
கிறிஸ்துமஸ்க்கு முந்தைய இரவு பொழுது..
தொலைதூரத்தில் சென்று கொண்டிருந்த ரயிலின் ஹார்ன் சத்தம் மிக அருகில் செல்வது போல் கேட்டு கொண்டிருந்தது.
மொட்டை மாடியில் விட்டத்தை பார்த்து படுத்து கொண்டு நட்சத்திரங்களோடு லயித்து போய் இருந்தான் ரோஷன்.
ரயிலின் ஹார்ன் சத்தம் அவன் செவியில் விழ சுயநினைவுக்கு வந்தவனாய் சுற்றும் முற்றும் பார்த்தான். அவனை தவிர அங்கு யாரும் இல்லை.
அந்த ரம்மியமான இரவு பொழுதில் தென்னை மரமும், மாமரமும் காற்றுடன் சேர்ந்து தங்களுக்குள் ரகசியம் பேசிக் கொண்டிருந்தன.
வான் நட்சத்திரங்கள் கண்ணடிக்க, நிலா வெட்கம் தாளாமல் மேகத்தின் பின்னால் சென்று ஒளிந்து விளையாடி கொண்டிருந்தது.
அப்பகுதியில் உள்ள தேவாலய மணியின் சத்தம் அவ்வப்போது கேட்டு கொண்டிருந்தது.
இதையெல்லாம் ரோஷன் கவனித்து கொண்டே எதிரே இருந்த வீட்டின் ஜன்னலை நோக்கினான், கதவுகள் பூட்டி இருந்தது.
மனம் வெதும்பியது… ஒரு வருடம் காத்துவிட்டோம், இன்னும் இந்த ஒரு இரவு தானே என்று அவன் மனம் ஆறுதல் கூறியது.
இருந்தபோதும் என்னவோ போல் உணர்ந்தான், அவனை பொறுத்தவரை நேரம் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது, எப்போது விடியும் என காத்திருந்தான்.
டேய்…முழிச்சிட்டியா என்று கேட்டு கொண்டே வந்தான் பாரதி.
உனக்கும் சேர்த்து சாப்பாடு வாங்கிட்டு வந்திருக்கேன், மதியமே நீ சாப்பிடல.. வா இப்போ சாப்பிடலாம் என்றும் ரோஷனை கூப்பிட்டான் பாரதி.
இல்லடா எனக்கு பசிக்கல… நீ போய் சாப்பிட்டு எனக்கு டேபிள்ல எடுத்து வச்சிரு…நான் அப்புறம் சாப்பிட்டுக்குறேன் என்றான் ரோஷன்.
கட்டிலில் ரோஷனின் அருகில் அமர்ந்து அவன் தோள் மேல் கை போட்டு கொண்டான் பாரதி..எனக்கு புரியுது மச்சான்.. இத்தனை மாசம் இந்த நாளுக்கு தான காத்திருந்த… இன்னும் கொஞ்ச நேரம் தான.. இப்போ நல்லா சாப்பிட்டு நிம்மதியா தூங்கு.
அப்போது தான் அவளை போய் நாளைக்கு பார்த்து பேசுறதுக்கு உடம்புல தெம்பு இருக்கும்.
இல்லடா பாரதி… அவ நினைப்பாவே இருக்கு… ரொம்ப நாள் கழிச்சு பார்க்க போறேன்.. நாளைக்கு அவகிட்ட போய் பேச போறத நினைச்சாலே பதட்டம்மா வருது.. போன வருஷம் மாதிரி சொதப்பிட கூடாது என்றான் ரோஷன்.
இதை கேட்டதும் பாரதி சத்தமாக சிரித்துவிட்டான்.
நான் இங்க சீரியஸா சொல்லிட்டு இருக்கேன்…சிரிக்கவா செய்யுற என்று எகிறினான் ரோஷன்.
சிரிக்காம என்னடா பண்ண… நீ பண்ண சம்பவம் அப்படி… எப்படிடா சிரிக்காம இருக்க முடியும் என்று சிரித்து கொண்டே கூறினான் பாரதி. அதை நினைக்கையில் ரோஷனுக்கும் உள்ளுக்குள் சிரிப்பு வந்தது, இருந்தாலும் வெளி காட்டிக்கொள்ளவில்லை.
போதும் நிறுத்து… ரொம்ப சிரிக்காத… நீயும் போய் புரோப்போஸ் பண்ணி பாரு அப்போ தான் அந்த ஃபீல் என்னன்னு உனக்கு புரியும் என்று சொல்லி கொண்டே கட்டிலில் இருந்து வேகமாக எந்திரித்து சென்று மாடி சுவற்றில் கை வைத்து நின்று கொண்டு அவளை பற்றிய யோசனையில் மீண்டும் மூழ்கினான்.
இந்நேரம் அவள் கிளம்பி இருப்பாளா?… என்ன பண்ணிட்டு இருப்பா…?? சாப்பிட்டு இருப்பாளா ?? நம்ம கூட நாளைக்கு பேசுவாளா?? என்று அனத்தி கொண்டு இருந்தான் ரோஷன்.
ஆமா இவர் பெரிய கபாலி ரஜினி… பல வருஷம் கழிச்சு குமுதவள்ளியை பார்க்க போறாரு.. அதை நினைச்சு இப்போ ஃபீல் பண்ணிட்டு இருக்காரு… அனத்தாம இருடா டேய்… இப்போ வா சாப்பிட போலாம்.. பசிக்குது என்றான் பாரதி.
ஆனா ஃபீலிங் ஒன்னு தானே சார்… நான் அப்புறம் சாப்பிடுறேன் நீ போய் சாப்பிடு என்று ரோஷன் சொல்லி கொண்டு இருக்கும்போதே.. அட ச்சீ வா சாப்பிட போவோம் என்று அவனை இழுத்துக்கொண்டு வீட்டினுள் சாப்பிட போனான் பாரதி.
ரோஷன்… சினிமாவில் சாதிக்கும் கனவுகளுடன் சுற்றி திரியும் எத்தனையோ நபர்களில் இவனும் ஒருவன். ஒரு இயக்குனராக வேண்டும் என்பது தான் நெடு நாள் கனவு. பேருக்கு இன்ஜினியரிங் படித்திருந்தாலும் சினிமாவின் மேல்தான் விருப்பம் அதிகமாக இருந்தது. வீட்டில் அப்பாவிடம் கெஞ்சி அனுமதி வாங்கிக்கொண்டு சொந்த ஊரிலிருந்து சென்னை வந்தான்.
தியாகராய நகரில் தேடி கண்டுபிடித்து எப்படியோ குறைந்த விலைக்கு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்தான். இரண்டு தளங்கள் கொண்ட வீட்டில் இவனுக்கு கிடைத்த வீடானது மொட்டை மாடியில் சின்ன ஹால், ஒரு அறை, கிட்சன், பாத்ரூமுடன் கூடிய ஒரு எளிய வீடு. அது மட்டுமின்றி மொட்டை மாடியில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் பதித்த சிறு கொட்டகையும் இருந்தன. வீட்டை சுற்றி தென்னை மரங்களும், மாமரமும் இருந்தன. வீட்டிற்கு கீழே இரண்டு வீடு தள்ளி ஒரு சின்ன மெஸ்சும், தெரு முனையில் டீ கடையும் இருந்தன. இவனுக்கும் அந்த பகுதியும், வீடும் பிடித்து இருந்தது.
வந்த புதிதில் வித்தியாசமாக தோன்றிய எல்லாமே கொஞ்ச காலத்திலேயே பழகிப்போனது. வாய்ப்புகள் தேடி தினமும் அலைந்தான். அப்படியே ஒரு வருடம் மேல் ஓடி விட்டது. ஓரளவிற்கு சில நபர்களின் சகவாசம் கிடைக்க தன் சினிமா உலக வட்டாரத்தை பெருக்கி கொண்டே சென்றான். அப்படி ஒரு நாள் வாய்ப்புக்காக ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு வந்து அது கிடைக்காமல் போக அந்த நிறுவனம் அருகில் உள்ள டீ கடைக்கு சென்று டீ சொல்லிவிட்டு சேரில் உக்கார்ந்து இளைப்பாறினான். அப்போது அவன் எதிரே அமர்ந்து இருந்த பாரதியை பார்த்த போது எங்கோ பார்த்த நியாபகமாக இருந்தது.
சரி அதை அவன்கிட்டையே கேட்டு விடலாம் என்று மனதில் நினைத்துக்கொண்டு.. ஹாய் ப்ரோ..நான் ரோஷன் …உங்களை நான் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு.. நீங்களும் சினிமாவில் வாய்ப்பு தேடி அலஞ்சிட்டு இருக்கீங்களா என்று பாரதியை பார்த்து கேட்டான் ரோஷன். ஆமாம் ப்ரோ…என் பேர் பாரதி. நானும் வாய்ப்பு தேடி அலஞ்சிட்டு இருக்கேன். எனக்கும் உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி தான் தோனுது என்றான் பாரதி. இதுக்கு முன்ன வேற எதாச்சும் ஒரு தயாரிப்பு நிறுவன வாசல்ல பாத்திருப்போம் என்றான் ரோஷன்.
பாரதியும் ரோஷனை போல் வெளியூரில் இருந்து வந்து சென்னையில் தங்கி சினிமாவில் வாய்ப்பு தேடி கொண்டிருக்கும் இளைஞன் தான். இருவரும் ஒருவையொருவர் பற்றி பேசி அறிந்து கொண்டனர். அப்படியே பேசிய வாரே நடந்து செல்ல சிறிது நேரத்திலேயே அவர்களுக்குள் ஒரு நட்பு உருவாகியது. பின்னர் அவ்வப்போது ஒன்றாக சென்று வாய்ப்புகள் தேடி அலைந்தார்கள். பின்பு ஒரு கட்டத்தில் பாரதியும் ரோஷனின் வீட்டிலேயே வந்து தங்கி கொண்டான். சிறிது காலத்திலேயே இருவரும் “நண்பேன்டா” ஆகிவிட்டார்கள்.
என்னதான் நண்பேண்டாவாக இருந்தாலும் அவ்வப்போது சண்டையும் போடுவார்கள். ரோஷன் ரஜினியின் தீவிர ரசிகன், பாரதி கமல் ரசிகன், இந்த ஒரு காரணம் போதாதா என்ன சண்டை போடுவதற்கு.? வீட்டு சுவற்றில் ஒரு பகுதியில் ரஜினியின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கும் மறுபகுதியில் கமலின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கும். இன்னொரு புறம் இருவருக்கும் பொதுவான உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரையிலான சம்பந்தப்பட்ட மற்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கும். வீட்டின் உள்ளே யார் பெரிய “நாயகன்” என்று சண்டை போட்டு கொண்டாலும் வெளியே இருவரும் ஒருவருக்கொருவர் “தளபதி” தான்.
பின்னர் ஒரு நாள் பாரதிக்கு வளர்ந்து வரும் இயக்குனரின் அடுத்த படத்தில் துணை இயக்குநராக பணி புரியும் வாய்ப்பு கிடைத்தது. இந்த விஷயத்தை முதலில் ரோஷனிடம் பாரதி சொன்ன போது தனக்கே வாய்ப்பு கிடைத்தது போல் சந்தோசத்தில் பாரதியை ஆர தழுவி பாராட்டினான் ரோஷன். சிறிது நாட்களில் பாரதியும் சினிமா ஷூட்டிங்கில் பிஸி ஆகிவிட..மீண்டும் தனியாக வாய்ப்புகள் தேடி அலைந்தான் ரோஷன். பாரதியும் தன்னால் முடிந்தவரை அவனுக்கு தெரிந்த வட்டாரத்திலும் தான் பணிபுரியும் படத்தின் இயக்குனரிடமும் தயாரிப்பாளரிடமும் அவ்வப்போது ரோஷனை பற்றி கூறி அவனுக்காக வாய்ப்பு கேட்டுக் கொண்டிருந்தான். ஆனால் எதுவும் பெரிதாக கைக்கொடுக்கவில்லை.
அப்போது தெரிந்த நபர் ஒருவர் மூலம் ஒரு வாய்ப்பு ரோஷனை தேடி வர அதன் விஷயமாக மும்பை சென்று வந்தான் ரோஷன். மும்பையிலிருந்து திரும்பி சென்னை வரும்போது முழு நம்பிக்கையுடனும், முக மலர்ச்சியுடனும் இருந்தான் ரோஷன்.
அந்த வாய்ப்புக்காக மட்டும் காத்திருக்காமல் தனது தேடுதல் பணியை வழக்கமாக செய்து கொண்டு இருந்தான். ஒவ்வொரு முறை வாய்ப்பு தேடி அலைந்து வீடு திரும்பும் போது நொந்து நூடுல்ஸ் ஆகி வந்தான். அவன் எதிர்பார்த்த வாய்ப்புகளும் எதுவும் அமையவில்லை. அன்று ஒரு நாள் சோகத்தில் வீட்டின் வெளியே மொட்டைமாடி சுவற்றில் கையை வைத்துக்கொண்டு இருந்தான். பாரதியும் வெகு நாட்களாக அங்கு இல்லை, மனம் தளர்ந்து இருந்த ரோஷன் தனிமையாய் இருப்பதை உணர்ந்தான். வெளியே இருந்த கட்டில் அருகில் நின்று கொண்டு தனக்குத்தானே பேசி புலம்பி கொண்டு இருந்தான் ரோஷன். அப்போது திடீரென்று எங்கிருந்தோ அவனுக்கு பிடித்த பாடல் ஒலிப்பது போல் தோன்றியது.
“வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்” என்ற அண்ணாமலை பட பாடல். இந்த பாடலை அவனுக்கு எப்போது கேட்டாலும் மனதில் ஒரு உத்வேகம் வந்து விடும். நமக்கு பிடித்த பாட்டு எங்கிருந்து வருது என்று சுற்றி முற்றி பார்த்தான். சத்தம் எதிர் வீட்டில் இருந்து வருவது போல் தோன்றியது. ஆனால் இதுனால் வரை அந்த வீட்டின் கதவுகள் திறந்து அவன் பார்த்ததில்லை. எப்போதும் சாத்தியே இருக்கும் கதவுகள் சில நாட்களாக திறந்து இருப்பதை உணர்ந்தான். அந்த எதிர்வீடானது அடுத்த தெருவில் அமைந்து இருந்தது. அந்த வீட்டின் பின்புற சுவரும், இவன் வீட்டின் மொட்டை மாடியும் நேரெதிராக இருக்கும். கட்டிலில் படுத்துக்கொண்டு பார்த்தால் எதிர் வீட்டின் மஞ்சள் நிற சுவரும் , எப்போதும் சாத்தி இருக்கும் சிவப்பு நிற ஜன்னலும் தெரியும்.
ஆனால் இன்று அந்த ஜன்னலின் ஒரு பக்க கதவு திறந்திருக்க அங்கிருந்து பாடல் சத்தம் இவன் செவிக்கு வந்து சேர்ந்தது. அதுவரை குழம்பி போய் இருந்த ரோஷன்..அந்த பாடலை கேட்டதும் உற்சாகம் வந்தவனாய் வேகமாக எந்திரித்து வீட்டினுள் சென்று தன் தலைவன் போஸ்டரை பார்த்து சல்யூட் அடித்துவிட்டு நின்று கொண்டிருந்தான். என்னடா நீயும் உன் தலைவனும் என்ன பேசிட்டு இருக்கீங்க என்று நக்கல் அடித்தவாரே வந்தான் பாரதி. மாமா டேய் எப்படிடா இருக்க என்று கேட்டவாரே பாரதியை அணைத்துக்கொண்டான் ரோஷன்.
என்னை விடு…உனக்கு என்ன ஆச்சு என்று பாரதி கேட்க… அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று சமாளித்தான் ரோஷன். பொய் சொல்லாம ஒழுங்கா உண்மைய சொல்லு நீ உன் தலைவன் போஸ்டர் பார்த்து கண்ணிமைக்காம நிக்கும்போதே தெரிஞ்சுச்சு நீ என்னத்தையோ நினைச்சு குழம்பி போய் இருக்கேன்னு.. என்ன பிரச்சனை உனக்கு என்று ரோஷனை பற்றி நன்கு புரிந்து வைத்திருந்த பாரதி கேட்டான். எதும் இன்னும் சரியா அமையல… கடைசி வர வாய்ப்பே கிடைக்காம போய்டுமோன்னு பயமா இருக்கு என்று புலம்பி தள்ளினான் ரோஷன்.
வாயை மூடுரா முதல்ல…நீ எப்பவும் பாசிட்டிவா தானடா இருப்ப… எனக்கே நீதான் தைரியம் குடுப்ப.. இப்போ நீயே இப்படி புலம்புற..உன்னை இப்படி பார்த்தது இல்லையேடா.. சரி விடுடா எல்லாம் சீக்கிரம் சரியாகும் என்று கூறி ரோஷனை ஆறுதல் படுத்தினான் பாரதி. என் தலைவன் பாட்டை கேட்டதுமே சரி ஆகிட்டேன்…எனக்கு இப்போ ரொம்ப பசிக்குது வா சாப்பிட போவோம் என்று கூறி மாமி மெஸ்சுக்கு பாரதியை கூட்டி சென்றான் ரோஷன்.
அன்றைய பொழுது கழிய மறுநாள் புது உத்வேகத்துடன் மீண்டும் தேடுதல் வேட்டையை தொடர கிளம்பினான் ரோஷன். அப்போது எதிர் வீட்டில் இருந்து மீண்டும் ரோஷனுக்கு பிடித்த ஒரு ரஜினி பட பாடல் ஒலிக்க தொடங்கியது.
இந்த முறை படையப்பா படத்தில் இருந்து “வெற்றி கொடிகட்டு “ ஒலித்தது.
ஒரு நொடி நின்று எதிர்வீட்டு ஜன்னலை உற்று கவனித்தான். ஜன்னல் கதவில் “ஆல் தி பெஸ்ட் “ என்று ஆங்கிலத்தில் எழுதி இருந்தது. பாட்டை ரசித்து கொண்டே அதையும் கவனித்த ரோஷன் லேசான புன்முறுவலுடன் ஜன்னலை உற்று நோக்கி யாரும் இருக்கிறார்களா என்று பார்த்தான்… யாரும் இருப்பதாய் தெரியவில்லை.. இருட்டாக இருந்தது. வந்து பார்த்து கொள்வோம் என்று பாடலை முணுமுணுத்தபடி அங்கிருந்து கிளம்பி சென்றான். இப்படியே காலையில் வெளியே செல்லும்போதும் இரவு வீடு திரும்பிய போதும் அவனுக்கு பிடித்த பாடலும், நேர்மறை கருத்துக்களும் எதிர்வீட்டு ஜன்னலில் இருந்து வந்து கொண்டு இருந்தது. ஆரம்பத்தில் எதேட்சையாக தெரிந்தாலும், நாட்கள் போக போக அவனை பற்றி அறிந்த யாரோ ஒருவர் தான் இதையெல்லாம் செய்கிறார்கள் என்பதை அறிந்து தெரிந்து கொண்டான். அது யார் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் கூடியது ஆனாலும் பயமாய் இருந்தது.
அன்று ஒரு பகல் பொழுதில் வீட்டில் கரண்ட் இல்லை ரோஷன் வெளியே கிளம்பி கொண்டு இருந்தான். அப்போது எதிர் வீட்டில் இருந்து பாடல் கேட்க தொடங்கியது, கரண்ட் இல்லை பாடல் மட்டும் கேட்கிறதே என்று மொட்டை மாடிக்கு வந்தான் ரோஷன் அவன் வந்து எதிர்வீட்டு ஜன்னலை உற்று நோக்கிய போது அந்த ஜன்னல் கதவில் சாக்பீஸால் ஏதோ எழுதப்பட்டுக் கொண்டிருக்க.. அந்த கைவிரல்களை பார்க்க முடிந்தது, கூடவே அவனுக்கு பிடித்த பாடல் மெல்லிய குரலில் கேட்டது. அப்போதுதான் அது ஒரு பெண் என்று அறிந்து கொண்டான். இவன் வந்ததை அறிந்த அந்த பெண் பாடுவதை நிறுத்திவிட்டு ஜன்னலை சாத்திவிட்டு சென்றுவிட்டாள். இதை கண்ட பின்பு ரோஷனுக்கு ஆர்வம் மேன்மேலும் அதிகரித்தது.
யாரு இந்த பொண்ணு? இதெல்லாம் நமக்கு நடக்குதா? இல்லை எதேச்சையா நடக்குதா ? எதேச்சையா நடக்குனா நம்மள பாத்துட்டு என் அந்த பொண்ணு பாடுறத நிறுத்திட்டு கதவையும் சாத்திட்டு போகணும்? முதல்ல இதை கண்டுபிடிக்கனும். எப்படி கண்டுபிடிக்க? அந்த எதிர்வீட்டிற்கு செல்ல வேண்டுமென்றால் ஒரு கிலோமீட்டர் சுற்றி அந்த காம்பவுண்ட் வீதிக்குள் செல்ல வேண்டும். தேவை இல்லாமல் பிரச்சனை ஏதும் ஆகிவிட கூடாது, ஆனா அந்த பொண்ணு யாருன்னு எப்படியாச்சும் கண்டுபிடித்தாக வேண்டும் என்ற தனக்கு தானே புலம்பியவாரு அங்கிருந்து கிளம்பி சென்றான்.
அன்று வேலை தேடி சென்ற ரோஷன் மீண்டும் மாலை வீட்டிற்கு செல்லாமல் வீட்டின் அருகே இருந்த பூங்காவில் உட்கார்ந்து இருந்தான், பாரதிக்கு போன் செய்தான். இதுவரை நடந்ததை பற்றி அனைத்தையும் பாரதியிடம் கூறி அந்த பொண்ணு யாருன்னு தான் தெரிந்துக்கொள்ள விரும்புவதாக கூறினான். இதையெல்லாம் முதலில் கேட்டு பாரதி சிரித்தாலும் ஒருவேளை இருக்குமோ சரி உனக்காக முயற்சி செய்து பார்க்கலாம் நாளைக்கு நான் வந்துடுவேன் மற்றவற்றை நேரில் பேசிக் கொள்ளலாம் என்று கூறி போனை கட் செய்தான் பாரதி.
பின்னர் சிறிது நேரத்தில் பூங்காவில் இருந்து கிளம்பிய ரோஷன் மாமி மெஸ்ஸில் மசால் தோசை சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு சென்று உறங்கினான். இவன் உறங்க தொடங்கும் வேளையில் மீண்டும் பாடல் ஒலித்தது. இந்த முறை காலையில் ஒலித்தது போல் அந்த பெண்ணின் குரலிலேயே பாடல் ஒலித்தது. அந்த மெல்லிசை குரலில் பாடலைக் கேட்டவாறு அசதியில் உறக்கத்தில் ஆழ்ந்தான் ரோஷன். காலையில் வந்து பாரதி எழுப்பும்போது தான் உறக்கம் கலைந்து எழுந்தான் ரோஷன். பாரதியை பார்த்ததும் மீண்டும் நடந்தவற்றையெல்லாம் கூறி அவனை வேகமாக அழைத்துக் கொண்டு எதிர்வீட்டு ஜன்னலை சுட்டிக்காட்டி கூறினான்.
அப்போது அந்த ஜன்னல் பூட்டி இருந்தது, ஒரு பக்க கதவில் நேர்மறை வரிகள் எழுதப்பட்டிருந்தன இவர்கள் பேசிக் கொண்டிருந்த வேளையில் ஜன்னல் கதவு திறக்கப்பட…இதை எதிர்பாராத ரோஷன் இப்போதாவது அது யாரென்று எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று நினைத்தான். அந்த கண நேரத்தில் பாரதி அவன் செல்போனில் இருந்து “மறைந்து இருந்து பார்க்கும் மர்மம் என்ன” என்று தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் வரும் பாடலை ஒலிக்க விட்டான். இதைக் கேட்டதும் அந்த பெண்ணின் சிரிப்பு சத்தம் பதில் மொழியாய் இவர்களுக்கு கேட்டது. அவளிடம் பேச நினைக்கையில் ஜன்னலை மீண்டும் சாத்திவிட்டு அவள் போய் விட்டாள்.
தற்போது ரோஷனை காட்டிலும் பாரதிக்கு ஆர்வம் அதிகமாகிவிட்டது. சரி மச்சான் கண்டிப்பா நம்ம அந்த பொண்ணு யாருன்னு கண்டுபிடிக்கிறோம், எப்படி கண்டுபிடிக்கலாம் என்று இருவரும் யோசித்து கொண்டு இருந்தார்கள். அப்போது ஒரு ஐடியா கொடுத்தான் ரோஷன், டேய் பாரதி நீ ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர் தானே இப்ப நீங்க எடுத்துட்டு இருக்க படத்துக்கு வீடு ஒன்னு சினிமா சூட்டிங்க்கு தேவைப்படுது சொல்லி நாம போய் அங்கே கேட்டு பார்க்கலாம். அப்படி போறப்போ அந்த வீட்டுல யாரு எல்லாம் இருக்காங்கன்னு நமக்கு தெரிஞ்சிடும் என்று பாரதிக்கு யோசனை கூறினான் ரோஷன். ஓகே அப்படியே போய் ட்ரை பண்ணி பார்ப்போம் என்றான் பாரதி.
சரி வா கிளம்பு இப்பவே போவோம் என்று பாரதியை இழுத்துக் கொண்டு வேகமாக கிளம்பினான் ரோஷன். பைக்கை ஸ்டார்ட் செய்து ரோஷனை பின்னாடி உட்கார வைத்துக் கொண்டு அந்த வீடு அமைந்து இருக்கும் தெருவுக்குள் சென்றான் பாரதி. அந்த காம்பவுண்ட் வீடை தேடி கண்டுபிடித்து உள்ளே செல்ல முயற்சித்தபோது அங்கிருந்த வாட்ச்மேன் இவர்களை தடுத்து நிறுத்தினார். அது ஒரு கேட்டட் கம்யூனிட்டி, யாரும் எளிதாக உள்ளே நுழைந்து விட முடியாது. வாட்ச்மென் இவர்களை விசாரித்த போது தாங்கள் இருவரும் சினிமா ஷூட்டிங்க்கு வீடு பார்க்க வந்ததாகவும், அதற்கான அனுமதியை அந்த வீட்டில் பெறுவதற்காக செல்வதாக பாரதி வாட்ச்மேனிடம் தெரிவித்தான். அதெல்லாம் இங்க அனுமதி கிடையாது, வேற எங்கயாவது போய் பாருங்க என்று அதற்றினார் வாட்ச்மேன். ஐயா அதை நீங்க சொல்லாதீங்க… நாங்க அவங்ககிட்ட பேசிக்கிறோம் என்றான் ரோஷன். அதை வாட்ச்மேன் காதில் வாங்கிக் கொள்ளாமல் அவர்கள் அவர்களை விரட்டுவதிலேயே குறியாக இருந்தார். பின்னர் எப்படியோ பேசி சமாளித்து உள்ளே சென்று விட்டனர்
வீட்டை கண்டுபிடித்து அந்த வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினான் ரோஷன். கொஞ்சம் படபடப்பாக இருந்தது வீட்டின் கதவை திறக்கும் சத்தம் கேட்டது, ஒரு வயதான பாட்டிமா வந்து கதவைத் திறக்க… ரோஷனும் பாரதியும் குழம்பி நின்றனர். அந்த பாட்டி இவர்களிடம் யார் நீங்க ? உங்களுக்கு யார் வேணும் ? என்று கேட்க இவர்கள் சுதாரித்துக் கொண்டு சினிமா சூட்டிங்க்கு வீடு வாடகை பார்க்க வந்தோம் என்று கூற… அதெல்லாம் இங்க அனுமதி இல்லப்பா..நீங்க கிளம்புங்க என்றாள் பாட்டி. உடனே இப்படி சொன்னா எப்படி பாட்டி… இதுக்கான சரியான வாடகை எவ்வளவோ அதை குடுத்துடுறோம், கொஞ்சம் உள்ள போய் பேசலாமே என்றான் பாரதி. யப்பா நீங்க யாருனு தெரியாது.. திடீர்னு வந்து ஷூட்டிங்க்கு வீடு கேட்டா எப்படி ?? அதெல்லாம் குடுக்க முடியாது, தொந்தரவு பண்ணாம இங்க இருந்து முதல்ல கிளம்புங்க என்று விரட்டினாள்.
அப்போது கெஞ்சாத குறையாக ரோஷன் மீண்டும் கேட்க பாட்டி மறுக்க.. உள்ளே இருந்து “அவங்களை உள்ள வரச் சொல்லு” என்று ஒரு ஆண் குரல் கேட்க… சரி உள்ள வாங்க என்று அழைத்தாள் பாட்டி. வீட்டினுள் இருவரும் செல்ல அங்கே சோஃபாவில் ஒரு வயதானவர் உட்கார்ந்து இருக்க இவர்களை அழைத்து என்ன விஷயம் என்று கேள்வி கேட்டார். இருவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டுவிட்டு.. சினிமா ஷூட்டிங் க்கு இந்த வீடு தேவைப்படுது..வாடகைக்கு விட முடியுமா என்று கேட்டார்கள். அது சரிபட்டு வராதுப்பா… நாங்க வயசானவங்க எங்களால உங்களுக்கு வீடு வாடகைக்கு விட்டுட்டு நாங்க சிரமப்பட முடியாது. சரி என்ன மாதிரி படம் எடுக்குறீங்க, யார் ஹீரோ என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார் தாத்தா. கொஞ்சம் குடிக்க தண்ணி தரீங்களா என்று ரோஷன் இடைமறித்தான். அவர் கேட்ட கேள்விக்கு பாரதி பதில் கூறி சமாளித்தான்.
பாட்டி வந்து தண்ணீர் கொடுத்தாள். தண்ணீரை குடித்துவிட்டு..வீட்டில் நீங்க மட்டும் தானா என்றான் பாரதி. ஏன் வேற யாரையும் தேடி வந்திங்களா என்று கேட்டார் தாத்தா. இல்லை இது சம்பந்தமாக வேறு யாரிடமும் பேசி பார்க்கலாம்னு கேட்டேன் என்றான் பாரதி. அவனை முறைத்துகொண்டே வீட்ல நாங்க மட்டும்தான்..நான் சொல்றதுதான் இங்க எல்லாமே எங்களுக்கு சினிமா சூட்டிங்க்கு வீடு கொடுக்க விருப்பம் இல்ல நீங்க வேற வீட்டை பார்த்துக்கோங்க.. தண்ணி குடிச்சிட்டீங்கல..கிளம்புங்க என்று தாத்தா இருவரையும் பார்த்து கூறினார். சரி கிளம்புறோம் நன்றி என்று சொல்லிவிட்டு பாரதியும் , ரோஷனும் வெளியே சென்றனர். இந்த பாட்டியை பார்க்க வாடா வந்தோம் என்று பாரதி கேட்க…இல்லை பாரதி…இது அந்த பொண்ணு இல்லை.. ஆனா அவ இங்கதான் இருக்கா என்றான் ரோஷன்.
எப்படி இவ்வளவு உறுதியாக சொல்ற…அந்த பாட்டி மட்டும் தான் இருக்காங்க..வேற யாரும் இருக்கிற மாதிரி தெரியல.. அந்த ஜன்னல் கதவும் இத்தனை நாள் திறந்து இருந்து நாம பார்த்தது இல்லை. ஒருவேளை எதாச்சும் பேயா இருக்குமோ என்று நக்கலாய் கேட்டான் பாரதி.
ஏதே பேயா…அதெல்லாம் இல்லை..அது ஒரு பொண்ணுதான்.. அவ வீட்டுல தான் இருக்கா..வெளியில ஒரு ஹீல்ஸ் செருப்பு இருந்துச்சு, வீட்டுல இடப்பக்கம் இருந்த ரூம்ல சல்வார் ஒன்னு தொங்கிட்டு இருந்துச்சு அந்த பாட்டியா இதெல்லாம் போட்டு போக போறாங்க. அதுமட்டும் இல்லாம அந்த பொண்ணு ஜன்னல் எழுதுறப்போ அந்த கையை நான் இன்னைக்கு பார்த்தேன். அவ கையில மருதாணி போட்டு இருந்தா என்றான் ரோஷன். டேய் மருதாணி விஷயம் ஓகே..வீட்டுக்குள்ள இருந்த விஷயத்தை எல்லாம் எப்போடா note பண்ண என்று பாரதி கேட்க… நீ அந்த தாத்தா கிட்ட பேசிட்டு இருக்கப்போ என்றான் ரோஷன். அடப்பாவி என்று பாரதி கூற…இவ்வளவு முயற்சி பண்ணியும் அவளை பார்க்க முடியலயே என்று விரக்தியில் வண்டி சீட்டின் மேல் ஒரு குத்து விட்டான் ரோஷன். அப்போது இவர்கள் இருவரின் நிழல் தவிர்த்து மூன்றாவதாக ஒரு நிழல் கீழே தெரிவதை பார்த்துவிட்டு வீட்டின் மேல் அண்ணாந்து பார்க்க…அங்கே பால்கனியில் இவன் குறிப்பிட்டது போல் மருதாணியிட்ட கைகள் பால்கனி சுவற்றை பற்றி இருந்தன. இது அவளே தான் என்று பாரதியை கூப்பிட்டு காட்டிய பொது அங்கே அந்த கைகள் தெரியவில்லை. நிழலும் மறைந்தன.
யாருடா அங்க இருக்கா என்று பாரதி கேட்க..அவதான்டா என்றான் ரோஷன்.
அங்க யாரையும் காணுமேடா என்று பாரதி சொல்ல… ஒருவேளை உண்மையாவே பேயா இருக்குமோ என்று ரோஷன் நினைத்த நொடியில்..மச்சான் பொண்ணுடா என்று பாரதி மேலே பார்த்தவாரு சொல்ல.. ரோஷன் மேலே பால்கனியை பார்த்தான். அங்கே ஒரு பெண் நின்று கொண்டு இருக்க .
ஹாய் ரோஷன்…ஹவ் ஆர் யூ என்று ரோஷனை பார்த்து அவள் சிரித்து கொண்டே கேட்டாள்.
அவளை பார்த்து ஆச்சரியத்தில் மெய்மறந்து நின்றான்.
டேய் ரோஷன் என்னடா ஆச்சு…ரோஷனின் தோள்பட்டையை தொட்டு உலுக்கினான் பாரதி.
அவ…ஜெ..ஜெ…ஜெனி.. என்று அந்த பெண்ணை நோக்கி கையை காட்ட… அதற்குள் தம்பி நீங்க இன்னும் போகலயா என்று வீட்டிற்குள் இருந்து கேட்டவாறே தாத்தா வெளியே வர.. பைக்கை கிளப்பி ரோஷனை இழுத்து உட்காரவைத்து கொண்டு அங்கிருந்து கிளம்பினான் பாரதி.
நேராக டீ கடைக்கு சென்று பைக்கை நிறுத்தினான் பாரதி.
அவளை உனக்கு முன்னாடியே தெரியுமா என்று கேட்டான் பாரதி.
தெரியும்டா…அவ பேரு ஜெனிஃபர் என்றான் ரோஷன்.
என்னது ஜெனிபரா..யாருடா இந்த ஜெனிஃபர்? இதுக்கு முன்னாடி இந்த பேரை நீ சொல்லி நான் கேட்டது இல்லையே.. எங்கிருந்து வந்தா இந்த ஜெனிஃபர்? எனக்கு தெரியாம அதுவும் இத்தனை நாளா என்று கேட்டான் பாரதி.
முதல்ல இந்த டீயை குடி என்று உற்சாகமாய் கூறினான் ரோஷன்.
நான் கேட்டதுக்கு பதில் சொல்லுடா என்று பாரதி சொல்ல…
நடுவுல நீ சினிமா ஷூட்டிங்ல இருந்த சமயத்துல உன்கிட்ட என்னால எல்லாத்தையும் பகிர்ந்துக்க முடியல. அவளை அன்னிக்கு நான் ஒரு நாள் தான் பார்த்தேன், அதுக்கப்புறம் திரும்ப பார்க்கல …பார்க்கவும் முடியல. அதனால அதை அப்படியே விட்டுட்டேன் என்றான் ரோஷன்.
ஏது ஒரு நாள் பாத்தியா…அந்த ஒரு நாள் பார்த்ததுக்கே உனக்கு நியாபகம் இருக்கு..அந்த பொண்ணுக்கும் உன்ன பத்தி தெரிஞ்சு இருக்கு அப்படின்னா பெருசா வேற எதுவும் நடந்திருக்கணும்.. என்ன நடந்துச்சு ? இதெல்லாம் எப்ப நடந்துச்சுன்னு ஒழுங்கா சொல்லு என்றான் பாரதி.
சரி சரி அவசரப்படாதே எல்லாத்தையும் சொல்றேன் என்று சொல்ல ஆரம்பித்தான் ரோஷன்.
கொஞ்சம் மாதம் முன்னாடி நான் ஒரு சினிமா வாய்ப்புக்காக மும்பை வர போயிட்டு வந்தேன் உனக்கு நியாபகம் இருக்கா என்று ரோஷன் கேட்டான். ஆமாடா நியாபகம் இருக்கு.. அப்போ இவளை மும்பையிலதான் பாத்தியா என்று பாரதி ரோஷனிடம் கேட்டான்.
அடேய் இருடா.. சொல்லுறத முழுசா கேளு.. அவசரப்படாதே என்ற ரோஷன் தான் முதன் முதலாக ஜெனிபரை சந்தித்தது பற்றி பாரதியிடம் கூறத் தொடங்கினான்.
ஒரு வியாழக்கிழமை
ரோஷன் வந்த வேலையை முடித்துவிட்டு மும்பையில் இருந்து சென்னைக்கு கிளம்ப ட்ரெயினில் புக் செய்து இருந்தான். இரவு 11 மணிக்கு தான் ரயில் என்பதால் பொறுமையாக கிளம்பி மும்பையின் வாகன நெரிசலைக் கடந்து சத்ரபதி ரயில்வே நிலையம் வந்து சேர்ந்தான்.அங்கு சென்னை செல்லும் ரயிலை கண்டுபிடித்து அந்த கம்பார்ட்மெண்டில் ஏறி அவனுடைய சீட் நம்பர் 25 அதை தேடி போய் உட்கார்ந்தான். அதிசயமாக ஜன்னலோர இருக்கை அவனுக்கு கிடைத்து இருந்தது.
ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்து பயணம் செய்வது பொதுவாகவே எல்லோருக்கும் பிடிக்கும், காற்று வாங்கிக் கொண்டே எதிரே வரும் வாகனங்களையும் இயற்கையையும் ரசித்துக் கொண்டே வரலாம் அதில் ஒரு பேரானந்தம் இருக்கும். அந்த அனுபவம் ரோஷனுக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் என்னதான் இருந்தாலும் நாம் முன்பே முன்பதிவு செய்து இருந்தாலும் ஜன்னலோர இருக்கை என்பது அதிசயமாக தான் நமக்கு கிடைக்கும். அன்று அவனுக்கு ஜன்னல் இருக்கை கிடைத்தது அதிர்ஷ்டம் தான். தன்னுடைய உடைமைகளை இருக்கையின் அடியில் வைத்துவிட்டு படுத்து விட்டான். இல்லை என்றால் யாராவது வந்து எழுப்பி Lower Seat கேட்டு தொந்தரவு செய்வார்கள் என்பதால் கண்களை மூடி தூங்குவது போல் பாவலா செய்தான்.
சற்று நேரத்தில் ரயிலும் புறப்பட தொடங்கியது, இவனும். உடல் அசதியில் நன்றாக தூங்கி விட்டான். தூங்கி கொண்டிருந்த அவனை யாரோ கூப்பிட்டு எழுப்புவது போல் இருந்தது. அவன் இருந்த அசதியில் காதில் அந்த சத்தம் விழுந்தாலும் எந்திரிக்க அவனின் உடல் ஒத்துழைக்கவில்லை. பின்னர் அவனை யாரோ தோளில் தட்டி உசுப்புவது போல் இருந்தது. பொதுவாகவே ரோஷனுக்கு தூங்கும் போது தன்னை யாராவது எழுப்பினால் அவனுக்கு கோபமும் ,கடுப்பும் இரண்டும் சேர்ந்து வெளிப்படும். அவனைப் பற்றி அறிந்தவர் யாரும் அவனை எழுப்புவதற்கு சற்று தயங்குவார்கள்.
ஆனால் பாரதி, இதையெல்லாம் கண்டு கொள்ள மாட்டான். எப்போதும் அவனை மெதுவாக எழுப்பி பார்ப்பான் எந்திரிக்கவில்லை என்றால் காலால் உதைத்து எழுப்புவான். அவ்வாறு செய்யும்போதெல்லாம் ரோஷன் பாரதியை அசிங்கமாக திட்டிக்கொண்டே எந்திரித்து உட்காருவான்.
தற்போது யாரோ அவனை எழுப்பியதில் தூக்கம் களைந்து கோபம் மற்றும் கடுப்புடன் சடார் என்று முகத்தை திருப்பி தன்னை எழுப்புவது யார் என்று பார்த்து என்ன என்று கத்தினான். எதிரே ஒரு பெண் நின்று கொண்டு இருக்க..அவள் தான் தன்னை எழுப்புகிறார் என்பது அறிந்து வந்த கோபத்தை அடக்கி கொண்டான். பின்னர் மெதுவாக என்ன என்று எதிரே நின்ற அந்த பெண்ணிடம் கேட்டான்.
Sorry to disturb you.. நான் உங்களோட இந்த ஜன்னல் சீட்டை எடுத்துக்கலாமா எனக்கு ஜன்னல் பக்கத்துல உக்காந்து Sun Rise போட்டோ எடுக்கணும். என்னோடது Upper Seat தான் நீங்க மேல படுத்து தூங்குங்க…நான் அதுவரைக்கும் இந்த ஜன்னல் சீட்ல உக்காந்துக்குறேன் என்று மெல்லிய புன்னகையுடன் அவள் ரோஷனிடம் கேட்டாள் .இதை கேட்டு மேலும் கடுப்பானான் ரோஷன் ஏம்மா ஏய்…இது உனக்கே நல்லாருக்கா…அதுக்காக தூங்கிட்டு இருக்கிறவனை எழுப்பி தான் கேப்பீங்களா என்று ரோஷன் கோவமாக கேட்டான்.
அவள் Sorry..Please…என்றாள்.
கோபமாக இருந்தாலும் அவளின் குரலை கேட்டதும் அந்த கோபம் தனிந்து மனதுக்கு இலகுவாக இருந்தது. நடு ராத்திரியில என்னத்த இவள் Sun Rise பார்க்கபோறா என்று நினைத்துக்கொண்டே வாட்சில் நேரத்தை பார்த்தான். விடியும் நேரம், அசதியில் நன்று தூங்கி விட்டான் என்று அப்போது தான் உணர்ந்தான்.
உடனே சரி என்று சொல்லிவிட்டால் தன்னை சாதாரணமாக நினைத்து விடுவாள் என்று முதலில் சீட்டை தர மறுத்து அதெல்லாம் முடியாது வேற யார்கிட்ட ஆச்சும் போய் கேளுங்க என்றான் ரோஷன். உங்களுக்கு எதுத்தாப்புல வயசானவங்க இருக்காங்க நான் அவங்ககிட்ட கேட்க முடியாது அதான் உங்ககிட்ட கேக்குறேன் என்றாள் அவள். அப்போ என்ன பாத்தா உங்களுக்கு “கிச்சா “ மாதிரி தெரியுது, அதனால என்கிட்ட கேக்குறீங்க.. பையன் தானே ஒரு பொண்ணு கேட்டா குடுத்துடுவானு உங்களுக்கு ஒரு நம்பிக்கை என்று பதில் கேள்வி கேட்டான் ரோஷன்.
அய்யோ அப்படி எல்லாம் இல்லை…தப்பு தான் நான் இப்படி கேட்கிறது. ஆனா எனக்கு வேற வழி தெரியல. ஆமா நீங்க தமிழ் பேசுறீங்க..நீங்களும் சென்னை தான் போறீங்களா என்று அவள் ரோஷனிடம் கேட்டாள் .
ஆமா தமிழ் தான், அதுக்கு என்ன இப்போ… தூங்குறவனை எழுப்பி கேள்வி கேட்டு இப்படி தொந்தரவு பண்ணுறீங்க என்று அவன் காட்டமாக கூறியதில் அவளின் முகம் வாடியது போல் இவனுக்கு தோன்றியது. ஆனால் அவளோ எப்படியும் இவனிடம் பேச்சுக் கொடுத்து இந்த ஜன்னல் சீட்டை வாங்கி விட வேண்டும் என்று முனைப்புடன் இருந்தாள் .
ப்ளீஸ் என்று அவள் மீண்டும் கேட்க சரி இங்க உக்காந்துக்கோங்க ஆனா நான் திரும்ப தூங்கி எந்திரிச்சு வந்ததும் எனக்கு என் சீட்டை கொடுத்துடனும் என்று ரோஷன் சொல்ல… சார் நான் கண்டிப்பா கொடுத்து விடுகிறேன் என்று அந்த பெண் ரோஷனிடம் கூறினாள். பின் ரோஷன் எந்திரித்து அப்பர் சீட்டில் சென்று படுத்துக்கொண்டான். அந்த Upper Seat ஆனது ரோஷன் உட்கார்ந்திருந்த ஜன்னல் சீட்டின் எதிர்ப்புறம் உள்ள Upper Seat. இவன் மேலே படுத்துக்கொண்டு கீழே அவனது ஜன்னல் சீட்டில் உட்கார்ந்து இருந்த அந்த பெண்ணை பார்த்தான்.
அவள் ஜன்னல் கதவை திறந்து வெளியே காட்சிகளை ரசித்துக்கொண்டே வந்தாள் . தன் கைகளில் இருந்த போலாராய்டு கேமராவில் காட்சிகளை பதிவு செய்தாள். ரோஷன் அவளை பார்த்த வாரே வந்தான். சென்னை செல்லும் வரை அவள் தன்னுடன் வரப்போவதை எண்ணி அகம் மகிழ்ந்தான். எதிர் காற்றில் அவளின் தலை முடிகள் பறந்து கொண்டிருந்தன, சூரியன் உதிக்க தொடங்கி இருக்கும் போலும்..தன் கதிர்களை மெல்ல படரவிட்டு கொண்டு இருந்தது.
அந்த அதிகாலை சூரிய ஒளி ஜன்னலின் ஊடே அவள் முகத்தில் பட்டு பிரதிபலித்து அந்த இடம் முழுவதும் பட்டொளியில் பிரகாசிப்பது போல் ரோஷனுக்கு தோன்றியது.
என்ன ஒரு அழகான காட்சி…இவள் ஒரு பிரபஞ்ச பேரழகி..இப்படி ஒரு காட்சியை நம்ம படத்துக்கு வைக்கணும் என்று தனக்குள் என்னலாமோ பேசிக்கொண்டு இருந்தான். அவளை பார்த்த கணத்தில் ரோஷன் அவளிடம் மனதை பறிகொடுத்தான். நமக்கு ஜன்னல் சீட்டு கிடைக்கிறதே பெரிய விஷயம் அதுலயும் நாம ட்ராவல் பண்ணுறப்போ எதிர் சீட்டுல ஒரு அழகான பொண்ணு நம்ம கூட ட்ராவல் பண்றதுலாம் உலக அதிசயத்தில் ஒன்னு என்று பெருமை பட்டு கொண்டான்
அவளின் அழகில் மயங்கியவாரும் அசதியினாலும் அவன் கண்கள் சொருக அப்படியே அவளைப் பார்த்தவாறு தூங்கி விட்டான். அவன் பின்னர் சில மணி நேரம் கழித்து கண்களை முழித்து பார்த்த போது கீழே அவள் இல்லை என்பதை உணர்ந்தான். அந்த சீட்டில் அவளை காணவில்லை என்றதும் சற்று பதறி விட்டான். ஒருவேளை அவள் நடுவில் எங்கேதும் இறங்கி சென்று விட்டாளோ என்று யோசித்து கீழே இறங்கி வந்தான். அவளின் உடமைகள் அங்கு இருப்பதை பார்த்துவிட்டு நிம்மதி அடைந்தான். அவனின் ஜன்னல் சீட்டில் வந்து உட்கார்ந்து ஜன்னல் கம்பிகளின் மேல் தலை சாய்த்து வேடிக்கை பார்த்து கொண்டே வந்தான்.. சூரியன் சற்று மேலே எழும்பி இருந்தது, சட சடவென காற்று இவன் முகத்தில் அடித்து சென்று கொண்டு இருந்தன.
Good Morning Boss என்று சொல்லி கொண்டே இவனுக்கு நேரெதிர் சீட்டில் வந்து உட்கார்ந்தாள் அந்த பெண்.
இவனும் பதிலுக்கு Good Morning என்று சற்று இறுக்கமாக கூறினான்.
இன்னும் கோவம் போகலயா என்று அவள் கேட்க…அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று ரோஷன் கூறினான்.
ஒருவழியா தூங்கி முடிச்சிட்டீங்க போல…ரொம்ப அசதியோ…நாள் ஃபுல்லா தூங்குவிங்க.. எனக்கு நேரம் போகாதேன்னு நினைச்சேன்.பரவாயில்லை எந்திரிச்சிட்டிங்க என்று ரோஷனை கலாய்த்தால் அந்த பெண்.
என்ன நக்கலா உங்களுக்கு… ஒரே நாள்ல மும்பையை சுத்தி பாக்க நினைச்சேன்…அதான் கொஞ்சம் அசதி என்றான் ரோஷன்.
என் பேரு ஜெனிஃபர் என்று கூறி அவளை அறிமுகப்படுத்தி கொண்டாள்.
நான் ரோஷன் என்று பதிலுக்கு இவனும் கூற…
அப்போது சாயா…டீ…சாயா…டீ…என்று ட்ரெயினில் டீ விற்றுக் கொண்டு செல்ல.. பையா…தோ சாயா என்று ஜெனிஃபர் அந்த டீ விற்கும் நபரை கூப்பிட்டாள்.
டீயை வாங்கி ரோஷனிடம் ஒரு கப்பை நீட்டினாள் இல்ல வேண்டாம் என்றான் ரோஷன் அட பரவால்ல குடிங்க பாஸ் ..இப்பதான் தூங்கி எந்திரிச்சு இருக்கீங்க கொஞ்சம் பிரஷ்ஷா இருக்கும் என்று சொல்லிக் கொண்டே ரோஷனிடம் டீ கப்பை கொடுக்க அவன் அதை வேகமாக வாங்க முற்பட பார்த்து சுட்டுவிட போகிறது என்று சொல்லிக் கொண்டே அருகில் இருந்த டேபிள் மீது வைத்தாள்.
இருவரும் நேர் எதிரே உட்கார்ந்து டீயை குடித்துக் கொண்டே பேசத் தொடங்கினர். தன்னை பற்றியும், தான் மும்பை வந்த காரணத்தையும் ஜெனிஃபரிடம் கூறினான் ரோஷன்.
நான் ஒரு freelancer , எனக்கு ட்ராவல் அப்படின்னா ரொம்ப பிடிக்கும். புது புது இடங்களுக்கு சென்று, புதிய மனிதர்களை சந்தித்து அவர்களை பற்றியும், அவர்களின் வாழ்க்கை முறை கலாச்சாரம், உணவு பழக்கம் போன்றவற்றை படம்பிடித்து அதை கட்டுரையாக எழுதுவேன், எனக்கு பயணம் தொடர்பான கட்டுரைகள் எழுத ரொம்ப பிடிக்கும் என்றாள். தான் செய்யும் எந்த ஒரு காரியத்திற்கும் பெரிதாக பலனை எதிர்பாராமல் தனக்கு எது பிடிக்குமோ தனக்கு என்ன தோணுமோ அதை செய்து அதில் மகிழ்ச்சி காண்பவளாக இருந்தாள் ஜெனிஃபர்.
இதுவரை ரோஷன் எந்த பெண்ணிடமும் பெரிதாக பேசிக் கொண்டதில்லை, பேச தெரியாது என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். இன்று ஜெனிஃபரிடம் பேசிக்கொண்டே பயணம் செய்வது அவனுக்கு ஒரு புது அனுபவமாக தெரிந்தது. அவனால் அவளின் கண்களை நேரடியாக பார்க்க முடியவில்லை அந்த கண்களில் ஒரு ஈர்ப்பு சக்தி இருந்தது. அந்த ஈர்ப்பு சக்தியை பார்த்து பாட்ஷா பட பாடல் வரிகள் ரோஷனுக்கு நினைவுக்கு வந்தன..”உன் பேரு குள்ளே காந்தம் இருப்பது உண்மை தானடா” என்ற வரியை போல் அவளின் கண்களில் காந்தம் இருப்பது உண்மை என்பதைப் போல உணர்ந்தான்.
அவளை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல் அங்கும், இங்கும் சுற்றிப் பார்த்துக் கொண்டு புன்முறுவலுடன் எதிரே உட்கார்ந்திருந்தான். இவனது சேஷ்டைகளை பார்த்துவிட்டு “Are you Okay?” இதுதான் நீங்க ஒரு பொண்ணு கூட பேசுற மொத தடவையா இதற்கு முன்னாடி யார் கூடவும் பேசுனது இல்லையா என்று கேட்டாள் ஜெனிஃபர். அது உண்மைதான் என்றாலும் அதெல்லாம் இல்லை எனக்கும் சில பெண் நண்பர்கள் இருக்கிறாங்க என்று கூறி சமாளித்தான்.
அது சரி…உங்க பார்வை ஏன் ஏதோ காணாடு காட்டான் பட்டணத்தை பார்த்தாங்கிற மாதிரி இருக்கு என்று கேட்டாள் ஜெனிஃபர்.
இவ்வளவு அழகா இருக்கீங்க…உங்கள எப்படி பாக்காம இருக்க முடியும் என்று வார்த்தைகளில் மயக்க முயற்சித்தான் ரோஷன்.
இதோ பாருடா…என்ன வார்த்தை விளையாட்டா… இம்ப்ரஸ் பண்ண பார்க்குறீங்களா என்று அவள் கேட்க… அழகை ஆராதிக்கிறது ஒரு குத்தமா என்று கேட்டான் ரோஷன்.
அதெல்லாம் இருக்கட்டும் முதல்ல டீ குடிங்க ஆரிற போகுது என்றால் ஜெனிஃபர். அந்த கணத்தில் வாரணமாயிரம் படத்தில் “சூர்யா “ ட்ரெயினில் செல்லும் போது கதாநாயகியை பார்த்துவிட்டு கைகளை கொண்டு இதயத்தில் ஒரு செய்கை செய்வார். அதைப்போலவே இவனும் தன்னை சூர்யா போல் நினைத்துக் கொண்டு நெஞ்சில் கைகளால் குத்த..பாஸ் பாஸ் நீங்க ஒன்னும் வாரணம் ஆயிரம் சூர்யாவும் கிடையாது, நான் ஒன்னும் மேக்னாவும் கிடையாது.. ஓவரா இருக்கு நீங்க பண்ணுறது என்றாள் ஜெனிஃபர்.
இதைக் கேட்டு அடக்க முயற்சித்தாலும் சத்தமாக சிரித்து விட்டான் ரோஷன்.
இன்னும் சென்னை போக நிறைய நேரம் இருக்கு..அதுவரை ஒரு என்டர்டெயின்மென்ட் வேண்டாமா..சரி நீங்க சினிமா எல்லாம் பாப்பீங்களா…யார் படம் ரொம்ப பிடிக்கும் என்று கேட்டான் ரோஷன்.
இல்லைங்க…எனக்கு சின்ன வயசுல இருந்தே டிவி, சினிமா பார்க்கிற பழக்கம் இல்லை. எப்பவும் எதாச்சும் படிச்சுட்டு இருப்பேன். அப்பப்போ ரேடியோவில பாட்டு கேட்பேன்.. எப்போ ட்ராவல் பண்ணாலும் கையில ஒரு புத்தகத்தை வச்சு படிச்சுட்டு போவேன். இன்னைக்கு புத்தகத்தை கொண்டு வர மறந்துட்டேன். அதான் டைம் பாஸ்க்கு உங்களை padichittu வரேன் என்று கிண்டலாக கூறினாள் ஜெனிஃபர்.
நான் ஒரு திறந்த புத்தகம் என்றான் ரோஷன்.
ஆஹான்…சரி உங்களுக்கு எந்த நடிகர் பிடிக்கும்? நீங்க இயக்குனர் ஆகி எந்த நடிகரை வச்சு படம் எடுக்கணும்ன்னு விருப்பபடுறீங்க என்று கேட்டாள் ஜெனிஃபர்.
அப்போது சமோசா விற்றுகொண்டு ஒருவர் செல்ல… இந்த முறை ரோஷன் சமோசா வாங்கினான். அவனிடம் காசை குடுத்து விட்டு.. “I am always Rajini Fan” என்று ஜெனிஃபரிடம் கூற..அதை கேட்ட அந்த சமோசா விற்பவர் “Thalaivaa Rajinikanth “ என்று கூறி படையப்பா ஸ்டைலில் சல்யூட் அடித்துவிட்டு சென்றார் அவர்.
அடடே!
ரஜினி…என் தலைவர்..அவர்தான் என்னோட இன்ஸ்பிரேஷன். எனக்கு சினிமா மேல ஆர்வம் வர காரணமே அவர்தான். அவருக்குனு ஒரு கதை எழுதி வச்சு இருக்கேன், அவரை வச்சு படம் இயக்கணும், அதான் என்னோட ஆசை என்றான் ரோஷன்.
சூப்பர் பாஸ்..வாழ்த்துக்கள் என்றாள் ஜெனிஃபர்.
இவ்வாறு பேசி கொண்டே செல்ல..ரயிலும் போய்க் கொண்டிருந்தது. அங்கு சுற்றி இருந்த மற்ற பயணிகள் ஒவ்வொருவரும் தங்கள் மொபைலை பயன்படுத்திக் கொண்டும், பேசிக்கொண்டும், சிலர் தூங்கிக் கொண்டும் வந்து கொண்டிருந்தார்கள். ரோஷனும் அவன் மொபைலில் மூழ்கி போக ஜெனிஃபர் நேரம் போகாமல் தவித்தாள். நீண்ட நெடும் தூர பயணத்தில் எவ்வளவு நேரம் தான் பேசிக் கொண்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டும் வருவது.. அவளுக்கு மொபைல் போனை அதிக நேரம் பயன்படுத்துவது பிடிக்காத ஒன்று, தேவைக்கு மட்டுமே அதை பயன்படுத்துவாள். இதற்காகவே அவள் ஸ்மார்ட்போன் வைத்திருக்கவில்லை. அவளிடம் ஒரு சாதாரண பேசிக் மாடல் போன் மட்டுமே இருக்கும்.
புத்தகம் ஏதும் கையில் இல்லாததால் அவளுக்கு போர் அடித்தது எதிரே இருந்த ரோஷனை பார்த்தாள் .ரோஷன் மொபைல் திரையில் மேலும் கீழும் கைகளை வைத்து நகர்த்திக் கொண்டிருந்தான்.
ஹலோ பாஸ் என்று ரோஷனை கூப்பிட்டாள் ஜெனிஃபர்.
ஏதாவது பேசிட்டே வாங்களேன் எனக்கு கொஞ்சம் போர் அடிக்குது என்று அவள் கூற…இப்போ இவ்வளவு நேரம் பேசிட்டுதான இருந்தோம். சரி என்ன பேசலாம் என்று ரோஷன் கேட்க.. நீங்க தான் சினிமாவில் இருக்கேன்னு சொன்னிங்களே ஏதாவது எனக்கு ஒரு கதை சொல்லுங்க என்றாள் ஜெனிஃபர்.
ரோஷன்னு ஒரு லூசு பையன் இருந்தான் என்று நக்கல் கலந்த தோணியில் ரோஷன் ஆரம்பித்தான்.
ஓ காமெடி ஸ்டோரியா என்றால் ஜெனிஃபர்
ஆமா இது ஒரு ஜோக்கர் ஓட ஸ்டோரி என்று சொல்லி கொண்டு ரோஷன் அவனை பற்றி கூறினான். ரோஷனுக்கு ஒரு விஷயத்தை நகைச்சுவை கலந்த தோணியில் சொல்ல தெரியும், அதை எளிதாக மற்றவர்களிடம் கடத்தி விடுவான். அவனின் சொந்த வாழ்வில் நடந்த சோக விஷயங்களும் சினிமாவில் தான் வாய்ப்பு தேடி அலையும் தேடுதல் வாழ்க்கையை பற்றியும் கூட சோகம் புழியாமல் நகைச்சுவை உணர்வோடு அவளிடம் கூறினான். நம்மளோட சோகத்தை மத்தவங்க கிட்ட சொல்லி அவங்கள கஷ்டப்படுத்தக் கூடாது என்பது அவனின் கோட்பாடு..
அவளும் ரோஷன் சொல்வதை விரும்பி கேட்டு கொண்டே வந்தாள். பின்னர் அவன் சொல்லி முடித்ததும்.. நீங்க விரும்பியது சீக்கிரமே நடக்கும். நீங்க பெரிய இயக்குநராக வர என் வாழ்த்துக்கள். உங்களுக்குள்ள மத்தவங்களை எளிதா கவர கூடிய வாய்ஜாலம் இருக்கு.. ஒரு சாதாரண விஷயத்தை கூட ரசிக்கும்படி நீங்க சொல்ற விதம் பிடிச்சு இருக்கு என்றாள் ஜெனிஃபர்.
ரொம்ப நன்றிங்க…என்றான் ரோஷன்.
எனக்கு சினிமால பெருசா ஆர்வம் இல்லை… ஆன இப்போ உங்க கூட பேசுனது, சினிமா மேல உங்களுக்கு இருக்க ஈடுபாடு, நீங்க உங்களை பத்தி சொன்ன விதம் இதை எல்லாம் வச்சு பார்கிறப்போ நான் உங்க படத்தை கண்டிப்பா வந்து பாக்கனும்னு விருப்பபடுறேன் என்றாள்.
அப்படி ஒன்னு நடந்தா கண்டிப்பா உங்களை முதல் நாள் முதல் காட்சிக்கு கூட்டிட்டு போறேன் என்றான் ரோஷன்.
அதெல்லாம் கண்டிப்பா நடக்கும் என்று அவன் மீது அவனை விட இவளுக்கு இருக்கும் நம்பிக்கையில் உறுதியாக கூறினாள்.
அவள் அவ்வாறு கூறியது அவனுக்கு பிடித்து இருந்தது. அவளையும் மிக பிடித்து போனது. அந்த தருணத்தில் அவன் மனதில் பரவசம் வந்து ஒட்டிக்கொள்ள மொபைலில் பாடல் கேட்க தொடங்கினான்.
என்ன பாட்டு கேக்குறீங்க என்று ஜெனிஃபர் கேட்க… இயர்போனின் ஒரு பக்கத்தை அவளிடம் குடுத்தான்..
“என் இனிய பொன் நிலாவே” பாடல் ஓட துவங்கியது
திரும்பவும் என்னை இம்ப்ரஸ் பண்ண முயற்சி பண்ணுறிங்களா என்று நகைத்து கொண்டே கேட்டாள் ஜெனிஃபர்.
பதிலுக்கு புன்னகைத்தபடியே ச்சே..ச்சே.. அதெல்லாம் இல்லைங்க அதுவா அமையுது என்று அவளை ரசித்த படியே கூறினான்.
இந்தாங்க நீங்களே கேளுங்க… நான் தூங்க போறேன் என்று சொல்லிவிட்டு அப்பர் சீட்டில் ஏறி படுத்துகொண்டாள் ஜெனிஃபர்.
அவ்வப்போது இவன் அவளை பார்க்கும்போது எல்லாம் ஜெனிஃபரும் இவனை பார்த்தாள்.
“அவ என்ன பார்த்தா
நான் அவள பார்த்தேன்
அப்புறம்
கண்ணும் கண்ணும்
முட்டிக்கிச்சு
தூக்கம் வந்து ஒட்டிக்கிச்சு
டாவு டாவு டாவுடா…” என்ற தேவாவின் பாடலை கேட்ட வாரே ரோஷனும் தூங்கி போனான்.
நீண்ட தூக்கத்திற்கு பிறகு அவன் முழித்து பார்த்த போது சென்னை சென்ட்ரலில் ரயில் நின்று கொண்டிருந்தது. அவனை தவிர அந்த காம்பார்ட்மெண்டில் யாரும் இல்லை, அவளையும் காணவில்லை. எல்லாரும் ரயிலை விட்டு இறங்கி போய் இருந்தார்கள்.
ச்சே அவளை மிஸ் பண்ணிட்டோமே.. நம்பர் கூட வாங்கலயே என்று நொந்து கொண்டான். அவன் பேக்கை எடுத்து கொண்டு கிளம்பும் போது ஜன்னல் இடையே இருக்கும் டேபிளில் டீ கப்பும், அதில் ஒரு சிறு காகித கவரும் உடன் இருந்தது. அந்த கவரை பிரித்து பார்த்தான், உள்ளே ஒரு சிறு துண்டு சீட்டும், ஒரு போலராய்டு புகைப்படமும் இருந்தது.
“டீ ஆருறதுக்குள்ள குடிங்க.. உங்கள் எண்ணம் போல் வளர வாழ்த்துக்கள் இப்படிக்கு உங்கள் முதல் ரசிகை ஜெனிஃபர்” என்று அந்த துண்டு சீட்டில் எழுதி இருந்தது. அந்த போட்டோவை பார்த்தான். அவன் அசந்து தூங்கி கொண்டு இருக்கும் போது ஜெனிஃபர் அவனை படம் பிடித்து இருந்தாள். அதில் “All the Best Boss “ குறிப்பிட்டு இருந்தாள்.
அவற்றை பத்திரமாக எடுத்து கொண்டு டீ கப்பையும் எடுத்துகொண்டு வேகமாக ரயிலை விட்டு இறங்கி அவளை ஸ்டேஷனில் தேடினான். ஒருவரை ஸ்டேஷனில் தேடுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று அவனுக்கு தெரிந்து இருந்தாலும் முயற்சித்தான். அவள் தென்படவில்லை.
இவனும் சோகத்தில் கிளம்பி வீட்டிற்க்கு வந்துவிட்டான். அன்று முழுவதும் அவள் நினைப்பாகவே இருந்தது.
ஒரு சில பயணங்கள் நம் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக மாறிவிடும், எதிர்பாராத சம்பவங்கள், பயணத்தில் சந்திக்கும் மனிதர்கள், அவர்களின் ஸ்நேகங்கள் என்று எப்போதாவது எதாவது ஒன்று நம் நினைவில் வந்து ஒட்டிக்கொள்ளும்.
அப்படி ஒரு நிகழ்வு தான் ரோஷன் ஜெனிஃபரின் இந்த சந்திப்பு.
நடந்த எல்லாவற்றையும் பொறுமையாக நான்கு முறை டீ குடித்துவிட்டு கேட்டு கொண்ட பாரதி ஏண்டா அந்த பொண்ணு எப்படி தெரியும் அப்படின்னு உன்கிட்ட கேட்டா நீ என்னடா வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை கலந்து சொல்லிக்கிட்டு இருக்க என்று கிண்டலாய் கேட்டான் பாரதி.
ஏதே என்றான் ரோஷன்.
சரி சரி ரொம்ப பொங்காத… இப்போ அவ இருக்கிற இடம் தெரிஞ்சு போச்சு. சார் அடுத்து என்ன செய்யப் போறதா உத்தேசம் என்று ரோஷனிடம் கேட்டான் பாரதி.
தெரியல மச்சான் எனக்கு அவ மேல ஒரு விருப்பம் இருக்கிற மாதிரி அவளுக்கு என் மேல எதுவும் விருப்பம் இருக்கான்னு முதல்ல தெரியனும். அதுக்கு அப்புறம் தான் நான் அதை யோசிக்கணும் இதுக்கெல்லாம் முன்னால முதல்ல நான் ஒரு படத்தை இயக்கனும் அவ முன்னாடி நான் ஒரு இயக்குனரா என் படத்தை காட்டணும்னு தான் நினைச்சேன் ஆனா அதுக்கு முன்னாடியே அவளை நான் பார்க்கும் படியா ஆயிருச்சு என்றான் ரோஷன்.
சரி நீ அதெல்லாம் யோசிக்காத… சீக்கிரம் உனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும், இப்போ ஜெனிஃபர் கிடைச்ச மாதிரி என்றான் பாரதி.
அந்த நம்பிக்கையில தான் இருக்கேன்டா என்றான் பாரதி.
சரிடா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, நான் கிளம்புறேன், வர ரெண்டு நாள் ஆகும் என்று கூறிவிட்டு பாரதி கிளம்பி சென்றான்.
சிறிது நேரத்திற்கு பிறகு மாடியில் அவன் உட்கார்ந்து இருந்த போது எதிர்வீட்டு ஜன்னலில் இருந்து யாரோ பார்ப்பது போல் தோன்றியது. வேறு யாரா இருக்கும் ஜெனிஃபர் தான் என்பதை புரிந்து கொண்டு தன் மொபைலில் “நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா“ பாட்டை சத்தமாக ஒலிக்க விட்டான்.
பாடல் கேட்டு ஜன்னல் கதவு முழுவதுமாக திறக்கப்பட.. அங்கிருந்து ஜெனிஃபர் தென்பட்டாள்
அவளை பார்த்ததும் மகிழ்ச்சியில் திளைத்தான் ரோஷன்.
சைகை மொழியில் இருவரும் நலம் விசாரித்து கொள்ள.. தன் மொபைல் நம்பரை சைகையில் சொல்லி கால் செய்ய சொன்னான் ரோஷன்.
சற்று நேரத்தில் “B – A – B – A” என்று அவன் மொபைல் ரிங்டோன் ஒலித்தது.
ஜெனிஃபரை பார்த்தபடியே ஹலோ யாரு என்றான் ரோஷன்
“நான் தான் எதிர்வீட்டு ஜன்னல் பேசுறேன்” என்று ஜெனிஃபரிடம் இருந்து பதில் வந்தது.
“பேசும் ஜன்னல்” அடடே இதே ஒரு தலைப்பா வைக்கலாம் போலயே என்று சொல்லி பேச ஆரம்பித்தார்கள் இருவரும்.
நீங்க அன்னைக்கு சரியான தூக்கம் தூங்கிட்டு இருந்திங்க… ஏற்கனவே உங்களை தூக்கத்திலிருந்து எழுப்பி உங்களை தொந்தரவு பண்ணி தப்பு பண்ணிட்டேன். அதனாலதான் திரும்பவும் உங்களை தொந்தரவு பண்ண வேண்டாம் சொல்லிட்டு நான் கிளம்பி விட்டேன் என்றாள் ஜெனிஃபர் இது என் தாத்தா பாட்டி வீடு, கடைசி ரெண்டு மாசம் இங்க வந்து கொஞ்ச நாள் தங்கிட்டு போவேன். அன்னைக்கு நான் வீட்டுக்கு வந்துட்டு ரூம்ம சுத்தம் செய்யலாம்னு சொல்லிட்டு ஜன்னலை திறக்கும் போது தான் பார்த்தேன். நீங்க உங்க வீட்டு மொட்டை மாடியில் நின்னுட்டு இருந்தீங்க. உங்களை பார்த்து முதல்ல ஷாக் ஆகிட்டேன். நீங்க இங்க எப்படி வந்தீங்க? வீட்டை எப்படி கண்டுபிடிச்சு இருப்பீங்க? ஒருவேளை என்னை பின் தொடர்ந்து இருப்பீங்களோனு முதல்ல ஒரு சந்தேகம் இருந்துச்சு. அப்புறம் தான் தெரிஞ்சது அது உங்க வீடு நீங்க அங்க வாடகைக்கு இருக்கிறீங்கனு தெரிஞ்சுக்கிட்டேன் என்றாள் ஜெனிஃபர்
உங்களுக்கு தெரியாமலே உங்கள மோட்டிவேட் பண்ணனும் அப்படின்னு தான் நான் என்ன அடையாளப்படுத்திக்காம அப்பப்போ பாட்டு போட்டு அதாவது உங்களுக்கு பிடிச்ச உங்க நடிகரோட பாட்டையும், நேர்மறையான வரிகளையும் ஜன்னலில் எழுதி வச்சேன். நீங்க எப்படியும் என்கிட்ட பேச முயற்சிப்பீங்க என்ன தேடி வருவீங்கன்னு எனக்கு தெரியும் ஆனா அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் அப்படின்னு நான் எதிர்பார்க்கல என்று சொல்லி முடித்தாள் ஜெனிஃபர்..
இவ்வாறு பேசிக் கொண்டே அந்த போன் கால் முடிந்தது
பேசி முடித்த பின்பு ஜன்னல் என்று அவளின் மொபைல் நம்பரை சேவ் செய்தான் ரோஷன்.
பின்பு அந்த வார இறுதியில் இருவரும் வெளியே பொது இடத்தில் சந்தித்து பேசினார்கள். அதன் பிற்பாடு அவ்வப்போது இருவரும் ஒன்றாக வெளியே சேர்ந்து சுற்றினர். ரோஷன் கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவைப் பற்றி அவளுக்கு கற்பித்துக் கொண்டிருந்தான். சில நல்ல படங்களை அவளுக்கு பரிந்துரை செய்தான். நாட்கள் செல்ல செல்ல இருவருக்கும் இடையேயான அந்த உறவானது வலுவாகி சென்றது. ஜெனிஃபருக்கு ரோஷன் மீது ஏதும் ஆர்வம் இருப்பது போல் அவள் காட்டிக் கொள்ளவில்லை, ஆனால் ரோஷனுக்கு ஜெனிபரை மிகவும் பிடித்திருந்தது அவளிடம் தன் காதலை சொல்லி அவளை வாழ்க்கை துணையாக ஏற்று கொள்ள விரும்பினான். ஆனால் அதற்கு முன்பு தான் ஒரு இயக்குனராக மாறிவிட வேண்டும், அதன் பின்பு சென்று அவளிடம் தன் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று முடிவு எடுத்தான் ரோஷன்.
அன்று ஒருநாள்
பாரதிக்கு வேகமாக கால் செய்தான் ரோஷன், முதலில் அந்த அழைப்புகள் ஏற்கப்படவில்லை. மூன்று நான்கு முறை மீண்டும் மீண்டும் பாரதிக்கு கால் செய்தான் ரோஷன். தொடர்ந்து அழைப்பு வந்து கொண்டிருந்த காரணத்தினால் சூட்டிங்கில் இருந்த பாரதி வேகமாக போன் காலை அட்டென்ட் செய்தான்.
டேய் என்னடா ஆச்சு நல்லாதான இருக்க? விடாம கால் பண்ணிட்டு இருக்க என்று பாரதி கேட்க.. மச்சான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டா.
ஒரு படம் இயக்குறதுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்குடா..நான் சொன்ன கதை, சொன்ன விதம் அந்த தயாரிப்பாளருக்கு ரொம்ப பிடிச்சு போயிருச்சு..என்னயவே அந்த படத்தை இயக்க சொல்லிட்டாங்க..அது மட்டுமில்லாம அவரே என்னைய அந்த வளர்ந்து வர நடிகர் கிட்ட கூட்டிட்டு போயி கதையும் சொல்ல வச்சிட்டாரு. அந்த நடிகருக்கும் இந்த கதை புடிச்சு போச்சு அட்வான்ஸ் கொடுத்து இருக்காங்க மச்சான்..இன்னும் ரெண்டு வாரத்துல படத்துக்கு பூஜை போடலாம்னு சொல்லி இருக்காங்க என்று சந்தோஷமிகுதியில் உணர்ச்சி கொப்பளிக்க வேகமாக சொல்லி முடித்தான் ரோஷன்.
இதை கேட்டு சூப்பர் டா மச்சான் என்று பாரதியும் மகிழ்ச்சியில் கத்தினான். சரிடா மச்சான் சாயங்காலம் நான் வீட்டுக்கு வந்துடுறேன் ட்ரீட் உன்னோடது என்றான் பாரதி.
சீக்கிரம் வாடா உன்னை நேரில் பாக்கணும் போல இருக்கு என்றான் ரோஷன். சரி இதை உங்க வீட்டுல,ஜெனிஃபர் கிட்ட எல்லாம் சொன்னியா என்று பாரதி கேட்டான்.
இல்லை மச்சான் நான் உன்கிட்ட தான் முதல்ல சொல்லியிருக்கேன் .. இனிமே தான் அப்பா, அம்மாட்ட சொல்லணும்.
கிறிஸ்துமஸ் வரப்போகுது அன்னைக்கு அவகிட்ட என்னோட லவ்வ சொல்லலாம் அப்படின்னு இருக்கேன் அத சொல்றதுக்கு முன்னாடி இந்த படம் இயக்குற வாய்ப்பு கிடைச்சது பத்தி சொல்லிட்டு அதுக்கப்புறம் நான் லவ் ப்ரொபோஸ் பண்ண போறேன் என்றான் ரோஷன்.
அதுவும் சரிதான் சரி இதை பத்தி நம்ம விரிவா சாயங்காலம் பேசலாம்..இப்போ எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் முடிச்சுட்டு சீக்கிரம் வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு கால் கட் செய்தான் பாரதி.
கிறிஸ்துமஸ் தினம்..
அன்று மிகவும் சந்தோஷமாக இருந்தான் ரோஷன்.. எப்படியாவது அவளிடம் தன் காதலை சொல்லிவிட வேண்டும் என்று நினைத்து அதற்கு தயாராகி இருந்தான். ஜெனிஃபருக்கு கால் செய்து நான் உன்கிட்ட ஒரு விஷயத்தை சொல்லனும்…உன்னை நேர்ல மீட் பண்ணனும் என்றான் ரோஷன்.
சாயங்காலம் சாந்தோம் சர்ச்சுக்கு வந்துரு அங்க பேசிக்கலாம் என்று கூறினாள் ஜெனிஃபர்.
சரி என்று சொல்லிவிட்டு மாலை வேளையில் சாந்தோம் கிளம்பி சென்றான் ரோஷன்.
அங்கு ஜெனியை பார்த்தான் ரோஷன்… வழக்கத்திற்கு மாறாக அன்றைய தினத்தில் அவள் மிகவும் அழகாக இவன் கண்களுக்கு தெரிந்தாள். அவளைப் பார்த்த கணம் இவனுக்கு ஒன்றும் பேச முடியவில்லை இருந்தாலும் அவளிடம் பேச தொடங்கினான்.
ஜெனி நான் இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன். உன்கிட்ட இரண்டு முக்கியமான விஷயம் சொல்லியே ஆகணும்.. ஆனா ஜெனிஃபர் ப்ளீஸ் நான் சொல்லி முடிக்கிற வரை நீ குறுக்க எதுவும் பேசாத நான் அப்புறம் சொல்ல வந்தத மறந்திடுவேன் என்றான் ரோஷன்.
சரி சரி சீக்கிரம் சொல்லு என்றாள் ஜெனிஃபர் .
ஜெனி நான் ஒரு படத்தை இயக்குறதுக்கு சான்ஸ் கிடைச்சிருச்சு, இன்னும் கொஞ்ச நாள்ல பூஜை போட்டு படத்தை ஆரம்பிக்க போறோம் என்றான் ரோஷன்.
ஏய் சூப்பர் பாஸ் என்று வாழ்த்துக்களை கூறிவிட்டு அன்போடு அவனை கட்டி கொண்டாள் ஜெனிபர் இதில் எதிர்பார்க்காத ரோஷன் ஸ்தம்பித்து போய் மெய் மறந்து நின்றான். அவனால் இதற்கு மேல் எதுவும் பதில் பேச முடியவில்லை அவள் எதேர்ச்சையாக அரவணைத்து இருந்தாலும் அது ரோஷனுக்கு என்னவோ போல் இருந்தது.
சரி ரெண்டாவது விஷயம் என்ன என்று ஜெனிஃபர் கேட்க..அவன் சுதாரித்து கொண்டு பேச முற்பட்டான்.
ஜெனி.. ஐ வாண்ட் டு… ஐ வாண்ட் டு…என்று வாய்க்குள்ளே முனங்கி கொண்டிருந்தான்.. மேரி யூ என்று சொல்லும் போது வெறும் காற்று மட்டுமே வெளியே வந்தது, அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை. வார்த்தைகள் தடுமாறின.
சீக்கிரம் சொல்லுடா …நான் உள்ள சர்ச்சுக்கு போகனும் என்று அவனை அவசரப்படுத்தினால் ஜெனிஃபர். மீண்டும் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இப்ப எப்படி சொல்றேன் பாரு என தனக்கு தானே சொல்லிக்கொண்டு “ஐ வாண்ட் டு மேரி யூ” என்று சொல்வதற்கு பதிலாக வேகமாக “மேரி கிறிஸ்மஸ் ஜெனி” என்று அழுத்தமாக கூறினான் ரோஷன்.
அட இதுக்கு தான் இவ்வளவு பில்டப்பா “மேரி கிறிஸ்மஸ் ரோஷன்” என்று மீண்டும் அவனுக்கு பதில் வாழ்த்து கூறிவிட்டு.. சரி எனக்கு சர்ச்சில கொஞ்சம் வேலை இருக்கு நான் உள்ள போகனும், நீ ஒரு 7 மணிக்கு வீட்டு பக்கம் வந்திரு.. அங்க பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு கிளம்பி போனாள் ஜெனிஃபர்.
அவள் சென்றதும்…சொதப்பிட்டோமே என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் ரோஷன். அங்கிருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் எதிர்பாராத விதமாக ஒரு சாலை விபத்து நடக்க ஹாஸ்பிட்டலில் இரண்டு நாட்கள் படுத்து கிடந்தான். பாரதி உடன் இருந்து ரோஷனை கவனித்து கொண்டான்…
மயக்கத்தில் இருந்த ரோஷன் சுயநினைவுக்கு வந்த பின்பு தான் நிம்மதி அடைந்தான் பாரதி. மூன்றாவது நாள் வீட்டிற்கு அழைத்து செல்லபட்டான் ரோஷன்.
வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த ரோஷனை பாரதி நன்கு கவனித்து கொண்டான். அவன் இல்லாத சமயத்தில் கீழே மெஸ் கடை வைத்திருக்கும் மாமி மூன்று வேளைக்கும் சாப்பாடு கொண்டு வந்து கொடுத்துவிட்டு ரோஷனையும் பார்த்துவிட்டு செல்வாள். ஆனால் ரோஷனின் மனம் ஜெனிஃபரை தேடியது. அவளுக்கு எப்போது கால் செய்தாலும் ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்தது, இதனால் மனம் ஒடைந்து காணப்பட்டான்
விபத்து நடந்த அன்று ஜெனிஃபர் இவனுக்காக காத்திருந்தாள். இவன் வரவில்லை என்று போன் செய்தால், ரோஷனின் மொபைல் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருப்பதாக வந்தது. மறுநாள் தான் பாரதியின் மூலம் விசயம் கேள்வி பட்டு அவனை பார்க்க ஹாஸ்பிட்டல் வந்தாள். அவள் வந்து பார்த்த போது மயக்கத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தான் ரோஷன். பாரதியிடம் ரோஷனை பற்றி நலம் விசாரித்து விட்டு சற்று நேரம் அவன் அருகில் உட்கார்ந்து விட்டு ஒரு சிறிய காகிதக் கவரை அவன் அருகில் வைத்து விட்டு பார்த்துக் கொள்ளுமாறு பாரதியிடம் சொல்லிவிட்டு அங்கே இருந்து கிளம்பினாள் ஜெனிஃபர்.
பாரதியிடம் ஜெனிஃபரை பற்றி கேட்ட போது..அவள் வந்து சென்றதை கூறினான். அப்போது தான் அவனுக்கு ஞாபகம் வந்தது.. ஜெனிஃபர் கொடுத்த கவரை ரோஷனிடம் ஒப்படைத்தான் பாரதி .அதை வேகமாக வாங்கி பிரித்துப் பார்த்தான் ரோஷன்.
அதில் சில போலராய்ட் படங்களும், ஒரு கடிதமும் இருந்தன. அந்த கடிதத்தில், “தற்போது நான் இங்கிருந்து கிளம்புகிறேன்.. அன்று நீங்கள் என்ன சொல்ல வந்தீர்கள் என்பது எனக்கு தெரியும், நீங்க ஒரு இயக்குனராக ஜெயிக்க என் வாழ்த்துக்கள் பாஸ். இப்போது உங்கள் பட வேலையை கவனியுங்கள்., மற்றவற்றை காலம் தீர்மானிக்கட்டும். மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம்..நன்றி” என்று எழுதி இருந்தாள். அதன் உள்ளே இருந்த புகைப்படங்கள் யாவும் இவர்கள் இருவரும் ஒன்றாய் சுற்றி திரிந்த போது எடுத்துக் கொண்ட சந்தோஷமான தருணங்கள் நிறைந்த படங்கள் அவை.
அந்த கடிதத்தை படித்த பிற்பாடு ஜெனிஃபருக்கும் அவன் மீது விருப்பம் இருப்பதை தெரிந்து கொண்டான். அவளுக்கு கால் செய்தான் , ஆனால் அந்த போன் ரீச் ஆகவில்லை, அவளை எப்படி தொடர்பு கொள்வது என்று யோசித்தவாறு இருந்தான், எங்கே போனால் என்று யாருக்கும் தெரியவும் இல்லை அந்த வீட்டிற்கு சென்று விசாரிக்கலாம் என்றால் அந்த வீட்டிலும் யாரும் இல்லை, வீடும் பூட்டியிருந்தது ,அக்கம் பக்கத்தில் கேட்டதற்கும் யாருக்கும் அவர்களை பற்றி தெரியவில்லை வீடு காலி செய்து போய்விட்டார்கள் என்று மட்டும் சொன்னார்கள். ஆனால் எங்கே சென்றார்கள் என்று அவர்களுக்கு தெரியவில்லை இந்த சமயத்தில் ரோஷனுக்கு படத்திற்கான வேலைகள் ஆரம்பமாக தொடங்கின. அதனால் ஜெனிஃபரை தேடுவதை விட்டுவிட்டு வேலையில் நாட்டம் செய்ய தொடங்கினான், அவளும் அதைத்தான் விரும்புவாள். நாட்கள் ஓடின படத்திற்கான பூஜைகள் தொடங்கி படம் நல்லபடியாக எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அவ்வப்போது அவனுக்கு தெரிந்த வட்டாரத்தில் ஜெனிஃபர் பற்றி தேடிக் கொண்டிருந்தான் எந்த பயனும் இல்லை , கிட்டத்தட்ட ஒரு வருடம் சென்றுவிட்டது படம் எடுத்து முடித்து விட்டான் ரோஷன். ஆனால் அவனின் நேரமோ என்னமோ படத்தை வெளியிடும் சமயம் சினிமா ஸ்ட்ரைக், பெரிய நடிகர் படங்களின் வெளியீடு போன்ற காரணத்தினால் இவன் படத்தின் வெளியீடு தள்ளிப் போயிருந்தது தற்போது மீண்டும் படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன படம் வெளியீட்டுக்கு தயாராக இருந்தது. நியூ இயர் தினத்திற்கு படத்தை வெளியிட முடிவு செய்திருந்தார்கள் இந்த தருணத்தில் தான் மீண்டும் கிறிஸ்மஸ் நெருங்கிக் கொண்டிருந்தது இந்த முறை அவள் வருவாள் என்று அவளுக்காக காத்திருந்தான்.
இன்று மீண்டும் கிறிஸ்துமஸ் தினம்
எப்படியும் அவள் வருவாள் என்று காத்திருந்த ரோஷன் அவளின் வீட்டிற்கு சென்றான், ஆனால் அங்கு அவள் வரவில்லை வந்தாள் தகவல் தெரிவிக்குமாறு வாட்ச்மெனிடம் சொல்லிவிட்டு சாந்தோம் சென்றான். அன்று நாள் முழுவதும் அங்கேயே காத்துக் கிடந்தான் அவள் வந்ததாக தெரியவில்லை அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது, சோகத்தில் அங்கிருந்து நடந்தே சென்று அருகில் இருந்த கடற்கரைக்கு சென்றான் .கடற்கரை மணலில் உட்கார்ந்து கடல் அலைகளை பார்த்தவாறு தனக்குள் புலம்பி கொண்டு இருந்தான். அவள் எங்கு சென்றாள் என்ன ஆனால் எப்படியாவது அவளை காட்டிவிடு என்று கடவுளை வேண்டிக் கொண்டு இருந்தான்.
ஜெனி எங்க தாண்டி போன..இப்படி என்னை தனியா புலம்ப வச்சிட்டியே என்று ஆவேசமாக கத்தினான். கூட்டம் மிகுந்த அந்த கடற்கரையில் ஒரு நொடி எல்லாரும் இவனை ஒரு மாதிரி பார்த்து விட்டு கடந்து சென்றனர். அதை உணர்ந்த ரோஷன் நிதானத்திற்கு வந்தான். மணலில் படுத்துக்கொண்டு அவளுடனான நினைவுகளை அசை போட தொடங்கினான். அவளை முதன்முதலாக சந்தித்தபோது அவளைப் பற்றி அவள் கூறிய விஷயங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்தான்.
நீண்ட யோசனைக்கு பிறகு ஒரு விஷயம் அவன் மனதில் பட்டது. ரயிலில் சந்தித்த போது அவள் இவனிடம் ஒரு விஷயத்தை கூறி இருந்தாள்.
கிறிஸ்துமஸ் கழிந்த இரண்டாம் நாள்..அதாவது 27ஆம் தேதி அவள் ஓவ்வொரு வருடமும் தவறாமல் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு செல்வாள் என்று அவள் கூறியது சட்டென்று நினைவுக்கு வந்தது.
வேகமாக எந்திரித்தான்.
அவளை தேடி கிளம்பினான்.
ஆக்ராவிற்கு..
❤️❤️❤️
THE END.
நன்றாக இருந்தது அண்ணா
Rakks always Rocks ❤️👌
LikeLiked by 1 person
Thank u so much da ♥️♥️
LikeLike
Padika padika sema interesta pothu tajmahal poitu parthara illaya?
LikeLiked by 1 person
Thanks bro… Adhu Epadi vena eduthukkalam
LikeLike
Awesome Bro 👌👌
LikeLiked by 1 person
Thanks bro ❤️
LikeLike
Sema bro ❤️…. Short film eh edukalam polaye.. 🥳👍🏻
LikeLike
Sema bro ❤️…. Short film ஏ எடுக்கலாம் போலயே .. 🥳👍🏻
LikeLike
Thanks bro 😍❤️
LikeLike
Good Narration👏…The way you carryed out content is nice👌… and intresting too…I liked the mild humour in between the convo of the protogonist & his frnd….🍀wish to write many more stories and make it publish too….
LikeLiked by 1 person
Nice story and u kept the readers to live in your story after finish reading by concluding it in an open ended way …becoz after reading tis story still I’m thinking what will happen if he sees her in Agra or else if he doesn’t see her means what will happen…still the story is running in my mind….and tis is wht a good story writers quality I think…Good job keep it up….way to success 👍
LikeLiked by 1 person