்து தினமும் கல்லூரிக்கு சென்று வந்து கொண்டிருந்தான். ஜெய் வேளச்சேரியில் தங்கி இருந்தான், இதனால் ஒரே பஸ்ஸில் தான் இருவரும் செல்வார்கள்.
அன்று அவன் மூன்றாம் செமெஸ்டர்க்கான புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்ததில் தாமதமகிவிட்டது. இவன் டீ கடைக்கு வந்து பார்த்த போது வகுப்பு நண்பர்கள் யாரும் அங்கு இல்லை, ஜெய்யும் வேலை இருப்பதாக சொல்லி சீக்கிரமே கிளம்பிவிட்டான். சரி பஸ் வரதுக்குள்ள டீ குடிச்சுட்டு போய்டுவோம்னு சேட்டா ஒரு டீ ன்னு சொல்லிட்டே கடைக்குள் போய் உக்கார்ந்தான்.
“எந்தாடா மோனே ரோப்பினே….சுகமாணோ”ன்னு சேட்டா நலம் விசாரிச்சுட்டே டீ கிளாஸையும், ஒரு பிளேட் பஜ்ஜியும் ராபினிடம் நீட்டினார். ராபின் பற்றி சேட்டனுக்கு தெரியும், எப்படியும் அடுத்து பஜ்ஜி கேப்பான்னு அவரே கொண்டு வந்துகொடுத்து விட்டார். நல்லாருக்கேன் சேட்டா..நீங்க சுகமோனு புன்னகையுடன் கேட்டான்
நான் நன்னாயிட்டு இருக்கேன் ரோப்பினே..நீ டீ கழிக்கும் நியான் பின்ன வரான்னு சொல்லிட்டு சேட்டா செல்லும்போது வெளியே மழை கொட்ட ஆரம்பித்தது. கொட்டும் மழைக்கு சூடான டீயும் பஜ்ஜியும் இதமாக இருந்தது.
சேட்டன் கடையில் இருந்த ரேடியோவில் சூரியன் எப்.எம்மில் இளையராஜாவின் குரலில் “தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல…” பாடல் ஒலிக்க தொடங்கியது.
கண்களை மூடிக்கொண்டு டீயை ரசித்து குடித்தபடியே ராஜாவின் குரலில் மூழ்கி போனான் ராபின். தன்னை மறந்து ரேடியோவுடன் சேர்ந்து இவனும் பாடலை பாடிக்கொண்டிருக்க, கூடவே மற்றோரு குரலும் சேர்ந்து ஒலிப்பது போல் தோன்றியது. சட்டென்று பாடுவதை நிறுத்திவிட்டு கண்களை திறந்தபோதுதான் ஒன்று இவனுக்கு புரிந்தது. கரண்ட் கட் ஆகி ரேடியோவில் பாடல் ஒலிப்பது நின்றுபோய் இருந்ததும், அது தெரியாமல் இவன் சத்தமாக பாடிக்கொண்டிருந்ததையும் உணர்ந்து தன்னை தானே தலையில் அடித்துக்கொண்டு வெக்கத்தில் தலை குனிந்து சிரித்து கொண்டிருந்தான். ஆமா அந்த இன்னோரு குரல் யாரா இருக்கும்னு கண்களை துழாவ விட்டான். இவன் பாடுவதை நிறுத்தி இருந்த அதே சமயத்தில்
“ஓடை நீரோடை…
இந்த உலகம் அது போல…” னு ஒரு பெண்குரல் ஒலித்து நின்றது.
அப்போது தான் அந்த குரலுக்கு சொந்தமானவளை கவனித்தான், முதல் டேபிளில் அந்த பக்கமாக திரும்பி உட்கார்ந்து இருந்தாள் அவள். அவளும் இவனை போலவே பாடல் நின்று போனது தெரியாமல் பாடிக்கொண்டிருக்க சட்டென்று சுயநினைவு வந்தவளாய் பாடுவதை நிறுத்திவிட்டு கைகளால் முகத்தை மூடி சிரித்தபடி வெக்கத்தில் திளைத்தாள். அதே தருணம் சத்தம் வந்த திசையை நோக்கி இவளும் திரும்பி பார்க்க..
“அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்”
இருவரையும் சேட்டனும் நோக்க..
உனக்கு பாடலாம் வருமாடா ரோப்பினே…மொளே… ரெண்டு பேரும் பிரமாதமா பாடுனீங்கனு சொல்லிட்டு போனார்..
ராபினுக்கு அவள் முகம் தெளிவாக தெரியவில்லை. சரி அருகில் செல்லலாம் என கூச்சத்தில் நெளிந்து எந்திரித்து நின்று அவள் அருகில் செல்ல எத்தனித்த நிலையில் அவளே இவனை நோக்கி வெக்கத்தில் சிரித்தபடி அருகில் வந்தாள்.
அப்போது தான் அவள் முகத்தை தெளிவாக கண்டான். பார்த்த நொடி பரவசத்தில் புன்னகைத்து (பல் இளித்து) நின்றான். அவள் அணிந்து இருக்கும் ஐடி கார்டு பார்த்து அவளும் இவன் கல்லூரியில் தான் படிக்கிறாள் என தெரிந்து கொண்டான்.
ஹாய்..ஐ ஆம் சஞ்சனா என்று கூறி அவள் தன் கையை நீட்டினாள். சட்டென்று பேச்சு வராமல் “ரா.. ராப்..ராபின்” என இழுத்து சொல்லி அவசர அவசரமாக கையில் இருந்த பஜ்ஜியை தட்டில் வைத்துவிட்டு பேன்ட்டில் கையை துடைத்துகொண்டு அவளிடம் கை குடுத்தான்.
கம்ப்யூட்டர் சையின்ஸ் செகண்ட் இயர் என்று ராபின் சொல்ல.. டேய் நானும் உன் க்ளாஸ் தான்டா, லேட்ரல் எண்ட்ரி இந்த செமஸ்டர் தான் ஜாய்ண்ட் பண்ணேன் என்று சஞ்சனா கூறினாள். அப்படியா நான் இன்னைக்கு உன்னை க்ளாஸ்ல பாக்கவே இல்லையே என்றான். ஆனா நான் உன்னை பார்த்தேன் என்றாள் சஞ்சனா. நாம மிஸ் பண்ணிட்டோமேனு மெதுவாக டேபிளை குத்தினான். அதை கவனித்தும் கவனிக்காமல் இருப்பது போல் இருந்தாள் சஞ்சனா.
பின் இருவரும் அப்படியே மழை நிக்கும்வரை பேசிக்கொண்டதில் அவர்களை பற்றி ஒருவருக்கு ஒருவர் ஓரளவுக்கு தெரிந்து கொண்டனர்.
சற்று நேரத்தில் மழையும் நிக்க ராபினுக்கு பஸ்ஸும் வந்து சேர்ந்தது, சஞ்சனா தன் அப்பாவிற்காக காத்திருந்தாள். அவளிடம் சொல்லிவிட்டு பஸ்ஸில் ஏறி படிக்கட்டில் நின்று கொண்டு புன்னகைத்தபடி அவனின் பார்வையில் இருந்து மறையும்வரை சஞ்சனாவையே பார்த்தபடியே நின்று கொண்டிருந்தான்.
என்னவோ தெரியவில்லை, ராபினுக்கு சஞ்சனாவை பார்த்ததுமே பிடித்துவிட்டது. சஞ்சனா அழகாக தெரிந்தாள், ஆனால் அவள் ஒன்றும் பேரழகி இல்லை. அவள் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருந்தது. சுமாரான குரல் என்றாலும் அவள் பாடுவதை ரசிக்க தோன்றியது. இதுலாம் ஒரு புதுவித அனுபவமாக இருந்தது.
எந்த பொண்ணையும் பார்க்கும்போது தோணாத மன மாற்றங்கள் தற்போது சஞ்சனாவை பார்த்ததும் ராபினுக்கு தோன்றியது. இந்த உணர்ச்சியை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் பிடித்து இருந்தது, எப்போது மீண்டும் சஞ்சனாவை சந்திப்போம் என்று எண்ணியபடியே இருந்தான்.
மறுநாள் சீக்கிரமாக கல்லூரிக்கு சென்று சஞ்சனாவின் வருகைக்காக காத்திருந்தான் ராபின். சில நேர காத்திருப்புக்கு பிறகு சஞ்சனாவின் தரிசனம் கிடைத்தது. ராபினை பார்த்து ஹாய் என கை காட்டிவிட்டு அவள் இடத்தில் சென்று அமர்ந்தாள். இவனும் வெளியே மெல்லிசாக புன்னகைத்துவிட்டு உள்ளுக்குள் குஷியாகி திரும்பி பார்க்க இதையெல்லாம் கவனித்த வண்ணம் என்ன நடக்கிறது என்று புரியாமல் ஜெய் அருகில் உட்கார்ந்து இருந்தான்.
நீ நேத்து தான வந்த, அதுக்குள்ள உனக்கு ஹாய் சொல்லிட்டு போறா.. உனக்கு அவளை முன்னாடியே தெரியுமானு ராபினை பார்த்து ஜெய் கேட்க, நேற்று டீ கடையில் நடந்தது பற்றியும், இவனுக்குள் ஏற்பட்ட இனம்புரியா மாற்றம் பற்றியும் ஜெய்யிடம் கூறினான். தம்பி தம்பி முதல்முறையா ஒரு பொண்ணுகிட்ட பேசினா இப்படித்தான்ப்பா இருக்கும், முதல்ல உன் உணர்ச்சியை கட்டுப்படுத்து என அச்சமயத்தில் ராபினை அடக்கினான் ஜெய்.
பின்னர் அவ்வப்போது ராபினும், சஞ்சனாவும் கல்லூரியில் சந்தித்து பேசி கொண்டனர். அட்டெண்டன்ஸ்ல் இருவரின் பெயரும் அடுத்தடுத்து வருவதால் லேப், எக்ஸாம் நேரத்தில் இருவரும் ஒன்றாக இருக்க வாய்ப்பு அமைந்தது. நாளடைவில் இருவரும் நன்றாக பழக ஆரம்பிக்க அது காதலாக உருமாறியது. சஞ்சனா அவன் மீது காட்டும் அன்பும் பரிவும், அவனுக்காக எதையும் செய்ய துணியும் துணிவும், தைரியமும் ராபினுக்கு பிடித்து இருந்தது. வாழ்க்கை முழுதும் துணையாக அவள் கை பற்றி இவ்வுலகத்தை சுற்ற வேண்டும் என்பது போல் இருந்தது.
அவளை விட்டுவிட கூடாது என்று முடிவு செய்து தைரியமாக சஞ்சனாவின் பிறந்தநாள் அன்று அவளின் வீட்டில் வைத்தே தன் காதலை ராபின் தெரிவிக்க.. இதை சொல்லுறதுக்கு உனக்கு ஒரு வருஷம் ஆச்சாடா எருமை என செல்லமா சத்தம் போடாமல் திட்டிக்கொண்டே “லவ் யூ டா ராபின்” என கூறி அவனின் காதலை ஏற்று கொண்டாள் சஞ்சனா.
சஞ்சனாவிற்கும் ராபினை முதன்முதலில் பார்த்த போதே பிடித்து போனது. இருந்தபோதும் ராபின் சொல்வதற்காக காத்திருந்தாள். ஒருவேளை ராபின் சொல்லாமல் இருந்திருந்தால், கல்லூரியின் கடைசி நாளில் இவளே ராபினிடம் காதலை சொல்லிவிடலாம் என நினைத்து இருந்தாள். ஆனால் அவளோ தூரம் செல்ல ராபின் விட்டுவைக்கவில்லை. மூன்றாவது வருட துவக்கத்திலயே சொல்லிவிட்டான்.
அந்த சமயம்தான் வீட்டில் கேட்டு அவனின் ஸ்கூட்டியை ஊரில் இருந்து கொண்டு வந்து இருந்தான் ராபின். சென்னையில் சஞ்சனாவுடன் சேர்ந்து அவன் அந்த ஸ்கூட்டியில் சுற்றாத இடமே இல்லை. இவனுடன் வெளியே செல்வது சஞ்சனாவிற்கு மிகவும் பிடிக்கும், அதற்கு ஒரு காரணம் ராபின். மற்றொன்று ராபின் கூட செல்லும்போது வெவ்வேறு ஏரியாவில் உள்ள உணவு வகைகளை வாங்கி சுவைக்கலாம். என்னதான் விதவிதமான உணவுகள் வாங்கி சாப்பிட்டாலும், இறுதியில் ஒரு டீ குடித்தால் தான் ராபினுக்கு திருப்தியாக இருக்கும். அவ்வப்போது ஜெய்யும் இவர்களுடன் சேர்ந்து கொள்வான். என்னதான் வெளியே சுற்றினாலும் தேர்வில் முதல் இரண்டு இடங்களை பிடிப்பது ராபினும், சஞ்சனாவும் தான்.
நாட்கள் ஓட கல்லூரி இறுதி ஆண்டு கேம்பஸ் பிளேஸ்மெண்ட்ல் இருவருக்கும் ஒரே ஐடி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. கடைசி தேர்வை முடித்துவிட்டு கையில் ஆஃபர் லெட்டருடன் சென்று சஞ்சனாவின் அப்பாவை சந்தித்து பேசினான் ராபின். இதை சற்றும் எதிர்பாராத சஞ்சனாவின் அப்பா யோசித்து சொல்றேன்னு சொல்லிவிட்டார்.
தற்போது சஞ்சனாவை தன் ஊருக்கு அழைத்து சென்று அம்மா, அப்பாவிடம் அறிமுகம் செய்து வைப்பது இவன் எண்ணம். அதற்கான ஏற்பாடுதான் நடந்து கொண்டிருக்கிறது. நெல்லை எக்ஸ்பிரஸை பிடிப்பதற்காக தாம்பரம் போய் கொண்டிருக்கும் போது தான் மழை பிடித்தது. சஞ்சனாவும் தன் வீட்டில் வேறு ஒரு நிறுவன இன்டெர்வியூக்கு பெங்களூர் செல்வதாக சொல்லிவிட்டு ராபினுடன் அவன் ஊருக்கு செல்ல தாம்பரம் வந்திருந்தாள்.
ராபின் குரோம்பேட்டையை கடந்தபோது வெற்றி தியேட்டரில் தலைவர் ரஜினியின் பேட்ட படத்தின் முதல் நாள் முதல் காட்சியை சஞ்சனாவுடன் இணைந்து வெறித்தனமாக ஆடி பாடி ரஜினியை ஒவ்வொரு ஃபிரேமாக ரசித்து கொண்டாடியது நினைவுக்கு வந்து சென்றது. ராபின் தலைவர் வெறியன் என்று சஞ்சனாவிற்கு தெரியும், இதுவரை அவன் எந்த ஒரு ரஜினி படத்தையும் சென்னையில் முதல் நாள் முதல் காட்சி பார்த்தது இல்லை என்பதால் அவனுக்கு எப்படியாவது அந்த அனுபவத்தை குடுக்க வேண்டும் என்று டிக்கெட் ஏற்பாடு செய்து இருந்தாள்.
அன்று ராபினை வரச்சொல்லி அப்பார்ட்மெண்டிற்கு வெளியே வைத்து சர்ப்ரைஸாக பேட்ட படத்திற்கான முதல் நாள் முதல் காட்சி டிக்கெட்டை நீட்டினாள். மகிழ்ச்சியின் உச்சத்திற்க்கே சென்ற ராபின், செய்வதறியாமல் சஞ்சனாவை கட்டிப்பிடுத்து கன்னத்தில் முத்தமிட்டு லவ் யூ சஞ்சனானு கத்தினான். இதை சற்றும் எதிர்பாராத சஞ்சனா, டேய் எருமை விடுடா என அவனை விலக்கிவிட்டு வெக்கத்தில் அப்பார்ட்மெண்டிற்குள் ஓடினாள்.
இப்படி ஒவ்வொரு விஷயமாக அவன் பார்க்கும் இடத்தில் எல்லாம் சஞ்சனா நிறைந்து இருந்தாள். அந்த நினைவுகளுடன் ஒருவழியாக தாம்பரம் ரயில் நிலையம் வந்து சேர்ந்தான் ராபின். மணி 8.30 ஆகி கொண்டிருந்தது, பிளாட்பார்ம் நம்பர் எட்டில் காத்திருப்பதாக சஞ்சனாவிடமிருந்து மெஸேஜ் வந்திருந்தது. வண்டியை பார்க்கிங்கில் போட்டுவிட்டு பிளாட்பார்மை நோக்கி நடந்தான். பிளாட்பார்ம் இன் முகப்பில் சஞ்சனா நின்று கொண்டிருப்பதை தூரத்திலிருந்தே கண்டுவிட்டான்.
அவள் அருகில் சென்று அவளுக்கு பின்பக்கமாக நின்றான். அப்போது சஞ்சனா ராபினுக்கு கால் செய்து போனை காதில் வைத்தாள். மொபைல் ரிங் டோன் மிக நெருக்கமாக அடிப்பதை உணர்ந்து சட்டென்று திரும்பி பார்த்தாள். மழையில் நனைந்த ஆடு கணக்காக ராபின் நின்றுகொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் புன்னகைத்துவிட்டு அடுத்த நொடியே கோபத்துடன் “ஏன்டா எருமை.. இவ்வளவு நேரமா வரதுக்கு.. சீக்கிரம்தான் கிளம்பிதொலையலாமே” என்று கேட்டுவிட்டு அவன் மழையில் நனைந்திருப்பதை பார்த்து இப்படியா நனைஞ்சுட்டு வருவ என்று தன் துப்பட்டாவை எடுத்து அவன் தலையை துடைக்க எத்தனித்தாள். அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் நீ வா லேட் ஆகிருச்சு, இன்னும் பத்து நிமிஷத்துல ட்ரெயின் வந்துரும் என்று சொல்லி அவளை கூட்டிக்கொண்டு படியில் இறங்கி வேகமாக நடந்தான். கூட்ட நெரிசலை தாண்டி S6 கோச் வரும் இடத்தில் சென்று நின்றனர் இருவரும்.
இவர்கள் போய் நின்றபோது நெல்லை எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது.
ட்ரெய்னில் ஏறி இருவரும் இருக்கையில் எதிரெதிரே அமர்ந்தனர். கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வந்திருக்கலாம்ல , எப்போ பாரு கடைசி நிமிஷம் வரவேண்டியது என செல்லமாக கோவப்பட்டாள். அதுல தான் ஒரு த்ரில் இருக்குனு சொல்லி சமாளித்தான். உன்னை திருத்தவே முடியாது என சொல்லி கொண்டே வாங்கி வந்திருந்த சாப்பாட்டு பார்சலை அவன் கைகளில் திணித்தாள். இருவரும் சாப்பிட்டு படுத்தபோது செங்கல்பட்டை தாண்டி ட்ரெயின் சென்று கொண்டிருந்தது.
சஞ்சனாவை நாளை எப்படி வீட்டில் அறிமுகப்படுத்தி வைக்க போகிறோம் என “டிப் டீயை” குடித்தவாறே யோசித்து கொண்டிருந்தான். அப்போது அவன் கல்லூரிக்கு முதல் முறையாக சேர வந்தபோது “போறப்போ ஒத்தையா போற, படிப்பை முடுச்சுட்டு வரப்போ எவளை இழுத்தினு வரப்போறியோனு” அம்மா சொன்னது நியாபகத்துக்கு வந்தது, அதை நினைத்து தனியாக சிரித்து கொண்டே சஞ்சனாவை பார்க்க அவள் தூங்கி போயிருந்தாள்.
சஞ்சனாவை அம்மாவுக்கு பிடிக்குமா, என்ன சொல்லுவாங்கன்னு, அப்பா எப்படி எடுத்துக்குவாருன்னு யோசித்தவாறே இவனும் தூங்கிவிட்டான். காலையில் அஞ்சு மணிக்கு அலாரம் அடித்தது. ஊர் அருகே வந்துவிட்டதை அறிந்து சஞ்சனாவை எழுப்பினான். பத்து நிமிஷத்தில் ஊர் வந்திருந்தது. இருவரும் ட்ரெயினை விட்டு இறங்கியபோது விடிய தொடங்கியிருந்தது. ரயில்வே ஸ்டேஷனை விட்டு வெளியேறி சாலைக்கு வந்தனர். ராபின் சற்று வேகமாக நடந்தான், அதற்கான காரணம் அறிந்தவளாய் அவனை பின் தொடர்ந்தாள். அவன் ஒரு டீ பைத்தியம் என்று தான் அவளுக்கு தெரியுமே, ஸ்டேஷன் எதிரே இருந்த டீ கடைக்கு தான் செல்கிறான் என்று அவள் நினைத்தது போலவே டீ கடைக்கு சென்று நின்றான் ராபின்.
அண்ணே ஸ்ட்ராங்கா ஒரு டீ..சக்கரை கம்மியா..ஒரு காஃபி சக்கரை ஜாஸ்தியா. சஞ்சனாவிற்கு காஃபி குடிக்க தான் பிடிக்கும். இரண்டு கைகளிலும் காஃபி கப்பை பற்றிக்கொண்டு அவள் உதடுகளின் நடுவே வைத்து காஃபி குடிக்கும்போது அவள் முகத்தில் ஏற்படும் சிறு முகமலர்ச்சியை அவளுக்கே தெரியாமல் கண்டு ரசிப்பான் ராபின். அதற்காகவே அவ்வப்போது அவன் டீ குடிக்கும்போது அவளை கேக்காமலே அவளுக்கு காஃபி வாங்கி குடுப்பான். சாதாரண கடையாக இருந்தால் பேப்பர் கப்பில் வாங்கிதருவான். இம்முறையும் பேப்பர் கப்பில் காப்பியை வாங்கி அவளிடம் நீட்டினான். அவளும் லேசாக புன்னகைத்துவிட்டு காபியை வாங்கி குடிக்க தொடங்கினாள். ராபினும் சஞ்சனாவை ரசிக்க தொடங்கினான். அதற்குள் தம்பி டீ எடுத்துக்கோங்க என்று அழைப்பு வந்தது. பலமுறை ரசித்து இருக்கிறான், ஆனாலும் சிறு ஏமாற்றத்துடன் மாஸ்டரிடம் சிறு கடுப்புடன் தேங்க்ஸ்னா என கூறி டீ க்ளாஸை வாங்கிக்கொண்டான்.
அந்த அதிகாலை பனி நேரத்தில், பயண அசதியில் சூடான டீயை ஒரு வாய் அருந்தியதும் ராபின் புத்துணர்ச்சி கிடைத்தது போல் கண்களை மூடி மேலே பார்த்துக்கொண்டே மூச்சை இழுத்துவிட்டு ஆசுவாசப்படுத்தினான். இவன் செய்கிற குரங்கு சேட்டைகளை அருகில் நின்ற சஞ்சனா உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே ரசித்துக்கொண்டு இருந்தாள். அவன் இரண்டு விரல்களில் டீ க்ளாஸை பிடித்து ஸ்டைலாக குடிப்பதை அவனுக்கு தெரியாமல் கடைகண்ணில் பார்த்து ரசிப்பாள். அவனிடம் இதுவரை சொன்னதில்லை, சொன்னால் அந்த இயல்பு போய்விடுமோ என்று தனக்குள்ளே வைத்தே கொண்டாள்.
சஞ்சனாவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அதிகாலை நேரம் என்பதால் தெருவில் யாரும் தென்படவில்லை, முக்கியமாக முன் வீட்டில் திண்ணையில் படுத்து இருக்கும் பாம்படத்து கிழவி. ராபினுக்கும் இது மிகவும் வசதியாக போனது, இல்லையென்றால் கிழவி இவர்களை பார்த்து யாரு என்ன என்று விசாரிக்கும் தோரணையில் தெருவே விழித்துக்கொள்ளும். பின்னர் அது சர்ப்ரைஸ் ஆக இருக்காது.
வீட்டின் வாசலில் நின்று காலிங் பெல்லை அழுத்தினான். எந்த ஒரு சலனமும் தென்படவில்லை. பின்னர் மீண்டும் அழுத்தினான், இம்முறை டூப்லைட் வெளிச்சம் வெளியே எட்டிப்பார்த்தது. சில நொடி இடைவெளியில் கதவை திறக்கும் சத்தம் கேட்டது. யார் என்று கேட்டு கொண்டே உள்புற மரக்கதவை அம்மா திறந்தாள்.
கிரில் கதவினூடே ராபினை பார்த்துவிட்டு “வா..வா…நீதான் வந்திருப்பன்னு நினச்சேன்டா” என்று பாசம் கலந்த வார்த்தையோடு கூறிக்கொண்டே கதவை திறந்தாள். சஞ்சனா ராபின் பின்னால் நின்று கொண்டிருந்தாள். மற்றொரு ஆள் பின்னால் நிற்பதை கவனித்துவிட்டு ..யாரடா கூட்டு வந்திருக்க என்று ராபினிடம் கேட்டுக்கொண்டே தூக்கம் கலந்த கண்களை கசக்கிக்கொண்டு இருட்டில் நின்று கொண்டிருக்கும் சஞ்சனாவை பார்த்தாள். அதற்குளாகவே சஞ்சனா முன் சென்று நின்று வணக்கம் ஆண்ட்டி என்றாள்.
யாருடா இந்த பொண்ணு..
அம்மா …”இவ சஞ்சனா..உன்னோட மருமக..” என்றான் ராபின்.
❤️❤️❤️
~ ராக்ஸ்
👌 உன்னோட கதையை உல்ட்டா பண்ணிட்டியா
LikeLiked by 1 person
உங்க கதை தானே நா வேற லெவல் இருக்கு நா Real Love Story Intresting aa.. Waiting for Next part Naa😀❤️👌👏
LikeLike
Real story illa… Reel Story
LikeLiked by 1 person
Anna yaaru andha sanjana..?
Anni ya?
LikeLiked by 1 person
Just a imagination story da
LikeLike