புக்-மார்க் #2 மதில்கள் 📚🔖

கடந்த மாதத்தில் படித்த இரண்டாவது புத்தகம் “மதில்கள்”. இந்த புத்தகம் மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய புகழ்பெற்ற ஒரு குறுநாவல். இதை தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார் கவிஞர் சுகுமாரன். 80 பக்கங்களுக்கும் குறைவான பக்கங்களை உடைய ஒரு குறுநாவல் தான் இந்த மதில்கள். 1965 ஆம் ஆண்டு மலையாளத்தில் “மதிலுகள்” என்ற தலைப்பில் வெளியான இந்த புத்தகத்தை தமிழில் “மதில்கள்” என்ற தலைப்பில் வெளியிட்டார் சுகுமாரன்.

கடந்த மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதிய பொழுதில் நண்பனை சந்திக்க அவன் வீட்டிற்கு சென்ற போது இந்த புத்தகத்தை குடுத்து படிக்க சொன்னான். பக்கமும் குறைவாக இருந்தது, அதே சமயம் தினசரி பேருந்து பயணத்திற்கு ஏற்றவாறு இருந்ததால் அவனிடம் வாங்கி கொண்டு வந்துவிட்டேன்.

அந்த வார இறுதி நாள் சனிக்கிழமை காலை வேலைக்கு போக தூத்துக்குடிக்கு பஸ்ல கிளம்பிட்டேன். நல்லா ஜன்னல் ஓரமா பாத்து உட்கார்ந்து டிக்கெட் எடுத்துட்டு.. மதில்கள் படிக்க ஆரம்பிச்சேன். ஒரு மாதிரி வித்தியாசமான அனுபவமா இருந்துச்சு. கதையின் ஆரம்பம் ஒரு மாதிரி இருந்தாலும் போக போக அந்த கதைக்குள்ள மூழ்கிட்டேன். கதை படிக்கிற நம்மை அந்த சிறைச்சாலைக்குள்ளே கூட்டி சென்று அங்கு நடக்கிறதை நம்மளே ஒரு சக கைதி மாதிரி  பக்கத்துல நின்னு பார்க்கிற அனுபவத்தை கொடுக்கிறார்.

சுதந்திரத்துக்கு முன்பான அன்றைய கால சிறை வாழ்க்கையை அவரின் வரிகளில் அழகாய் நமக்குள் கடத்தி விடுகிறார். ஆண்கள் சிறை பகுதியில் இருக்கும் பஷீருக்கும், பெண்கள் சிறைப்பகுதியில் இருக்கும் நாராயணி எனும் கைதிக்கும் இடையே நடக்கும் ஒரு பாரா காதல் தான் இந்த கதை. அவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்ள விடாமல்  இருவருக்கும் நடுவில் ஒரு பெரிய சிறைச்சுவர் தடுத்து நிற்கிறது. சுவர் அவர்களை தடுத்தால் என்ன.. இருவரும் சுவரின் அருகருகே நின்றுக்கொண்டு பேசி மகிழ்ந்து தங்கள் காதலை வளர்த்துக்கொள்கிறார்கள்.

இருவரும் சந்தித்து கொண்டார்களா? சிறை வாசத்திற்கு பிறகு இருவரும் ஒன்று சேர்ந்தார்களா ? அவர்கள் இருவருக்கும் என்ன ஆனது ? என்பதை இந்த குருநாவலில் சுவாரசியம் குறையாமல் சொல்லி இருக்கிறார் எழுத்தாளர்.

கதையின் இறுதிகட்டத்தை நெருங்க சில பக்கங்கள் இருந்த நிலையில்.. தூத்துக்குடி பழைய பஸ் ஸ்டாண்டு.. எல்லாரும் இறங்குங்க என்று கண்டக்டர் உரக்க கூற.. வேறு வழி இல்லாமல் புத்தகத்தை பையில் போட்டு கொண்டு பஸ்ல இருந்து இறங்கிவிட்டேன். ஆபிஸ் போக சற்று நேரம் இருந்தது, வேகமாக நடந்து ஆபிஸ் அருகே உள்ள டீக்கடைக்கு சென்று விட்டேன். ஒரு டீ வாங்கி குடித்துக்கொண்டே மீதம் இருந்த கதையை படிக்க தொடங்கினேன். டீ குடித்து முடித்த போது கதையும் முடிந்து விட்டது. ஒரு சோகமான உணர்வுடன் கதை முடிந்தது. நானும் டீ காசு கொடுத்துவிட்டு ஆபிஸ் சென்றுவிட்டேன்.

இந்த குறுநாவலை தழுவி மலையாளத்தில் மம்மூட்டி நடிப்பில் மதிலுகள் என்ற இதே தலைப்பில் திரைப்படம் வெளியாகி விருதுகளை பெற்றது.

மீண்டும் அடுத்த புக்மார்க் பகுதியில் சந்திப்போம்.

நன்றி வணக்கம் 🤘🏼

~ ராக்ஸ்

#Mathilugal #Mathilgal #VaikomMuhammadBasheer #Novel #ShortStory

Leave a Reply

Website Powered by WordPress.com.

Up ↑