
இருள் சூழ்ந்து கிடக்கும் ஆள் அரவமற்ற அந்த தெருவின் சாலையில் நடந்து செல்வது பயத்தை ஏற்படுத்தியது. தூரத்தில் சிணுங்கி எரிந்து கொண்டிருந்த போஸ்ட் லேம்ப் வெளிச்சம் சற்று ஆறுதலாக இருக்க தைரியத்தை வரவழைத்து நடந்து கொண்டிருந்தான் அர்ஜுன். திடீரென எங்கிருந்தோ நாய் ஊளையிடும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு நின்றான். சுற்றும் முற்றும் பார்த்தான், நாய் ஏதும் தென்படவில்லை. தினமும் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் சாலை தான், இருந்தாலும் அன்று என்னவோ அவனுக்கு எல்லாமே வித்தியாசமாகவும், சற்று பயமாகவும் தெரிந்தது. அடைமழை பெய்து ஓய்ந்த இரவு, லேசான மஞ்சள் லேம்ப் வெளிச்சம், சேறும், சகதியுமான சாலை, என வழக்கத்திற்கு மாறாக அந்த தெருவே சப்தமின்றி இருந்தது.
அர்ஜுன் ஐடி கம்பெனியில் பணிபுரியும் இளைஞன், பெங்களூரில் வேலை பார்த்து கொண்டிருந்தவன் வேலை மாறுதலாகி சமீபத்தில்தான் சென்னைக்கு வந்திருந்தான். கிண்டியில் உள்ள தன் நண்பனுடன் தங்கியிருக்கும் அர்ஜூன், தினமும் ஆஃபிஸ் பஸ்ஸில் வேலைக்கு சென்று விட்டு இராப்பொழுதில் தான் வீடு திரும்புவான். அவன் வரும் நேரம் பெரும்பாலும் தெருக்கள் காலியாக தான் இருக்கும். மூடும் தருவாயில் உள்ள ஒரு பெட்டி கடையில் ஒன்னு ரெண்டு பேர் நின்று எதாவது வாங்கி கொண்டு இருப்பார்கள். அன்று மழையின் காரணமாக இன்னும் தாமதம் ஆகி நள்ளிரவு நெருங்கும் நேரத்தில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான்.
அந்த ஆள் அரவமற்ற தெருவில் நடந்து செல்லும்போது உள்ளுக்குள் லேசான பயம் எட்டி பார்த்தது. தைரியத்தை வரவழைத்து கொண்டு இன்னும் கொஞ்சம் தூரம் தான் என்று முணுமுணுத்தபடி முன்னேறி நடந்தான். மழை பெய்ததில் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றதில் சாலை எது? குழிகள் எது? என்று தெரியாமல் போக மிகவும் கவனமாக நடந்தான்.
அப்போது மீண்டும் திடீரென நாயின் ஊளை சத்தம் கேட்க ஸ்தம்பித்து அங்கேயே நின்றான். மீண்டும் சுற்றும் முற்றும் பார்த்தான், நாய் ஏதும் அங்கு இல்லை என்பதை உறுதிப்படுத்தி விட்டு மீண்டும் நடந்தான். இவன் நடக்க நடக்க நாயின் சத்தம் அருகில் கேட்டுக் கொண்டே வந்தது. பயந்தவாரே பின்னாடி திரும்பி பார்க்க அவனை நோக்கி ஒரு நாய் குறைத்துக்கொண்டே வந்து கொண்டிருந்தது.
செய்வதறியாமல் தவித்து நின்றான். ஓடினால் எப்படியும் அந்த நாயிடம் கடிபட்டு விடுவோம் என்ற பயந்து பக்கவாட்டில் இருந்த சுவற்றை ஒட்டி ஒதுங்கி நின்று கையில் வைத்திருக்கும் லேப்டாப் பேக்கை கொண்டு நாயை விரட்ட முயன்றான். இவனின் செய்கைக்கு கொஞ்சமும் அசராமல் அந்த நாய் இவனை நெருங்கி வந்தது. பலமாக குரைத்து கொண்டே இவன் மேல் பாய தயாராக இருந்தது.. அர்ஜுனின் கண்களில் பயமும்…நாயின் கண்களில் வெறியும் தெரிய…பயத்தில் கைகால் உதற உதவிக்கு யாரையும் கூப்பிட முடியாமல் வாய் திணற மனதுக்குள் உலகில் உள்ள எல்லா கடவுளையும் வேண்டிக்கொண்டு அப்படியே பயந்து நின்றான்.
அப்போது திடீரென பயங்கர இடிஇடிக்க..கரண்ட் கட்டானது. என்னடா இது நமக்கு வந்த சோதனை.. அவளோதான் முடிஞ்சது என்று நினைத்து கொண்டிருக்க அப்போது ஒரு கணீர் குரல் ஒலித்தது. கடிக்க வந்த நாயை அந்த குரல் கத்தி விரட்டியது. அந்த குரலை கேட்டவுடன் அந்த நாய் குரைத்துக்கொண்டே தெறித்து ஓடியது. நாய் சத்தத்தை காட்டிலும் அந்த கணீர் குரல் இவனை பயமுறுத்தியது, இருந்தாலும் நாயிடம் இருந்து தப்பித்து விட்டோம் என்று நிம்மதி பெருமூச்சு விட்டான். பின் அந்த கணீர் குரல் வந்த திசையை நோக்கி திரும்பி பார்க்க.. முதலில் இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. அச்சமயம் நிலவை மறைத்து கொண்டிருந்த மேகம் சற்று விலகி வழிவிட.. நிலவின் ஒளியில்.. அந்த குரலின் உருவம் தென்பட தொடங்கியது. ஆறடி உயரத்தில் அந்த உருவம் நின்று கொண்டிருந்ததை. பார்த்ததும் முதலில் பயந்து நடுங்கிவிட்டான். தம்பி பயப்படாத நாய் போயிருச்சு என்று அந்த உருவம் இவனை பார்த்து சொல்ல…அது ஒரு ஆள் தான் என்பதை உறுதி செய்து கொண்டு ஒரு வித பயத்துடன்.. ரொம்ப நன்றினே என்று சொல்லிக் கொண்டு கிளம்ப..
தம்பி தீப்பெட்டி இருக்கா? என்று அந்த ஆள் இவனிடம் கேட்டான். இவன் தன் பாக்கெட்டில் இருந்த லைட்டரை எடுத்து அந்த ஆளிடம் நீட்டினான். வாயில் சுருட்டை வைத்த வாரே..நீயே பத்தவை தம்பி என்று அந்த ஆள் கூற இவனும் சுருட்டை பற்றவைத்தான். சரி வரேன் அண்ணா என்று அவன் கிளம்ப முற்படும்போது பயங்கர இடியுடன் மழை கொட்ட தொடங்கியது. அவனுடைய வீடு அங்கிருந்து இன்னும் அரை கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது, தெரு தெருவாக நடக்க வேண்டும். இந்த கொட்டும் மழையில் அதுவும் இருட்டில் இவளோ தூரம் செல்ல முடியாது என்று எண்ணியவாறு இருக்க… இப்படி தள்ளி உள்ள வந்து நில்லுப்பா என்று அந்த ஆள் கூற அருகில் இருந்த மாட்டு கொட்டகையை அப்போது தான் கவனித்தான்.
கொட்டகையில் உள்ளே சென்று மழையில் நனையாமல் ஒதுங்கி நின்று கொண்டான். அப்போது கரண்ட் வர..முன்பு சிணுங்கி எரிந்த கொண்டிருந்த போஸ்ட் லாம்ப் தற்போது பிரகாசமாக எரிந்தது. கொட்டகையின் உள்ளே வெளிச்சம் வர அதில் அந்த ஆளுடைய முகத்தை நன்றாக பார்த்தான். ஆறடி உயரம், ஆஜானுபாகுவான உடல், கணீர் குரல் என்று பார்க்கவே பயங்கரமாக கம்பீர தோரணையில் தென்பட்டான்.
அவனை பார்த்த வாரே தானும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்துகொள்ள இருவரும் அப்படியே பேசிக் கொண்டிருந்தனர். சில நேரத்தில் மழை பெய்து நிக்க… வேகமாக அந்த ஆளிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான். கொஞ்ச தூரம் நடந்து சென்ற போது தான் லைட்டரை அந்த கொட்டகையில் வைத்துவிட்டு வந்தது நினைவுக்கு வர.. மீண்டும் அந்த கொட்டகைக்கு சென்றான். அவன் சென்ற போது லைட்டர் அங்கு இருந்தது, ஆனால் அந்த ஆள் அங்கு இல்லை, நல்ல வேலை லைட்டரை அவர் எடுத்துட்டு போல என்று மனதில் நினைத்துக்கொண்டு வேகமாக அங்கிருந்து கிளம்பி ஒருவழியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.
வீட்டிற்குள் சென்றபோது அவன் நண்பன் கமல் தூங்கி கொண்டிருந்தான். இவன் வேகமாக வந்த சத்தம் கேட்டு கமல் விழித்து கொண்டான்.
டேய்.. என்னடா ஆச்சு.. ஏன் இவளோ லேட்டா வர.. அதும் இப்படி அடிச்சு பிடிச்சு வர.. மூஞ்சி வேற எதோ பேயை பார்த்து பயந்து போன மாதிரி இருக்கு என்று கேட்டான் கமல்.
பேய் இல்லடா.. நாய் என்றான் அர்ஜுன்.
என்னது நாயா என்று கமல் கேட்க..
நாய் துரத்திய கதையை அர்ஜுன் கூற… இதுக்கா இவளோ பயம் என்று கமல் சிரிக்க.. உன்னை துரத்தி, கடிக்க வந்திருந்தா தெரியும்.. நல்ல வேலை அங்க ஒரு ஆள் வந்து அந்த நாயை விரட்டி விட்டு என்ன காப்பாத்தினார். இல்லைனா அந்த வெறிநாய் என்னை கடிச்சு கொத்தா கவ்விட்டு இருக்கும் என்று நடுக்கத்துடன் கூறினான் அர்ஜுன்.
ச்சே.. மிஸ் ஆகிருச்சே..என்று கூறி கமல் சிரிக்க..
விரலை உயர்த்திகாட்டி நொட்டு என்று திட்டிகொண்டே கட்டிலில் படுத்தான் அர்ஜுன்.
சரி எனக்கு கால் பண்ணிருக்கலாம்ல.. கூப்பிட வந்திருப்பேன் என்றான் கமல்.
டேய் மொபைல் சார்ஜ் இல்லாம ஸ்விட்ச் ஆஃப் ஆகிருச்சு. அதான் கூப்பிட முடியல.. சரி எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு, இந்த மொபைலை சார்ஜ்ல போடு என்று சொல்லி கமலிடம் மொபைலை குடுத்தான்.
இதைக்கூட சார் பண்ண மாட்டீங்களா என்று கமல் கேட்க .. மூடிட்டு சொன்னதை செய்டா என்று கூறிவிட்டு தூங்க தொடங்கினான். சற்று நேரத்திலயே அசதியில் உடனே தூங்கிவிட்டான், எப்போது தூங்கினான் என்று அவனுக்கே தெரியாது.
அடுத்த நாள் சனிக்கிழமை, விடுமுறை என்பதால் வெகுநேரமாக தூங்கி கொண்டு இருந்தான் அர்ஜுன். அவனை தட்டி எழுப்பிவிட்டு டீ கடைக்கு அழைத்தான் கமல். இவளோ சீக்கிரம் ஏன்டா எழுப்புற..இன்னும் கொஞ்சம் நேரம் தூங்குறேன் என்று சொன்ன அர்ஜுனை, மணி 11 ஆச்சுடா என்று சொல்லி எழுப்பிவிட்டான் கமல். சோம்பல் முறித்து எழுந்து பல் தேய்த்து கொண்டே வெளியே பால்கனியில் வந்து நின்று சாலையை வேடிக்கை பார்த்து கொண்டு நின்றான்.
அப்போது எதிரே இருந்த சுவற்றை பார்த்து உறைந்து போய் நின்றான்.. டேய் சீக்கிரம் வாடா போவோம் என்று கமல் அழைக்க பதில் எதும் கூறாமல் சுவற்றை பார்த்தவாறே நின்றான் அர்ஜுன். வாயில பிரஷோடா என்னத்தடா அப்படி வெறிக்க வெறிக்க பார்த்திட்டு இருக்க என்று கேட்டு கொண்டே வந்து அர்ஜுனின் அருகில் கமல் வந்து நிற்க.. அதிர்ச்சி கலந்த பயத்தில் அந்த சுவற்றை சுட்டி காட்டினான் அர்ஜுன்.
அங்க என்னடா இருக்கு ?
அந்த சுவர்….
ஆமா சுவர் இருக்கு..அதுக்கு என்ன இப்போ?
அந்த சுவருல ஒட்டி இருக்க போஸ்டர் ….
ஆமா போஸ்டர்.. அங்க எப்பவும் போஸ்டர் ஒட்டுறது வழக்கம்தானே. அதுக்கு என்னடா இப்போ? என்று கடுப்புடன் கேட்டான் கமல்.
கண்ணீர் அஞ்சலி போஸ்டர் டா..
அதுக்கு என்னடா இப்போ.. அவர் உனக்கு தெரிஞ்சவரா ?
இல்லடா.. நேத்து நைட்டு தான் அவரை பாத்து பேசினேன், இவர்தான் என்ன அந்த நாய் கிட்ட இருந்து காப்பாத்துனார். உன்கிட்ட கூட நேத்து சொன்னேன்ல.. அதுக்குள்ள இன்னைக்கு காலையில இறந்துட்டாரே.. ச்சே..பாவம்.. என்றான் அர்ஜுன்.
என்னடா உளருற.. அவர் செத்து நேத்தொட பத்து வருஷம் ஆச்சுடா.. கண்ணாடியை போட்டு அந்த போஸ்டரை ஒழுங்கா பாரு..என்றான் கமல்.
என்னது…கண்ணாடியை போட்டவாரு பத்தாம் ஆண்டு அஞ்சலி என்று போஸ்டரில் அச்சடிக்க பட்டு இருந்ததை அப்போதுதான் அர்ஜுன் கவனித்தான். டேய் சத்தியமாடா… நம்புடா… இவரை தான் நேத்து ராத்திரி பார்த்தேன். இவர்தான் என்னை அந்த நாய்கிட்ட இருந்து காப்பாதினாரு
டேய் அப்போ அது…
அர்ஜுனின் கைகளை கமல் இறுக பற்றி மெல்லிய குரலில் கூறினான்…
“அப்போ நீ நேத்து பார்த்தது நாய் மட்டும் இல்லடா…..….”
இருள் தொடரும்…
~ ராக்ஸ்
Asusually u rocked Rakks….a scary story ended with a hilarious dialogue was nice…. keeping the reader’s curiosity till the end shows your good story writing skill….best wishes for your upcoming stories….
LikeLiked by 1 person
The efforts you’ve given for name selection of the story and editing work shows your passion towards writing …..I wish the spark of your talent should shine brightly and long-lastingly….
LikeLiked by 1 person
Wonderful story na cimax twist Vera level. Waiting for the next part
LikeLiked by 1 person
சூப்பர் 🙌🙌… Poster Design 🔥
LikeLike