நெடுஞ்சாலை இரவு Chapter 1

நெடுஞ்சாலை இரவு

 

Chapter 1

 

வடஇந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை…

நள்ளிரவு நேரத்தில் கனமழை பெய்து கொண்டு இருந்தது…

இருபுறமும் அதீத ஒளி, ஒலியுடன் மழையையும் பொருட்படுத்தாமல் எண்ணற்ற வாகனங்கள் சீறி பறந்து கொண்டிருந்தன, அதில் கனரக வாகனங்களும் அடங்கும்.

சரக்குகளை ஏற்றி கொண்டு அந்த தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் கனரக வாகனங்களான  லாரிகள் சென்று கொண்டிருந்தன. சாலையில் அந்த லாரிகள் வரும்போது, ஒரு கம்பீர தோற்றத்துடன் காட்சியளிக்கும். அந்த இருள் சூழ்ந்த நீண்ட சாலையில், இருளை கிழித்துக்கொண்டு மஞ்சள் நிற வெளிச்சத்தில் ஒரு பெரிய உருவம் நம்மை நோக்கி வருவது போன்ற ஒரு மாயை நமக்கு தோன்றும். நாம் வாகனம் ஓட்டி செல்லும்போது லாரிகள் எதிர்திசையில் கடந்து சென்றாலும் கூட அந்த நொடி ஒருவித பயம் நம்மை அறியாமல் வந்து செல்லும். அதுவும் சரக்கு லாரிகள் சரக்குகளின் பாரம் தாங்காமல் கவிழ்ந்து விடுமோ என்ற அச்சம் அந்த லாரி டிரைவருக்கு இருக்குமோ இல்லையோ, ஆனால் நமக்கு அந்த லாரியை கடந்து செல்லும்போது இயல்பாக தோன்றும்.

அவ்வாறு அந்த தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் எண்ணற்ற  லாரிகளில் ஒரு லாரி வடக்கிலிருந்து தென்னிந்தியா நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த நள்ளிரவு மழை பெய்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த லாரியும் அதே கம்பீர தோரணையுடன் சென்று கொண்டிருந்தது. மழை துளிகள் லாரியின் கண்ணாடியில் பட்டு தெறித்து கொண்டு இருக்க.. வைப்பர்களும் விடாமல் கண்ணாடியை துடைத்து கொண்டே வந்தன.

“பொதுவாக என் மனசு தங்கம்… ஒரு போட்டியினு வந்துவிட்டா சிங்கம்” எனும் ரஜினி பட பாடல் அந்த லாரியின் உள்ளே ஒலித்துக் கொண்டிருந்தது. பாடலை ரசித்தவாரே லாரி டிரைவர் ராஜபாண்டி அந்த கம்பீர லாரியை ஓட்டிக்கொண்டு சென்றார். அவருக்கு துணையாக லாரி கிளீனர் வேலு உடனிருந்தான். இருவருமாக அந்த சரக்கு லாரியில் சென்று கொண்டிருந்தார்கள்.

அண்ணே, மழை வேற பெய்யுது, வாடை காத்து அதிகமா இருக்கு, நான் கொஞ்ச நேரம் பின்னால படுத்துக்குறேன் என்று சொல்லிக் கொண்டே கிளீனர் வேலு கேபினில் படுத்து உறங்க தொடங்கினான்.

சரி நீ படுத்துக்கோ, நான் தாபா போயிட்டு உன்னை எழுப்புறேன் என்று ராஜபாண்டி கூறிக் கொண்டு லாரியை ஓட்டிக் கொண்டிருந்தார். இரண்டு புறமும் மரங்கள் சூழ்ந்த அந்த நெடுஞ்சாலையில் கனமழையையும் பொருட்படுத்தாமல் பாடலை வாயில் முணுமுணுத்தபடி லாரியை ஓட்டி கொண்டிருந்தார் ராஜபாண்டி.. இரவு நேர பயணத்தில் ரஜினி பட பாடல்களும், கிளீனர் வேலு உடனான பேச்சுகளும் தான் ராஜபாண்டிக்கு துணை. ஒத்தையாக இரவு நேரம் லாரியை ஓட்டி செல்லும்போது பெரும்பாலும் பாடல்கள் தான் ராஜபாண்டிக்கு உத்வேகத்தை கொடுக்கும்.

அப்போது ராஜபாண்டியின் செல்போன் ஒலிக்கத் தொடங்கியது.

ராஜபாண்டி ஒரு கையால் ஸ்டியரிங்கை பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் செல்போனை எடுத்து திரையில் வரும் பெயரை பார்த்தான்.

ஊரிலிருந்து அண்ணாச்சியின் பணியாள் முருகன் செல்போனில் அழைத்து கொண்டிருந்தான்.

அவனது அழைப்பை எடுத்து பேச தொடங்கினான் ராஜபாண்டி.

“முருகா, நாங்க டெல்லியில இருந்து கிளம்பிட்டோம்…நாளைக்கு காத்தால ஜெய்சிங் குடோன்ல இருந்து சரக்கு ஏத்திட்டு நான் அண்ணாச்சிக்கிட்ட பேசுறேன்.. அவருக்கிட்ட சொல்லிரு முருகா……”

அண்ணாச்சி கிட்ட நான் சொல்லிடுறேன் ராஜபாண்டி, நீங்க பார்த்து பத்திரமா சரக்கு ஏத்திட்டு வந்து சேருங்க…வழியில் எங்கேயும் வண்டி நிக்க வேண்டாம்.. அண்ணாச்சி அதுல தெளிவா இருக்காரு. நீங்க வர அந்த பகுதி கொஞ்சம் மோசமான பகுதி, சரக்கு பத்திரம் ராஜபாண்டி. காலையில குடோன் போயிட்டு எனக்கு அங்க இருந்து கால் பண்ணு என்றான் முருகன்.

சரி சரி நாங்க பாத்து பத்திரமா வந்துடுறோம் என்று சொல்லி கொண்டிருக்கும்போதே…

எதோ ஒரு உருவம் சாலையில் குறுக்கே வந்து லாரி முன்பு வர…. இதை சற்றும் எதிர்பாராத ராஜபாண்டி..சட்டென்று ப்ரேக் அடிக்க பலத்த சத்தத்துடன் சில மீட்டர் தள்ளி லாரி நின்றது.

ராஜபாண்டி அங்க என்ன சத்தம்…என்னாச்சு… ஹலோ ஹலோ.. என்று முருகன் கேட்டு கொண்டு இருக்க..

ப்ரேக் போட்டதில் கையில் இருந்த செல்ஃபோன் கீழே விழுந்தது. அதை எடுத்து..

முருகா, லாரி முன்னால யாரோ குறுக்க வந்து விழுந்துட்டாங்க போல.. என்ன ஏதுன்னு தெரியல நீ கொஞ்சம் பொறு முருகா என்றான் ராஜபாண்டி.

அங்க இருக்காத… உடனே அங்கிருந்து கிளம்பு என்று பதற்றத்துடன் கூறினான் முருகன்.

யாருக்கு என்ன ஆச்சுன்னு தெரியல முருகா… குறுக்க வந்தது ஆளா இல்ல வேற எதுவுமான்னு தெரியல.. எனக்கு என்னமோ வண்டியில இடிச்சு விழுந்த மாதிரி தெரியல.. உயிர் இருந்தா காப்பாத்திடலாம் முருகா என்றான் ராஜபாண்டி.

உன் சமூக சேவை எல்லாம் எனக்கு புரியுது ஆனா அதுக்கு இது நேரம் இல்ல ராஜபாண்டி சொன்னா கேளு என்று முருகன் பேசிக் கொண்டிருக்க..

நீ ஒரு நிமிஷம் அமைதியா இரு முருகா என்று ராஜபாண்டி சொல்லி கொண்டிருக்கும்போது பின்னால் தூங்கிக் கொண்டிருந்த கிளீனர் வேலு இந்த சத்தத்தை கேட்டு எழுந்து விட்டான்.

ராஜபாண்டி அண்ணே என்ன ஆச்சு? ஏன் வண்டி நிக்குது ? என்ன சத்தம் என்று கேள்வி கேட்டுக் கொண்டே தூக்கத்திலிருந்து எழுந்தான்.

யாரோ குறுக்க வந்து விழுந்த மாதிரி இருக்கு, நான் போய் என்னன்னு பாக்குறேன் என்று சொல்லிக்கொண்டே லாரியை விட்டு இறங்கப் போனார் ராஜபாண்டி.

அண்ணே..இங்க கொஞ்சம் சுத்தி பாருங்க எந்த ஒரு வெளிச்சமும் இல்லை.. வண்டியும் இல்லை.. சுத்தி காடா வேற இருக்கு.. மழை வேற பெஞ்சிட்டு இருக்கு. இந்த நேரத்தில் இறங்கி போறது நல்லதில்லை என்று கிளீனர் வேலு சொல்ல…

இரு பாத்துக்கலாம்…வண்டியில தான் ஒன்னும் இல்லையே நம்ம மட்டும்தான் இருக்கோம் என்று சொல்லிக் கொண்டே குடையையும், டார்ச் லைட்டையும் எடுத்து கொண்டு லாரியை விட்டு கீழே இறங்கினார் ராஜபாண்டி.

கீழே இறங்கிய ராஜபாண்டி சுற்றும் முற்றும் பார்த்தார், அங்கு எந்த வண்டியும் வரவில்லை, ஒரே இருட்டாக இருந்தது. மழையில் நனையாதவாரு குடையை பிடித்துக்கொண்டு முன்னே சென்றார் ராஜப்பாண்டி. அந்த நெடுஞ்சாலை ஆனது இரண்டு புறமும் பெரிய பெரிய மரங்கள் வளர்ந்து காடுகளைப் போல் காட்சியளித்தது, இருட்டில் அங்கிருந்து பார்க்க சற்று பயமாகவும் இருந்தது, ஆனாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டார் ராஜபாண்டி. வேறு எந்த வண்டிகளும் வராததால் அந்த இடத்தில் ஒரு மௌனமான சூழல் நிலவியது. நடப்பதை ஒரு வித பயம் கலந்த பதற்றத்துடன் வேலு பார்த்து கொண்டிருந்தான்.

யாருக்கும் எதும் ஆகிருக்க கூடாது என்று மனதில் வேண்டிக்கொண்டே ராஜபாண்டி முன்னே சென்று டார்ச் அடித்து பார்த்தார்.

அப்போது அங்கே…

(தொடரும்…)

 

 

 

3 thoughts on “நெடுஞ்சாலை இரவு Chapter 1

Add yours

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑