நெடுஞ்சாலை இரவு Chapter 11


“நம்ம ஊரு லாரிகளை பார்த்தா இப்படித்தான்.. இஷ்டத்துக்கு காசு புடுங்குவாங்க” என்று புலம்பி கொண்டே லாரியை அங்கு இருந்து கிளப்பினார் ராஜபாண்டி.


ரொம்ப நேரமா பேசிக்கிட்டு இருந்திங்க..அதிகமா வசூல் பண்ணிட்டாங்களா ? காசு குறைச்சு பேச முடியாதா ? என்று கேட்டான் ரோஹித்.


இந்த ரசீதை பாருங்க தம்பி…அந்த ரசீதுல போட்டு இருக்க காசுக்கும், நம்மகிட்ட புடுங்குன காசுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். இவனுங்க கிட்ட பேரம் பேச முடியாது, கேக்குற காசை குடுக்காம இருந்தா நம்ம மேலயும் லாரி மேலயும் கேஸ் போட்டு பொழப்பை கெடுத்திருவாங்க. இது இங்க மட்டுமில்லை, நம்ம ஊர் போய் சேருர வரை எல்லா இடத்துலயும் இப்படித்தான் நடக்கும் என்றார் ராஜபாண்டி.


அப்போ தமிழ்நாட்டுக்கு உள்ள போயிட்டா இந்த பிரச்சினை நமக்கு இல்லை போல என்றான் ரோஹித்.


நமக்கு தான் பிரச்சினை இல்லை.. ஆனா வெளி மாநில லாரிகளுக்கு பிரச்சினை இருக்கு, நம்மகிட்ட எப்படி இங்க காசு புடுங்குறாங்களோ அதேமாதிரி தான் நம்ம ஊருல இவனுங்க கிட்ட புடுங்குவாங்க. எல்லா இடமும் ஒன்னு தான் என்றான் வேலு.


இவளோ பிரச்சினை இங்க இருக்கா என்று அப்பாவியாக கேட்டான் ரோஹித்.


இது எல்லாம் சாதாரணம், இதை விட பல பிரச்சினை இந்த லாரி தொழில்ல இருக்கு. ஒவ்வொன்னா சொல்றோம், நீங்களும் நீங்களும் தெரிஞ்சிக்குவிங்க என்றான் ராஜபாண்டி.


இப்போ நம்ம நேரா தமிழ்நாடு தான் போறோமா என்று கேட்டான் ரோஹித்.


இல்லை தம்பி… இப்போ நம்ம ஜெய்ப்பூர் போய்ட்டு இருக்கோம், அங்க இருந்து சரக்கு ஏத்திகிட்டு அப்படியே கிளம்பிருவோம் என்றார் ராஜபாண்டி.


சரி சரி ..எதாச்சும் டீ கடை இருந்தா நிப்பாட்டுங்க அண்ணா, வயிறு பசிக்குது என்றான் ரோஹித்.
இது என்ன கார்ல டூர் மாறி நினைச்சியா…இப்போ எல்லாம் எங்கேயும் நிப்பாட்ட முடியாது, வண்டி நேரா ஜெய்ப்பூர்ல தான் நிக்கும் என்றான் வேலு.


இன்னும் கொஞ்ச நேரத்துல விடிஞ்சிரும்,  7 மணிக்கு முன்னாடி ஜெய்ப்பூருக்குள்ள போய் சேரனும். நேரம் தாண்டிட்டா அப்புறம் ஊருக்குள்ள போக அனுமதி கிடையாது. மதியம் 12 மணி வரை காத்திருக்கனும். மதியம் 12 மணியில இருந்து சாயங்காலம் 5 மணி வரைதான் ஊருக்குள்ள அனுமதி. இந்த இடைப்பட்ட நேரத்துல தான் நாம சரக்கை ஏத்திக்கிட்டு இங்க இருந்து கிளம்பும். இன்னைக்கு சீக்கிரம் சரக்கு ஏத்திக்கிட்டு கிளம்பினா தான் நாளைக்கு மத்திய பிரதேசம் எல்லையை கடக்க  முடியும், அங்க இருந்து மறுநாள் மகாராஷ்டிரா எல்லைக்குள்ள போக முடியும். அதுனால கொஞ்சம் பொறுத்துக்கோ தம்பி என்றார் ராஜபாண்டி.


இவர்கள் பேசிக்கொண்டிருக்க காலை விடிய தொடங்கியது, லாரியும் ஜெய்ப்பூர் எல்லைக்குள் நுழைந்தது.
சோதனை சாவடியில் காவலர்களை கவனித்து விட்டு ஜெய்ப்பூர் நகருக்குள் வந்து சேர்ந்தனர்.
சரக்கு ஏற்றும் இடத்திற்கு வந்து சேர்ந்தார் ராஜபாண்டி. அங்கே லாரியை நிப்பாட்டி விட்டு கீழே இறங்கினர் ராஜபாண்டியும், வேலுவும்.


தம்பி ரோஹித் கீழே இறங்கி வாங்க, இங்க தான் சரக்கை ஏத்தனும். பசிக்கிதுன்னு சொன்னீங்களே… இங்கே குளிச்சு ரெடியாகிட்டு அப்புறமா போய் சாப்பிட்டு வரலாம் என்று ராஜபாண்டி அழைத்தார்.


நான் போய் இந்த கம்பெனி முதலாளியை பார்த்து பேசிட்டு வரேன். வேலு.. நீயும், தம்பி ரோஹித்தும் போய் ரெடியாகிட்டு வாங்க என்று ராஜப்பாண்டி சொல்ல..
என்கிட்ட வேற டிரஸ் எதும் இல்லை, இங்க பக்கத்தில கடை எதும் இருக்குமா என்று கேட்டான் ரோஹித். இது டெக்ஸ்டைல் மில் தான், சாம்பிள் பீஸ் எதுனா இருக்கும், நான் வரும்போது வாங்கிட்டுவறேன் என்று சொல்லிவிட்டு ராஜபாண்டி சென்றார்.


ரோஹித்தும், வேலுவும் காலை வேலைகளை முடித்து விட்டு ரெடியாகி நின்றனர்.
டெக்ஸ்டைல் ஆட்களை ஆபிஸில் பார்த்து பேசிவிட்டு, கையில் இரண்டு ஜோடி உடைகளை வாங்கி கொண்டு வந்த ரோஹித்திடம் குடுத்தார் ராஜபாண்டி.


ரொம்ப நன்றி அண்ணா, ஊருக்கு போனதும் இங்க ஆகிற எல்லா செலவுக்கும் உங்களுக்கு நான் காசு அனுப்புறேன் என்றான் ரோஹித் .


இதுல என்ன இருக்கு.. அதெல்லாம் ஒன்னும் வேணாம், நான் போய் குளிச்சிட்டு வரேன். வந்து சாப்பிட போவோம் என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.


அவர் சென்ற பின்பு.. அண்ணன் ரொம்ப நல்லவரா இருக்காரே என்று வேலுவிடம் சொன்னான் ரோஹித்.


அவர் அப்படிதான்.. உதவி கேட்டு யாரும் வந்தா, அவங்களுக்கு உதவாமா இருக்க மாட்டார், அதுதான் அவர் குணம் என்று பெருமையாக கூறினான் வேலு.


இவர்கள் பேசிக்கொண்டிருக்க.. ராஜபாண்டி அங்கு வந்தார். பின்னர் மூவரும் கிளம்பி காலை உணவை சாப்பிட கிளம்பினர்.


அருகில் இருந்த ஹோட்டலில் காலை உணவாக சப்பாத்தியை சாப்பிட்டுவிட்டு, டீ குடித்துவிட்டு பேசிக்கொண்டு நடந்தனர்.
வேலு.. மதியம் சமைக்க தேவையான காய்கறி எல்லாம் வாங்கிக்கோ என்று கூறினார் ராஜபாண்டி.


நீங்களே சமைச்சு சாப்பிடுவீங்களா.. ஹோட்டல் போக மாட்டீங்களா ? எங்க வச்சு சமைப்பிங்க ? என்று ரோஹித் அடுக்கடுக்காக கேள்விகளை கேட்க..


தினமும் ஹோட்டல்ல சாப்பிடுறது எல்லாம் இந்த லாரி ஒட்டுற வேலைக்கு ஆகாது, உடம்புக்கும் ஒத்துக்காது. ஒவ்வொரு மாநிலத்திலயும் ஒவ்வொரு விதமான சாப்பாடு இருக்கும், அது நமக்கு ஒத்து போகாது. என்ன வித விதமான சாப்பாடு வகை இருந்தாலும் நமக்கு எல்லாம் சோறும், குழம்பும், கடிக்க காயும், கறியும்  சாப்பிடுற மாதிரி வராது. அதுனால நாங்களே ஓடுற லாரியில சமைச்சு சாப்பிடுவோம். முக்கியமா, லாரியில சரக்கு ஏத்திக்கிட்டு போகுறப்போ அங்க அங்க லாரியை நிப்பாட்டுறது நல்லதுக்கு இல்லை. இதுனால நேரம் விரயம் ஏற்படும், அதுனால முடிஞ்ச வரை லாரியை அநாவசியமாக எங்கேயும் நிப்பாட்ட மாட்டோம் என்றார் ராஜபாண்டி.


ராஜபாண்டி சொல்வது ஒவ்வொன்றும் கேட்க கேட்க ரோஹித்திற்கு ஒரு புதுவிதமான அனுபவமாக இருந்தது. லாரி பயணம் என்பது சாதாரணமாக அல்ல என்று அவன் தெரிந்து கொண்டான்.


அண்ணே இங்க மட்டும் தான் சரக்கு ஏத்தனுமா இல்ல வேற எங்கேயும் போய் சரக்கு ஏத்திட்டு போகணுமா என்று ரோஹித் கேட்டான்.
இங்க மட்டும் தான் நம்ம சரக்கு ஏத்துறோம்,  நம்ம ஊருக்கு இங்க இருந்து டெக்ஸ்டைல் பொருட்கள் மட்டும் நாம கொண்டு போல.. இன்னும் சில பொருட்களும் இருக்கு. எங்க முதலாளி அண்ணாச்சிக்கு இந்த ஊருல பழக்கம் அதிகம்,  அதுனால வெவ்வேறு இடங்கள்ல  இருந்து  எல்லா சரக்கும் இங்க வந்திடும், நாங்க இங்க இருந்து எல்லா சரக்கையும் ஒண்ணா  ஏத்திட்டு கிளம்பிருவோம் என்றார் ராஜப்பாண்டி.


சரி தம்பி… சரக்கு ஏத்த இன்னும் நேரமாகும், அதுவரை கொஞ்ச நேரம் படுத்து உறங்கலாம். நைட்டு முழுசா லாரி ஓட்டுனது எனக்கு ரொம்ப அசதியா இருக்கு. இப்போ கொஞ்சம் தூங்குனாதான் நாளைக்கு வர கண் முழிச்சு வண்டி ஓட்ட சரியா இருக்கும் என்று சொல்லி கொண்டே தூங்கி போனார் ராஜப்பாண்டி.


இந்த மாதிரி நேரம் கிடைக்கும்போதெல்லாம்   தூங்கி எந்திரித்து தங்களை ஆசுவாசப்படுத்தி கொண்டு மீண்டும் லாரி பயணத்தை தொடங்குவது தான் லாரி டிரைவர்களின் வேலை.


எனக்கும் இப்போ சாப்பிட்டது,  நேத்து நைட்டு சரியா தூங்காம இருந்தது எல்லாம் சேர்ந்து கொஞ்சம் களைப்பா இருக்கு, நானும் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு ரோஹித் படுத்து உறங்கினான்.


ராஜபாண்டியும், வேலுவும் ஆளுக்கு ஒரு பக்கமாக படுத்து உறங்கினார்கள்.
சிறிது நேரத்துக்கு பிறகு ஒரு வேலையாள் வந்து ஹிந்தியில் கத்த ராஜபாண்டி முழித்து கொண்டார்.
பையா…சரக்கு எல்லாம் ஏத்தியாச்சு, நீங்க ஒரு முறை எல்லாத்தையும் சரி பாத்துட்டு கிளம்பலாம் என்று அவன் கூற… ராஜபாண்டியும் சரக்குகளை சரி பார்த்து விட்டு அந்த கம்பெனி முதலாளிடம் சொல்லிவிட்டு வர…அங்கிருந்து மூவரும் கிளம்பினார்கள்.


லாரி ஜெய்ப்பூரை தாண்டி மத்திய பிரதேசத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.
வேலு மதிய சமையலுக்கு தேவையான காய்கறிகளை லாரி கேபினில் உட்கார்ந்து கொண்டு வெட்டிக் கொண்டிருந்தான், ரோஹித் அசதியில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்திற்கு பிறகு ரோஹித் முழித்து பார்த்த போது…லாரி கேபினில் வைத்து சிறிய அடுப்பில் குழம்பு வைத்துக் கொண்டு இருந்தான் வேலு.


நீங்க தான் சமைக்குறீங்களா.. உங்க குழம்பு   வாசம் தான் என்னை தூக்கத்துல இருந்து எழுப்பி விட்டிருச்சு என்று வேலுவிடம் கூறினான் ரோஹித்.


இதைக்கேட்டதும் பெருமையாக உணர்ந்த வேலு.. கேட்டுக்கோங்க அண்ணே.. எப்பவாச்சு நீங்க இப்படி சொல்லி இருக்கீங்களா என்று ராஜப்பாண்டி யிடம் கேட்க..


தம்பிக்கு உன் சாப்பாடு புதுசு.. அதுமட்டும் இல்லாம நம்ம ஊரு சாப்பாடு வாசத்தை பார்த்தே தம்பிக்கு பல நாள் ஆகிருக்கும். அதுனால தான் இந்த குழம்புக்கே இப்படி சொல்லுறாப்ள என்றார் ராஜபாண்டி.


அய்யோ அப்படி எல்லாம் இல்லை.. உண்மையாவே குழம்பு வாசம் ஆளை தூக்குது. சீக்கிரம் சமையலை முடிங்க.. நான் சாப்பிடணும், இப்போவே பசிக்கிற மாதிரி இருக்கு என்றான் ரோஹித்.


அட பொறுப்பா.. அதுக்குள்ள என்ன அவசரம், முடிச்சிட்டு சொல்லுறேன். அப்புறமா சாப்பிடலாம் என்றான் வேலு.


நான் எதாச்சு உதவி பண்ணவா என்று ரோஹித் வேலுவிடம் கேட்க… இல்லை எதுவும் வேண்டாம்,  நீ படுத்துக்கோ, நான் வேலையை முடிச்சுட்டேன். குழம்பு இறக்கி வச்சுட்டு சாதம் மட்டும் வடிக்கனும் என்று வேலு கூறினான்.
ஒரு வழியாக சமையல் முடிந்து சாப்பிட துவங்கினார்கள், முதலில் வேலுவும் ரோஹித்தும் சாப்பிட ஆரம்பித்தனர். ராஜபாண்டி லாரி ஓட்டி கொண்டு இருந்தார்.


அண்ணே குழம்பு ரொம்ப பிரமாதம்… ரொம்ப நாளுக்கு அப்புறம் வீட்டு சாப்பாடு சாப்பிடற மாதிரி இருக்கு, இதுக்காகவே உங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் பத்தாது என்றான் ரோஹித்.


அட இதுல என்ன யாருக்கு.. இதுக்கு எதுக்கு நன்றி எல்லாம் சொல்லிகிட்டு.. பேசாம சாப்பிடு என்று வேலு சொன்னான்.


இவர்கள் சாப்பிட்டு முடித்த பின்பு ராஜபாண்டி  சாப்பிட துவங்கினார்.
அந்த தேசிய நெடுஞ்சாலையில் மிதமான வேகத்தில் வண்டியை செலுத்தியவாரே   சாப்பிட்டு முடித்தார். இவர்களது நெடுஞ்சாலை பயணம் மத்திய பிரதேசத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தது.


சாப்பிட்டு முடித்துவிட்டு பேசிக்கொண்டே வந்தார்கள் மூவரும். அப்போது ரோஹித் ராஜபாண்டியிடம் இந்த சரக்குகளை பற்றி கேட்டு அறிந்தான்.
அண்ணே இப்ப நம்ம எந்த பொருளை தமிழ்நாட்டுக்கு எடுத்துட்டு போறீங்க. இந்த ஊர்ல அப்படி என்னென்ன பிரசித்தி பெற்ற பொருட்கள் எல்லாம் இருக்கு என்று ரோஹித் ராஜபாண்டியிடம் கேட்டான்.


ராஜஸ்தான பொருத்தவரைக்கும் பெரும்பாலும் என்ன நினைச்சுட்டு இருக்காங்க அப்படின்னா.. இது ஒரு பாலைவன பூமி. ஆனா பாலைவனம் இதுல ஒரு பகுதி மட்டும் தான், மற்ற பகுதிகளில் விவசாயம் எல்லாம் இருக்கு,  இங்க பிரசித்தி பெற்றது அப்படின்னா ஜவுளி தொழில், மசாலா பொருட்கள், கைவினைப் பொருட்கள், டைல்ஸ், மார்பிள்ஸ் அப்படின்னு நிறைய இருக்கு.
ஜெய்பூர் பத்தி நீங்களும் கேள்விப்பட்டு இருப்பிங்க.. இந்த ஊரை பிங்க் சிட்டி அப்படின்னு கூப்பிடுவாங்க. அதுக்கு ஒரு காரணம் இருக்கு, உங்களுக்கு தெரிந்திருக்கலாம் இருந்தாலும் நான் சொல்றேன்.


1876 வருஷம், பிரிட்டிஷ் ஆட்சி காலத்துல ஜெய்ப்பூர் நகரத்துக்கு விக்டோரியா மகாராணி ராணியும், அவர் பையன் வேல்ஸ் இளவரசரும் வந்தாங்க. அவங்களை வரவேற்க்கும் விதமாக நகரம் முழுவதும் இளஞ்சிவப்பு நிறம் அதாவது பிங்க் நிறத்துல பெயின்ட் அடிக்க சொல்லி ஜெய்ப்பூர் மகாராஜா உத்தரவு போட்டார். இளஞ்சிவப்பு நிறம், விருந்தோம்பலை குறிக்கிறது, அதனால தான் அந்த நிறத்தை தேர்ந்தெடுத்தாராம். ஜெய்ப்பூர் நகரம் முழுவதும் இளஞ்சிவப்பு நிறத்துல இருக்கிறது பார்த்துட்டு “பிங்க் சிட்டி” ன்னு பேரு வச்சாராம் வேல்ஸ் இளவரசர்.


ஜெய்ப்பூர் அரண்மனை, கோட்டைகள் அதோட கட்டிடக்கலைகள் எல்லாம் பிரசித்தி பெற்றது, இது ஒரு தொழில் நகரம். இந்த ஊர் மட்டும் இல்லாம இதை சுத்தி உள்ள ஊர்ல இருந்து கூட வெளிமாநிலத்துக்கு.. ஏன் வெளிநாடுகளுக்கு கூட நிறைய பண்டங்கள் ஏற்றுமதி ஆகுது.
நாம இப்போ அப்படித்தான் நம்ம தமிழ்நாட்டுக்கு இங்க இருந்து ஜவுளி சரக்குகளையும், மசாலா பொருட்களையும் கொண்டு போய்கிட்டு இருக்கோம் என்றார் ராஜபாண்டி.


ஒவ்வொரு ஊருக்கும் இருக்கிற பின்னணி பத்தி தெரிஞ்சிக்கிறது நல்லாருக்கு. உங்களை பத்தி சொல்லுங்க அண்ணா, நீங்க ரெண்டு பேரும் எவளோ நாளா லாரி தொழில்ல இருக்கீங்க என்று கேட்டான் ரோஹித்.


எனக்கு சொந்த ஊரு திருச்செந்தூர், சின்ன வயசுலயே வீட்டு சூழ்நிலை காரணமா லாரி வேலைக்கு வந்துட்டேன். க்ளீனரா இருந்து தொழில் கத்துகிட்டு கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி அப்புறம் நானே ஒரு லாரியை சொந்தமா வாங்கி தொழில் நல்லபடியா போச்சு. போதாத காலம் ஒரு நாள் நடந்த சம்பவத்துல எல்லாம் தலைகீழா மாறி நான் நடுத்தெருவுக்கு வந்துட்டேன். அப்போதான் அண்ணாச்சி கிட்ட வேலைக்கு சேர்ந்தேன். அவரோட லாரியை தான் கிட்டத்தட்ட ஒரு 20 வருஷத்துக்கு மேல  ஓட்டிக்கிட்டு இருக்கேன். இது அவரோட சொந்த லாரி, இந்த லாரி வாங்குன நாள்ல இருந்து  நான் தான் ஓட்டிக்கிட்டு இருக்கேன், இது என்னோட செல்லப்பிள்ளை மாதிரி. அண்ணாச்சிக்கு நம்ம ஊர்ல நிறைய தொழில் இருக்கு, அதுல இந்த லாரி பிசினஸ் ஒன்னு. இந்த லாரியின் மூலமா தமிழ்நாட்டுல இருந்து காஷ்மீர் வரை ஏற்றுமதி இறக்குமதி தொழில் அவர் பண்ணிட்டு இருக்காரு. நாங்க இப்போ தமிழ்நாட்டில இருந்து பொருட்கள் ஏத்திக்கிட்டு வந்து டெல்லியில் இறக்கிட்டு.. போகிறப்போ சும்மா போகாம.. இங்க உள்ள ஆட்களை பிடிச்சு, இங்க இருந்து சரக்கை ஏத்திகிட்டு நம்ம தமிழ்நாட்டுக்கு இறக்கிருவோம். இப்படி சரக்கு ஏத்தி இறக்கி வியாபாரம் பார்க்கிறதுல எங்க அண்ணாச்சி பலே கில்லாடி என்றார் ராஜபாண்டி.


இந்த லாரி தொழிலில் நிறைய பாதிப்புகள் இருக்கு, லாபமும் வரும் அதே சமயம் நஷ்டமும் வரும். சொல்லப்போனா அந்த பாதிப்புகள் ஏற்பட்ட காரணத்தினால தான் இதுக்கு முன்னாடி சொந்தமா லாரி வச்சிருந்த நான் இப்போ அண்ணாச்சி கிட்ட லாரி டிரைவரா வேலை பார்த்துகிட்டு இருக்கேன். நஷ்டத்துல என்னோட லாரி போனப்போ முதல்ல ரொம்ப கஷ்டமா தான் இருந்தது, வேற என்ன செய்யறது, பொழப்பு நடத்தனும். அதனால அண்ணாச்சி கிட்ட வந்து டிரைவரா வேலைக்கு சேர்ந்தேன், இப்போ அண்ணாச்சி தான் என்னை பார்த்துகிட்டு வராரு. என்னோட இந்த 35 வருஷ  லாரி வாழ்க்கையில நிறைய அனுபவங்களை கத்துக்கிட்டேன் என்றார் ராஜபாண்டி.


உங்க குடும்பம் எல்லாம் ?? என்று ரோஹித் கேட்க..
அவங்களை எல்லாம் ஒரு விபத்துல 30 வருஷம் முன்னாடியே இறந்து போயிட்டாங்க. அப்புறம் நானும் லாரி வாங்குன புதுசுல கல்யாணம் பண்ணிக்க பொண்ணு தேடினேன். லாரி டிரைவர் அப்படிங்கிறதுனால யாரும் பொண்ணு குடுக்க ரெடியா இல்லை. காலம் கடந்து போயிருச்சு, இதுக்கு மேல என்னத்த கல்யாணம் பண்ணி என்ன பண்ணன்னு நானும் அப்படியே இருந்துட்டேன். லாரி டிரைவர்னாலே இந்த சமூகம் ஒரு மாதிரிதான் பார்க்குது. அதுக்கு காரணம் ஒரு சில லாரி ட்ரைவர்கள் பண்ணுற தப்பு , இந்த மாதிரி சரக்கு ஏத்திகிட்டு வெளிமாநிலம் போயிட்டு வரப்போ சாலையில தென்படுற வயித்து பொழப்புக்கு குறைந்த காசுக்கு உடம்பை விக்கிற சாலையோர ஆளுங்ககிட்ட போய்..கொஞ்ச நேர உடல் சுகத்துக்கு ஆசைப்பட்டு நிறைய பேர் தேவையற்ற நோய் வாங்கிகிட்டு அவங்க வாழ்க்கையை தொலைச்சு இருக்காங்க, இன்னமும் தொலைச்சிட்டு இருக்காங்க. யாரோ ஒரு சிலர் பண்ணுற இந்த மாதிரியான  தப்பான விஷயம் எங்க எல்லாரையும் பாதிக்குது. ஆனாலும் இதையெல்லாம் தாண்டி நிறைய பேரு கல்யாணம் பண்ணி குடும்பம், குட்டின்னு சந்தோஷமா தான் இருக்காங்க என்றார் ராஜப்பாண்டி.


இதெல்லாம் இங்க நடக்குதா என்று ஆச்சரியமாகவும், அதே சமயம் அவர்களின் வாழ்கையை நினைத்து பரிதாபமும் அடைந்தான் ரோஹித்.


வேலு அண்ணா, நீங்க எப்படி இந்த வேலைக்கு வந்தீங்க என்று ரோஹித் கேட்க..


டேய்..முதல்ல நீ ரோட்டுக்கு வந்த கதையை சொல்லுடா, அப்போதான் உன்னை எங்க கூட கூட்டினு போலாமா வேணாமா இல்லையான்னு நாங்க முடிவு எடுக்க முடியும். ஒருவேளை நீ எங்க கூட வந்தா.. என்னை பத்தி சொல்லுறேன். முதல்ல நீ உன்னோட விஷயத்துக்கு வாடா.. பேங்க்ல வேலைக்கு சேர்ந்த மறுநாள் யாரோ அன்னைக்கு நைட்டு கதவை தட்டினாங்களே.. அது யாரு என்ன ஆச்சுன்னு சொல்லு என்று கேட்டான் வேலு.


சரி சரி சொல்லுறேன்… அன்னைக்கு என்ன ஆச்சுன்னா என்று ரோஹித் சொல்ல ஆரம்பித்தான்.

தொடரும்….

One thought on “நெடுஞ்சாலை இரவு Chapter 11

Add yours

Leave a reply to Tamilarasan Shanmugam Cancel reply

Website Powered by WordPress.com.

Up ↑