சித்தி

குரு…அந்த ஆபிஸ் ஃபைல் எடுத்துட்டு வாங்க என்று ஆபிஸ் பியூனை கேட்டேன்..

அவரும் நான் கேட்ட அந்த ஃபைல்லை குடுத்துவிட்டு சென்றார்.

அது ஒரு பரபரப்பான திங்கள்கிழமை நண்பகல் வேளை…வங்கிக்கு பணம் செலுத்த, பணம் எடுக்க நிறைய வாடிக்கையாளர்கள் வந்து சென்று கொண்டிருந்தார்கள். நானும் அன்றைய தினம் முடிக்க வேண்டிய முக்கிய அலுவல் வேலைகளை செய்து கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு நடுத்தர வயது பெண் வாடிக்கையாளர் பணம் எடுக்க வந்துவிட்டு ..காசோலையை எப்படி நிரப்புவது என்று தெரியாமல் என் மேஜை முன் வந்து நின்று…இதை கொஞ்சம் நிரப்பி தாருங்கள்… நாற்பதாயிரம் ரூபாய் பணம் எடுக்க வேண்டும் என்று கேட்டார். ஃபைலில் மூழ்கி இருந்த நான்…அந்த பெண்மணியை பார்க்காமலே அருகில் இருக்கும் கார்த்திக்கை சுட்டிக்காட்டி அவரிடம் சென்று கேளுங்கள் என்று கூறினேன். அந்த பெண்மணியும் சரி என்று சொல்லிவிட்டு கார்த்திக்கிடம் சென்று அவனிடம் கேட்டு காசோலையை நிரப்பி வாங்கி கொண்டு காசாளர் கவுண்டருக்கு சென்று நின்றாள்.

பணத்தை பெற்று கொண்டுவிட்டு செல்லும் முன்பு கார்த்திக்கும், எனக்கும் நன்றி சொல்லிவிட்டு செல்லும் போது அந்த குரல் எங்கேயோ பழகிய குரல் போல் உள்ளதே என்று யோசித்து கொண்டு நான் அந்த பெண்மணியை பார்த்தேன். அந்த பெண்மணி உடுத்தியிருந்த சேலை, பவுடர் பூசப்பட்ட பளிச் முகம், தலையில் சூடி இருந்த மல்லிப்பூ , காலில் அணிந்திருந்த கொலுசு சத்தம், கலகல பேச்சு என்று எல்லாம் அவளை நியாபக படுத்தியது. பார்ப்பதற்கும் அந்த பெண்ணும் அவ்வாறே இருந்தாள்.

இதை பார்த்தவுடன் என் நிலை தடுமாறியது, உள்ளுக்குள் ஏதோ செய்தது, வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. நினைவுகள் மீண்டும் பின்னோக்கி சென்றன. கார்த்திக் அழைப்பது கூட கேட்காமல் நிலையற்று இருந்த என்னை அவர் என் கைகளை தொட்டு உலுக்கியதும் தான் நினைவுக்கு வந்தேன்.

கெளதம் என்னாச்சு என்று கேட்ட கார்த்திக்கிடம் என்னால் அப்போது ஏதும் பதில் பேசமுடியவில்லை.

பார்த்துக்கொள்ளுங்கள்…சற்று நேரத்தில் வருகிறேன் என்று மட்டும் கூறிவிட்டு வேகமாக வங்கியை விட்டு வெளியேறி மனம் போன போக்கில் நடந்து சென்றேன். சாலையின் இடப்புற கடைகளை எல்லாம் கடந்த சென்ற போது..

“கௌதம் சார்..சார்..” என்று டீ கடை ஜசித் என்னை கூப்பிட்டது கேட்டு திரும்பி பார்த்தேன். திடீரென்று மழை பெய்ய தொடங்கியது, அதையும் பொருட்படுத்தாமல் நடந்து செல்ல முயன்ற போது…

“என்ன சாரே… கூப்பிட கூப்பிட போய்ட்டே இருக்கிங்க.. என்ன யோசனை..? மழை வேற பெய்யுது, மேனேஜர் ஏதும் சொல்லிட்டாங்களா? ” என்று கேட்க…அதெல்லாம் ஒன்னுமில்ல என்பது போல் தலையை ஆட்டினேன்.

“சரி உள்ள வாங்க… டீ சாப்பிட்டு போலாம்… மாஸ்டர்.. சாருக்கு ஒரு ஸ்பெஷல் சாயா “ என்று சொல்லிவிட்டு கடைக்குள்ளே அழைத்து சென்றான் ஜசித்.

இங்க உக்காருங்க சார்.. மழை விட்டதும் போலாம் என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் ஜசித்.

அவன் சென்ற சிறிது நேரத்தில் கடைபையன் டீ கிளாஸை டேபிளில் வைத்துவிட்டு சென்றான்.

டீ கிளாஸை கையில் எடுத்து டீயை குடிக்க ஆரம்பித்தேன். என் எண்ணம் முழுவதும் அந்த பெண்மணி பற்றியே இருந்தன. அந்த பெண் யார் ? யாராக இருந்தால் என்ன ? அவள் ஏன் என் சித்தியை நியாபக படுத்த வேண்டும்? எதேர்ச்சையாக கூட இருக்கலாம் அல்லவா.. இருக்கலாம், ஆனால் இப்போது மட்டும் மனம் ஒரு மாதிரி இருக்கிறதே. அவளின் எண்ணம் முழுதும் நிரம்பி வருகிறதே என்று எனக்குள்ளே பேசிக்கொண்டிருந்தேன். டீ மெதுவாக உள்ளே செல்ல காலம் பின்னோக்கி சென்றது.

தாத்தாவிற்கு மொத்தம் 5 பிள்ளைகள். அம்மா தான் மூத்தவள், அவளுக்கு பிறகு மூன்று தங்கைகள், கடைக்குட்டி தம்பி. அம்மாவின் பதினேழாவது வயதில் ஆச்சி இறந்துவிட்டாள். அந்த ஊரில் உள்ள மில்லில் தாத்தா வேலை பார்த்து கொண்டிருந்தார். ஆச்சியின் இறப்பிற்கு பிறகு அம்மா மேல்படிப்புக்கு செல்லவில்லை. பியூசியோடு நிறுத்திக்கொண்டாள். அம்மாவை விட ஒரு வயது இளையவள் தான் சாந்தி சித்தி. அம்மா வீட்டையும், தங்கச்சி தம்பிகளை பார்த்து கொள்ள.. சாந்தி சித்தி அருகில் உள்ள டெய்லர் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தாள்.

தாத்தாவிற்கு அவ்வப்போது ஷிஃப்ட் மாறிக்கொண்டே வரும். நைட் ஷிஃப்ட்க்கு தாத்தா வேலைக்கு செல்லும்போது அம்மாவும், சாந்தி சித்தியும் தான் வீட்டை பார்த்து கொள்வார்கள். அம்மாவிற்கு புத்தகம் படிக்க பிடிக்கும், அம்மா அவருடைய தாத்தாவிடம் இருந்து கற்று கொண்ட பழக்கம் இது. அவர் இறந்த பிறகு, பக்கத்து வீட்டில் இருந்த மல்லிகா அக்கா நூலகத்தில் இருந்து எடுத்து வந்த புத்தகங்களை தான் முதலில் படித்துவிட்டு பின் அம்மாவிற்கு கொடுப்பார், இவ்வாறு அம்மாவிற்கு பொழுபோகும். அம்மாவிற்கு புத்தகம் பிடிக்கும் என்றால்.. சாந்தி சித்திக்கு படம் பார்க்க அவ்ளோ பிடிக்கும். அவ்வப்போது தாத்தா படத்திற்கு கூட்டி கொண்டு செல்வார். அதையும் தாண்டி தாத்தா நைட் ஷிஃப்ட் சென்ற சமயத்தில் அவருக்கு தெரியாமல் பக்கத்து வீட்டு பூக்கடை வைத்திருக்கும் சரசு அக்கா குடும்பத்துடன் சேர்ந்து சித்தியும் படத்திற்கு சென்று பார்த்து விட்டு வருவாள். எப்படியாவது இது தாத்தாவிற்கு தெரிந்து போய் அவரிடம் ஏச்சு வாங்குவாள் சித்தி.

ஆனால் சித்தி அதையெல்லாம் பெரிதாக கண்டுக்கொள்ளமாட்டாள். ஒரு படம் பார்த்துவிட்டு வந்தால் காட்சியும், வசனமும் மாறாமல் அப்படியே வந்து அம்மாவிடமும் , மற்ற தங்கச்சிகளிடமும் கூறுவாள், அப்படியொரு திறமை சித்தியிடம் உண்டு. அந்த கால கட்டத்தில், ஒரு படம் வெளியாகி பெரிய ஊர்களில் எல்லாம் நன்றாக ஓடி முடிந்த பிறகு சில மாதங்கள் கழித்துதான் அருகில் உள்ள மற்ற சிறு சிறு ஊர் திரையரங்குகளில் வெளியாகும். அப்படித்தான் எங்கள் ஊரில் உள்ள நாராயணசாமி திரையரங்கில் “16 வயதினிலே” படம் வெளியாகி இருந்தது.

பரட்டை கதாபாத்திரம் பற்றி அதற்கு முன்பே வார இதழ்களில் படித்து தெரிந்து வைத்திருந்தாள் சித்தி. “இதெப்படி இருக்கு” என்ற வசனத்துடன் கூடிய அந்த கதாபாத்திரத்தின் புகைப்படமும் அதில் இடம் பெற்றிருந்தது. அப்போது இருந்தே அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் நெடுநாள் காத்திருந்தாள். படம் வெளியான நாளன்று தாத்தாவிடம் படத்திற்கு கூட்டி கொண்டு செல்ல கேட்க.. தாத்தாவோ வார இறுதியில் கூட்டிட்டு போறேன் என்று சொல்லிவிட்டு மில்லுக்கு வேலைக்கு சென்று விட்டார். சித்திக்குப் பெருத்த ஏமாற்றம் ஆகிவிட்டது, ஆனால் அவளால் படம் பார்க்கும் ஆவலை கட்டுப்படுத்த முடியவில்லை. அன்றே அந்த படத்தை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அப்போதென்று பார்த்து எதிர்த்து வீட்டு சரசக்கா… “16 வயதினிலே படத்திற்கு போறேன், நீயும் வரியா” என்று சித்தியையும் அழைத்தாள். ஆனால் இது தாத்தாவிற்கு தெரிந்தால் தாத்தா திட்டுவார் என்ற காரணத்தினால் சித்தி செல்ல மறுத்தாள். பின்பு எப்படியோ மன தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அம்மாவிடம் தாத்தாவை எப்படியாவது சமாளித்து விடு என்று சொல்லி சரசு அக்காவுடன் சித்தி படம் பார்க்க சென்றுவிட்டாள்.

சாயங்கால காட்சிக்கு சென்ற சரசு அக்காவும், சித்தியும் இரவு சாப்பாட்டு வேலைக்கு முன்பாக வீட்டிற்கு வந்து விட்டனர். தாத்தா வந்து இருப்பாரோ என்று பயந்தவாரே வந்த சித்தி.. வீட்டில் தாத்தா வரவில்லை என்பதை அறிந்து நிம்மதி பெருமூச்சு விட்டாள். இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு அம்மாவுடன் சேர்ந்து அமர்ந்திருந்தாள் சித்தி. சித்திக்கு தான் பார்த்த படத்தை பற்றி யாரிடமாவது கூறவில்லை என்றால் அவளுக்கு தலையே வெடித்து விடும். அதனால் அம்மாவை கூப்பிட்டு அருகில் உட்கார வைத்திருந்தாள். மற்ற இரு தங்கச்சிகளும் தம்பியும் ஏற்கனவே தூங்கி விட்டார்கள். அம்மாவிற்கு தூக்கம் வந்தாலும் சித்தியின் கட்டளை, அதுமட்டுமின்றி கமல் , ஶ்ரீதேவி படம் என்பதால் அவளும் உட்கார்ந்து கதை கேட்க தயாரானாள். படத்தைப் பற்றி ஒவ்வொரு காட்சியாக சித்தி அம்மாவிடம் சொல்லிக் கொண்டே வர..படத்தில் உள்ள மயில், பரட்டை, சப்பாணி என்ற கதாபாத்திரமாகவே தன்னை பாவித்து நடித்து வேற காட்டிக் கொண்டிருந்தாள். அந்த அளவிற்கு அவளுக்கு அந்த படம் பிடித்து போயிருந்தது.

அந்த படத்தில் ஒரு காட்சி வரும்.. பயந்த சுபாவம் கொண்ட சப்பாணி கதாபாத்திரம், முரடனான பரட்டை என்கிற அந்த கதாபாத்திரத்தை ஒரு கட்டத்தில் அடித்து விடும். இதை வேகமாக வந்து சப்பாணி மயிலிடம் கூறுவான்.

இதைக் கேட்ட மயில் மகிழ்ச்சியாகி… ”பரட்டையை நீ எப்படி அறைஞ்ச ? என்று சப்பானியிடம் கேட்பாள்.

அதற்கு சப்பாணி..” நான் பலார்னு அறஞ்சேன்” என்று கூறுவான்.

மீண்டும் மயில் கேட்பாள்..”பரட்டைய நீ எப்படி அறைஞ்ச?”…

நான் பலார்னு அறைஞ்சேன்…

எப்படி அறைஞ்ச? என்று மூன்றாவது முறையாக கேட்கும் போது “பலார்னு அறைஞ்சேன்” என்று சொல்லிக் கொண்டே மயிலை ஓங்கி கண்ணத்தில் அடித்து விடுவான் சப்பாணி.

இந்த காட்சியை அம்மாவிடம் வசனத்தோடு சொல்லிக் கொண்டிருந்த சித்தியின் பொடதியில் ஒரு அடி ஓங்கி விழுந்தது.. ஏன்டி கழுதை அவ்வளவு சொல்லியும் கேட்காம படத்துக்கா போயிட்டு வந்திருக்க. போனது மட்டும் இல்லாம கதை வேற சொல்லிட்டு இருக்கியா… எவ்வளோ தைரியம் உனக்கு…எத்தனை தடவை சொன்னாலும் திருந்தாத ஜென்மம்.. என்று அடிக்க கை ஓங்க… இதை பார்த்துக் கொண்டிருந்த அம்மா..அப்பா அவளை விடுங்கப்பா தெரியாம பண்ணிட்டா… இனிமே இப்படி நடக்காம நான் பார்த்துக்கிறேன். நீங்க வாங்கப்பா முதல்ல…நான் உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன்…என்று சொல்லி தாத்தாவை சமாதானம் செய்ய முயன்றாள்.

“அவளுக்கு செல்லம் குடுக்கிறதே நீ தான். என்னத்த சொல்ல… போ.. போய் படுத்து தூங்கு” என்று சித்தியை அதட்டி விட்டு தாத்தா சாப்பிட சென்று விட்டார்.

இதையெல்லாம் பெரிதாக சித்தி எடுத்துக் கொள்ளவில்லை. அந்த படத்தில் இடம்பெற்ற பாடலை பாடிக்கொண்டே படுக்க சென்றாள் சித்தி. இவ்வாறு ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு காரணத்திற்காக சித்தி தாத்தாவிடம் மாட்டி ஏச்சு வாங்குவாள். அது பெரும்பாலும் சினிமா தொடர்பாகவே இருக்கும். என்னதான் தாத்தா திட்டினாலும், பாசம் அதிகமாக வைத்திருப்பார். அம்மாவின் சிறுவயதிலேயே ஆச்சி இறந்துவிட்டாலும் தாத்தா இரண்டாம் கல்யாணத்துக்கு சம்மதிக்கவில்லை. உறவினர்கள் வற்புறுத்தினாலும், என் பிள்ளைங்கல நானே வளர்த்துக்கிறேன்..தனக்கு மீண்டும் ஒரு துணை தேவையில்லை என்பதில் உறுதியாக கடைசி வரை இருந்தார் தாத்தா.

வருடங்கள் ஓடின…. அம்மாவும் கல்யாணம் ஆகி சென்றுவிட்டாள். சித்தி தான் வேலை பார்த்துகொண்டு மற்ற இரண்டு தங்கச்சிகளையும் தம்பியையும் கவனித்து கொண்டாள். ஒரு வருடங்களுக்கு பிறகு நானும் பிறந்தேன். அந்த வீட்டின் முதல் குழந்தை என்பதால் எனக்கு தாத்தா வீட்டில் செல்லம் அதிகம். மூன்று சித்திகளும், தாய் மாமாவும் என்னை மாறி மாறி தூக்கி கொஞ்சுவார்கள். வாரத்தில் அவ்வப்போது ஒரு நாள் , அப்பா வேலைக்கு செல்லும் போது என்னை கொண்டு போய் சித்தியிடம் விட்டுவிட்டு வேலைக்கு சென்று விடுவார், நான் அந்த நாள் முழுவதும் தாத்தா வீட்டில் சித்திகளுடன் விளையாடி கொண்டிருப்பேன். மாலைவேளையில் அப்பா வீடு திரும்பும் போது என்னை அங்கிருந்து அழைத்துச் செல்வார். சித்தி தான் என்னை அப்போது பார்த்துக் கொண்டாள். எனக்கு சாந்தி சித்தி என்றால் அவ்வளவு பிடிக்கும். அப்பா வீட்டில் எனக்கு வைத்த பெயர் வேறு என்றாலும் சித்தி எனக்கு வைத்த பெயர் “கௌதம்” . என்னை கௌதம் என்றே எப்போதும் அழைப்பாள். காலப்போக்கில் சித்தி வைத்த பெயரே பிரதான பெயராக மாறிப்போனது.

பின்பு சித்தியும் திருமணம் ஆகி திருநெல்வேலி சென்று விட்டாள். அதன் பிறகு அவ்வப்போது சித்தி எங்கள் ஊர் வந்தாலோ இல்லை என் பள்ளி விடுமுறை தினத்தில் நான் திருநெல்வேலிக்கு சென்றாலோ என்னை தூக்கி வைத்து கொஞ்சுவாள். சித்தப்பா வீட்டின் அருகிலேயே கடை வைத்திருந்தார். ஊருக்கு போய்விட்டு வரும்போதெல்லாம் சாக்லேட், முறுக்கு எல்லாம் வாங்கி குடுத்து விடுவாள் சித்தி. சித்தப்பா சுட சுட அல்வா வாங்கி குடுப்பார், ஜாலியாக இருக்கும். சில மாதங்கள் கழித்து சித்தியை பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்த போது நானும் அங்கு இருந்தேன். அழுது கொண்டிருந்த என்னை சித்தப்பா தான் அருகில் இருந்த கேண்டினில் “முட்டைகோஸ்” வாங்கி குடுத்து சமாதான படுத்தினார். நானும் அதை அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். பின்பு கொஞ்ச நேரம் கழித்து தம்பி பிறந்திருக்கிறான் என்ற செய்தி வந்தது. உன் கூட விளையாட தம்பி பிறந்து இருக்கான் பாரு என்று சித்தப்பா தம்பியை என்னிடம் காட்டினார், பார்க்க பொம்மை போலவே இருந்தான் தம்பி.

பின்பு திருநெல்வேலிக்கு சித்தி வீட்டிற்கு செல்வது என்றாலே குஷி ஆகிவிடும், சித்தியை பார்க்கலாம், தம்பியுடன் விளையாடலாம், சித்தப்பா கடையில் நமக்கு வேண்டிய மிட்டாய்களை நம்மளே எடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என்ற ஆசைதான் அதற்கு காரணம். அதுமட்டுமின்றி கோவிலுக்கு, கடைகளுக்கு, பொருட்காட்சிக்கு என்று வெளியே அழைத்து செல்வாள் சித்தி, வீட்டின் அருகே இருந்த வ உ சி மைதானம் சென்று சுற்றி வருவது, வெளியே இருக்கும் பானி பூரி கடையில் மசாலா பூரி வாங்கி சாப்பிடுவது, சித்தப்பா டவுனில் இருந்து வாங்கி கொண்டு வரும் இருட்டுக்கடை அல்வா, லாலா கடை அல்வாக்களை ருசி பார்ப்பது, தம்பியுடன் அவ்வப்போது நடக்கும் சின்ன சின்ன சண்டைகள், விளையாட்டுக்கள் என அந்த நாட்கள் ஒரு மறக்க முடியாதவை.

வருட விடுமுறையில் திருநெல்வேலியில் உள்ள சித்தி வீட்டுக்கு சென்று விட்டு அங்கிருந்து பாபநாசம் செல்வோம். இரண்டாவது சித்தி அங்குதான் இருந்தார். தூத்துக்குடியில் இருந்த கடைசி சித்தியும் விடுமுறை காலங்களில் அங்கு வந்துவிடுவார். தம்பி தங்கைகளுடன் ஒன்றாக ஆடி, ஓடி விளையாடிக கொண்டிருப்போம். ஒவ்வொரு முறை பாபநாசம் செல்லும் போதும் அகஸ்த்தியர் அருவி சென்று குளிப்பது வழக்கம். குளித்து விட்டு வரும் வழியில் மிளகாய் பொடியும், உப்பும் தூவப்பட்ட மாங்காய், அண்ணாச்சி பழ துண்டுகள் விற்று கொண்டிருப்பார்கள். அவற்றை வாங்கி கொண்டு அங்கு மரங்களில் அதிகமாக சுற்றி திரியும் குரங்குகளின் கண்களில் படாதவாரு சாப்பிட்டுக் கொண்டே வருவோம், வசந்தமான நாட்களவை. பின்னர் விடுமுறை முடிந்து ஊருக்கு செல்லும் போது திருநெல்வேலி வந்துவிட்டு அங்கிருந்து எங்கள் ஊருக்கு செல்வோம். அப்போது தேவையான தின்பண்டங்களை வாங்கி கொடுத்து அனுப்புவாள் சித்தி, குறிப்பாக கைசுத்து முறுக்கும், அல்வாவும்.

இதையெல்லாம் தாண்டி இன்னொரு விஷயத்தில் சித்தியை மிகவும் பிடிக்கும், என்னவென்றால் தியேட்டருக்கு கூட்டி செல்வது. சித்திக்கு சிறு வயதில் இருந்தே சினிமா பார்க்கும் ஆர்வம் அதிகம் என்பது தெரிந்த ஒன்றுதான். கல்யாணத்திற்கு பிறகும் அது தொடர்ந்தது, அவ்வப்போது வெளியாகும் அனைத்து படங்களையும் சித்தி தவறாமல் பார்த்து விடுவார். சித்தப்பா கூட்டி செல்வார் அல்லது தெருவாசிகளுடன் சித்தி சென்று படம் பார்ப்பாள். தெருவோடு சேர்ந்து அனைவரும் சோற்றை கட்டிகொண்டு படத்திற்கு சென்று சாப்பிட்டு கொண்டே படம் பார்த்துவிட்டு வருவோம் என்று சித்தி சொல்லும் போது கேட்க நகைச்சுவையாக இருக்கும். அது எப்படி தெருவோடு போய் பார்த்தாங்க என்று ஆச்சரியமாகவும் இருக்கும்.

சித்தி கல்யாணம் ஆகி சென்ற பின்பு ஒருமுறை எங்கள் வீட்டிற்கு வந்திருந்த போது அவள்தான் என்னை முதன்முதலில் படம் பார்க்க திரையரங்கம் கூட்டி சென்றாள். நான் முதன்முதலாக திரையரங்கில் பார்த்த படம் ரஜினியின் “அருணாச்சலம்”. சித்தி ஒரு ரஜினி ரசிகை என்பதாலோ என்னவோ எனக்கும் அன்று முதன்முதலில் அருணாச்சலம் படத்தில் ரஜினியை பார்த்ததும் பிடித்துவிட்டது.

அந்த படத்தில் வரும் “ஆண்டவன் சொல்றான்… இந்த அருணாச்சலம் முடிக்கிறான்” என்ற வசனத்தை தப்பு தப்பாக உளறிக்கொண்டு சுத்துவேன் என்று பின்னாளில் ஒருமுறை சித்தி என்னிடம் கூறியிருக்கிறாள்.

பின்னர் ஒவ்வொரு முறை சித்தி ஊருக்கு வரும்போதும், நான் பள்ளி விடுமுறையில் திருநெல்வேலி செல்லும்போதும் அந்த நேரத்தில் வெளியான படத்திற்கு எங்களை கூட்டி செல்வாள். படம் பார்க்க கூட்டி செல்வதால் சித்தியை இன்னமும் அதிகமாக பிடித்து போனது. எங்கள் வீட்டில் படத்திற்கு கூட்டி சென்றது இல்லை நானும் கேட்டது இல்லை. ஆனால் ஒவ்வொரு முறை சித்தியை பார்க்க செல்லும் போது தவறாமல் நடக்கும் ஒரு விஷயம் அந்தந்த ஊரில் உள்ள ஏதாவது ஒரு படத்திற்கு சென்று பார்ப்பது. நான் திருநெல்வேலி சென்றாலோ இல்லை சித்தி எங்கள் ஊர் வந்தாலோ எங்களை படத்திற்கு அழைத்துச் செல்வாள் சித்தி.

அம்மாவுக்கு கமல் படங்கள் பிடிக்கும், சித்திக்கு ரஜினி படங்கள் பிடிக்கும். அம்மாவுடன் சேர்ந்து டிவியில் நிறைய ரஜினி, கமல் படங்களை சிறுவயதில் இருந்து பார்த்து வந்திருக்கிறேன். ஆனால் என்னை அதிகம் ஆட்கொண்டது ரஜினி படங்கள் தான். நான் கடைசியாக சித்தியுடன் சேர்ந்து பார்த்த படம் ரஜினியின் சிவாஜி தான். அதற்கு பின்பு நாங்கள் படத்திற்கு போவதற்கான வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. எல்லாரும் வளர்ந்து படிப்பு , வேலை என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையாக சென்று விட்டோம்.

கடைசியாக சித்தியுடன் சிவாஜி படம் பார்த்த அனுபவம் மறக்க முடியாத ஒன்று. படம் வெளியான சமயம், எங்கு பார்த்தாலும் சிவாஜி படம் பற்றியே பேச்சு. வகுப்பில் நண்பர்களும் அதைபற்றியே பேசிக்கொண்டு இருக்க… என்னுள் அந்த படம் பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமானது. அப்போது எல்லாம் என்னை வீட்டில் படம் பார்க்க அழைத்து செல்ல மாட்டார்கள். நானும் கேட்க மாட்டேன். ஆனால் சிவாஜி படம் மட்டும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வ மிகுதியில் வீட்டில் கேட்க..மறுத்துவிட்டார்கள். அப்போ ஒரே வழி சித்தி தான் என்று இதற்காகவே சித்தியை ஃபோன் செய்து அழைத்தேன். ஒரு வார இறுதி நாளில் சித்தியும் வந்தாள். அன்று அப்படி ஒரு சந்தோசம், நானும் படம் பார்க்க போகிறேன் என்று குதித்து கொண்டிருந்தேன்.

மாலை காட்சிக்கு நான், சித்தி, தம்பி மூவரும் சேர்ந்து சென்றோம். என் நேரமா என்னவென்று தெரியவில்லை, அன்று அந்த காட்சி ஹவுஸ்புல் ஆகிவிட்டது, டிக்கெட் கிடைக்கவில்லை. தியேட்டர் வரை சென்று படம் பார்க்காமல் திரும்பி வருவதை ஏற்று கொள்ள முடியாமல் துக்கம் தொண்டையை கவ்வி அழுகை அழுகையாக வந்தது. என் முக மாற்றத்தை கண்டுகொண்ட சித்தி .. மறுநாள் காலை காட்சிக்கு டிக்கெட் வாங்கி வந்து என் கையில் குடுத்த பிறகே மனம் சற்று நிம்மதி அடைந்தது. மீண்டும் மறுநாள் காலை காட்சிக்கு சென்றோம், இந்தமுறை அம்மாவும் எங்களுடன் வந்திருந்தாள்., அம்மாவுக்கும் சேர்த்தே டிக்கெட் எடுத்து இருந்தாள் சித்தி. முந்தைய நாள் துக்கம் தாளாமல் தொண்டையை கவ்வியது போல இந்தமுறை திரையில் சிவாஜி படத்தில் ரஜினி அடிவாங்கும் போதும் கண்கள் லேசாக குளமாகின. இதை பார்த்துவிட்ட அம்மா…”ஏன்டா நான் வாழ்வே மாயம் பார்த்திட்டு அழுதப்போ கிண்டல் பண்ணியே..இப்போ நீ ஏன் அழுகிற ?” என்று கேட்க..வேகமாக கண்ணை துடைத்துக்கொண்டு படம் பார்த்தேன். படம் பார்த்துவிட்டு அன்று சந்தோசமாக வீடு திரும்பினோம். இதற்கு பிறகு வேறு எந்த படங்களும் சித்தியுடன் பார்க்கவில்லை, அதற்கான வாய்ப்பும் அமையவில்லை. முதல் படமும், கடைசி படமும் ரஜினி படமாகவே அமைந்து போனது.

பின்பு கல்லூரி, வேலை என்று சென்ற பின்பு அவ்வப்போது போனிலோ அல்லது வருடத்திற்கு ஒருமுறை திருநெல்வேலியிலோ அல்லது எங்கள் ஊரிலோ அல்லது விசேஷ நிகழ்ச்சிகளிலோ பார்த்து பேசிகொள்ளும்படியான சூழ்நிலை உருவாகி விட்டது.

காலங்கள் ஓடின.. கல்யாண வயதில் இருந்த எனக்கு பெண் பார்க்கும் பொறுப்பை சித்தி செய்து கொண்டிருந்தாள். என் மகனுக்கு நல்லா லட்சணமா, சிவப்பா, படிச்ச பிள்ளையா பார்த்து கட்டி வைப்பேன் என்று அம்மாவிடம் அடிக்கடி சொல்வாள் சித்தி.

கடந்த வருட பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் சித்தி எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள். நாங்கள் அப்போது வேறு வீட்டிற்கு மாறி இருந்தோம். அப்போதான் முதல் முறையாக வந்திருந்தாள் சித்தி, இந்த வீடு நல்லா விசாலமா இருக்கு அக்கா, கைக்கால் நீட்டி உட்கார்ந்து பேச வசதியா இருக்கு, இதுக்கு முன்னாடி இருந்த வீடு புறாகூண்டு மாதிரி இத்தனூண்டு இருந்துச்சு என்று அங்கலாய்த்துக்கொண்டே குறுக்கை சாய்த்து காலை நீட்டி தரையில் அமர்ந்தாள் சித்தி.

எனக்காக ஊரிலிருந்து வரும்போது அதிரசம்,அல்வா, கைச்சுத்து முறுக்கு, அச்சு முறுக்கு என்று எல்லாம் வாங்கிக் கொண்டு வந்திருந்தாள். அன்று எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு, கதை பேசி கொண்டிருந்தோம். பின்னர் மாலை வேளையில் சித்தியும், சித்தப்பாவும் ஊருக்கு கிளம்பி சென்று விட்டார்கள். நான் சித்தியை நேரில் பார்த்து பேசியது அன்று தான் கடைசி. அதன்பிறகு நான் சித்தியை பார்த்த கோணமே வேறு. பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை சென்றுவிட்டேன், இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன.

அன்று ஒருநாள் அதிகாலை அம்மாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இந்த நேரத்தில் ஏன் அம்மா கூப்பிடுறா என்று ஒருவித பயத்துடனும் தூக்க கலக்கத்திலும் ஃபோனை எடுத்த போது அம்மா கதறி அழுதவாறே கூறினாள்…

”சித்தி நம்மள விட்டுட்டு போய்ட்டா டா..”.

“என்னம்மா சொல்லுற” என்று பதறியபடி கேட்க..

“தூக்கத்தில நெஞ்சுவலி வந்து இறந்துட்டா .. நீ சீக்கிரம் கிளம்பி வாடா “ என்று அம்மா அழுதுகொண்டே கூறி ஃபோனை வைத்துவிட்டாள்.

இந்த விஷயத்தை கேட்டபோது பேரதிர்ச்சியாக இருந்தது. எனக்கு தெரிந்தவரை இதுவரை சித்திக்கு எந்த ஒரு வியாதியும் இருந்ததில்லை. தூக்கத்தில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்து விட்டாள் என்ற விஷயத்தை கேட்டு துக்கம் பீறிட்டது. தாங்க முடியாத அளவு தொண்டையை கவ்வி கொண்டு அழுகை வந்தது. கத்தி அழ வேண்டும் என்பதும் போல் இருந்தது அருகில் நண்பர்கள் தூங்கி கொண்டிருந்தார்கள். அவர்களை தொந்தரவு செய்யாதவாரு வெளியே சென்று மெதுவாக அழுது கொண்டிருந்தேன். என்னால் என் அழுகையை கட்டுபடுத்த முடியவில்லை. என்னை தூக்கி வளர்த்தவள் , எனக்கு இன்னொரு அம்மாவாக இருந்தவள், தற்போது இல்லை என்பதை மனம் ஏற்க மறுத்தது.. சென்னையில் இருந்த நான் அவசர அவசரமாக கிளம்பி திருநெல்வேலிக்கு சென்றேன். செல்லும் வழியில் அவளின் நியாபகங்கள் என்னை ஆட்கொண்டது.

அந்த கலகலப்பான பேச்சும், பவுடர் பூசிய முகமும், ஜல் ஜல் என்ற கொலுசு சத்தமும், பாசம் பொழியும் நேசமும், எல்லாரையும் ஒன்றாய் பாவிக்கும் மனமும் தான் சித்தி. அவளை போல் ஒருவரை காண்பது அரிது. அம்மாவை விட ஒரு வயது இளையவள் என்றாலும் தோற்றத்தில் மூத்தவள் போல இருப்பாள். ஊருக்கு சென்ற சமயத்தில் அக்கம் பக்கத்தினர் யாராவது அம்மாவை சுட்டிக்காட்டி இது யாரு உன் தங்கச்சியா என்று சித்தியிடம் கேட்டுவிட்டால் போதும். சித்திக்கு கோவம் வந்துவிடும்.. அவதான் என் அக்கா..நான் தான் தங்கச்சி என்று சற்று இறுக்கமான முகத்துடன் வேகமாக கூறுவாள். இனிமே என்கூட சேர்ந்து நடந்து வராத அக்கா என்று அம்மாவிடம் அலட்டிகொள்ளுவாள் சித்தி. எங்காவது கடைக்கு சென்றால் அக்கா , தங்கச்சி என்று எல்லாருக்கும் சேலை வாங்கி வந்து தருவாள்.

அப்பா எப்போதாவது வேலை காரணமாக திருநெல்வேலி சென்றால் சித்தி, சித்தப்பாவை பார்த்து விட்டு தான் வருவார். மதிய சாப்பாடு சித்தி வீட்டில் தான். சித்தி செய்யும் புளி குழம்பு அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும். நாங்கள் விடுமுறைக்கு ஊருக்கு சென்றுவிட்டு திரும்பும்போது அப்பாவுக்காக குழம்பு செய்து குடுத்து அனுப்புவாள். சித்திக்கு முன்கோபம் ஜாஸ்தி.. அடிக்கடி சண்டை போடுவாள், அவளுக்கு பிடிக்காதவாரு எதாவது சொல்லிவிட்டால் போதும், கோவம் வந்துவிடும். ஆனால் அதெல்லாம் கொஞ்ச நேரம் தான்.. மீண்டும் பழையபடி பேச ஆரம்பித்து விடுவாள். கோவம் இருக்கிற இடத்துல தான் குணம் இருக்கும் என்று சொல்வார்கள், அதற்கு சித்தி ஒரு உதாரணம். இப்படி ஒவ்வொன்றாக அவளை பற்றிய நினைவுகள் மனதில் ஓடிக்கொண்டு இருந்தன. ஒருவழியாக நீண்ட பயணத்திற்கு பிறகு ஊர் வந்து சேர்ந்தேன்.

நாம் விரும்பிய உறவுகளை நாம் பார்க்ககூடாத, பார்க்க விரும்பாத கோலத்தில் தான் அன்று அவளை பார்த்தேன்..அந்த நொடி என்னால் முடியவில்லை.. என்னை அள்ளி எடுத்து வளர்த்தவள், ஆடி ஓடி பம்பரமாக சுழன்று கலகலப்பாக திரிந்தவள் இப்போது என் கண் முன்னால் அடங்கி, ஒடுங்கி கண்ணாடி பெட்டியில் உறங்கி கொண்டிருந்தாள். என் கல்யாணத்தை பார்க்க ஆசைப்பட்ட.. அதுக்குள்ள ஏன் இப்படி என்னை விட்டுட்டு போன என்று அவளை எழுப்பி கேட்க வேண்டும் என்பது போல் இருந்தது மனநிலை. இப்படி அவளை எங்களிடம் இருந்து சீக்கிரமே பிரித்துவிட்டாயே என்று இருப்பதாக சொல்லப்படும் எல்லா கடவுள்களையும் மனம் திட்டி தீர்த்தத்தில் அந்த இராப்பொழுது கழிந்தது.

சித்தப்பாவோடு சேர்ந்து என் கைகளாலேயே சித்திக்கு இறுதி காரியங்களை செய்ய வேண்டிய சூழல் அன்று ஏற்பட்டது. எல்லாம் நல்ல படியாக செய்து முடித்து சித்தியை வழியனுப்பி வைத்துவிட்டு, சித்தப்பாவையும் சமாதானப்படுத்தி ஆறுதல் கூறிவிட்டு வேலை காரணமாக மீண்டும் சென்னை கிளம்பி வந்துவிட்டேன்.

இதெல்லாம் நடந்து மாதங்கள் ஆகிவிட்டன.. அவ்வப்போது சித்தியின் நியாபகம் வந்து செல்லும். பின்பு அன்றாட வாழ்க்கை, வேலை பளு என்று நாட்கள் கடந்துவிட்டன.

இவ்வளவு நாள் எதுவும் இல்லாமல் இன்று திடீரென்று சித்தியின் நியாபகம் அந்த பெண்மணியை பார்த்ததும் ஏன் வந்தது? அந்த பெண்மணியின் செயல்பாடுகள் எப்படி சித்தியை போலவே இருந்தது? என்று யோசித்து கொண்டே ஆறிப்போன டீ கிளாஸை பார்த்தவாரு உட்கார்ந்திருந்தேன்.

அப்போது வாட்ஸ் அப் மெசேஜ் டோன் என் மொபைலில் ஒலித்தது. மொபைலை எடுத்து யார் என்று பார்த்தேன்…சித்தப்பா தான் அனுப்பியிருந்தார். மெசேஜை ஓப்பன் செய்து பார்த்தபோது..சித்தியின் படத்துடன் கூடிய “முதலாம் ஆண்டு நினைவஞ்சலி” என்ற வார்த்தைகள் அதில் இருந்தன.

என்னுடைய கேள்விகள் அனைத்துக்கும் அப்போது பதில் கிடைத்துவிட்டது. மறந்துவிட்ட அவளை நினைவூட்டுவதற்காகவே..அந்த பெண்மணியின் உருவில் வந்திருப்பாளோ.. என்று எண்ணி கொண்டு இருக்கையில் கண்களில் கண்ணீர் வலிய தொடங்கின.

மழை நின்று வானம் தெளிவானது..



🖋️ராக்ஸ்.

One thought on “சித்தி

Add yours

Leave a reply to Sriselvi Cancel reply

Website Powered by WordPress.com.

Up ↑