புக்-மார்க் #3 யானை டாக்டர் 🐘📚🔖

கடந்த மாதத்தில் பேருந்து பயணத்தில் படித்து முடித்த மூன்றாவது புத்தகம் எழுத்தாளர் ஜெயமோகனின் “யானை டாக்டர்”.
யானை டாக்டர், இந்த தலைப்பை பார்த்தபோது… அது என்ன யானை டாக்டர் ? சரி படிச்சு தெரிஞ்சிக்குவோம் என்ற பேருந்தில் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். படிக்க படிக்க கொஞ்சம் கொஞ்சமாக அந்த கதை களத்துக்குள் சென்று விட்டேன்.
பொதுவாகவே யானை என்றால் பிடிக்கும், சிறு வயதில் தொடங்கி தற்போது வரை யானையை பார்த்துவிட்டால் ஒரு குதூகல மனநிலைதான்.
இந்த புத்தகத்தை படித்த பிறகு யானைகள் மீது மேலும் அன்பு பெருகுகிறது. “யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே” என்ற பழைய திரைப்பட பாடல் வரிகளில் சொல்லப்பட்டது போல்.. யானைகளும் அதன் வாழ்விடமான வனப்பகுதியில் இருப்பது தான் அவைகளுக்கு நல்லது.
ஆனால் காட்டில் கூட மனிதர்களால் யானைகள் பாதிப்பு அடைகின்றன. மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும்போது சிலர் தூக்கி எறியும் கண்ணாடி குடுவைகள் அங்கே உள்ள ஏதோ ஒரு மரத்திலோ அல்லது பாறைகளிலோ பட்டு உடைந்து கண்ணாடி சிதறிவிடுகின்றன. இது மனிதனை பொறுத்தவரை ஒரு சாதாரண செயலாக பார்க்கிறான். ஆனால் அந்த வனப்பகுதியில் உலாவும் விலங்குகள் அந்த கண்ணாடி சிதறல்களால் பாதிப்படைகின்றன.
இந்த புத்தகத்தை படிக்கும் போது தெரிந்து கொண்ட ஒரு விஷயம்.. மனிதர்களால் தூக்கி எறியப்படும் கண்ணாடி குடுவைகள் உடைந்து சிதறிப்போக.. அந்த வழியே செல்லும் யானைகளின் கால்களில் கண்ணாடி சில்லுகள் ஏறி விடுகின்றன. யானைகளின் கால் பாதங்கள் மணல்களை போல் மிருதுவான தன்மை கொண்டவை. அந்த கண்ணாடி சில்லுகள் சுலபமாக கால் பாதத்தில் நுழைந்து விடும். அதனால் ஏற்பட்ட காயத்தினால் காலில் புண் ஏற்பட்டு செப்டிக் ஆகி புழுக்கள் ஆக்கிரமித்து யானைகளால் எங்கும் நகர முடியாமல் ஒரே இடத்தில் உணவு, தண்ணி இல்லாமல் நின்றவாறு உயிரை துறக்கிறது. யானைகள் வலி தாங்கும் சக்தி கொண்டவை, அதற்கு உதாரணமாக எப்போதோ ஒரு நிகழ்வில் டாக்டர் கே வை பார்த்த நினைவை கொண்டு அவர் இருக்கும் விதி பகுதிக்கு நள்ளிரவு நேரத்தில் ஒரு குட்டி யானை அடிபட்ட காலை வைத்துக்கொண்டு வெகு தொலைவில் இருந்து அந்த காட்டுப்பகுதியில் சுற்றி திரிந்து அவரை சந்திக்க வந்திருக்கிறது. அவரும் அந்த யானையை கண்டுகொண்டு அந்த யானையின் காலை சரிசெய்து அனுப்பி வைத்தார். அவருக்கும் யானைகளுக்கும் இடையே ஆன புரிதலை இவை வெளிப்படுத்துகிறது. யானைகள் மீது அவருக்கு பிரியம் அதிகம். வனப்பகுதி தவிர்த்து பிற இடங்களில் யானைகள் வளர்க்கப்படுவதை டாக்டர் விரும்பவில்லை.
யானைகளின் வாழ்விடம் வனப்பகுதி தான், கோவில்களோ தெரு வீதிகளோ இல்லை என்பதை தெளிவாக கூறி இருக்கிறார். கோவில்களில் வளர்க்கப்படும் யானைகளை முதுமலை பகுதிகளுக்கு கூட்டிசென்று அந்த யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் நடைபெறுகிறது, அதற்கு முழு காரணமும் டாக்டர் கே அவர்கள்தான்.
இந்த புத்தகத்தை படித்து முடித்தபோது யானைகளை பற்றியும், டாக்டர் கே என்று அழைக்கபடும் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பற்றியும் தெரிந்து கொண்டேன். இந்த புத்தகம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. தற்போது தான் தெரிகிறது, தமிழ்நாட்டு பள்ளிகளில் 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இந்த “யானை டாக்டர்” ஒரு பாடமாக இடம் பெற்று இருக்கிறது.
மீண்டும் அடுத்த புக்மார்க் பகுதியில் சந்திப்போம்.
நன்றி வணக்கம் 🤘🏼
~ராக்ஸ்
#ShortStory #YaanaiDoctor #Jayamohan #Krishnamoorthy #DoctorK #RakksReads
Leave a Reply