ஒவ்வொரு வருஷமும் நடக்கிற சென்னை புத்தக கண்காட்சி போகிறப்போ எல்லாம் என்ன புத்தகம் வாங்கனும்னு ஒரு ஐடியா இல்லாம தான் போவேன். அங்க ஒவ்வொரு ஸ்டாலா போய் பார்க்கிறப்போ சில புத்தகங்களோட அட்டைப்படம், தலைப்பு அல்லது முன்னுரைன்னு எது ஒன்னு என்னை கவர்ந்திழுக்குதோ அந்த புத்தகத்தை வாங்கிருவேன். அப்படி வாங்கின ஒரு புத்தகம் தான் இந்த “தோட்டியின் மகன்” புத்தகம். இந்த தலைப்புல புத்தகத்தை சென்னை புத்தக கண்காட்சியில பார்த்தப்போ உடனே வாங்கிட்டேன்.

இந்த வார்த்தை “தோட்டி” சின்ன வயசுல இருந்தே ஒரு பரிச்சயப்பட்ட வார்த்தை. நான் பார்த்த வரையில் இப்போது இந்த வார்த்தை அதிகம் பயன்பாட்டில் இல்லை. தெருவில் சாக்கடை சுத்தம் செய்பவர்கள், குப்பை அள்ளுபவர்களை “தோட்டி” என்று அழைப்பார்கள். காக்கி நிற சட்டையும், டவுசரும் அணிந்து கொண்டு கையில் விளக்கமாறும் (துடைப்பம்), சாக்கடை தள்ளும் கம்புமாக தெருவில் திரியும் அண்ணன்களை பார்த்ததுண்டு. தெரு மக்கள் அவ்வப்போது இவர்களை தங்கள் வீட்டு வேலைக்கு பயன்படுத்தி கொள்வார்கள். அந்த உரிமையிலும் , தெருவை சுத்தம் செய்யும் உரிமையிலும் விசேஷ நாட்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று விசேஷ படி கேட்டு பெறுவார்கள். அந்தந்த தெருக்கள், ஊர்கள் சுத்தமாக இருக்க காரணம் இவர்கள் தான்.
இவ்வாறு சிறுவயதில் இவர்களை கடந்து வந்த பிறகு அந்த வார்த்தையை, பெயரை சமீப வருடங்களில் கேள்விப்படவில்லை. அன்று அந்த புத்தக கண்காட்சி ஸ்டாலில் பார்த்த பின்பு அந்த புத்தகத்தை வாங்கி பத்திரமாக வீட்டு புத்தக அலமாரியில் வைத்துவிட்டேன். உடனே படித்தால் அதற்கு முந்தைய கண்காட்சியில் வாங்கி படிக்காமல் ஓரமாக அடிக்கப்பட்டு இருக்கும் புத்தகங்கள் என்னை திட்டும். அதுபோக எனக்கும் படிக்க நேரமில்லை.
இந்த மாத தொடக்கத்தில் இருந்து தான் மீண்டும் புத்தகம் படிக்க தொடங்கினேன். அப்படி படிக்க ஆரம்பித்த போதுதான் முதல் புத்தகமாய் இந்த “தோட்டியின் மகன்” கண்ணில் சிக்கியது. பேருந்தில் புத்தகம் படிக்க முதலில் தயங்க.. பின்பு அந்த தயக்கங்களை தூக்கி எறிந்துவிட்டு இந்த புத்தகத்தை பேருந்தில் பயணித்தபடி படிக்க ஆரம்பித்தேன்.
“தோட்டியின் மகன்” தகழி சிவசங்கரப்பிள்ளை எழுதி 1947 ஆம் ஆண்டு வெளி வந்த மலையாள நாவல். அதை தமிழில் சுந்தர ராமசாமி மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். கேரளாவில் உள்ள ஒரு ஊரில் மலம் அள்ளும் தொழில் செய்யும் குடும்பத்தின் மூன்று தலைமுறையினரின் கதையை இந்த நாவலில் சொல்லி இருக்கிறார் தகழி சிவசங்கரப்பிள்ளை அவர்கள். மலம் என்னும் சொல்லை தட்டச்சு செய்யவே விரல்கள் தருமாறும் எனக்கு.. அந்த காலத்தில் அதை ஒரு தொழிலாக செய்த தோட்டிகள் பற்றி படித்த போது அந்த கொடூரத்தை உணர முடிந்தது.
தற்போது போல் அப்போது இல்லை.. அன்றைய வீடுகளில் செப்டிக் டேங்க் இல்லாத காலம், மனித கழிவுகள் எல்லாம் வீட்டின் கொல்லைப்புறத்தில் தேங்க.. அவற்றை தினந்தோறும் சென்று அந்த கழிவுகளை அங்கிருந்து பீப்பாயில் ஏற்றி மலக்கிடங்கு கொண்டு சென்று அப்புறப்படுத்துவார்கள். ஒரு நாள் விட்டாலும் ஊர் நாறிவிடும், அந்த அளவுக்கு இவர்களின் தேவை ஊரில் இருந்தாலும் இவர்களை யாரும் ஒரு மனிதராக கூட மதிச்சது இல்லை மதிப்பதும் இல்லை என்பது நிதர்சனம்.
இந்த நாவலில் தோட்டிகளின் வாழ்க்கை, வேலை, அவர்களை சமுதாயம் பார்க்கும் முறை, அவர்களின் இன்னல்கள் மற்றும் துயரங்கள் என்று விரிவாக சொல்லி இருக்கிறது. அதை படிக்கும்போது அவர்கள் பட்ட கஷ்டத்தை உணர முடிகிறது.
கதை சுருக்கம்.. இசக்கிமுத்து எனும் ஒரு வயதான நோய்வாய்ப்பட்ட தோட்டி.. தான் சாவும் தருவாயில் தன் மகன் சுடலைமுத்துவை கூப்பிட்டு தனக்கு அப்புறம் தன்னுடைய தோட்டி வேலையை நீதான் செய்ய வேண்டும் என்று சொல்லி அந்த வேலையை அவனுக்கு ஏற்படுத்தி குடுத்துவிட்டு சில நாளில் இறந்து போகிறார். சுடலைமுத்துவுக்கு தான் ஒரு தோட்டியாக இருக்க பிடிக்கவில்லை. தோட்டியின் மகன் ஒரு தோட்டியாக தான் இருக்க வேண்டுமா ? அவர்கள் வாழ்வில் முன்னேற கூடாதா ? அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் குரல் குடுக்க கூட யாரும் வரமாட்டார்களா ? என்று அவனுக்குள் ஏகப்பட்ட கேள்விகளை சுமந்துகொண்டு வேண்டா வெறுப்பாக அந்த வேலையை செய்துவந்தான்.
வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் தேவையற்ற செலவுகளை தவிர்த்து மது குடிக்காமல் சிக்கனமாக இருந்து காசுகளை சேர்க்க தொடங்குகிறான். மற்ற தோட்டிகளை போல இல்லாமல் வேலை நேரம் போக மற்ற நேரத்தில் சுத்தமாக குளித்து முழுகி நல்ல உடைகள் அணிந்து தெரு வீதிகளில் இவன் செல்லும்போது ஒரு தோட்டி என்று யாரும் சொல்லிவிட முடியாது.
தோட்டிகளுக்கு தங்களுடைய உண்மையான சம்பளம் எவ்வளவு என்று கூட தெரியாது. மேல் அதிகாரிகள் தங்கள் பங்கை எடுத்துக்கொண்டு மிச்சத்தை கொடுப்பதை சம்பளமாக பெற்று கொள்கிறார்கள். உண்மையான சம்பளம் எவ்வளவு என அறிய முற்படுதல், தங்களுக்கு என்று ஒரு சங்கம் நிறுவுவது, மேல் அதிகாரிக்கு துணைபோவது, காதலில் விழுந்து அந்த பெண்ணை கல்யாணம் செய்து ஆண் குழந்தை பிறந்த பிற்பாடு தோட்டிகளின் வழக்கமான குடியிருப்பு பகுதியில் இருந்து நகரத்தில் ஒரு வாடகை வீட்டிற்கு புலம் பெயர்வது என அடுத்தடுத்த நகர்வுகளை நகர்த்தி கொண்டே சென்றான் சுடலை. தன் மகனும் தன்னைப்போல் தோட்டியாக கூடாது என்பதில் உறுதியாக நின்றான் சுடலை. இவ்வாறாக ஒரு தோட்டியின் குடும்பத்தின் மூன்று தலைமுறை கதையை விரிவாக சொல்கிறது இந்த நாவல்.
இந்த நாவல் படிக்கும் நமக்கு எப்படியாவது சுடலையும், அவன் குடும்பமும் இதுவரை அவர்கள் வாழ்வில் பட்ட கஷ்டங்களில் இருந்து மீண்டு முன்னேறி மேலே சென்றுவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றி விடுகிறது. கதைக்களம் கேரளாவில் இருந்தாலும் தோட்டி வேலைக்கு கீழ்த்தட்டு மக்களை திருநெல்வேலியில் இருந்து தான் கூட்டிக்கொண்டு வருகிறார்கள். வறுமையில் இருக்கும் அவர்களும் வேறு வழியின்றி புலம்பெயர்ந்து மீண்டுமொரு அடிமை வாழ்க்கைக்கு தள்ளப்பட்டு சீக்கிரமே நோய்வாய்ப்பட்டு மடிந்தும் போகிறார்கள். முந்தைய காலங்களை விட தற்போது நிலைமை கொஞ்சம் மாறி இருந்தாலும் இன்னும் அவர்களுக்கான உரிமைக்காக போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள் இந்த தூய்மை பணியாளர்கள்.
மீண்டும் அடுத்த புக்மார்க் பகுதியில் மற்றொரு புத்தகத்துடன் சந்திக்கிறேன். நன்றி வணக்கம்
உங்கள் ராக்ஸ் ❤️
#ThottiyinMagan #TamilStories #BookReading
Leave a comment